under review

கோ. வடிவேலு செட்டியார்

From Tamil Wiki
Revision as of 05:52, 20 September 2022 by Madhusaml (talk | contribs) (Stage updated)
dinamani.com

கோ. வடிவேலு செட்டியார் (1863 - 1936) அத்வைத வேதாந்தம் மற்றும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் தர்க்கத்திலும் பெரும் புலமை பெற்ற தமிழறிஞர். பழந்தமிழிலக்கிய நூல்களுக்கும், வேதாந்த தத்துவ நூல்களுக்கும் உரையெழுதினார். தத்துவ நூல்களை பரிசோதித்து முன்னுரை குறிப்புரையுடன் பதிப்பித்தார். 'மகாவித்துவான்' என்று அழைக்கப்பட்டார்.

பிறப்பு,கல்வி

கோ. வடிவேலு செட்டியார் 1863-ஆம் ஆண்டு சென்னை கோமளேசுவரன்பேட்டை சுப்பராயச் செட்டியார் - தனகோட்டி அம்மாள் தம்பதிக்கு பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். பின்னர் 20-ஆம் வயது வரையிலும் தம்முடைய தந்தையாருக்கு உதவியாக மளிகைக் கடையில் பணி செய்தார்.

அவரது மளிகைக் கடைக்கு வரும் தமிழாசிரியரும், புலவருமான இராமானுஜ நாயக்கர் பல சுவையான தமிழ்ப்பாடல்களை பொருளுடன் கவிநயத்துடன் கூறுவார். அவற்றைக் கேட்டு தமிழ் இலக்கியங்களின் மீது கோ. வடிவேலு செட்டியாருக்கு பெரும் பற்று ஏற்பட்டது. இலக்கணம், இலக்கியம், புராணங்கள் என பல வகைப்பட்ட நூல்கள் அவருக்குப் பரிச்சயமாயின. இராமானுஜ நாயக்கருடனான் இத்தகைய தொடர்பு ஏழு ஆண்டுகள் தொடர்ந்தது.

தனிவாழ்க்கை

கோ. வடிவேலு செட்டியார் தன் இருபதாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். 26-ஆம் வயது வரை கடையில் வணிகம் செய்துகொண்டே தம்முடைய குடும்பத்தைக் கவனித்து வந்தார்.

தமிழ்க் கல்வியின் மீதான விருப்பத்தால் அவர் வணிகத்தை கவனிப்பதில் தடை ஏற்பட்டு குடும்பத்தினருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அப்போது இராமானந்த யோகிகள் என்னும் மகாவித்துவான் இராமசாமி நாயுடு, சுப்பன் செட்டியார், மயிலை சண்முகம் பிள்ளை போன்றவர்களிடம் தொடர்பு கொண்டு தமிழ் இலக்கண இலக்கியங்களில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார். இவர் கொள்முதலுக்குச் செல்லும் பாவனையில் புலவர்களிடம் பாடம் கேட்கச் சென்றார். இதுவும் குடும்பத்தினரிடையே கசப்பை ஏற்படுத்தியது. உறவுகளாலும், வியாபாரத்தாலும் மன உளைச்சல் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் ரிப்பன் அச்சக உரிமையாளரான சை.இரத்தினச் செட்டியாரின் தொடர்பு ஏற்பட்டு அவரிடம் வேதாந்தம் படிக்கச் சென்றார். வடிவேலு செட்டியாரின் மனநிலை அறிந்து இரத்தின செட்டியார் 1896-ல் தங்கசாலைத் தெருவில் தொடங்கப்பட்ட இந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் பதவியை வாங்கித் தந்தார்.

கோ. வடிவேலு செட்டியார் பள்ளியில் பணியாற்றியபோது ஓய்வு நேரத்தில் தமிழிலும் தத்துவத்திலும் பாடம் கேட்க வந்தவர்களுக்காக 'வேதாந்த சங்கம்' ஏற்படுத்தினார். தெ. பொ. மீனாட்சிசுந்தரம், மொ. அ. துரை அரங்கனார், மு. வரதராசன் போன்ற தமிழ் ஆர்வலர்கள் அவரிடம் தமிழும் தத்ததுவமும் பயின்றனர்.

