under review

கோபாலகிருஷ்ண பாரதி

From Tamil Wiki
Revision as of 20:15, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:நாடகாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)

To read the article in English: Gopalakrishna Bharathi. ‎

கோபாலகிருஷ்ண பாரதி (ஓவியர் ராஜம்)
கோபாலகிருஷ்ண பாரதி

கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) தமிழிசையின் முன்னோடிகளில் ஒருவர். இசைப்பாடலாசிரியர், இசைநாடக ஆசிரியர். இவருடைய நந்தனார் சரித்திரம் என்னும் இசை நாடகத்தின் பாடல்கள் புகழ்பெற்றவை. நாட்டாரிசைக்கும் மரபிசைக்குமான ஆழ்ந்த உறவாடலை உருவாக்கியவர் புராணங்கள், கலம்பகங்கள், அந்தாதிகள் போன்ற இலக்கணத்துக்கு உட்பட்ட படைப்புகளே இலக்கியங்களாக அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் எளிய இசைப்பாடல்களை எழுதி அவற்றுக்கு இலக்கிய ஏற்பையும் உருவாக்கினார்.

பிறப்பு, கல்வி

கோபாலகிருஷ்ண பாரதி நரிமணம் என்னும் ஊரில் 1811-ல் பிராமண வகுப்பில் வடமர் பிரிவில் ராமசுவாமி பாரதி என்னும் இசைக்கலைஞருக்கு பிறந்தார் என உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார். திருவாரூர் அருகே உள்ள முடிகொண்டான் என்னும் ஊரில் இளமையில் வாழ்ந்து வந்தார். பின்னர் மாயவரம் அருகே உள்ள ஆனந்தத்தாண்டவபுரம் என்னும் ஊரில் குடியேறினார். அங்கிருந்த அண்ணுவையர் என்னும் நிலக்கிழார் இவருடைய குடும்பத்தை பேணினார்.கோபாலகிருஷ்ணர் அத்வைதம், யோக சாஸ்திரம் ஆகியவற்றை மாயவரத்தில் கோவிந்த சிவம் என்னும் குருவிடம் கற்றார்.

கர்நாடக இசையில் முதன்மையான மூவரில் ஒருவராகிய தியாகராஜரின் சமகாலத்தவர். இசை சார்ந்த குடும்பப் பின்னணி இருந்ததால் சிறு வயதில் இருந்தே சங்கீதத்தில் ஈடுபாடு இருந்தது. அங்கு கிராமங்கள்தோறும் இசை வல்லுனர்கள் இருந்தமையால் இசையை நன்கு கற்றுத் தேர்ந்தார். பாடல்களை இயற்றிப் பண்ணமைத்துப் பாடும் திறன் இயல்பாகவே இருந்தது.

திருவிடைமருதூரில் அமரசிம்ம மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டு வந்த ராமதாஸ் என்னும் ஹிந்துஸ்தானி இசைப் பாடகரிடம் மாணவராக அமைந்து ஹிந்துஸ்தானி இசையிலும் பயிற்சி பெற்றார். திருவிடைமருதூரில் முதன்மைப் பாடகராக இருந்த கனம் கிருஷ்ணைய்யரிடம் நெருங்கிப் பழகி அவரிடமும் பாடல்கள் கற்றுக் கொண்டார். திருவிடைமருதூரில் வாழ்ந்த காலத்தில் அனந்த பாரதி என்னும் வைணவ அறிஞரிடம் வைணவமும் இசையும் கற்றுக்கொண்டார்.

தனிவாழ்க்கை

துறவு மனநிலை கொண்ட இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. உஞ்சவிருத்தி எனப்படு உச்சிப்பொழுது உணவுபெறல் முறையை கடைப்பிடித்து வாழ்ந்தார். மாயவரம், சிதம்பரம், திருவிடைமருதூர் ஆகிய ஊர்களில் வாழ்ந்த கோபாலகிருஷ்ண பாரதிக்கு சிதம்பரம் பொன்னுச்சாமி தீட்சிதர், சிதம்பரம் ராஜரத்ன தீட்சிதர், மாயவரம் ராமசாமி ஐயர், மாயவரம் நடேசையர், மாயவரம் சுப்ரமணிய ஐயர் ஆகிய மாணவர்கள் இருந்தனர். சிதம்பரம் சிவசங்கர தீட்சிதர் என்னும் இசையறிஞரிடம் கோபாலகிருஷ்ண பாரதியார் அணுக்கமான நட்பு கொண்டிருந்தார்.

