under review

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி

From Tamil Wiki
Revision as of 19:26, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:வரலாற்றாய்வாளர்கள் சேர்க்கப்பட்டது)
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (12 ஆகஸ்ட் 1892 - 15 ஜூன் 1975)

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி ( ஆகஸ்ட் 12, 1892 - ஜூன் 15,1975) வரலாற்று ஆய்வாளர்,பேராசியர். தமிழக வரலாற்றின் முதல்வரைவை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். தென்னிந்திய வரலாறு பற்றி 25 நூல்களும் 15-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். பிற்காலச் சோழர்களின் வரலாற்றை ஏறத்தாழ முழுமையாகவே எழுதியவர்.

பிறப்பு, கல்வி

கல்லிடைக்குறிச்சி அய்யாவய்யர் நீலகண்ட சாஸ்திரி ஆகஸ்ட் 12, 1892 அன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் தெலுங்கு நியோகி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் அய்யாவய்யருக்கு மூன்றாவது மகன். இவரது தந்தை அய்யாவய்யர் கல்லிடைக்குறிச்சியில் ஆரம்பப் பள்ளி நடத்தி வந்தார். நீலகண்ட சாஸ்திரியால் பள்ளிக் கல்வியை முடிக்க முடிந்தாலும் அவரது தந்தையால் கல்லூரிக்கான செலவுகளை ஏற்க முடியவில்லை. சாஸ்திரி அவரது மூத்த சகோதரர் குப்புசாமி சாஸ்திரியின் (சென்னை சமஸ்கிருதப் பள்ளிகளில் மேலாளராகப் பணியாற்றினார்) உதவியால் கல்லூரிப்படிப்பை தொடர்ந்தார்.

நீலகண்ட சாஸ்திரி திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (F.A) பயின்றார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். 1913-ல் முதுகலை( வரலாறு)யில் மதராஸ் மாகாணத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். சென்னையில் முதுகலைப் படிப்பின்போது பெற்ற மாதம் 20 ரூபாய் உதவித் தொகை படிப்பிற்கு உதவியது.

தனி வாழ்க்கை

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி லட்சுமி நரசம்மாளை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு கே.என்.விஸ்வேஸ்வரன் என்னும் ஒரே மகன். சாரதா சாடிலியா நீலகண்ட சாஸ்திரியின் பேத்தி.

கல்விப்பணி

Nilakanda sastri history of south india.jpg

திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் 1913 முதல் 1918 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். அங்கே பேராசிரியர் வி. சாரநாதன், கே.சி. வீரராகவய்யர், என். சங்கர ஐயர் ஆகியோர் நண்பர்களாகக் கிடைத்தனர். 1918-ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலில் நால்வரும் ஒவ்வொருவராகக் கல்லூரியை விட்டு விலகினர். பின்னர் பனாரஸ் இந்துக் கல்லூரியில் சாஸ்திரிக்கு வேலை கிடைக்க சர். பி.எஸ். சிவசாமி ஐயர், வி.எஸ். ஸ்ரீனிவாஸ சாஸ்திரி ஆகியோர் உதவினர். 1918 முதல் 1920 வரை இரண்டு ஆண்டுகள் காசியில் வேலை செய்தபின் அங்கிருந்து சிதம்பரம் ஸ்ரீ மீனாட்சி கல்லூரியில் முதல்வராகப் பணியேற்றார். ஒன்பது வருடம் அங்கே பணிபுரிந்து, 1929-ஆம் ஆண்டு அண்ணாமலை செட்டியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வேலையை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையில் 1914-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்ட இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராக இருந்த எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் (விஜயநகரப் பேரரசு பற்றிய ஆய்வுநூலை எழுதியவர்) 1929-ல் பணி ஓய்வு பெற்றார். சாஸ்திரி அந்தப் பணிக்கு விண்ணப்பித்தபோது தேர்வு குழுவில் இருந்த சர் .ஜதுநாத் சர்கார் சாஸ்திரியை தேர்வு செய்தார். 1929 முதல் 1947-ல் பணி ஓய்வு பெறும் வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பிரிவு நூல்களை மாற்றியமைத்து அவருக்கு பின்பு வரலாற்றாளர்கள் பலர் உருவாக உதவினார். சி. மீனாட்சி, டி.வி. மகாலிங்கம் போன்ற பின்னாளில் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் இவரது மாணவர்கள்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு 1952 முதல் 1956 வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் (Indology) துறையின் தலைவராகப் பணியாற்றினார். பழைய மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறை இயக்குநராக 1954 முதல் கூடுதல் பொறுப்பு வகித்தார். இந்திய கீழையியல் ஆய்வரங்கில் (All-India Oriental Conference) 1950 களில் பணியாற்றினார்.1952-ல் சிறிது காலம் நேபாளம் சென்று அங்குள்ள திரிபுவன் பல்கலைக்கழகத்தில் இந்திய பண்பாடு பற்றிச் சிறப்புரை ஆற்றினார். 1956-ல் சென்னை திரும்பி யுனெஸ்கோ மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவிய தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரியக் கலாச்சாரத்திற்கான (Institute of Traditional Cultures of South East Asia) கல்வி நிறுவனத்தின் இயக்குனராக 1957 ல் பொறுப்பேற்றார். இப்பதவியில் 1971 வரை இருந்தார். இக்காலக்கட்டத்தில் சிக்காகோ பல்கலைக்கழகத்திற்கு வருகைப் பேராசிரியராகச் சென்று அங்குள்ள தொல்லியல் துறையின் மத்திய ஆலோசனைக் குழுவிலும், இந்திய வரலாற்று பதிவு குழுவிலும் இருந்தார்.

