under review

தனுஷ்கோடி ராமசாமி

From Tamil Wiki
Revision as of 07:47, 29 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (corrected error in template text)
தனுஷ்கோடி ராமசாமி

தனுஷ்கோடி ராமசாமி ( மே 5, 1944-நவம்பர் 25, 2005) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப்பார்வை கொண்டவர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கிய அமைப்பான தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து செயல்பட்டவர். ஆசிரியர்

தனுஷ்கோடி ராமசாமி நூல்

பிறப்பு, கல்வி

தனுஷ்கோடி ராமசாமி

தனுஷ்கோடி ராமசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கலிங்கல் மேட்டுப்பட்டி என்னும் ஊரில் மே 5, 1944-ல் சக்கணத்தேவருக்கும் மாயக்காளுக்கும் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய சக்கணத்தேவருக்கு மாயக்காள், மீனம்மாள் என இரு மனைவிகள். மாயக்காளுக்கு தனுஷ்கோடி ராமசாமி, கணபதி, தர்மலிங்கம், லோகமுத்துக்கிருஷ்ணன் என்னுன் நான்கு ஆண்களும் தனலட்சுமி, மரகதம் என இரு பெண்களும். ஆசிரியையாக பணியாற்றிய மீனம்மாளுக்கு நவநீத கிருஷ்ணன், திருஞானசம்பந்தமூர்த்தி என இரு ஆண்களும் ருக்மிணி என ஒரு பெண்ணும். சக்கணத்தேவர் சிற்றூரில் செல்வாக்காக இருந்தார்.

தனுஷ்கோடி ராமசாமி சாத்தூர் ஆரியவைசிய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்து 1961-ல் மதுரை தியாகராசர் கல்லூரில் புகுமுக வகுப்பில் சேர்ந்தார். தேர்வில் அவர் வெற்றிபெறவில்லை. சக்கணத்தேவர் அவ்வாண்டு மறைந்ததனால் அவரால் கல்வியை தொடரமுடியவில்லை. சாத்தூரில் இருந்த புனித தனிஸ்லாஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1964-ல் பயிற்சியை நிறைவுசெய்தார். ஆசிரியப்பணியில் இருக்கையில் இளங்கலை, முதுகலை, கல்வியியல் முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

தனிவாழ்க்கை

தனுஷ்கோடி ராமசாமி 1964-ல் தூத்துக்குடிக்கு அருகே உள்ள தங்கம்மாள் புரம் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியை தொடங்கினார். அவ்வாண்டில் தென்னாற்காடு மாவட்டம் திண்ணிவனம் அருகே உள்ள கள்ளத்தொளத்தூரில் பாரதி தொடக்கப்பள்ளியில் ஆசிரியாரக் பணியாற்றினார்.1970-ல் தான் பயின்ற ஆசிரிய வைசிய உயர்நிலைப்பள்ளியிலேயே ஆசிரியராக பணிதொடங்கி, தமிழில் பட்டம்பெற்று தமிழாசிரியராக ஆகி, தலைமையாசிரியராக பதவி உயர்வுபெற்றார்.

தனுஷ்கோடி ராமசாமி பிப்ரவரி 13, 1972-ல் சரஸ்வதியை மணம்புரிந்தார்.ஒரு மகன் அறம், மருத்துவராக இருக்கிறார்.

அரசியல்

தனுஷ்கோடி ராமசாமியின் அரசியல் பார்வையை உருவாக்கியவர் இருவர். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் அவருக்கு கற்பித்த அருட்தந்தை பீட்டர் இராயப்பன். காந்தியப் பார்வை கொண்ட இறையியலாளர் அவர். அவரிடமிருந்து காந்திய ஈடுபாட்டை அடைந்தார். 1965-ல் திண்டிவனத்தில் பணியாற்றும்போது கோ.கேசவன், இராமசுந்தரம் போன்றவர்களின் நட்பு கிடைத்தது. அதன் வழியாக மார்க்ஸிய ஈடுபாடு கொண்டார். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினராகவும், தமிழ்நாடு ஆசிரியர் சங்க உறுப்பினராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், பொன்னீலன் ஆகியோருக்கு அணுக்கமானவரகா இருந்தார்.

சொற்பொழிவு

தனுஷ்கோடி ராமசாமி மிகச்சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்தார். மொழிநடை தோரணை ஆகியவற்றில் ஜெயகாந்தனை அணுக்கமாக பின்பற்றி மேடைகளில் பேசிவந்தார். மேடைகளில் கதைகளையும் நாடகீயமாகச் சொல்லும் திறன் கொண்டிருந்தார். சி.சுப்ரமணிய பாரதியார் மீது ஈடுபாடு கொண்டிருந்த தனுஷ்கோடி ராமசாமி 1970 முதல் எல்லா ஆண்டும் பாரதி நினைவு இலக்கிய அரங்கில் சொற்பொழிவாற்றி வந்தார்.

