under review

ஜீவி காத்தையா

From Tamil Wiki
ஜீவி காத்தையா
காத்தையா போராட்டக்களத்தில்

ஜீவி காத்தையா (ஜூன் 27, 1938 - மார்ச் 18, 2020) மலேசியாவைச் சேர்ந்த தொழிற்சங்கவாதி, ஊடகவியலாளர், சமூகச் செயற்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

ஜீவி காத்தையா ஜூன் 27, 1938-ல் சிலாங்கூர் மாநிலத்தின் பத்து ஆராங் நகரில் பிறந்தார். காத்தையா தம்முடைய தொடக்கக் கல்வியை பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியில் பயின்றார். இடைநிலைக்கல்வியை கோலாலம்பூரில் அமைந்திருந்த மகாத்மா காந்தி உயர்பள்ளியில் பயின்றார். அதன் பின், தன்னுடைய மேற்கல்வியை பக்கிங்காம் வாரிக், லண்டன் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தார். சட்டம், தொழிலாளர் சமூகவியல், பிரிட்டிஷ் காலனித்துவத் தொழிலாளர் கொள்கை (1930-1957) ஆகிய தலைப்புகளில் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டார்.

தொழிற்சங்க ஈடுபாடு

ஜீவி காத்தையா

ஜீவி காத்தையா தன்னுடைய இளமைக்காலத்தின் பெரும்பகுதியை நிலக்கரிச் சுரங்கங்கள் இயங்கிய பத்து ஆராங் நகரில் கழித்தால் அப்பகுதியில் இயங்கிய தொழிற்சங்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். தொழிற்சங்கங்களில் ஆர்வத்துடன் பங்கேற்ற அவருடைய தாய்மாமா வே. ராமசாமியுடன் தொழிற்சங்கக் கூட்டங்கள், மே தினப் பொதுக்கூட்டங்களுடன் செல்லத் தொடங்கினார். அகில மலாயாத் தொழிற்சங்கச் சம்மேளத்தின் தலைவர் எஸ்.ஏ. கணபதியையும் இளமையிலே சந்தித்திருக்கிறார.

ஜீவி காத்தையா தன் 15 வயதிலே பத்து ஆராங் நிலக்கரித் தொழிற்சங்கச் செயலாளர் தயாரிக்கும் அறிக்கைகள், செய்திகளை மொழிபெயர்த்துத் தரத் தொடங்கினார். ரப்பர் தோட்டங்களில் நேரடியாகப் பணிசெய்யாமல் ரப்பர் தோட்டத்துடன் தொடர்புடைய இதர பணிகள் செய்து கொண்டிருந்தவர்கள் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக அங்கம் பெறுவதற்கு இருக்கும் தடையை உணர்ந்து 1964-ஆம் ஆண்டு  மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தின் (AMESU) பங்சார் கிளையைத் தொடங்க முக்கிய பங்காற்றினார். தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்தவர், சங்கத்தின் அரசுக்கு அனுசரணையான போக்கைக் கடுமையாகக் கண்டித்ததுடன் தொழிலாளர்களின் பல சிக்கல்களுக்கு வேலை நிறுத்தம், தொழிலாளர் அமைச்சு, தொழில் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் தீர்வு கண்டார்.  மலேசியத் தோட்டச் சிப்பந்திகள் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அதன் பின்னர் 1982- ஆம் ஆண்டு மலேசியத் தொழிற்சங்க சம்மேளனமான (MTUC) அமைப்பில் துணைத் தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995-ஆம் ஆண்டு நேரடித் தொழிற்சங்க இயக்க ஈடுபாட்டிலிருந்து விலகிக் கொண்டார்.

அரசியல் / சமூகப்பார்வை

AnyConv.com download (2).jpg

ஜீவி காத்தையா சோசிலிச கொள்கையில் பெரும் ஈர்ப்பு கொண்டவராக இருந்தார். பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட நாடுகளில் இருந்த தொழிற்சங்கத் தலைமை தங்களுக்குச் சாதகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள பிரிட்டிஷ் அரசும், பிரிட்டன் தொழிற்சங்க காங்கிரஸும் மேற்கொண்ட முயற்சிகளைத் தன்னுடைய ஆய்வுக்காக மேற்கொண்ட ஆவண வாசிப்பின் வழி கண்டறிந்தார். தொழிற்சங்கங்கள் மதம், இனம்,மொழி என அனைத்துப் பாகுபாடுகளுக்கும் எதிராகத் தொழிலாளர்களின் உரிமை மட்டுமின்றி வேலை வாய்ப்புகள், வேலை, குடும்பம், பள்ளிக்கூடம், உலக அமைதி மற்றும் நேர்மையான மக்களாட்சி ஆகிய அனைத்திலும் பங்காற்ற வேண்டுமென நம்பிக்கை கொண்டிருந்தார்.  அத்துடன், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவர்கலால் நேருவின் அரசியல், சமூகக் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார்.