கோ.வடிவேலு செட்டியாரின் மறைவுக்குப்பின் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் வேதாந்த சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இலக்கியப் பணி

வடிவேலு செட்டியார் நாற்பத்தைந்து நூல்களுக்கு மேல் எழுதினார்.

1919-ல் 'திருக்குறள் பரிமேலழகர் உரைக்கான விளக்கம்-தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும்' எழுதினார். இரு பாகங்களாக வெளியான இந்தப் புத்தகத்தில் திருவள்ளுவரின் படம் 'திருவள்ளுவநாயனார்' என்ற பெயருடன் அச்சிடப்பட்டிருந்தது. அதில் ஜடாமுடியுடனும் தாடி மீசையுடனும் மார்புக்குக் குறுக்காக யோகப் பட்டை எனப்படும் துண்டை அணிந்தபடியும் திருவள்ளுவர் காட்சியளித்தார். ஒரு கையில் சின் முத்திரையுடன் ஜெப மாலையும் மற்றொரு கையில் ஒரு ஓலைச் சுவடியும் இருந்தது. நெற்றியில் பட்டையும் நடுவில் குங்குமமும் இருந்தது. ஜடாமுடியுடன் கூடிய இவ்வுருவத்திற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறார். 'நாயனார் சொரூபஸ்துதி' என்ற பாடலை அடிப்படையாக வைத்தே இந்த உருவம் திருவள்ளுவருக்குக் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.

https://newindian.activeboard.com/t68446832/topic-68446832 ஆங்கில பொழிபெயர்ப்பில் திருவள்ளுவர் ஓவியம்

இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது, அதிலும் ஒரு திருவள்ளுவர் படம் கோட்டுச் சித்திரமாக இடம்பெற்றிருந்தது. அதில் திருவள்ளுவர் ஒரு சைவ சமய அடியாரைப் போல காட்சியளிக்கிறார். கரங்களிலும் நெற்றியிலும் விபூதிப் பட்டையுடன் காட்சியளிக்கும் இவர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் போலவும் அவரை இரு அடியார்கள் தொழுவதும்போலவும் அந்தப் படம் இடம்பெற்றிருந்தது. இதனை சம்பந்தன் என்பவர் வரைந்திருந்தார். இதற்குப் பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூல்களில் திருவள்ளுவர் படங்கள் ஏறக்குறைய இதே தோற்றத்தில் இடம்பெற்றிருந்தன. திருக்குறள் பரிமேலழகர் உரையிலுள்ள இலக்கண நுட்பங்களையும் தத்துவக் குறிப்புகளையும் தெளிவாக விளக்கி இவரால் எழுதப்பட்ட குறிப்புகள், அறிஞர்களால் பாராட்டப்படுகின்றன. இந்நூலில் எல்லா குறள்களுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெறுகிறது. செட்டியாரின் நண்பர் ஒருவர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்துகொடுத்து தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொன்னதாகச் செட்டியார் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த மொழிபெயர்ப்புப் பகுதிகளில் பெரும்பாலானவை துரு ( Reverend W.H. Drew) பாதிரியாருடைய மொழிபெயர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தாண்டவராய ஸ்வாமிகள் எழுதிய 'கைவல்ய நவநீதம்' நூலுக்கு வசன வினா - விடை, மேற்கோளுடன் விரிவுரை எழுதினார்.[1]

வித்யாரண்யர் இயற்றிய இந்தியத் தத்துவங்களைப் பற்றிய முக்கியமான நூலான ' சர்வதரிசன சங்கிரக' த்தை பிரம்மஶ்ரீ இராமசந்திர சாஸ்திரியைக் கொண்டு தமிழில் மொழியாக்கம் செய்து 1910-ல் முன்னுரை மற்றும் விரிவான குறிப்புகளுடன் வெளியிட்டார்.[2]

இறப்பு

கோ. வடிவேலு செட்டியார் 1936-ல் மறைந்தார்.