கோபாலகிருஷ்ண பாரதியாரை தான் சந்தித்த காலகட்டத்தில் பாடமுடியாதபடி அவருடைய குரல் குறைந்திருந்தது என்றும், ஆகவே ஃபிடில் வாத்தியத்தை கற்று அதில் தனக்குத்தானே வாசித்து மகிழ்ந்திருப்பார் என்றும் உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார். நந்தனார் கீர்த்தனை வெளியான பின் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கு நன்கொடைகள் கிடைத்தன. குறைவான செலவுள்ள அவர் அந்த தொகையைச் சேமித்தார். அத்தொகையில் ஒருபகுதியை தனக்கு உதவியாக இருந்த ராமசாமி ஐயர் என்பவருக்கு நன்கொடையாக அளித்தபின் எஞ்சிய மூவாயிரம் ரூபாயை தன் மதிப்பிற்குரிய திருவாவடு துறை ஆதீனகர்த்தர் சுப்ரமணிய தேசிகரிடம் ஒப்படைத்து மாயூரம் அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் இரவில் தயிர்சாதம் படைத்து அதை மறுநாள் நாடோடிகளுக்கு அன்னதானமாக அளிக்கும்படி கோரினார். அதன்படி ஓர் கட்டளை அவர் பெயரில் அமைக்கப்பட்டது.

பங்களிப்பு

தமிழிசை

தமிழகத்தில் சோழர் ஆட்சிக்கு பின்னர் படிப்படியாக தமிழிசை மரபான பண்ணிசை வழக்கொழிந்து ஆலயங்களுக்குள் சடங்குக்கான இசையாக சுருங்கியது. தமிழில் சம்ஸ்கிருதம் ஓங்கியது. தமிழ் இசைப்பாடல் திரட்டுக்களில் திருப்புகழ் புகழ்பெற்றிருந்தது. ஆனால் அதன் மொழி சமஸ்கிருதக் கலவை கொண்டது. தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சியும் தஞ்சையில் மராட்டியர் ஆட்சியும் வேரூன்றியபோது அவைக்கலைஞர்களாக தெலுங்குமொழிப் பாடகர்கள் இடம்பெற்றனர். சாரங்கதேவர் ( பொயு 1175–1247) எழுதிய சங்கீத ரத்னாகரம் என்னும் நூல் இசையின் அடிப்படை இலக்கணநூலாக ஏற்கப்பட்டது. தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் ( பொயு 1600-1634) அரசவையில் இருந்த வேங்கடமகி ( ) எழுதிய சதுர்தண்டி பிரகாசிகை என்னும் இசையிலக்கண நூல் சாரங்கதேவரின் இலக்கணமரபை மேலும் நிலைநிறுத்தியது. அவற்றின் அடிப்படையில், வடஇந்திய இசைப்பாணிகளின் செல்வாக்குடன் உருவான இசைமரபு ஒன்று தமிழகத்தில் நிலைகொண்டது. அது கர்நாடக சங்கீதம் என அறியப்பட்டது. (ஆந்திரா, தமிழகம், கர்நாடகம் உட்பட்ட பகுதிகள் கர்நாடகம் என்றும், இங்கே ஆட்சி செய்தவர்கள் கர்நாடக ஆட்சியாளர்கள் என்றும் அன்று குறிப்பிடப்பட்டது) இந்த மரபின் மையமொழியாக தெலுங்கே இருந்தது.

பிற கர்நாடக சங்கீத அறிஞர்களைப் போலன்றி கோபாலகிருஷ்ண பாரதி தமிழில் ஆழ்ந்த கல்வி கொண்டிருந்தார். கோபால கிருஷ்ண பாரதியின் இசைப்பாடல்கள் நல்ல தமிழில் அமைந்தவை. அதேசமயம் எளிமையான சொற்களில் பொதுமக்கள் அனைவருக்கும் பொருளும் உணர்வுகளும் புரியும்தன்மை கொண்டவை. ஆகவே அவை பெரும்புகழ்பெற்றிருந்தன. கோபாலகிருஷ்ண பாரதியார் பெண்கள் பாடுவதற்குரிய கோலாட்டம்,கும்மி போன்றவற்றை இயற்றினார். அவற்றில் சிதம்பரக் கும்மி மிகப்புகழ்பெற்றது.

