under review

கு. அழகிரிசாமி

From Tamil Wiki
Revision as of 14:45, 25 September 2022 by Madhusaml (talk | contribs) (moved to final)
கு.அழகிரிசாமி
கு.அழகிரிசாமி-சீதாலட்சுமி
கு.அழகிரிசாமி-1
கு.அழகிரிசாமி-
கு.அழகிரிசாமி-கையெழுத்து
கு.அழகிரிசாமி
கு.அழகிரிசாமி குடும்பம்
நினைவோடை கு.அழகிரிசாமி

To read the article in English: Ku. Azhagirisamy. ‎

என்.ஆர்.தாசன் நூல்

கு. அழகிரிசாமி (செப்டெம்பர் 23, 1923 - ஜூலை 5, 1970) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகளில் சாதனை புரிந்தவர் என அறியப்படுகிறார். இதழாளர், இசையிலும் நாட்டாரியலிலும் ஆய்வுகள் செய்தவர்.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில்பட்டி அருகே இடைச்செவல் என்னும் ஊரில் செப்டெம்பர் 23, 1923-ல் குருசாமி-தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். தெலுங்கு பேசும் பொற்கொல்லர் குடியைச் சேர்ந்தவர்கள். இடைச்செவலில் கி.ராஜநாராயணன் வீடு இருந்த அதே தெருவில்தான் அழகிரிசாமியின் வீடும் இருந்தது. அவர்கள் இளமைக்கால நண்பர்கள். (தமிழகத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் சாகித்ய அகாதெமி விருது பெற்றது இடைச்செவலில்தான்).

அழகிரிசாமியின் குடும்பத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இருக்கவில்லை. இளமையிலேயே தொழில் பயிற்றுவிப்பார்கள். ஆனால் சிறுவனாக இருந்தபோது வீட்டுமுன் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தில் ஏறிவிளையாடியபோது அது சரிந்து விழுந்து அழகிரிசாமியின் கை ஒடிந்தது. அதற்கு சரியான கட்டு போடாமையால் ஒரு கை செயலிழந்தது. ஆகவே அவரால் தொழில்செய்ய முடியாது என பள்ளிக்கு அனுப்பினார்கள். பல்வேறு உதவிகளால் பள்ளி இறுதி வரை அழகிரிசாமி படித்தார். இடைச்செவல் ஊரில் முதலில் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தவர் அவரே.

தனிவாழ்க்கை

கு.அழகிரிசாமி கோயில்பட்டி அருகே ஒரு சிற்றூரில் அரசு உதவிபெறும் பஞ்சாயத்துபோர்டு பள்ளியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகச் சேர்ந்தார். சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது. முப்பத்தைந்து ரூபாய் ஊதியம் அளித்த அந்த வேலை அன்று மதிப்பு மிக்கது. ஆனால் அவரால் அவ்வேலையில் ஈடுபட முடியவில்லை. வேலையில் இருக்கையிலேயே கதைகளை எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய கதைகளை வெளியிட்ட ஆனந்தபோதினி இதழின் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் அவரை சென்னைக்கு வரும்படி அழைத்தார்.சென்னைக்குச் சென்ற அழகிரிசாமி அங்கே இதழாளர்களுக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறிய ஊதியத்தில் வாழமுடியாமல் மீண்டும் கோயில்பட்டிக்கே வந்து சார்பதிவாளர் அலுவலக வேலையை ஏற்றார். ஆனால் அந்த வேலையில் அவர் உள்ளம் செல்லவில்லை. எனவே மீண்டும் வேலையை துறந்து ஆனந்தபோதினி இதழில் சென்று சேர்ந்தார்.

1952-ல் அழகிரிசாமி மலேசியா தமிழ் நேசன் இதழின் ஆசிரியராக சென்றார். 1955-ல் மலேசியாவில் இசைநாடகங்களை அவர் தயாரிக்கும் பணியில் இருந்தபோது இசையிலும் நடிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்த சீதாலட்சுமியை சந்தித்து காதல்கொண்டார். திருச்செந்தூரில் பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்த சீதாலெட்சுமியின் தந்தை ஹரிஹர ஐயர் ஹார்மோனிய வித்வான். சீதாலெட்சுமி சிறுமியாக இருக்கும்போது ஹரிஹர ஐயர் மலேசியாவுக்குக் குடும்பத்தை அழைத்துச்சென்றார். ஹரிஹர ஐயர் மறைந்த பின் சீதாலட்சுமி அங்கே இசைக்கலைஞராக இருந்தார். வீட்டார் எதிர்ப்பை மீறி சீதாலட்சுமி அழகிரிசாமியை பென்டாங் சிவசுப்பிரமணியர் கோவிலில் வைத்து மணந்துகொண்டார்.

