under review

தம்பிரான் வணக்கம்

From Tamil Wiki
Doctrina Christam. en Lingua Malauar Tamul.கொம்பஞ்ஞிய தே சேசூ வகையில் அண்டிறிக்கிப் பாதிரியார் தமிழிலே பிறித்தெழுதின தம்பிரான் வணக்கம்.
தம்பிரான் 2

தம்பிரான் வணக்கம் ( 1578) தமிழில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம். 1578-ல் ஹென்ரிக் ஹென்ரிகஸ் ((Henrique Henriques) என்ற போர்த்துகீசிய மதபோதகர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். கிறிஸ்தவ வழிபாட்டு நூல்.

நூல் உருவாக்கம்

ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அல்லது அண்டிரிக் அடிகளால் இந்நூல் கொல்லத்தில் 20 அக்டோபர், 1578ல் அச்சிடப்பட்டது. 1539ல் லத்தீனிலிருந்து போர்த்துகீசிய மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட Doctrina Christam என்ற நூலின் தமிழ் மொழியாக்கம் இது. இந்நூல் போர்த்துகல் கத்தோலிக்கத்தின் அடிப்படை கல்விநூல். இந்தியாவில் இதன் பல வடிவங்கள் மொழியாக்கத்திலும் மறு ஆக்கத்திலும் வெளிவந்துள்ளன. புனித சேவியர் இந்நூலை தழுவி ஒரு நூல் எழுதியிருக்கிறார். ஹென்ரிக்கஸ் இந்நூலை பீட்டர் மானுவல் என்னும் துறவியுடன் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார். முத்துக்குளித்துறை வட்டார வழக்கிலேயே இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ருஷ்யா (1563), ஆபிரிக்கா (1624), கிரீஸ் (1821) நாடுகளின் முதல் அச்சு நூல்களை விட முந்தையது இந்நூல் என்று ஆ. சிவசுப்ரமணியம் கூறுகிறார். இந்திய மொழிகளில் முதலில் அச்சுவடிவில் வந்த நூல் இதுவே என்பது முழுமையாக ஏற்கப்பட்டுள்ளது. 1574 இறுதியில் புன்னக்காயலில் இருந்து கோவாவுக்கு தற்காலிக மாற்றம் பெற்றுச் சென்ற ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த அச்சுப்பணிகளில் ஆர்வம் கொண்டு தன் நூல்களையும் அச்சிட்டு பரவலாக வெளியிட முனைந்தார். கேரள நம்பூதிரியாக இருந்து மதம் மாறி 1562 ஆம் ஆண்டு ஏசு சபையில் இணைந்தவர் எனப்படும் அருட்தந்தை பெரோ லூயிஸ் அவருக்கு உதவினார். கொல்லத்தில் இருந்த அருட்தந்தை யோவான் த ஃபாரியாவின் மேற்பார்வையில் கோவாவில் யோவான் கோன்சால்வஸ் 1577ல் முதல் தமிழ் எழுத்து அச்சுகளை வடித்தார் எனப்படுகிறது. தம்பிரான் வணக்கத்தின் முதல் பகுதி லத்தீனில் 1577ல் கோவாவில் அச்சிடப்பட்டது. இரண்டாம் பகுதி தமிழில் கொல்லத்தில் அச்சிடப்பட்டது.

நூல் பிரதியும் மறுபதிப்பும்

கர்ட் எர்சிங்கர் 1951 இல் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு 'தம்பிரான் வணக்கம்’ பிரதி ஒன்றை அன்பளிப்பாக அளித்தார். அது இன்றும் பார்வைக்கு உள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் ஹைதராபாத் அமெரிக்க கல்வி மையத்திலும் இதன் நகல் பிரதிகள் உள்ளன. தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம் இரண்டையும் ஒரே நூலாக தூத்துக்குடி தமிழ் இலக்கியக் கழகம் வழியாக 1963இல் ச. இராசமாணிக்கம் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ்நாடன் மூல நூலின் ஒளிப்பிரதியாக 'தம்பிரான் வணக்கம்’ நூலை இருமுறை பதிப்பித்துள்ளார்.

