under review

அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில்

From Tamil Wiki
Revision as of 08:10, 26 January 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)
கருப்பராயன்

அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில் கோவை மாவட்டம் சூலூர் வட்டம் அரசூரில் அமைந்துள்ளது. இக்கோவில் கன்னிமார் சன்னதியும், கருப்பராயன் சன்னதியும் தனியே அமையப் பெற்றது.

கோவில் அமைப்பு

கன்னிமார் (சப்த கன்னியர்)

அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவிலின் சன்னதி கிழக்கு நோக்கிய படி அமைந்தது. கோவிலின் முன் கொங்கு நாட்டில் காணப்படும் தீபஸ்தம்பம் உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளன்று இங்கே தீபம் ஏற்றப்படும். கோவிலின் முகப்பில் இரண்டு வேலைப்பாடுடைய தூண்கள் காணப்படுகின்றன. அதனை அடுத்து எட்டுத் தூண்கள் கொண்ட பெரிய முக மண்டபம் உள்ளது.

முகமண்டபத்திலிருந்து கோவில் கருவறைக்குச் செல்லும் பகுதியில் வலது பக்கம் பிள்ளையாரும், இடது பக்கம் முருகன் சிலையும் உள்ளன. கருவறையில் ஏழு கன்னிமார்களின் திருவுருவச் சிலை உள்ளது. கன்னிமார் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, ,சாமுண்டி ஆகிய எழுவர்.

கன்னிமார் புராணக் கதை

அந்தகாசுரன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தபோது தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் அந்தகாசுரனைக் கொல்ல அம்பெய்தினார். முன்பே பிரம்மனிடம் வரம் பெற்றிருந்த அந்தகாசுரனின் ரத்தம் பூமியில் சிந்தியதும் அதிலிருந்து புதிய அந்தகாசுரர் பலர் தோன்றினர். சிவனால் அத்தனை அந்தகாசுரன்களையும் கொல்ல முடியவில்லை.

எனவே சிவனின் ஆணைப்படி ஒவ்வொரு பெண் தெய்வங்களும் தங்கள் வடிவான பெண்ணைப் படைத்து பூமிக்கு அனுப்பினர். அவர்கள் அந்தகாசுரனின் ரத்தம் பூமியில் விழாதவாறு தடுத்தனர். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஏழு கன்னிமார் தோன்றினர் என்ற கதையும் உண்டு.

ஏழு கன்னிமார்

ஏழு கன்னிமார் வெவ்வேறு புராணக் கதைகளுடன் தமிழகத்தின் பல இடங்களில் வழிப்பாட்டில் உள்ளனர். மேலே குறிப்பிட்ட கதை கொங்கு மண்டலத்தில் வழக்கில் உள்ள புராணக் கதை.

பார்க்க: ஏழு கன்னிமார்

வெள்ளையம்மாள் சன்னதி

ஏழு கன்னிமார் கோவிலின் இடதுபக்கம் புதிதாக எழுப்பப்பட்ட வெள்ளையம்மாள் சன்னதி உள்ளது. வெள்ளையம்மாள் சன்னதிக்கு நேர் எதிரே காடையூர் காடையீசுவரனுக்கும், தேவி பங்கசாட்சியம்மனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன.

கோவிலின் குடியுரிமை

அரசூர் கன்னிமார் – கருப்பராயன் கோவிலுக்கு காணியாளர்களாக இருப்பவர்கள் கோத்திர முழுக்காதன் குலக் குடிபாட்டு மக்கள்.அருகே உள்ள அருகம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ஊத்துப்பாளையம், சுரண்டமேடு, காங்கயம் பாளையம், ராசிபாளையம், காரணம்பாளையம், குமாரபாளையம், கரடிவாவி, குறும்பபாளையம், கைக்கோளபாளையம், கொள்ளுப்பாளையம், சங்கோதிபாளையம், சின்னியம்பாளையம், சூலூர், செஞ்சேரி பூராண்டம் பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், சோமனூர், தெலுங்குபாளையம், தென்னம்பாளையம், பீளமேடு, போத்தனூர், முத்துக்கவுண்டனூர், முதலிபாளையம், வதிப்பனூர் முதலிய ஊர்களில் வாழும் முந்நூறு குடும்பங்கள் குடிபாட்டு மக்களாக உள்ளனர்.

பழைய கன்னிமார் கருப்பராயன் கோவில்

பழைய கன்னிமார் கருப்பராயன் கோவில் கிழக்கு, நடு, மேற்கு என மூன்றாய் பிரிந்த அரசூரில் நடு ஊர் பகுதியில் உள்ளது. ஓட்டுக் கட்டிடத்தில் சிறு கோவிலாக முன்பு இருந்தது.

திருவிழா

அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவிலில் ஆடி பெருக்குக்கு (ஆடி 18) அடுத்த புதன்கிழமை இக்கோவிலில் பொங்கல் விழா நடைபெறுகிறது. ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளிலும், கார்த்திகை மாதம் தீபத்திருநாளிலும், அமாவாசை நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

பூசாரி

அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவிலில் முன்னர் கோவில் காணியாளர்களான பொருள்தந்த கோத்திர முழுக்காதன்குலப் பூசாரிக் கவுண்டர் பரம்பரையினர் பூஜை செய்தனர். கோவிலில் குடமுழுக்கு நிகழ்ந்த பின் கொங்கு நாட்டில் பரம்பரை பூஜை உரிமையுடைய பண்டாரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உசாத்துணை

  • கொங்குக் குல தெய்வங்கள், புலவர் செ. இராசு, ஆதிவனம் பதிப்பகம்



✅Finalised Page