1957-ல் மனைவியுடனும் மகனுடனும் தமிழ்நாட்டுக்கு திரும்பிய அழகிரிசாமி காந்தி நூல்வெளியீட்டு கழகத்தில் மூன்றாண்டுகள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். 1960 முதல் நவசக்தி இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1965-ல் அப்பணியில் இருந்து விலகி 1970-ல் மறைவது வரை சுதந்திர எழுத்தாளராக வாழ்ந்தார்.

அழகிரிசாமிக்கு இராமச்சந்திரன், ராதா ,சாரங்கராஜன் ,பாரதி என நான்கு வாரிசுகள். கு.அழகிரிசாமி மறைந்தபோது ஆறாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த சீதாலக்ஷ்மி தன் மகள் ராதாவிடம் இருந்து கற்றுக்கொண்டு மகளுடன் தானும் பள்ளியிறுதித் தேர்வு எழுதி வென்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை பார்த்து தன் குழந்தைகளை படிக்கவைத்தார். அழகிரிசாமியின் நண்பராக இருந்த வி.எஸ்.சுப்பையா,அவ்வேலையை சீதாலட்சுமிக்கு வாங்கிக்கொடுத்தார். அழகிரிசாமி -சீதாலெட்சுமியின் மூத்த மகன் ராமச்சந்திரன் வங்கி மேலாளராக இருந்து ஓய்வுபெற்றிருக்கிறார், மூத்த மகள் ராதா மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர், இளைய மகன் சாரங்கநாதன் ஒலிப்பதிவுக் கலைஞர், இளைய மகள் பாரதி மனநல மருத்துவர்.

இதழியல்

1944-ல் ஆனந்தபோதினி இதழில் பணிக்குச் சேர்ந்த அழகிரிசாமி அதை உதறிவிட்டு வந்து சில மாதங்கள் கோயில்பட்டியில் தங்கிவிட்டு மீண்டும் சேர்ந்தார். 1952 வரை ஆனந்தபோதினி, பிரசண்ட விகடன், தமிழ் மணி, சக்தி ஆகிய இதழ்களில் உதவியாசிரியராக பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதத்தில் எட்டு ஆண்டு உழைப்பில் 125 ரூபாய் சம்பளத்தைக்கூட எட்டமுடியவில்லை என்றும் தனக்கு திருப்தியான எதையும் எழுதாததனால் 1952 வரை எவருக்கும் தன் பெயர் தெரியாது என்றும் அழகிரிசாமி வருந்துகிறார்.

1952-ல் அழகிரிசாமி மலேசியாவில் தமிழ் நேசன் இதழின் ஆசிரியராக சென்றார். அவர் வாழ்க்கையில் இருந்த வறுமை மறைந்தது. 1952 முதல் 1957 வரை அவர் மலேசியாவில் வாழ்ந்த காலகட்டத்தில் மலேசிய இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார். 1957-ல் அழகிரிசாமி மலேசிய தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி எழுதிய தலையங்கம் அரசின் சீற்றத்துக்கு ஆளானபோது அழகிரிசாமியை தமிழ்நேசன் இதழ் பணிநீக்கம் செய்தது.

அழகிரிசாமி இந்தியா திரும்பி 1960 வரை காந்தி நூல்களின் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் பணியாற்றினார். 1960 முதல் நவசக்தி இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1965-ல் அப்பணியில் இருந்து விலகினார்.1970-ல் தொ.மு.சி. ரகுநாதன் பரிந்துரையால் சோவியத் லேண்ட் இதழ் அவருக்கு ஆசிரியர் பொறுப்பை அளித்தது. ஆனால் மூன்று மாதங்களே அங்கு அவர் பணிபுரிந்தார். அதற்குள் அவர் நோயுற்று மறைந்தார்.