அரசியல் ஈடுபாடு

ஜீவி காத்தையா, நாடாளுமன்றத்தில் தொழிலாளர்களின் நலன், உரிமை சார்ந்த குரலை எழுப்ப மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். 1974-ஆம் ஆண்டு அப்போதைய மலேசியத் தொழிலாளர் அமைச்சராக இருந்த டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்துடன் போர்ட்கிள்ளான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். அதன் பிறகு 1978 மற்றும் 1982 ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அப்போதைய தொழிலாளர் துணையமைச்சரான டத்தோ கு. பத்மாநாபனிடம் போர்டிக்சன் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

இதழியல்

செம்பருத்தி.காம் மற்றும் மலேசியாகினி.காம் இணைய இதழ்களில், தமிழ் பிரிவு ஆசிரியராக சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றினார். மலேசிய இந்தியர்களையும் மலேசியர்களையும் ஒட்டிய பல முக்கியமான கருத்துரைகளையும் விவாதங்களையும் விரிவாக எழுதியிருக்கிறார். அகில மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து நாடு திரும்ப தடைவிதிக்கப்பட்ட சின் பெங்குடன் நேர்காணலொன்றையும் புரிந்திருக்கிறார்.

கல்விப்பணி

AnyConv.com IMG 5629-300x200.jpg

மலேசியத் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட அரசு சார்பற்ற இயக்கமான தமிழ் அறவாரியத்தின் செயற்குழு உறுப்பினராகவும் ஜீவி காத்தையா செயற்பட்டிருக்கிறார். தமிழ் அறவாரியம் 2013/2014-ஆம் ஆண்டு தவணையில் வெளியீட்ட தமிழ்க்கல்வி ஆங்கில இதழில் திட்ட இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அத்துடன் தமிழ் அறவாரியத்தின் மலேசியக் கல்வி பெருந்திட்ட ஆய்வுக்குழு, மலேசியச் செயல்திட்டக் கூட்டமைப்பு ஆகியக் குழுக்களில் திட்டக்குழுத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

ஜனநாயக உரிமைப் பணி

மலேசியாவில் தேர்தல் அரசியலில் பங்கேற்கும் அனைத்துத் தரப்பினருக்கும் நேர்மையாகவும் சமமாகவும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தர வலியுறுத்தும் 'பெர்சே' எனப்படும் அரசு சார்பற்ற இயக்கத்தின் செயற்பாடுகளிலும் ஜீவி காத்தையா ஈடுபட்டிருந்தார். பெர்சே (BERSIH) அமைப்பு நடத்திய முதலாவது சாலைப் பேரணியிலும் (2007), இரண்டாவது பேரணியிலும் (2011) பங்கெடுத்திருக்கிறார். சுதந்திரம் பெற்றதிலிருந்து அறுபது ஆண்டுகாலமாக மலேசியாவில் நீடித்து வந்த தேசிய முன்னணி தலைமையிலான ஆட்சி மாற்றமடைவதற்கு பெர்சே அமைப்பின் போராட்டங்கள் பெரும் பங்கு வகித்தன.

விளையாட்டு

இவர் ஓட்டப்பந்தயப் பயிற்சிகளில் ஆர்வமிக்கவர். 2005-ஆம் ஆண்டு வரையில் தம்முடைய 67 வது வயதிலும் 10000 மீட்டர் ஓட்டத்தை 28 முதல் 30 நிமிடத்துக்குள்ளாக நிறைவு செய்து கொண்டிருந்தார்.

குறும்படம்

பத்து ஆராங் நகரில் தீவிரமாக இயங்கியத் தொழிற்சங்க இயக்கங்களின் செயற்பாட்டைச் சித்தரிக்கும் வகையில் 2010-ஆம் ஆண்டு மலேசியா கினி செய்தித்தளத்துக்காகத் தயாரிக்கப்பட்ட Batu Arang Special | A step back in time எனும் குறும்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். இப்படம் 2012-ஆம் ஆண்டு நடந்த தெற்காசியாவின் சமூக நீதி மற்றும் சூழியல் படவிழாவில் திரையிடப்பட்டது.

இறப்பு

மார்ச் 18, 2020 அன்று உடல்நலக்குறைவால் தம்முடைய 82-வது வயதில் ஜீவி காத்தையா காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page