அமைப்புகள்

தனுஷ்கோடி ராமசாமி தொடர்ச்சியாக அமைப்புச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்

  • 1961 முதல் 1965 வரை கலிங்கல் மேட்டுப்பட்டியில் இளைஞர் இலக்கிய மன்றம் என்னும் அமைப்பை நடத்தினார். அக்காலங்களில் தனித்தமிழியக்க ஆர்வலராகச் செயல்பட்டார்
  • 1970 முதல் 1978 வரை சாத்தூரில் வைப்பாற்று மணற்பரப்பில் ஆற்றங்கரைக் கவியரங்கம் என்னும் அமைப்பை நடத்திவந்தார். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது
  • 1970 முதல் இந்தோ சோவியத் நட்புறவுக் கழகம் (இஸ்கஸ்) அமைப்பிலும் செயல்பட்டார்
  • 1972-ல் நா.வானமாமலை நடத்திய ஆராய்ச்சி இலக்கிய அமைப்பிலும் இதழிலும் பங்கெடுத்தார். அதன் வழியாக கலையிலக்கியப் பெருமன்றம் அமைப்புடன் தொழர்புகொண்டார்
  • 1975-ல் சாத்தூரில் கலையிலக்கியப் பெருமன்றம் கிளையை தொடங்கினார்.
  • 1982-ல் வடக்குரத வீதியில் பாரதி நூற்றாண்டுவிழாவை மிகப்பெரிய அளவில் நடத்தினார்.
  • 1983 முதல் கலையிலக்கியப்பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டார்
  • 2004, டிசம்பர் 29 முதல் கலையிலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளராக திருவண்ணாமலை மாநாட்டில் தேர்வுசெய்யப்பட்டார்

இலக்கிய வாழ்க்கை

தனுஷ்கோடி ராமசாமி 1963-ல் கண்கள் என்னும் முதல் சிறுகதையை எழுதினார். அது 1976-ல் முக்குடை என்னும் இதழில் வெளிவந்தது. ஆனந்தவிகடன் இதழில் எழுதிய நாரணம்மா (1978), கஸ்பா (1979) கதைகள் அவருக்கு புகழ்தேடித்தந்தன. முதல் சிறுகதைத் தொகுப்பு சிம்மசொப்பன, சரஸ்வதி வெளியீடு என்னும் பெயரால் 1978-ல் அவராலேயே வெளியிடப்பட்டது. பின்னர் அவருடைய நூல்களை அன்னம் பதிப்பகம்மும் நியூ செஞ்சுரி பதிப்பகமும் வெளியிட்டன.

பரிசுகள்,விருதுகள்

  • 1990 தீம்தரிகிட நூலுக்காக கலையிலக்கியப் பெருமன்ற விருது
  • 1991 ஆனந்த விகடன் பொன்விழா சிறுகதைப்போட்டி பரிசு. கந்தகக்கிடங்கிலே சிறுகதை
  • 1992 லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது
  • 1994 அக்னி சுபமங்களா சிறுகதைப்போட்டி விருது வாழ்க்கை நெருப்பூ சிறுகதை

மறைவு

தனுஷ்கோடி ராமசாமி நவம்பர் 25, 2005-ல் புற்றுநோயால் மறைந்தார்.

நினைவுகள்

  • தனுஷ்கோடி ராமசாமி வாழ்க்கை வரலாற்றை இரா காமராசு சாகித்ய அக்காதமி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசைக்காக எழுதியிருக்கிறார்
  • தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை சாத்தூரில் செயல்படுகிறது.
  • தனுஷ்கோடி ராமசாமி இலக்கிய தடம் நூல் இரா காமராசு தொகுத்துள்ளார்

இலக்கிய இடம்

தனுஷ்கோடி ராமசாமி முதன்மையாக மேடைப்பேச்சாளர். மேடைப்பேச்சுக்குரிய உரத்த உணர்ச்சிகரமான கூறுமுறை கொண்டவை அவருடைய கதைகள். முற்போக்கு அரசியலுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட நிலைபாடை நாடகீயமான கதைக் கட்டுமானத்தால் சொல்பவை. கரிசல் மண்ணின் அடித்தள மக்களின் வாழ்க்கையை பொதுவாசிப்புக்குரிய தளத்தில் முன்வைத்தவை.

நூல்கள்

சிறுகதை
  • சிம்ம சொப்பனம் (1978)
  • நாரணம்மா (1983)
  • சேதாரம் (1987)
  • தீம்தரிகிட (1992)
  • வாழ்க்கை நெருப்பூ (2000)
  • பெண்மை என்றும் வாழ்க (2003)
  • செந்தட்டிக்காளை கதைகள் ( 2006)
நாவல்
  • தோழர் (1985)
குறுநாவல்
  • நிழலும் ஒரு கவிதையும் (1988)

உசாத்துணை


✅Finalised Page