under review

சமயவேல்

From Tamil Wiki
சமயவேல்
கவிஞர் சமயவேல்

சமயவேல் (பிப்ரவரி 04, 1957) தமிழ்க் கவிஞர். எண்பதுகளில் எழுதவந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களில் சமயவேலும் ஒருவர். அலங்காரமற்ற இயல்புமொழிக் கவிதையை (Plain Poetry) முதலில் அறிமுகப்படுத்தியவர் என விமர்சகர்களால் சமயவேல் அடையாளப்படுத்தப்படுகிறார். சமயவேல் தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

கவிஞர் சமயவேல் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகிலுள்ள வெம்பூர் கிராமத்தில் ச.கருப்பசாமி, முனியம்மாள் தம்பதியினருக்கு பிப்ரவரி 04, 1957-ல் பிறந்தார். சமயவேலின் தந்தை அந்தப் பகுதியின் மிக நுட்பமான மரச் செதுக்கோவியக் கலைஞராக இருந்தார்.

சமயவேல் வெம்பூர் பஞ்சாயத்து உயர்தொடக்கப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். வெம்பூருக்கு அருகிலுள்ள புதூரில், உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். மதுரை நாகமலை ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இளங்கலை (கணிதம்) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சமயவேல் பட்டப்படிப்பிற்குப் பின் சென்னைக்கு சென்று சுதந்திர இதழாளராக பல இதழ்களில் பணியாற்றினார். பிறகு மத்திய அரசின் தபால் தந்தித் துறையில் தந்தி எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். துறைத் தேர்வுகள் மூலம் தொலை தொடர்புத்துறை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். உபகோட்டப் பொறியாளராக ஒய்வு பெற்றார்.

சமயவேலின் மனைவி பேச்சியம்மாள். சமயவேலுக்கு ஒரு மகள்; இரண்டு மகன்கள். சயமவேல் மதுரையில் வசிக்கிறார்

சமயவேல்

இலக்கிய வாழ்க்கை

சமயவேலுக்கு பள்ளி காலத்திலிருந்தே இலக்கிய ஆர்வம் இருந்தது. ஆரம்பப் பள்ளி தையலாசிரியர் தேவசகாயம் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆன்மீகம், தத்துவம், அரசியல் துறைகளின் ஆரம்பநிலை நூல்களைப் பயின்றார். இளங்கலை கணிதம் பயின்றபோது அங்கு தமிழ் பேராசிரியராக இருந்த திரு இ.சு.பாலசுந்தரம் அவர்கள் மூலம் நவீனத் தமிழ் இலக்கியம் பரிச்சயமானது. ஜெயகாந்தனிடம் தொடங்கி மௌனி வரையிலான வாசிப்பு இக்காலகட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறுகிறார். சிற்றிதழ்களை வாசித்துவிட்டு நண்பர் ந.முருகேசபாண்டியனுயுடன் சேர்ந்து கவிஞர் கலாப்ரியா, கி.ராஜநாராயணன், வண்ணதாசன் போன்ற படைப்பாளிகளை நேரில் சந்தித்து உரையாடி நவீனத் தமிழ் இலக்கிய நுட்பங்களைப் பயின்றனர். கோயில்பட்டியில் இருந்தபோது கவிஞர் தேவதச்சனுடன் அணுக்கமாக இருந்தார். கோணங்கி சமயவேலின் இலக்கியத் தோழர்.

சமயவேலின் முதல் கவிதைத்தொகுப்பு 'காற்றின் பாடல்’ 1987-ல் வெளியானது. அச்சிறிய தொகுதி எண்பதுகளில் வெளிவந்த முக்கியமான கவிதைத்தொகுதியாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. விமர்சகர் ராஜமார்த்தாண்டன் நாகர்கோயிலில் இருந்து வெளிவந்த கொல்லிப்பாவை இதழில் கவிஞர் சுகுமாரன், கவிஞர் ராஜசுந்தரராஜன் ஆகியோருடன் சமயவேலையும் எண்பதுகளின் முதன்மைக் கவிஞராகச் சுட்டிக்காட்டி விரிவான கட்டுரை ஒன்றை எழுதினார். இத்தொகுதியில்தான் அலங்காரமில்லாத நடை கொண்ட இயல்புமொழிக் கவிதையை சமயவேல் தமிழ் கவிதையுலகுக்குக் கொண்டுவந்தார்

அலுவலகப்பணிச்சுமை மற்றும் நிறமிக் குறைபாடால் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவை சமயவேலை சிறிதுகாலம் இலக்கியச் செயல்பாடுகளில் இருந்து அகற்றியிருந்தன. பின்னர் மீண்டும் தீவிரத்துடன் எழுதத் தொடங்கினார். பிற மொழிக்கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். கொரிய நாவலை (The Vegetarian) மரக்கறி என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார். இலக்கிய இதழ்களில் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

இதழியல்

"இளமதி" என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். ஜனவரி 2021 முதல் 'தமிழ்வெளி' காலாண்டு இதழ் ஆசிரியராக இருந்து வருகிறார்.