கு.அழகிரிசாமி-கடிதங்கள்
கு.அழகிரிசாமி-

இசைப்பணி

கு.அழகிரிசாமிக்கு மரபிசையில் ஆர்வமும் பயிற்சியும் இருந்தது. அவருடைய ஊரில் மணம் புரிந்திருந்த நாதஸ்வரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் அங்கு வரும்போதெல்லாம் உடனிருந்து இசைகேட்டார். இசையறிஞர் விளாத்திக்குளம் சுவாமிகள் பாடுவதை கேட்க தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தார். தமிழில் இசைப்பாடல்களை எழுதுவது, வழக்கொழிந்துபோன இசைப்பாடல்களை தேடித் தொகுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டதை அவருடைய கடிதங்கள் காட்டுகின்றன. அவர் மலேசியாவில் இருந்தபோது எட்டயபுரம் கடிகை நமசிவாயப் புலவர் இயற்றிய 'வல்லீ பரதம்’ 'முக்கூடற்பள்ளு' ஆகிய இசைநாடகங்களை தயாரித்தார். தியாகராஜர், பாரதியார், கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை போன்றோரின் பாடல்கள் சிலவற்றை ஸ்வரப்படுத்தியிருக்கிறார். அண்ணாமலை ரெட்டியார்ரின் 'காவடிச்சிந்தையும்’ பதிப்பித்தார்.

இலக்கியவாழ்க்கை

இதம் தந்த வரிகள்

அழகிரிசாமி 1942-ல் தன் முதல் படைப்பான 'உறக்கம் கொள்ளுமா' எனும் கதையை ஆனந்தபோதினியில் வெளியிட்டார். இதழ்களில் பணியில் சேர்ந்தபின் வெவ்வேறு பெயர்களில் இதழ்களில் எழுதினார். முதன்மையாகச் சிறுகதைகளே அழகிரிசாமியின் இலக்கியச் சாதனைகள். கல்கி முதலிய இதழ்களில் தொடர்கதைகளும் எழுதினார். அவருடைய தொடர்கதைகள் நாவல்களுக்குரிய கலைத்தன்மை கொண்டவை அல்ல.

மொழியாக்கங்கள்

அழகிரிசாமி சென்னையில் இதழ்களில் வேலைபார்க்கும்போது ரஷ்ய இலக்கியம் மீது ஆர்வம்கொண்டு 1950-ல் மாக்ஸிம் கார்க்கியின் அமெரிக்காவிலே, லெனினுடன் சில நாட்கள் ஆகிய நூல்களை மொழியாக்கம் செய்தார். பின்னர் 1957 முதல் 1960 வரை காந்தி நூல்வெளியீட்டு நிலையத்தில் பணிபுரியும்போது மாக்சிம் கார்க்கியின் யுத்தம் வேண்டாம், விரோதி பணியாவிட்டால் ஆகிய கட்டுரைநூல்களை தமிழில் கொண்டுவந்தார். பலநாட்டுச் சிறுகதைகள் என்னும் பெயரில் கதைகளை மொழியாக்கம் செய்தார். லாரன்ஸ் பன்யனின் அக்பர், குடியரசுத்தலைவர் ராஜேந்திரபிரசாத்தின் இந்திய ஒருமைப்பாடு, ஆகியநூல்களை மொழியாக்கம் செய்தார்.

பதிப்புப்பணி

அழகிரிசாமிக்கு சிற்றிலக்கியங்கள், நாட்டாரிலக்கியங்களை முறையாகப் பதிப்பிக்கவேண்டும் என்னும் ஆர்வம் இருந்தது. பதிப்பிக்க எண்ணிய நூல்களைப்பற்றி அவர் கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிடுகிறார். சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடிச்சிந்து நூலின் செம்மைசெய்யப்பட்ட பதிப்பை அழகிரிசாமி தொகுக்க சக்தி காரியாலயம் வெளியிட்டது. கம்பராமாயணத்தில் ஐந்து காண்டங்களையும் குறிப்புகளுடன் பதிப்பித்தார். ஆண்டான் கவிராயர் போன்ற அறியப்படாத கவிஞர்களின் தனிப்பாடல்களை திரட்டி நூலாக்குவதைப் பற்றி கி.ராஜநாராயணனுக்கு ஆர்வத்துடன் எழுதியிருக்கிறார்

நாடகங்கள்

கு.அழகிரிசாமிக்கு நாடகங்கள் மேல் தொடர் ஈடுபாடு இருந்தது. அவர் எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்னும் நாடகம் எஸ்.வி.சகஸ்ரநாமம் குழுவினரால் மேடையேற்றப்பட்டது.