ஆய்வாளர் கால சுப்ரமணியம் 'கோவா அச்சுப் புத்தகங்களின் பட்டியல் பற்றி பியரி தெசாம்ப் கூறும்போது 1577இல் தமிழில் ஒரு புத்தகம் அங்கு அச்சிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். அதன் பிரதி ஒன்று லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்ததாகக் கூறுகிறார். அண்ட்ரிக், வாலக்னானோ இருவருக்கும் நடந்த கடிதப் பரிவர்த்தனையில் இந்நூல் பற்றி உறுதிசெய்யப்படுவதாக விக்கி ஜோசபஸ்  கூறுகிறார். கிரஹாம் ஷா இந்நூல் பற்றி உறுதி செய்கிறார். ஜோசப் காலிகர் என்பவர் 1893இல் லெய்டன் பல்கலைக் கழகத்துக்கு அன்பளிப்பாக அளித்த நூல்களில் இதுவும் ஒன்று. லெய்டன் பல்கலைக்கழகத்தின் குறிப்புகள் கூறும் இத்தமிழ்நூல் 1716 முதல் அங்கிருந்து காணாமல் போய்விட்டது. அது கிடைத்தால் அதுவே முதல் அச்சுத் தமிழ் நூலாக அமையும். அதுவரை 'தம்பிரான் வணக்கம்’ தான் முதல் அச்சுத் தமிழ்நூலாக விளங்கிநிற்கும்’ என்று கூறுகிறார்.

நூல் அமைப்பு

இந்நூல் 16 பக்கங்களும், ஒவ்வொரு பக்கத்திலும் சராசரியாகப் 16 வரிகளும் கொண்டது. 10x14 சென்டிமீட்டர் நீள அகலம் கொண்டது. தமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே 'Doctrina Christam  en Lingua Malauar Tamul’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பக்கத்தின் நடுவில் கிறிஸ்தவத் திரித்துவ தேவன் (Trinity) வடிவம் மரச்செதுக்கு ஓவியமாக பதிக்கப்பட்டுள்ளது. பக்கத்தின் நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் தமிழில் அரைப்புள்ளிகள் நிறுத்தற்புள்ளிகள் போன்றவை வரவில்லை. சுவடிகளில் காணப்படும் சொற்கள் பிரிக்கப்படாமல் எழுதும் முறையே இதிலும் உள்ளது. 18 உட்தலைப்புகள் போர்த்துகீசிய மொழியில் இருக்கின்றன. இது அச்சிடப்பட்ட காகித சீன வணிகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நூலின் கடைசிப் பக்கத்தில் தமிழ் எழுத்துக்களின் பட்டியல் தரப்ப்ட்டுள்ளது. முதல் வரியிலும், இரண்டாம் வரியிலும் முறையே தமிழிலும் போர்த்துகீசிய லத்தீனிலும் 'கோவையில் (கோவாவில்) உண்டாக்கின எழுத்து 1577' என்று தலைப்பு தரப்பட்டுள்ளது. அதன் கீழ் 7 வரிகளில் ஒரு எழுத்துருவில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. பின் அடுத்த இரு வரிகளில் தமிழிலுல் போர்த்துகீசிய லத்தீனிலும் 'கொல்லத்தில் உண்டாக்கின எழுத்து 1578' என்று தலைப்பு தரப்பட்டுள்ளது. அதன் கீழ் பதினொரு வரிகளில் இன்னொரு எழுத்துருவில் தமிழ் எழுத்துக்களும், ஒன்று முதல் பத்து, நூறு ஆயிரம் என்பவற்றுக்கான தமிழ் எண்கள் தரப்பட்டுள்ளன. இந்த இரண்டாம் எழுத்துருவே நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக இந்த அச்சுபிரதி கொல்லத்தில் 1578ல் உருவாக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது.

நடை

இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்:

ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறிஸ்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து...