வரலாற்றாய்வு

Nilakanda sastri ages.jpg

தென்னிந்திய வரலாறு குறித்த ஆய்வுகளும், தமிழக வரலாறு குறித்த ஆய்வுகளும் மிகத்தொடக்க காலகட்டத்தில் இருந்தபோது வரலாற்றாய்வை நிகழ்த்தியவர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. தென்னக வரலாற்றாசிரியர்களில் அவரே மிக அதிகமாக எழுதியவர் என்று இ.ஶ்ரீதரன் குறிப்பிடுகிறார்.

நீலகண்ட சாஸ்திரியின் காலகட்டத்தில் இலக்கியங்களை காலவரையறை செய்தல், கல்வெட்டுகளைத் தேடி ஆவணப்படுத்துதல், கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் வாசித்துப் பொருள் கொள்ளுதல், இலக்கியக் குறிப்புகளுடன் பொருத்தி ஆராய்தல் ஆகியவை தொடக்கநிலையில் இருந்தன. கல்வெட்டாய்விலும், இலக்கிய வரலாற்றாய்விலும் ஈடுபட்டிருந்த கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை , கே.என். சிவராஜ பிள்ளை, மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை, மு. அருணாசலம் ஆகியோரின் ஆய்வுகள் கே.ஏ.நீலகண்டசாஸ்திரிக்கு பின்புலமாக அமைந்தன. எஸ். வையாபுரிப் பிள்ளை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியுடன் நேரடி உரையாடலில் இருந்தார். வரலாற்றெழுத்தில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி பிரிட்டிஷ் ஆய்வாளர்களின் செவ்வியல் முறைமையை உறுதியாக கையாண்டவர். தொல்லியல் சான்றுகளை முதன்மையாகக் கொள்ளுதல், புறவயமான சான்றுகளின் அடிப்படையில் தரவுகளால் மட்டுமே வரலாற்றை எழுதுதல் ஆகியவை அவருடைய ஆய்வின் நெறிகள். தி. தேசிகாச்சாரியார் முதலிய தொடக்ககால நாணவியலாளர்களின் ஆய்வுகள் அவருக்கு உதவியாக இருந்தன.

கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய நூல்களை வரலாற்று ஆய்வுகள், பண்பாடு மற்றும் சமூக வரலாறு குறித்த ஆய்வுகள், பதிப்பித்த வரலாற்று நூல்கள், வரலாற்று ஆய்வுமுறைகள் குறித்த நூல்கள், குறிப்பிடத்தக்க அவரது சிறிய கட்டுரைகளும் இன்னபிற படைப்புகளும் எனப் பகுக்கலாம் என்று சங்கர் கோயல் (2005) வகைப்படுத்துகிறார். கே.ஏ.நீலகண்டசாஸ்திரி 40 வரலாற்று நூல்களையும் 160-க்கும் மேற்பட்ட ஆய்வேடுகளையும் எழுதியிருக்கிறார். 1929 முதல் 1975-க்கு இடைப்பட்ட காலத்தில் 30 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் 25 நூல்கள் தென்னிந்திய வரலாறு பற்றியவை. பல தனிக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாகியுள்ளன.