சைவம்

கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்கள் அவருடைய காலகட்டத்திற்கு பின் உருவான சைவ மறுமலர்ச்சியின்போது சைவபக்தி மரபின் இசைவெளிப்பாடுகளாக புகழ்பெற்றன. அவர் கைவல்ய நவநீதம், பிரபோத சந்திரோதயம், தத்துவராயர் பாடுதுறை, தாயுமானவர் பாடல்கள் போன்றவற்றை நன்கு கற்றிருந்தார். அத்வைத சித்தாந்தத்தை ஒட்டி பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்போதிருந்த பல கர்நாடக இசைப்பாடகர்கள் இவரிடம் வந்து தங்கள் தேவைக்கேற்றபடி கீர்த்தனைகளை(இசைப்பாடல்கள்) இயற்றித் தரும்படிக் கேட்டுப் பெற்று பாடுவதுண்டு. இவர் தனது பாடல்களில் சரணத்தில்(இறுதி வரிகளில்) தன் பெயரான கோபாலகிருஷ்ண வரும்படி இயற்றி வந்தார் (முத்திரை என்று சொல்லப்படும்). நடராஜ தத்துவத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் இயற்றிய நடராஜர் மீதான பல கீர்த்தனைகள் புகழ் பெற்றவை.

தியாகராஜருடன்

ஒருமுறை திருவையாறு சென்று தியாகராஜரை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது தியாகராஜரின் மாணவர்கள் ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல் ஒன்றைப் பாடிப் பழகிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தியாகைய்யர் கோபாலகிருஷ்ண பாரதியிடம் ஆபோகி ராகத்தில் அவர் ஏதும் பாடல்கள் இயற்றியிருக்கிறாரா என்று கேட்டிருக்கிறார். அதுவரை அந்த ராகத்தில் ஏதும் பாடல்கள் இயற்றியிராத பாரதி மறுமொழி சொல்லவில்லை. மறுநாள் தியாகராஜரை சந்தித்தபோது தான் புதிதாக இயற்றிய ஆபோகி ராகப் பாடலை பாடிக் காட்டியிருக்கிறார்.அதுவே "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" என்ற புகழ் பெற்ற பாடல்.

நந்தனார் சரித்திரம்

கோபாலகிருஷ்ண பாரதி சிதம்பரத்தில் இருந்தபோது தினமும் கோவிலுக்குச் சென்று பாடுவது வழக்கம். சில சமயங்களில் தெற்கு சுவரோரம் கையில் கடப்பாரையும் தோளில் மண்வெட்டியும் சுமந்து நடராஜரை தரிசித்த வண்ணம் நிற்கும் நந்தனார் உருவத்துக்கு அருகே அமர்ந்து பாடுவார். நந்தனாரின் பக்தி அவரை மிகவும் ஈர்த்தது. எனவே "எந்நேரமும் உன்றன் சந்நிதியில் நான் இருக்கவேண்டுமைய்யா" என்ற தனிப்பாடல் ஒன்றை இயற்றினார். இக்கீர்த்தனம் தனியாகவே பாடப்பட்டு வந்தது. பின்னர் வந்த பிற்காலப் பதிப்புகளில் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையோடு சேர்த்துப் பதிப்பித்திருக்கிறார்கள். இவர் எழுதிய நந்தனார் சரித்திரத்தின் கீர்த்தனைகள் புகழ்பெற்றவை (பார்க்க நந்தனார் சரித்திரம்)

உ.வே.சாமிநாதையர்

உ.வே. சாமிநாதய்யர் கோபாலகிருஷ்ண பாரதியிடம் இசை கற்றுக்கொண்டதை தன் வரலாற்றில் பதிவுசெய்திருக்கிறார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் ஆணைக்கேற்ப அவர் இசைக்கல்வியை நிறுத்திக்கொண்டபோது கோபாலகிருஷ்ண பாரதி அவர் தங்கியிருந்த இடத்திற்கே வந்து பாடல்களை பாடிக்காட்டி இசை கற்கும்படி வலியுறுத்தினார். உ.வே.சாமிநாதையர் எழுதிய "கோபாலகிருஷ்ண பாரதி" என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் கோபாலகிருஷ்ண பாரதி பற்றிய தொடக்ககால வரலாற்றுப்பதிவு[1].

மறைவு

கோபாலகிருஷ்ண பாரதி 1881-ல் மரணமடைந்தார்.

நூல்கள்,நினைவுகள்

  • கோபாலகிருஷ்ண பாரதி - பிரமிளா குருமூர்த்தி (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)
  • கோபாலகிருஷ்ண பாரதியார் - உ.வே.சாமிநாதையர் ( இணையநூலகம்)

விவாதங்கள்

கோபால கிருஷ்ண பாரதியாரின் இசைப்பாடல்கள் போன்ற புதிய தமிழ் இசைப்பாடல்களை அக்கால தமிழ்ப் பண்டிதர்கள் இலக்கியமாக கருதவில்லை என்பதை உ.வே. சாமிநாதய்யரின் தன்வரலாறு (என் சரித்திரம்) காட்டுகிறது.