புனைவிலக்கியங்கள்

1952-ல் அழகிரிசாமி எழுதிய ’கு.அழகிரிசாமியின் கதைகள்’ என்னும் நூல் சக்தி காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. அழகிரிசாமி நாவல்களை இதழ்களில் தொடராக எழுதினார். முழுநேர எழுத்தாளரானபிறகு சுதேசமித்திரன், கல்கி போன்ற இதழ்களில் தொடர்நாவல்கள் வெளிவந்தன. அவருடைய சிறந்த சிறுகதைகள் 1960 முதல் 1965 வரையிலான காலகட்டத்தில் அவர் நவசக்தி இதழில் பணியாற்றியபோது எழுதப்பட்டவை. கு.அழகிரிசாமி தொ.மு.சி. ரகுநாதன் புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் வல்லிக்கண்ணன் போன்றவர்களுக்கு அணுக்கமான இலக்கிய நண்பராகத் திகழ்ந்தார்.

கடித இலக்கியம்

கு.அழகிரிசாமிக்கும் கி.ராஜநாராயணனுக்கும் டி.கே.சிதம்பரநாத முதலியார் மீது மிகப்பெரிய ஈடுபாடு இருந்தது. அவருடைய கடிதமெழுதும் பாணியை அவர்கள் கடைப்பிடித்தனர். தமிழ் கடித இலக்கியத்தில் அவர்கள் எழுதிய கடிதங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களும் சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதங்களும் (இதம் தந்த வரிகள்) தொகுக்கப்பட்டுள்ளன.

மரபிலக்கியம்

கு. அழகிரிசாமிக்கு மரபிலக்கியம் மீது தீவிரமான ஈடுபாடு இருந்தது. சிற்றிலக்கியங்களிலும் தனிப்பாடல்களிலும் ரசனைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவை நூல்வடிவில் வெளிவந்தன. ரசனை மரபில் டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வழியை அழகிரிசாமி கடைப்பிடித்தார்.இலக்கியத்தேன், தமிழ் தந்த கவியின்பம், தமிழ் தந்த கவிச்செல்வம் ஆகியவை அவருடைய ரசனைக் கட்டுரைகள்.

மலேசிய இலக்கியப் பணி
கு.அழகிரிசாமி

1952 முதல் 1957 வரை கு.அழகிரிசாமி மலேசியாவில் தமிழ் நேசன் இதழில் பணியாற்றிய காலமே மலேசிய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லப்படுகிறது. அதுவரை மிக ஆரம்பநிலையில், அரசியல் சார்ந்து படைப்புகள் அங்கே உருவாகிக் கொண்டிருந்தன. நவீனத்தமிழ்க் கவிதைகளை தமிழ்நேசனில் வெளியிட்டார். புதிய எழுத்தாளர்களை கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினார். மாதந்தோறும் மலேசியாவின் எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் சந்திக்கும் இலக்கியக்கூடுகைகளை நடத்தினார்.அவரை முன்னோடியாகக் கொண்டு கமலநாதன், துரைராஜ் போன்ற எழுத்தாளர்கள் மலேசியாவில் உருவாயினர்.

அழகிரிசாமி மலேசியாவை விட்டு வந்தபின் அவருடைய பங்களிப்பு அங்கே உணரப்பட்டது. 1983-ல் அவருடைய கு.அழகிரிசாமி கதைகள் என்னும் தொகுப்பு மலேசியாவில் வெளியிடப்பட்டது. மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு தலைமையில் நிகழ்ந்த விழாவில் அழகிரிசாமியின் மனைவி சீதாலட்சுமி அந்நூலை வெளியிட்டார். அவருடைய இரு நாடகங்களும் மலேசியாவில் பாடநூலாக வைக்கப்பட்டன. மலேசிய இலக்கிய வரலாற்றில் கு.அழகிரிசாமி முன்னோடிகளில் ஒருவராகத் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறார்.

விருதுகள்

1970-ல் அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதெமி விருது அவர் மறைந்தபின் வழங்கப்பட்டது.

மறைவு

கு.அழகிரிசாமி முதுகெலும்பில் காசநோய் தாக்குதலால் ஜூலை 5, 1970-ல் மறைந்தார்.

நினைவுகள், வாழ்க்கைவரலாறுகள்

  • கு.அழகிரிசாமி - வெளி ரங்கராஜன் .இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை ( இணையநூலகம்)
  • கு.அழகிரிசாமி - நினைவோடை.சுந்தர ராமசாமி
  • கு.அழகிரிசாமி எழுத்துக்கள் -என்.ஆர்.தாசன்

செம்பதிப்புகள்

பழ. அதியமான் காலச்சுவடு இதழுக்காக கு. அழகிரிசாமியின் அனைத்துக் கதைகளையும் செம்பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்.