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி சென்னைப் பல்கலைக்கழக இதழ், இந்திய வரலாற்று மலர், இந்தியன் ஆன்டிகுயரி (The Indian Antiquary) இந்தியன் ஹிஸ்டாரிகல் குவார்டர்லி (Indian Historical Quarterly), எபிகிராபிஃகா இண்டிகா (Epigraphica Indica), கல்கத்தா ரிவ்யூ (Calcutta Review) ஏஷியாடிக் சொசைட்டி மலர்,( Journal of the Asiatic Society) கல்ச்சுரல் ஹெரிடேஜ் ஆப் இந்தியா (Cultural heritage of India) போன்ற பல முக்கியமான வரலாற்று இதழ்களில் வரலாற்றுக் கட்டுரைகளை எழுதினார்.

1929-ஆம் ஆண்டு நீலகண்ட சாஸ்திரியின் முதல் நூல் பாண்டிய அரசு (Pandiyan Kingdom) நூல் வெளிவந்தது. 1935-ல் சாஸ்திரி எழுதிய சோழர்கள் (The Cholas) நூலை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. நீலகண்ட சாஸ்திரியின் வரலாற்றாய்வில் முதன்மையான நூல்களில் ஒன்றாக சோழர்கள் கருதப்படுகிறது.

தமிழர் வரலாறும் பண்பாடும்
ஆய்வு முறைமை

தமிழக வரலாற்றை ஆராய்வதற்குரிய முறைமை ஒன்றை படிப்படியாக, தன் தொடர்ச்சியான எழுத்துக்கள் வழியாக கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி உருவாக்கினார். அந்த முறைமை நான்கு படிநிலைகளைக் கொண்டது

  • முதன்மையாகக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் நாணயங்களிலும் உள்ள மன்னர்களை அவர்களின் அடைமொழிகள், அவர்களுடன் தொடர்புடைய பிற செய்திகளைக் கொண்டு அடையாளம் காண்பது.
  • கல்வெட்டுகளில் உள்ள ஆண்டுகளின் அடிப்படையில், ஒரு கல்வெட்டுச்செய்தியை பிற கல்வெட்டுகளுடன் இணைத்து, ஒன்றன்பின் ஒன்றாக அமைத்து, அவற்றின் அடிப்படையில் மன்னர்களின் காலத்தை கணிப்பது. அவர்களின் பரம்பரையை உருவாக்குவது
  • கல்வெட்டுகளில் உள்ள செய்திகளைப் புரிந்துகொள்வதற்கு பழந்தமிழ் நூல்களிலுள்ள தரவுகளையும் பயணியர் குறிப்புகளிலுள்ள தரவுகளையும் பயன்படுத்துவது
  • மன்னர்களின் காலம், வம்சத்தொடர்ச்சி ஆகியவற்றைத் தொல்லியல் சான்றுகளைக் கொண்டு வகுத்துவிட்டு மேலதிகமான பண்பாட்டு சித்தரிப்புக்கு இலக்கியச் செய்திகளையும் பயணியர் குறிப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளுதல்.
சோழர்கள்

விவாதங்கள்

தமிழில் வரலாற்றெழுத்து

1915-ல் ஒரு வரலாற்றாசிரியனின் வாக்குமூலம் என்ற கட்டுரையை வங்காள வரலாற்றாளர் ஜதுநாத் சர்க்கார் (Jadunath Sarkar) மாடர்ன் ரிவ்யூ இதழில் வெளியிட்டார். (ஜதுநாத் சர்க்கார் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சென்னை பல்கலைக்கழக வரலாற்றாய்வுத் துறையில் பணியில் சேரக்காரணமாக அமைந்தவர்) அக்கட்டுரையில் ஜதுநாத் சர்க்கார் வரலாற்றாய்வுகள் ஆங்கிலத்தில் இருப்பதனால் இந்தியாவில் வரலாற்றுணர்வு இல்லாமல் இருக்கிறது என்றும், அதைப்போக்க இந்திய வட்டார மொழிகளில் வரலாற்றாய்வு நூல்கள் வெளிவரவேண்டும் என்றும், வரலாற்றுக் கல்வி வட்டாரமொழியில் நிகழவேண்டும் என்றும் எழுதினார்.

