under review

காலாபாணி

From Tamil Wiki
காலாபாணி

காலாபாணி (2021) மு.ராஜேந்திரன் எழுதிய நாவல். 1801-ல் நடைபெற்ற சிவகங்கை போரில் பிரிட்டிஷாரால் தோற்கடிக்கப்பட்ட சிவகங்கை அரசகுடிகள் மலாயாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டதை பற்றிய நாவல்.2022-ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது பெற்றது.

எழுத்து வெளியீடு

மு.ராஜேந்திரன் 1801 என்னும் நாவலை 2016 -ல் எழுதினார். அதில் காளையார்கோயில் போரில் வேலுநாச்சியார் தோற்கடிக்கப்பட்ட கதையை எழுதியிருந்தார்.அந்நாவலின் தொடர்ச்சியாக வேலுநாச்சியாரின் மகன் உட்பட குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்ட கதையை இந்நாவலில் எழுதினார். இதை அகநி பதிப்பகம் 2021-ல் வெளியிட்டது

"இதற்கு முன்பாக 1801 என ஒரு நாவலை எழுதியிருக்கிறேன். அந்த நாவலுக்காக வரலாற்றாசிரியர் ராஜய்யனைப் பார்க்கும்போது, 1801-ல் சிவகங்கையில் நடந்ததுதான் விடுதலைக்கான முதல் புரட்சி என்றார். இதுவே என்னுடைய இரண்டாவது நாவலுக்கு தூண்டுகோலாக அமைந்தது. சிறுவயதில் கல்கி, விக்ரமன், சாண்டில்யன் எழுத்துக்கள் பிரபலமாக இருந்தன. அவற்றில் நான் இயல்பாகவே ஈர்க்கப்பட்டேன். அந்த ஈர்ப்புதான் இந்த வரலாற்று நாவல்களை எழுத தூண்டுகோலாக அமைந்தது” என்று மு.ராஜேந்திரன் கூறினார்.

பின்னணி

சிவகங்கை சமஸ்தானம் தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளருடன் தொடர்ச்சியாக போரிட்டு வந்தது. 1749-ல் சிவகங்கை ஆட்சியாளர் சசிவர்ணத் தேவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த முத்து வடுகநாதத் தேவரும், 1746-ல் அவர் மணந்த வேலுநாச்சியாரும் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டனர். 1790-ல் வேலுநாச்சியாரின் மகள் வெள்ளச்சி நாச்சியார் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். 1793-ல் வெள்ளச்சி நாச்சியாரின் கணவர் வேங்கை பெரிய உடையணத் தேவர் அரசரானார். அவரை பிரிட்டிஷார் 1801-ல் நடைபெற்ற போரில் வென்று நாடு கடத்தினர். வேலுநாச்சியின் தத்து மைந்தர் கெளரிவல்லப உடையணத்தேவர் பிரிட்டிஷாருக்கு கட்டுப்பட்ட அரசராக பதவி ஏற்றார்.

கதைச்சுருக்கம்

1801-ல் நடைபெற்ற போருக்குப்பின் 1802-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி லெப்டினென்ட் ராக்கெட் தலைமையிலான படையினரால் வேலுநாச்சியாரின் மருமகனும், சிவகங்கை மன்னருமான வேங்கை பெரிய உடையணத்தேவர் கொல்லப்பட்ட சின்ன மருதுவின் மகன் துரைசாமி, நான்கு பாளையக்காரர்கள் உட்பட அவருடைய கூட்டாளிகள் 72 பேருடன் கைதுசெய்யப்பட்டு; திருமயம் கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு; அங்கிருந்து கப்பலில் பினாங்குக்கு நாடுகடத்தப்பட்டார். 74 நாட்கள் நீண்ட பயணத்தின்போதே 3 பேர் இறந்துவிட எஞ்சியோர் பினாங்கு கடற்கரையில் 6 நாட்கள் காத்திருக்க வைக்கப்பட்டு இறக்கிவிடப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோருக்கு மனப் பிறழ்வு ஏற்பட்டது. பெரிய உடையணத் தேவர் தனிமைப்படுத்தப்பட்டு சுமத்திரா தீவிலிருந்த பென்கோலன் நகருக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்த மால்பரோ கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் சுகாதாரக் கேட்டினால், சிறைக்கு வந்த நான்கே மாதங்களில் தன் 34-வது வயதில் உடையணத் தேவர் இறந்தார். மருது பாண்டியரின் மகனும் பினாங்கிலேயே இறந்தார். காலாபாணி இந்த நாடுகடத்தலின் கதையைச் சொல்கிறது.

விருது

  • 2022 கேந்திர சாகித்ய அக்காதமி விருது

இலக்கிய இடம்

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என வரலாற்றாசிரியர்களால் அடையாளப்படுத்தப்படும் நிகழ்வு காளையார்கோயில் போர். அதைப்பற்றிய வரலாற்று நாவலான காலாபாணி பெரும்பாலும் உண்மைநிகழ்வுகள், உண்மையான நிகழ்விட வர்ணனைகள் வழியாக அவ்வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கிறது.

உசாத்துணை



✅Finalised Page