மரக்கறி (The Vegetarian)

இலக்கிய இடம்

எண்பதுகளில் இறுதிப்பகுதியில் ஒரு முக்கியமான கவிஞராக உருவாகிய இவர் தமிழில், அலங்காரமற்ற இயல்பு மொழிக் கவிதையை (Plain Poetry) முதலில் அறிமுகப்படுத்தியவர். தமிழகத்துக் கரிசல் நிலத்து மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்வதுபோன்ற இவருடைய இயல்புமொழிக் கவிதைகள் அடுத்தடுத்த தளங்களில் ஆழ்ந்த தத்துவ உசாவல்களை கொண்டவையாக வாசகனுக்கு திறந்துகொள்பவை. பின்காலனிய இந்தியாவில் கிராமங்களின் சிதைவுகளை நிலத்தை மானுட அகமாகவும் காணும் தமிழ் அழகியலின் மரபின் படி கவிதைகளாக ஆக்கியவர் சமயவேல். துயரத்தின் மீதும் நம்பிக்கையின் மீதும் அடுத்தடுத்து கால்களை ஊன்றி நகரும் கவிதைகள் இவருடையவை.

"சமயவேலின் கவிதைகள் அக்காலகட்டத்தைக் கடந்து இன்றும் அதே வசீகரத்துடன் இருக்கின்றன. தமிழில் படிமமற்ற கவிதையை, நுண்சித்தரிப்புக் கவிதையை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர் என்னும் இடம் சமயவேலுக்கு உண்டு" என ஜெயமோகன் கூறுகிறார்.சர்வதேச அளவில் தனி மன வெளிப்பாட்டைப் பிரதான அம்சமாகக் கொண்டு புதுக்கவிதை பிறந்தது எனலாம். அந்த வடிவத்தை முன்மாதிரியாகக் கொண்டு எழுந்த தமிழ்ப் புதுக்கவிதையிலும் அதன் பாதிப்புகள் தொடர்ந்தன. இந்த மனநிலை 70-களின் இறுதிவரை தீவிரமாக வெளிப்பட்டு வந்தது. சமூக மனத்தின் வெளிப்பாடுகள் ஏற்கனவே கவிதைகளில் வெளிப்பட்டிருந்தாலும் அந்தப் பண்பு 1980-களில்தான் கூர்மையடைகிறது. கவிஞர் சமயவேல் அதன் தொடர்ச்சி." என மண்குதிரை ஜெயக்குமார் மதிப்பிடுகிறார்.

சமயவேல்

விருதுகள்

  • அமெரிக்கா தமிழர்களின் கலாச்சார அமைப்பான, விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) 2016-ஆம் ஆண்டிற்கான புதுமைப்பித்தன் நினைவு விருதை வழங்கியது.
  • திருச்சி, சமயபுரம், எஸ்.ஆர்.வி.பள்ளியின் 'அறிஞர் போற்றுதும்' நிகழ்வில் 2018-ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விருது வழங்கப்பட்டது.
  • 2018-ஆம் ஆண்டுக்கான ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகளில், சிறந்த கவிதைத் தொகுப்பு மொழிபெயர்ப்புப் பிரிவில் கவிஞர் சமயவேலின் 'அன்னா ஸ்விர் கவிதைகள்' தொகுப்பு விகடன் நம்பிக்கை விருதைப் பெற்றது.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • காற்றின் பாடல் (1987)
  • அகாலம் (1994)
  • தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்)
  • அரைக்கணத்தின் புத்தகம் (2007)
  • மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010)
  • பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014)
  • இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (2019)
  • சமகாலம் என்னும் நஞ்சு (2021)
மின்னிப் புற்கள் கவிதைத்தொகுப்பு
சிறுகதைத் தொகுப்பு
  • இனி நான் டைகர் இல்லை (2011)
கட்டுரைத் தொகுப்பு
  • ஆண்பிரதியும் பெண்பிரதியும் (2017)
  • புனைவும் நினைவும்: வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம் (2018)
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • அன்னா ஸ்விர் கவிதைகள் (2018)
  • குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் (2019)
  • மரக்கறி (The Vegetarian), கொரிய நாவல்
  • இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை (நவசீனக் கவிதைகள்) 2021

வெளி இணைப்புகள்


✅Finalised Page