அப்பொழுது நெல்லை இந்துக் கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஜதுநாத் சர்க்காரை மறுத்து வரலாற்றாய்வுகளைச் செய்ய தமிழ் போன்ற வட்டாரமொழிகள் போதுமானவை அல்ல என்றும், ஆங்கிலமே உகந்த மொழி என்றும் எழுதினார். இக்கருத்துக்கு சி.சுப்ரமணிய பாரதி கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். ஆனால் அன்றைய சூழலில் வரலாறு சார்ந்த கலைச்சொற்கள் தமிழில் மிகக்குறைவாகவே இருந்தன என்பதும், தமிழ்நாடு பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த வரலாற்றாய்வு நூல்கள் அதற்குப்பின் ஐம்பதாண்டுகள் கடந்தும்கூட தமிழாக்கம் செய்யப்படவில்லை என்பதும் ஓர் உண்மை.

தமிழின் தனித்துவம்

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தன் ஆய்வின் தொடக்க காலகட்டத்தில் சங்ககால இலக்கியச் சான்றுகளைக் கொண்டு தமிழ்ப் பண்பாடு தனித்தே உருவாகி வந்தது, தனித்தியங்கியது என்னும் கருத்தை முன்வைத்தார். தன் ஆய்வு வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் சங்ககாலம் பற்றிய தொல்லியல் சான்றுகள் குறிப்பிடும்படி இல்லாத சூழலில் இலக்கியச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அம்முடிவை முன்வைக்கத் தயங்கினார். இந்தியா முழுக்க எல்லா வட்டாரப் பண்பாடுகளிலும் சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கு வலுவானது என்றும், அவற்றின் உருவாக்கத்தில் சம்ஸ்கிருதம் வழியாக வந்த இந்தியப் பொதுப்பண்பாட்டின் பங்களிப்பு உண்டு என்றும் சொன்னார். இவை அவருக்கு தமிழ்ப்பண்பாட்டுத் தேசியவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றுத்தந்தது.

தென்னக வரலாற்றாசிரியர்களில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியே தலையாயவர் என மதிப்பிடும் கணபதி சுப்பையா கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் மூன்று நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார். முதலில் அன்னியப்பாதிப்பின்றி பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த ஒரு தனித்துவம் கொண்ட பண்பாடு தமிழகத்தில் சங்ககாலத்திற்கு முன் இருந்தது என்றார். பின்னர் தமிழ்ப்பண்பாடு என்பது ஆரிய- தமிழ்ப் பண்பாடுகளின் கலவை என்றார். மூன்றாம் கட்டத்தில் சம்ஸ்கிருதம் இந்தியாவின் எல்லா பண்பாட்டு வளர்ச்சிக்கும் அடிப்படை. தமிழும் விதிவிலக்கல்ல என்றார். சுப்பையா கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் இந்த அழுத்திக்கூறலை அன்று உருவாகி வந்த திராவிடவாதம், தமிழியம் ஆகிய தரப்புகள் ஒட்டுமொத்த சம்ஸ்கிருதச் செல்வாக்கையே நிராகரிக்கும் நிலைப்பாடு எடுத்தமைக்கு எதிரான சீற்றம் கொண்ட எதிர்வினை என்று மதிப்பிடுகிறார்.

இந்திய தேசியப்பார்வை

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி இந்திய மறுமலர்ச்சிக் கால வரலாற்றாசிரியர்களில் ஒருவர். முதலில் இந்திய வரலாற்றை எழுதிய காலனியாதிக்க வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றைத் தங்கள் ஆதிக்கக் கோணத்தில் எழுதினர். அவ்வெழுத்துக்கு மாறாக இந்தியாவின் தொன்மை, பெருமை, தனித்தன்மை ஆகியவற்றை முன்வைக்கும் நோக்குடன் எழுதப்பட்டவை மறுமலர்ச்சிக்கால வரலாற்றாய்வுகள். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியிடம் இந்தியப் பெருமிதம், சம்ஸ்கிருதச் சார்பு ஆகியவை உள்ளன என்று குற்றம் சாட்டப்படுகிறது.