நந்தனார் சரித்திரத்தைத் தன் காலத்திலேயே வெளியிட்டார் கோபாலகிருஷ்ண பாரதியார். ஆனால் அப்போது திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அதில் இலக்கணப் பிழைகள் மட்டுமல்லாது பொருள் குற்றம், கருத்தியல் பிழை இருப்பதாக சொல்லி நந்தனார் சரித்திரத்திற்கு பாயிரம் எழுதிக்கொடுக்க மறுத்து வந்தார்.

பின்னால் கோபாலகிருஷ்ண பாரதியார் பெருமுயற்சி செய்து மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மனதைத் தன் இசையால் மாற்றி, பாயிரம் எழுதி வாங்கினார் என உ. வே. சாமிநாதய்யர் ’என் சரித்திரம்’ நூலில் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

தமிழிசை மரபில் கோபாலகிருஷ்ண பாரதியின் முன்னோடிகளான அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் இசைப்பாடல்கள் நிகழ்த்துகலைகளுடன் தொடர்புடையவை, ஆகவே கவித்துவம் அற்றவை, பேச்சுமொழிக்கு அணுக்கமானவை. மறுபுறம் பண்ணிசையில் பாடப்பட்ட சைவ வைணவ பாடல்கள் பழமையான செய்யுள்மொழி கொண்டவை. கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்கள் எளிய மக்கள்மொழியில் கவித்துவத்தையும் அடைந்தவை. அவற்றின் அழகு அணிகள், சொல்நயம் ஆகியவற்றினூடாக உருவானதல்ல. நாடகீயத் தருணங்கள் மற்றும் நேரடியான உணர்ச்சிவெளிப்பாடு ஆகியவற்றின் வழியாக உருவானது. ஆகவே அவை பெரும் புகழ்பெற்றன.

கோபாலகிருஷ்ண பாரதி தமிழ் (கர்நாடக) இசைமரபின் செவ்வியல் ராகங்களையே பயன்படுத்தினார். ஆனால் பாடல்களின் கரு, கூறுமுறை, சொற்கள் ஆகியவற்றில் நாட்டார்ப்பாடல்களின் அழகியலை கொண்டுவந்தார். அதன் வழியாக இசையை வல்லுநர்களிடமிருந்து எளிய மக்களை நோக்கிக் கொண்டுசெல்ல அவரால் இயன்றது. பிற்காலத்தில் தமிழகத்தின் மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்களின் பாடல்களுக்கும் அதன்பின் திரையிசைப் பாடல்களுக்கும் கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்களே முன்னுதாரணமாக ஆயின. சங்கரதாஸ் சுவாமிகள், பாபநாசம் சிவன் ஆகியோரை கோபாலகிருஷ்ண பாரதியின் வலுவான செல்வாக்கு கொண்ட புகழ்பெற்ற பாடலாசிரியர்களாகச் சொல்லலாம்

படைப்புகள்

இசைப் பாடல் தொகுப்புகள்

பெரியபுராணத்து நாயன்மார்கள் வரலாற்றை போற்றிக் கீர்த்தனைகளாக பாடியவை[2]:

  • நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
  • நீலகண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனை
  • இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை
  • காரைக்காலம்மையார் சரித்திரக் கீர்த்தனை
கும்மி
  • சிதம்பரக்கும்மி
சில புகழ்பெற்ற தனிப்பாடல்கள்
  • அற்புத நடனம் ஆடினானையா அம்பலந்தனில் (ராகம்: ஆகிரி)
  • ஆடிய பாதம் தரிசனம் கண்டால் (ராகம்: யதுகுல காம்போதி)
  • ஆடிய பாதமே கதியென்றெங்கும் (ராகம்: அசாவேரி)
  • எங்கே தேடிப் பிடித்தாயடி மானே (ராகம்: தேவகாந்தாரி)
  • தேடி அலைகிறாயே பாவி மனதே (ராகம்: நாதநாமக்கிரியை)
  • பிறவாத முக்தியைத் தாரும் (ராகம்: ஆரபி)
  • பேயாண்டி தனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய் (ராகம்: சாரங்கா)
  • சபாபதிக்கு வேறு தெய்வம் (ராகம்: ஆபோகி)

வெளி இணைப்புகள்

கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய 256 இசைப்பாடல்களின் பட்டியல்

உசாத்துணை


✅Finalised Page