இந்நூலின் மொழிநடை பிற்கால பைபிள் மொழிநடையில் எவ்வண்ணம் மாறுபட்டுள்ளது என்பதை ஆ. சிவசுப்ரமணியம் இவ்வாறு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

தம்பிரான் வணக்கம்: முதலாவது எல்லாத்திரும் பார்க்க தம்பிரானை நேசித்திருப்பது

பிற்கால மொழியாக்கம்: உனக்கு கர்த்தாவான சர்வேசுவரன் நானே. நம்மைத்தவிர சர்வேசுவரன் உனக்கு இல்லாமல் போவதாக

தம்பிரான் வணக்கம்: இரண்டாவது தம்பிரான் திருநாமத்தைக் கொண்டு வீணே சத்தியம் செய்யாமலிருப்பது.

பிற்கால மொழியாக்கம்: சர்வேசுவரனுடைய திருப்பெயரை வீணே சொல்லாமலிருப்பாயாக.

மாதிரிப் பக்கம்

முதல் பக்கம்:

Doctrina Christam

en Lingua Malauar Tamul

கொம்பஞ்ஞிய தே சேசூ வகையில்

அண்டிறிக்கிப் பாதிரியார்

தமிழிலே பிறித்தெழுதின

தம்பிரான் வணக்கம்.

பக்கம் 3

(குருசு)

சுத்தமான குருசின் அடையாளத்தால்

எங்கள் சத்துருக்கள் எங்கள் மேல் வராமல்

காத்துக்கொள். எங்கள் தம்பிரானே

பிதாமகன் சுத்தமான இசுபிரித்து நாமத்தினாலே

ஆமென்.

(விசுவாசக் கோட்பாடு)

வானமும் பூமியும் படைத்த சறுவத்துக்கும்

வல்லபிதாவான தம்பிரானையே விச்சுவதிக்கிறேன்.

அவனுடைய மகனொருவன் நம்முடைய நாயன்

இசேசூக்கிரிசித்தையே விச்சுவதிக்கிறேன். இவன்

சுத்தமான இசுப்பீரீத்துவினால் சனித்துக் கன்னி

மரியாள் வயிற்றில் நின்று பிறந்தான். போஞ்சியுப்

பிலாத்தின் கீட்பாடுபட்டுக் குருசிலே அறையுண்டு,

செத்தடக்கப்பட்டான். பாதாளங்களிலிறங்கி மூன்றாம்

நாள் செத்தவரிகளிடையில் நின்று உயிர்த்தான்.

வானங்களில் ஏறிச் சறுவத்துக்கும் வல்ல பிதாவாகிய

தம்பிரான் வலப்பாகத்தில் இருக்கிறான். அவடத்தில்

நின்றிருக்கிறவர்களுக்கும் செத்தவர்களுக்கும்

நடுத்தீற்க வருவான். சுத்தமான இசுபிரித்துவையே

விச்சுவதிக்கிறேன். கத்தோலிக்கவாகிய சுத்தமான

யிகிரேசையும் சுத்தமானவர்கள் கூட்டமும்

உண்டென்று விச்சுவதிக்கிறேன்.

இலக்கிய இடம்

தம்புரான் வணக்கம் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் என்ற வகையில் மிகுந்த பண்பாட்டு முக்கியத்துவம் கொண்டது. இதன் உரைநடை வடிவம் அக்கால பேச்சுமொழி எப்படி இருந்தது என்பதற்கான சான்று. தமிழ் உரைநடை உருவான தொடக்கப்புள்ளி இது. பேச்சுமொழியை கொண்டு கருத்துக்களை எழுதமுற்படும்போது உருவாவது உரைநடை. இந்நூல் மதக்கொள்கையின் நுண்ணிய விவாதத்தை பேச்சுமொழியில் எழுத முற்படுவதனால் உரைநடை உருவாக்கத்தின் அறைகூவலை முதலிலேயே எடுத்துக்கொண்டுவிட்டது. அதன் எல்லா சிக்கல்களும் இதில் உள்ளன. கலைச்சொல்லாக்கம், சொற்றொடரமைப்பு ஆகியவற்றில் தமிழ் உரைநடையில் என்றுமுள்ள அறைகூவல்களை இந்நூலே எதிர்கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ் உரைநடை குறித்த எந்த ஆய்வும் இந்நூலில் இருந்தே தொடங்கப்படவேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்


✅Finalised Page