நொபுரு கரஷிமா தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு (A Concise History of South India, 2014), என்ற நூலில் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்று நூலை முழுமையான துல்லியமான ஆய்வு என்று பாராட்டும்போதே அவர் தென்னிந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சியில் சம்ஸ்கிருதம் மற்றும் பொது இந்தியப் பண்பாட்டின் பங்களிப்பை வலியுறுத்துவதில் சார்புநிலை கொண்டவர் என்று குறிப்பிடுகிறார். சங்கர் கோயல் நீலகண்ட சாஸ்திரி இந்தியப் பெருமிதம் கொண்டவர் என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்க்கல்வி

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தமிழ் வரலாற்றின் அடிப்படைத் தரவுகளான தமிழிலக்கியங்கள், தமிழ்க் கல்வெட்டுகள் ஆகியவற்றை ஆராய்வதற்கு போதுமான அளவுக்கு தமிழறிவு உடையவர் அல்ல என்று ஆ.இரா.வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார். தமிழ்ச்செய்யுள்கள் மற்றும் கல்வெட்டுவரிகளைப் பொருள்கொள்ள அவர் எஸ்.வையாபுரிப் பிள்ளையையே சார்ந்திருந்தார் என்று சொல்லும் வேங்கடாசலபதி அவருடைய காலகட்டத்தில் மொழியின் வெவ்வேறு பண்பாட்டு உட்குறிப்புகளையும், சொற்களின் பொருள்கொள்ளலில் உள்ள வரலாறு சார்ந்த வளர்ச்சிநிலைகளையும் கருத்தில்கொள்ளும் முறை உருவாகவில்லை என்று குறிப்பிடுகிறார்.

மலேசியத் தமிழ்க்கல்வி

கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் பகுதி தொடங்கப்படும் முன்பாக, அப்பகுதி தொடங்கப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் அதன் போதனா மொழியாக இருக்கத் தகுதியான மொழி குறித்தும் ஆய்வு செய்ய பேராசியர் நீலகண்ட சாஸ்திரி இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டார். அவர் 23 மார்ச் 1953ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்து ஒரு மாத காலம் தங்கி தன் ஆய்வேட்டை முடித்து மலாயா பல்கலைக்கழக செனட்டிம் ஒப்படைத்து விட்டுச் சென்றார். ஆயினும் நீலகண்ட சாஸ்திரியின் முடிவுகள் மலாயாவில் கடும் எதிர்ப்பினை தோற்றுவித்தன.

(பார்க்க நீலகண்ட சாஸ்திரியின் மலேசிய வருகை)

பிராமணியப்பார்வை

நீலகண்ட சாஸ்திரியின் ஆய்வுகளில் இந்தியப்பார்வை மேலோங்கியுள்ளது என்னும் குற்றச்சாட்டை விரிவுபடுத்தி அவருடையது முழுக்க முழுக்க பிராமணச்சாதிப்பார்வை என முத்திரை குத்தும் திராவிட இயக்க அரசியல்சார்புடையவர்கள் உள்ளனர். திராவிட இயக்க அரசியல் சார்புடையவர்களில் குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியரான ஆ.இரா.வேங்கடாசலபதி அதை ஏற்பதில்லை, வேங்கடாசலபதியின் பார்வையில் தமிழ் வரலாற்றாசிரியர்களில் முதன்மையானவரும், தமிழ் வரலாற்றாய்வின் அடிப்படையை அமைத்தவரும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிதான். திராவிட இயக்க அரசியல்பார்வையுடன் முன் வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு பற்றி அரவிந்தன் கண்ணையன் இவ்வாறு கூறுகிறார். "அண்மையில் நீலகண்ட சாஸ்திரி பேரறிஞர் ஆயினும் பிராமணிய உலகப் பார்வையை தவிர்க்க முடியாதவர் என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது வெறும் அவதூறு மட்டுமே. ஏனென்றால் நீலகண்ட சாஸ்திரி எழுதிய ஏராளமான நூல்களில் இருந்து சில நூல்களிலுள்ள சில பத்திகளை எடுத்து வைப்பதை தவிர்த்தால் எவரும் அவர் ஓர் ஆதாரத்தை உதாசீனம் செய்தார் என்பதற்கோ ,தனக்கு அசௌகரியமான ஒரு தரவை பார்க்காமல் தவிர்த்தார் என்பதற்கோ எந்தச் சான்றையும் அளிக்க முடியாது. நேர் மாறாக அவ்வப்போது அவர் தனக்கு கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகள் பெரும்பாலும் பிராமணர்களால் எழுதப்பட்டவை என்றும் ,ஆகவே அவற்றின் அடிப்படையில் அவர் அளிக்கும் சித்திரம் மறுக்கப்பட வாய்ப்புள்ளதே என்றும் சொல்லிச் செல்கிறார். ஒரு வரலாற்றாசிரியரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் நேர்மை இது மட்டுமே. இவ்வளவுதான், கூடுதலாகவோ குறைவாகவோ அல்ல"

