under review

அழகியல்

From Tamil Wiki
Revision as of 08:34, 18 September 2022 by Tamizhkalai (talk | contribs)

அழகியல் (Aesthetics) (முருகியல்) இயற்கையிலும் கலையிலும் உள்ள அழகை அதன் இயக்கம், நெறிகள், நுட்பங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஆராய்வதும் வகுத்துக்கொள்வதும் அழகியல் எனப்படுகிறது. அழகியல் இன்று இலக்கியம், கலைகள் ஆகியவற்றில் முதன்மையாக பயன்படுத்தப்படும் சொல். அழகியல் தத்துவத்திலும் இலக்கியம் மற்றும் கலைக்கோட்பாடுகளிலும் பயன்படுத்தப்படும் அடிப்படைக் கருத்துருவம்.

சொல்

ஆங்கிலச் சொல்லான aesthetic என்பது கிரேக்கச் சொல்லான aisthētikós என்பதில் இருந்து வந்தது. புலணர்வு சார்ந்த அறிதல் என்று பொருள். இன்று நாம் பயன்படுத்தும் பொருளில் Aesthetics என்னும் சொல் விமர்சகர் ஜோசப் அடிசன் (Joseph Addison) 1712-ல் பயன்படுத்தியது எனப்படுகிறது. ஜெர்மானிய தத்துவசிந்தனையாளர் அலக்சாண்டர் பௌம்கார்ட்டன் (Alexander Baumgarten) 1750-ல் இச்சொல்லை தத்துவார்த்தமாக விரித்தெடுத்தார். ‘அழகுணர்வை அறியமுற்படுதல்’ என அவர் அழகியலுக்கு அளித்த வரையறை பொதுவாக ஏற்கப்படுகிறது.

தமிழில் அழகியல் என்னும் சொல்லை இலக்கியவிமர்சகர் ஆ. முத்துசிவன் உருவாக்கி தன் கட்டுரைகளில் பயன்படுத்தினார். தமிழில் அழகு என்பது இயற்கை, கலை அனைத்திலும் இருக்கும் அனுபவம். இயல் என்பது அதையொட்டிய சிந்தனைத்துறையைக் குறிக்கும் சொல்லொட்டு.

கருத்துருவம்

அடிப்படை

அழகியல் என்னும் கருத்துருவம் மேலைச்சிந்தனையில் உருவாகி இந்தியாவுக்கு வந்த ஒன்று. இந்திய சிந்தனையில் அந்தக் கருத்துரு அதற்கு முன் இருந்ததில்லை. இந்திய (தமிழ்) சிந்தனையில் கலை, இலக்கியம், இசை, நிகழ்த்துகலைகள் ஆகியவற்றுக்கான அழகியல் சார்ந்த அளவுகோல்களும், இலக்கணங்களும் நீண்டகாலமாக இருந்துள்ளன. இலக்கியத்தில் அணியிலக்கணம் இலக்கியப்படைப்பின் அழகியல்கூறுகளை வகுத்துரைப்பது. சிற்பம், இசை, நிகழ்த்துகலைகளில் பரதமுனிவரின் ரச சித்தாந்தம் (மெய்ப்பாடுகள்) அவற்றின் அழகியல்கூறுகளை வரையறை செய்வது. ஆனால் இவை அனைத்துமே தனித்தனியாக கலையிலக்கியங்களின் அழகு வெளிப்படும் முறையை வகுக்க முற்படுபவை. அனைத்துக் கலைகளிலும், இயற்கையிலும் வெளிப்படும் அழகு என்பது என்ன என்றும்; அதை அறிந்து வகுக்கும் முறை என்ன என்றும் ஆராய்வதே நவீன அழகியல். அனைத்துக்கும் பொதுவான கொள்கைகளையும், நெறிகளையும் வரையறை செய்துகொண்டு அவற்றை அனைத்துக் களங்களிலும் பரிசீலிப்பது அது.

வளர்ச்சி

இயற்கையிலும் கலையிலக்கியங்களிலும் உள்ள அழகு என்னும் இயல்பை அறியவும் வரையறுக்கவும்தான் அழகியல் என்னும் சிந்தனைத் துறை உருவாகியது. அழகு என்பது ஒத்திசைவின் வெளிப்பாடு என்னும் கருத்து பின்னர் உருவானது. இயற்கையின் உள்ளுறையை வெளிப்படுத்துதல் என்னும் விளக்கம் பின்னர் அமைந்தது. அழகை அதை ரசிப்பவனின் பார்வையில் வரையறை செய்யலாகாது என்னும் கொள்கை அதன்பின் பேசப்பட்டது. அபாயகரமான ஒன்று மனிதனுக்கு அழகற்றதாகத் தோன்றக்கூடும். விரும்பத்தக்க ஒன்று அத்தருணத்தில் அழகாகவும் தோன்றக்கூடும். அந்த விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் அழகு என்பது என்ன எனும் வினா எழுந்தபோது இயற்கையிலுள்ள ஒத்திசைவு, முழுமை, ஒன்றுடனொன்று கொண்டிருக்கும் தொடர்பு ஆகியவற்றை அறிதலும் அதனூடாக மனித உள்ளம் அறிவனவற்றையும் உணர்வனவற்றையும் மதிப்பிடுவதே அழகியல் என்னும் பார்வை மேலோங்கியது. அப்பார்வை கலையிலக்கியங்களுக்கும் நீட்சி பெற்றபோது ஒரு படைப்பு தன்னை முழுமையாகவும் தீவிரமாகவும் வெளிப்படுத்துவது எப்படி, அதை ரசிகன் அல்லது வாசகன் உணர்வது எப்படி என ஆராய்வதே அழகியல் என்னும் கொள்கை உருவாகியது. அதன்பின் அழகியல் என்னும் சொல்லில் உள்ள அழகு என்பது நேரடிப்பொருள் கொள்ளாமலாகியது. அழகற்றது, கொடூரமானது, அருவருப்பானது என்று பொதுவாகச் சொல்லப்படுவனவற்றின் வெளிப்பாட்டையும், அவற்றின்மீதான மனிதனின் எதிர்வினையையும் ஆராய்வதும் அழகியல் என்னும் சொல்லாலேயே சுட்டப்படுகின்றன. கொடூர அழகியல் போன்ற சொல்லாட்சிகளும் இன்று புழக்கத்திலுள்ளன.

நடைமுறைப்பொருள்

அழகியல் என்பது இன்று மிக விரிந்த பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அரசியல் பார்வை சார்ந்து மார்க்ஸிய அழகியல் போன்ற கருத்துருவங்கள் உள்ளன. எதிர்அழகியல், மாற்று அழகியல், விளிம்புநிலை அழகியல் என மரபான அழகுணர்வு என்னும் நிலையை மறுக்கும் அழகியல் பார்வைகளும் உள்ளன. இன்றைய பொருளில் அழகியல் என்னும் சொல் ஒரு கலைப்படைப்பு தன் வடிவம் மற்றும் வெளிப்பாட்டுமுறை வழியாக தன் நோக்கத்தை நிறைவேற்றும் முறை பற்றிய ஆய்வாக உள்ளது.

( பார்க்க அழகியல் விலக்கம், அழகியல் சார்பு )



✅Finalised Page