படைப்புகள்

தமிழ் இணைய கல்வி கழகம்
தமிழ் இணைய கல்விக் கழகம்
தமிழ் இணைய கல்விக் கழகம்
தமிழ் இணைய கல்விக் கழகம்
தமிழ் இணைய கல்விக் கழகம்
  • நாநாஜீவவாதக்கட்டளை குறிப்புரையுடன் (முதல் பதிப்பு) (1904)
  • திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் - தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் (முதல் பதிப்பு) - 2 vol (1904)
  • ரிபுகீதைத் திரட்டு குறிப்புரையுடன் (1906)
  • மதுசூதன சரஸ்வதி சுவாமிகள் அருளிச்செய்த சித்தாந்த பிந்து (1907)
  • தர்மராஜ தீக்ஷித சுவாமிகள் அருளிச்செய்த வேதாந்தபரிபாஷை (1907)
  • தர்க்கப் பரிபாஷை குறிப்புரையுடன் (1908)
  • துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த வேதாந்த சூளாமணி மூலமும் விரிவுரையும் குறிப்புரையுடன் (1908/1909
  • நாநாஜீவவாதக்கட்டளை குறிப்புரையுடன் (இரண்டாம் பதிப்பு) (1909)
  • ஸ்ரீ வித்தியாரண்ய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சர்வதரிசன சங்கிரகம் (1910)
  • யக்ஷ தரும சம்வாதம் (1913)
  • மெய்ஞ்ஞான போதம் - 1 (1914)
  • வியாச போதினி - முதல் பாகம் (1915)
  • கைவல்லிய நவநீதம் வசனம் - வினாவிடை
  • வியாச போதினி - இரண்டாம் பாகம் (1916)
  • மகாராஜா துறவு வசனம் (19171)
  • ஸ்ரீ சேஷாத்திரி சிவனார் அருளிச்செய்த நாநாஜீவவாதக்கட்டளை குறிப்புரையுடன் (திருத்தமான மூன்றாம் பதிப்பு) (1917)
  • புனிதவதி: காரைக்கால் அம்மையார் (1917)
  • திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் - தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் - ஆங்கில மொழிபெயர்ப்புடன் (திருத்தமான இரண்டாம் பதிப்பு) - Volume 1, Volume 2 (1919)
  • கைவல்லிய நவநீத வசன வினாவிடை விரிவுரையுடன் (1923)
  • தத்துவராய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சசிவன்ன போதம் வசனம் - பதவுரை - விஷேச உரையுடன் (1923)
  • பரமார்த்த தரிசனமென்னும் பகவத் கீதை வசனம் - விரிவாய குறிப்புரையுடன் (1924)
  • திருமுருகாற்றுபடை மூலமும் பரிமேலழகர் உரையும் (1924)
  • ஸ்ரீ சேஷாத்திரி சிவனார் அருளிச்செய்த நாநாஜீவவாதக்கட்டளை விஷேச குறிப்புரையுடன் (திருத்தமான நான்காம் பதிப்பு) (1925)
  • ஸ்ரீ கருணாகர சுவாமிகள் அருளிசெய்த உபநிடத மூலமும் உரையும் (1925)
  • வேதாந்த சூடாமணி வசன வினாவிடை பதவுரையுடன் (1927)
  • மெய்ஞ்ஞான போதம் - 2 (1927)
  • ஒரு பெண்ணரசியின் பிரஹ்மஞாநோபதேசம் - சூடாலை (1928)
  • கந்தரநுபூதி மூலமும் தெளிபொருள் விளக்க விருத்தி உரையும் (1929)
  • சிவஞான போத மூலமும் தெளிபொருள் விளக்கவுரையும் (1929)
  • பரமார்த்தபோத வசன வினாவிடை: யோகானந்த ஆத்மானந்த சம்பாஷணை (1929)
  • ஞான உவமை வெண்பாவும் மனன உவமை வெண்பாவும் தத்துவாதத்துவ விவேக போத வசன வினாவிடையும் (1932)
  • சுந்தர வாசகம் ஏழாம் புத்தகம் (1934)
  • மெய்ஞான போதம்[3]
பரிசோதித்து/பார்வையிட்டு அச்சிட்ட நூல்கள்
  • நவநீத சாரம் (1903)
  • நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலமும் உரையும் - ஆங்கிலேய மொழிபெயர்ப்புடன்(1903)
  • ஸ்ரீ குமாரதேவர் திருவாய்மலர்ந்தருளிய சாஸ்திரக்கோவை (1904) வேதாந்த சாரம் வினாவிடை (1905)
  • நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய ஞானாயி போதம் (1905)
  • நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய மோக்ஷசாதன விளக்கம் (1906)
  • ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராண மூலமும் வசனமும் - 2 vol (volume 1, volume 2) (1908)
  • வேதாந்தப் பிரதீபம் (1909)
  • ஸ்ரீ பகவதநுகீதை (1909)
  • நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலமும் உரையும் (இரண்டாம் பதிப்பு) (1909)
  • ஸ்ரீ புஷ்பதந்தாசிரிய ரென்னுங் கந்தர்வ விறைவர் தேவவாணியிற் றிருவாய்மலர்ந்தருளிய சிவமஹிம்ந ஸ்தோத்திரம் (1909)
  • ஸ்ரீசங்கரபூஜ்ய பகவத்பாதாச்சார்ய ஸ்வாமிகள் திருவாய்மலர்ந்தருளிய விவேக சூடாமணி (1909)
  • வலங்கை மீகாமனார் அருளிச்செய்த அறிவானந்த சித்தியார் (1909)
  • ஔவைப் பிராட்டியார் திருவாய்மலர்ந்தருளிய ஆத்திசூடி மூலமும் - பாகியார்த்தமும், ஆந்தரார்த்தமும் (1910)
  • சிவப்பிரகாசப் பெருந்திரட்டு குறுந்திரட்டுடன் (சுட்டி 2 & சுட்டி 3) (1912)
  • வாக்கியசுதை என்னும் திருக்கு திருசிய விவேகம் மூலமும் உரையும் (1912)
  • நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய பரமார்த்த நியாயத் தீர்ப்பு (1913)
  • ஸ்ரீ ஜகதீச பட்டாசாரியர் அவர்கள் சமஸ்கிருதத்தில் திருவாய்மலர்ந்தருளிய தர்க்காமிர்தம் (1913)
  • மஹாபாகவதத் திரட்டு (1915)
  • மனத்திற்குறுத்து மதி விளக்கம் (லோகோபகாரி பிரசுரம்) (1916)
  • கற்பு விளக்கம் (1917)
  • அன்னதான விளக்கம் (1918)
  • கருணை விளக்கம் (1921)
  • நீதிவாக்கிய மஞ்சரி: 208 நீதி விஷயம் அடங்கியது (1921)
  • நன்மதி தீபம் (1923)
  • திருக்குறள் மூலமும் மணக்குடவருரையும் (1925)
  • நாலடியார் என்று வழங்கும் நாலடி நானூறு மூலமும் உரையும் - ஆங்கில மொழிபெயர்ப்பும் (1926)
  • ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய கந்தர் கலிவெண்பா மூலமும் உரையும் (1926)
  • ஞானசார விளக்கம் (1927)
  • விபூதி விளக்கம் மூலமும் விபூதி மஹாத்மிய வசனமும் (1st ed) (1927)
  • துறவுநிலை விளக்கம் (1928)
  • திரிகடுகம் மூலமும் உரையும் (1928)
  • ஸ்ரீ பட்டனார் அருளிச்செய்த பரமார்த்த தரிசனமென்னும் பகவத் கீதை மூலம் (1931)
  • இல்லற ஒழுக்க விளக்கம்
  • போத விளக்கம் (1931)
  • சாமி விளக்கம் (1931)
  • கற்பு விளக்கம் (1932)
  • அன்னதான விளக்கம் (1932)
  • அநுபவாநந்த விளக்கம் (1932)
  • சுந்தர வாசகம் ஐந்தாம் புத்தகம் (1933)
  • அறிவு நிலை விளக்கம் (1934)
  • விபூதி விளக்கம் மூலமும் விபூதி மஹாத்மிய வசனமும் (2nd ed) (1935)
  • நிச்சல இராமாநந்த சுவாமிகள் இயற்றியருளிய வேதாந்த சாரமென்னும் அபேத தருப்பணம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page