வரலாற்றாய்வில் இடம்

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் வரலாற்றாய்வுகள் தமிழக வரலாற்றை எழுதுவதில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கின. இன்றும் அவையே தமிழகவரலாற்றாய்வின் பொதுக்களமாக உள்ளன. அவரை ஏற்றோ மறுத்தோ திருத்தியோ விரிவாக்கியோதான் தமிழக வரலாறு எழுதப்படுகிறது.

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி தமிழ் இலக்கியங்களையும், வரலாற்றையும் காலக்கணிப்பு செய்த முறையே இன்றுவரை புறவயமான ஆய்வாளர்களால் ஏற்கப்படுவதாக நீடிக்கிறது.அவர் சங்க காலத்தை பொ.மு .100 முதல் பொ.யு. 250 வரை என நிறுவுகிறார். இந்த கால ஆராய்ச்சி பின்னாளில் எஸ். வையாபுரிப்பிள்ளையால் முன்னெடுக்கப்பட்டது. நீலகண்ட சாஸ்திரி எழுதிய பாண்டியர் மற்றும் சோழர் வரலாறுகள் பிற்காலத்தில் டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் 'பாண்டியர் வரலாறு' , 'பிற்காலச் சோழர் வரலாறு' நூல்களுக்கு முன் மாதிரியாக அமைந்தன.

நீலகண்ட சாஸ்திரியின் 'சோழர்கள்' என்னும் நூல் தமிழ் வரலாற்றாய்வில் ஒரு செவ்வியல் படைப்பாக கருதப்படுகிறது. இந்நூலில் சோழ மன்னர்களின் வரலாறு, அக்காலத்தைய படையெடுப்புகள், சோழப் பேரரசின் ஆட்சி முறை, நில உரிமை முறை, வரி விதிப்பு,மக்களின் வாழ்க்கை முறை, தொழில், வணிகம், கல்வி, சமயம், கலை இலக்கியம் என சோழர் காலத்தின் பல தளங்களையும் விரிவான தரவுகளுடன் விளக்குகிறார். ஒரு வரலாற்று நூல் எத்தகைய முழுமையான சித்திரத்தை அளிக்க முடியும் என்பதற்கான முன்னுதாரணமாக இந்நூல் விளங்குகிறது.

நீலகண்ட சாஸ்திரியின் 'தென்னிந்திய வரலாறு' அவருடைய முதன்மையான நூல் எனக் கருதும் ஆய்வாளர்கள் உள்ளனர். வரலாற்றாய்வாளர் சஞ்சய் சுப்ரமணியம் அந்நூலை "எல்லா வகையிலும் ஒரு செவ்வியல் படைப்பு. அதற்கு இணையான ஒன்று இன்றுவரை முன்வைக்கப்படவில்லை. ஏராளமான தரவுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்வதில் ஆசிரியருக்கு இருக்கும் தேர்ச்சி அவரை பிற தென்னிந்திய வரலாற்றாசிரியர்கள் அனைவரை விடவும் மிக மேலே நிறுத்துகிறது" என்று மதிப்பிடுகிறார்.