இலக்கிய இடம்

கு.அழகிரிசாமி முதன்மையாகச் சிறுகதையாசிரியராகவே நினைவுகூரப்படுகிறார். புதுமைப்பித்தனுக்குப் பின் யதார்த்தவாதச் சிறுகதையில் முதன்மைச்சாதனையாளர் கு.அழகிரிசாமிதான் என்னும் விமர்சன மதிப்பீடு உண்டு. அழகிரிசாமியின் கதைகள் நேரடியானவை, எளிய மொழியில் பெரும்பாலும் உரையாடல்கள் வழியாக முன்னகர்பவை. கு.அழகிரிசாமி உத்திச்சோதனைகள் செய்யவில்லை. கதைகளை பூடகமாக்க முயலவுமில்லை. பெரும்பாலான கதைகள் வாழ்க்கையை வெளிப்படையாகச் சொல்வனவாக, சிறுகதை வடிவம் அமையாதவையாகவே உள்ளன. ஆனால் அவருடைய சிறந்த கதைகளில் தன்னியல்பாகவே மானுடநேயம் என்று சொல்லப்படும் உளநிலையின் உச்சம் வெளிப்படுகிறது. உறவுச்சிக்கல்களின் ஆழம் தொட்டுக் காட்டப்படுகிறது. அக்கதைகள் தமிழிலக்கியத்தின் சாதனைகளாகக் கருதப்படுகின்றன.

"பாத்திரங்களை எடுத்துக்கூறும் முறையிலும், சம்பவங்களை விளக்கும் நகைச்சுவைத் திறனிலும், யதார்த்த வாழ்வின் அடித்தளத்திற் காணப்படும், மனிதாய நிலைகளை எடுத்துக்காட்டும் சிறப்பினும் அழகிரிசாமிக்கு இன்றைய தமிழ்ச்சிறுகதையுலகில் இணையொருவருமில்லை" என்று மதிப்பிடுகிறார் கார்த்திகேசு சிவத்தம்பி.

’அழகிரிசாமி, புதுழைப்பித்தனின் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று கருத ஏதுக்கள் இருப்பினும், உண்மையில் அவர் கு.ப.ரா.வின் குடும்பத்தைச் சார்ந்தவர். கு.ப.ரா.வின் வலிமையான வாரிசு. மனித இயல்பைப்  புதுமைப்பித்தனைப் போல் ஒரு சிடுக்காகக் காணாமல் அமைப்பின் மீது அதிகக் குறைகளைக் கண்டவர் ஆட்டிக் குலைக்கும் வாழ்விலும் மனித ஜீவன்கள் தக்க வைத்துக்கொண்டிருக்கும் மேன்மைகள் இவரைப் புல்லரிக்கச் செய்கின்றன. கு.ப.ரா.வைப்போல் எளிமையான சாயல்களும் மென்மையான குரலும் மிகுந்த சிறுகதைப் பிரக்ஞையும் கொண்டவர்’ என்று சுந்தர ராமசாமி மதிப்பிடுகிறார்.

நூல்கள்

நாவல்
  • டாக்டர் அனுராதா
  • தீராத விளையாட்டு
  • புது வீடு புது உலகம்
  • வாழ்க்கைப் பாதை
சிறுவர் இலக்கியம்
  • மூன்று பிள்ளைகள்
  • காளிவரம்
மொழிபெயர்ப்பு
  • தர்மரட்சகன் (1950) (குஸ்தாவ் ப்ளாப்ர்ட் புதினம் ஜுலியஸ்)
  • மாக்சிம் கார்க்கியின் நூல்கள்
  • லெனினுடன் சில நாட்கள்
  • அமெரிக்காவிலே
  • யுத்தம் வேண்டும்
  • விரோதி
  • பணியவிட்டால்
  • பலநாட்டுச் சிறுகதைகள் (1961, தமிழ் புத்தகாலயம்)
நாடகங்கள்
  • வஞ்ச மகள்
  • கவிச்சக்கரவர்த்தி
சிறுகதைத் தொகுப்புகள்
  • அன்பளிப்பு
  • சிரிக்கவில்லை
  • தவப்பயன்
  • வரப்பிரசாதம்
  • கவியும் காதலும்
  • செவிசாய்க்க ஒருவன்
  • புதிய ரோஜா
  • துறவு
கட்டுரைத் தொகுப்பு
  • இலக்கியத்தேன்
  • தமிழ் தந்த கவியின்பம்
  • தமிழ் தந்த கவிச்செல்வம்
  • நான் கண்ட எழுத்தாளர்கள்
கடித இலக்கியம்
  • கு.அழகிரிசாமியின் கடிதங்கள்
  • இதம் தந்த வரிகள்

உசாத்துணை


✅Finalised Page