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியை நொபுரு கரஷிமா தமிழக வரலாற்றாசிரியர்களில் முதன்மையானவர் என மதிப்பிடுகிறார். நீலகண்ட சாஸ்திரியின் 'தென்னிந்திய வரலாறு' என்னும் நூல் கூர்மையானது, முழுமையானது என்று சொல்லும் கரஷிமா அதுவே தென்னக வரலாற்றைப் பற்றிய ஒரே நம்பகமான ஆய்வு என்று கூறுகிறார். அதற்கு பின் சாஸ்திரிக்கு நிகரான ஒரு வரலாற்று நூலை எழுத எவராலும் இயலவில்லை. தமிழ் அடிப்படைவாதிகள் அத்தகைய ஒரு புறவயமான வரலாற்றை எழுதுவதில் இருந்து வரலாற்றாசிரியர்கள் அஞ்சி விலகும்படி செய்தனர் என்கிறார். அத்துடன் வரலாற்றை எழுதுவதில் உருவாகி வந்துள்ள புதிய கொள்கைகள் அத்தகைய ஒரு முழுமைச்சித்திரத்தை அளிக்கமுடியாதபடி வரலாற்றாசிரியர்களை விலக்குகின்றன என்கிறார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி தன் தமிழ் இலக்கிய வரலாறு நூலில் நீலகண்ட சாஸ்திரியைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இந்தியப் பண்பாட்டை முழுமையாக விளங்கிக் கொள்வதற்குத் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சிகளை உன்னிப்பாக ஆராய்தல் வேண்டும் என்பதனை இந்திய வரலாற்று ஆசிரியர்களிடையே வற்புறுத்தி, தென்னிந்திய வரலாற்றை தாம் எழுதிய வகையாலும் எழுதிய செய்திகளாலும் வன்மையான தளநிலைப்படுத்திய நீலகண்ட சாஸ்திரியின் வருகையுடன்தான் சங்க இலக்கியத்தை வரலாற்றுச் சான்றாகப் பயன்படுத்துவதிலுள்ள பிரச்சனைகள் தெளிவுற விளக்கப்படுகின்றன"

பேராசிரியர். ஆர். செம்பகலட்சுமி சாஸ்திரியின் இல்லஸ்ட்ரேடட் ஹிஸ்டரி ஆப் சவுத் இந்தியா (Illustrated History of South India) புத்தகத்தின் முன்னுரையில் நீலகண்ட சாஸ்திரியைப் பற்றி குறிப்பிடும் போது, "சாஸ்திரியின் ஆய்வுகள் மரபான/பாரம்பரியத் தன்மை கொண்டவை. வரலாற்றெழுத்தின் சமீபத்திய முன்னேற்றம் அவருடைய ஆய்வுமுறை மற்றும் முடிவுகள் மேல் விமர்சனங்களை உருவாக்குகிறது. ஆனால் இதனால் சாஸ்திரியின் பணிகளை எவ்வகையிலும் குறைத்து சொல்வதற்கில்லை. சாஸ்திரி திடமான கால வரிசையை இட்டுத் தந்தார். அது பேரரசுகளின் காலத்தை ஆராய்ச்சி செய்வதில் முக்கியப் பங்காற்றியது." என்கிறார்.

ஆய்வாளர்கள் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் பார்வையை ஏற்றாலும் மறுத்தாலும் அவரே தென்னிந்திய வரலாற்றாசிரியர்களில் முதன்மையானவர் என்றும், அவர் அமைத்ததே தமிழ் வரலாற்றாய்வின் அடித்தளம் என்றும் ஒப்புக்கொள்கிறார்கள். அவருடைய தரவுகள் சார்ந்த புறவய ஆய்வுமுறைமையை அனைவரும் ஏற்கிறார்கள். அவருடைய காலக்கணிப்பு, அரசுகளின் வரலாற்றுத்தொடர்ச்சியை அவர் உருவாக்கிய விதம் பொதுவாகவே ஏற்கப்படுகிறது.

அவர் மீதான விமர்சனங்கள் இரண்டு.

  • அவர் செவ்வியல் வரலாற்றாய்வு நோக்கு கொண்டவர். ஆகவே பேரரசுகள் மற்றும் அரசர்களின் வரலாற்றையே வரலாறு என எழுதுகிறார். அரசர்களின் வரலாறு பற்றி மட்டுமே சான்றுகள் கிடைக்கின்றன என்பதனால் அவர்களின் வரலாறே வரலாறென்று ஆகிவிடாது என்று அடுத்த கட்ட வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். வரலாற்றாய்வுக்கு சமூகவியல், பொருளியல் உள்ளிட்ட பிற துறைகளின் ஆய்வுமுறைமைகளையும் வரலாற்றாய்வுக்கு பயன்படுத்துகிறார்கள். நிலவுடமை முறை, நிலமானிய முறை, பாசன வசதிகள், வணிகம் ஆகியவற்றைக்கொண்டு மக்கள் வரலாற்றை எழுத முயல்கிறார்கள். அடுத்த கட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் வரலாற்றையும், விளிம்புநிலை வரலாற்றையும் எழுத முற்படுகிறார்கள். அவர்கள் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியை மறுத்தும், விரிவாக்கியும் முன்செல்கிறார்கள்.
  • கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி இந்திய மறுமலர்ச்சிக்கால வரலாற்றாசிரியர். இந்தியாவுக்குரிய தனித்தன்மையை கண்டடைதல், நிறுவுதல் ஆகியவை மறுமலர்ச்சிக்கால வரலாற்றாசிரியர்களின் இயல்புகள். மறுமலர்ச்சிக்கால வரலாற்றாசிரியர்களே இந்திய வரலாற்றின் விரிவான அடித்தளத்தை அமைத்தவர்கள் என்றாலும் இன்றைய வரலாற்றாய்வுகள் அவற்றை வெவ்வேறு வகைகளில் கடந்து செல்கின்றன. மறுமலர்ச்சிக்கால வரலாற்றாசிரியர்களிடமிருந்த இந்திய தேசியப்பார்வை, இந்தியப் பண்பாட்டை ஒற்றைக்கட்டமைப்பாகப் பார்க்கும் பார்வை ஆகியவை இன்றைய வரலாற்றாசிரியர்கள் பலரால் மறுக்கப்படுகின்றன. நீலகண்ட சாஸ்திரி மீதும் அம்மறுப்புகள் உருவாகியுள்ளன.

ஆயினும் தென்னிந்திய வரலாற்றாய்வின் முதன்மை வரலாற்றாசிரியர், அடித்தளத்தை அமைத்தவர் என்னும் இடம் நீலகண்ட சாஸ்திரிக்கு எப்போதும் உள்ளது. அவருடைய 'தென்னிந்திய வரலாறு', 'சோழர்கள்' என்னும் இரு நூல்களுக்கும் செவ்வியல் தகுதி அளிக்கப்படுகிறது.

மறைவு

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சென்னை மைலாப்பூரில் உள்ள எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் (பழைய பெயர், தற்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) அமைந்த தன்னுடைய நீலேஸ்வர் என்னும் வீட்டில் ஜூன் 15, 1975 அன்று உயிரிழந்தார்.

விருதுகள்

  • 1958-ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் நீலகண்ட சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது.

நூல்கள்

நீலகண்ட சாஸ்திரி ஆங்கிலத்திலேயே எழுதினார். அவருடைய நூல்களில் சிலவே இதுவரை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மிகச்சிலவே கிடைக்கின்றன

தமிழில்
ஆங்கிலத்தில்
  • The Pāṇḍyan Kingdom from the Earliest Times to the Sixteenth Century. Luzac. 1929.
  • Studies in Chola history and administration. University of Madras. 1932.
  • The Cholas. University of Madras. 1935.
  • A comprehensive history of India. Orient Longman. 1936.
  • Foreign Notices of South India: From Megasthenes to Ma Huan. University of Madras. 1939.
  • Historical method in relation to problems of South Indian history.. University of Madras. 1941.
  • Gleanings on social life from the Avadanas. Indian Research Institute. 1945.
  • Further sources of Vijayanagara history. University of Madras. 1946.
  • The Tamil kingdoms of South India. The National Information & Publications. 1948.
  • South Indian Influences in the Far East. Hind Kitabs. 1949.
  • History of Sri Vijaya. University of Madras. 1949.
  • A History of South India from Prehistoric Times to the Fall of Vijayanagar: from prehistoric times to the fall of Vijayanagar. Oxford University Press. 1955.
  • Historical method in relation to Indian history. 1956.
  • A Comprehensive History of India. Orient Longman. 1957.
  • Development of religion in South India. Orient Longman. 1963.
  • The Culture and History of the Tamils. K. L. Mukhopadhyay. 1964.
  • Sources of Indian history with special reference to South India. Asian Publishing House. 1964.
  • A great liberal: speeches and writings of Sir P. S. Sivaswami Aiyar. Allied Publishers. 1965.
  • Life and culture of the Indian people: a historical survey. Allied Publishers. 1966.
  • Cultural Contacts Between Aryans and Dravidians. Manaktalas. 1967.
  • Age of the Nandas and Mauryas. Motilal Banarsidass. 1967.
  • An Advanced history of India. Allied Publishers. 1971.
  • Sangam literature: its cults and cultures. Swathi Publishers. 1972.
  • Aspects of India's history and culture. Oriental Publishers. 1974.
  • South India and South-East Asia: studies in their history and culture. Geetha Book House (Mysore). 1978.

உசாத்துணை


✅Finalised Page