under review

அம்மூவனார்

From Tamil Wiki
Revision as of 15:04, 23 January 2023 by Logamadevi (talk | contribs)

அம்மூவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

வாழ்க்கை குறிப்பு

அம்மூவனாரின் இயற்பெயர் மூவன் என்பதாகும். இத்துடன் அ அடைமொழி சேர்க்கப்பட்டு அம்மூவன் > அம்மூவனார் என ஆகியிருக்கலாம்.

அம்மூவனாரை சேர மன்னனில் ஒருவனும், பாண்டியரில் ஒருவனும், குறுநில மன்னன் காரி ஆகியோரும் ஆதரித்துள்ளதாக இவரின் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது

பாடல் தொகுப்பு

சங்க இலக்கியத்தில் காணப்பெறும் அம்மூவனார் பாடிய பாடல்கள் கீழ்காணுமாறு:

அகநானூறு- ஆறு பாடல்கள் ( 10, 35, 140, 280, 370, 390)

ஐங்குறுநூறு - 100 பாடல் (இரண்டாம் நூறு - நெய்தல் திணை)

குறுந்தொகை - 11 பாடல்கள் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401)

நற்றிணை - 10 பாடல்கள் ( 4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397)

மொத்தம் 127

பாடல்கள் வகைமை

முழுக்க முழுக்க தலைவன் தலைவியின் காதல் ஒழுக்கத்தையே, களவு கற்பு கைக்கோள்களையே அம்மூவனார் பாடினார். இவர் பாடிய 127 பாடல்களில் களவுப் பாடல்களின் எண்ணிக்கை 82 ஆகும். கற்பு வகைப் பாடல்கள் 45 ஆகும்.

இவற்றில் குறிஞ்சித் திணை பாடல் ஒன்று (குறுந்தொகை 127), பாலைத்திணை பாடல் ஒன்று ( நற்றிணை 397) ஏனைய 125 பாடல்களும் நெய்தல் திணை பாடல்களாகும்

பாடல் சிறப்பு

அகப்பாடல்கள் பாடிய புலவர்களில் தொகை அடிப்படையில் அம்மூவனார் இரண்டாம் இடம் பெறுகிறார். இதில் கபிலர் முதலிடத்தில் ( 235 பாடல்கள்) உள்ளார். அம்மூவனாரின் பெரும்பாலான ஐங்குறுநூற்றுப் பாடல்கள் அழகான மூன்றடிக் கவிதைகளாக விளங்குகின்றன. சொற்சுருக்கம் மிக்க கவிதைகளைப் பாடுவதில் இவர் சிறந்தவராக உள்ளார். நெய்தல் திணை சார்ந்த முதற், கரு, உரிப்பொருள்களைப் பெரிதும் பயன்படுத்திக் கவிதைகள் வரைந்த புலவராகவும் அம்மூவனார் விளங்குகிறார்

அந்தாதித் தொடை சார்ந்த பாடல்களைப் பாடிய பெருமையும் இவருக்கு உண்டு. ஐங்குநுறூற்றின் தொண்டிப் பத்து முழுவதும் அந்தாதித் தொடை பயின்றுவரப் படைக்கப்பெற்றுள்ளது. மேலும் இப்பத்து கிளவித் தொகை வழியாகவும் தொடர்புடையதாக உள்ளது. எனவே இவர் கோவை இலக்கியத்தின் முன்னோடியாகவும் விளங்குகின்றார். இவ்வகையில் அதிக அளவில் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடி நெய்தல் திணைக்கான புலமை அடையாளமாக அம்மூவனார் விளங்குகிறார்

பொருள் சிறப்பு

நெய்தல் திணைக்கான முதற்பொருள் கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் ஆகும். இதன் சிறுபொழுது எற்பாடு ஆகும். பெரும்பொழுது ஆறு பருவங்களுமாக அமைகின்றது. நெய்தல் நிலக் கருப்பொருள்கள் கடற்காகம், சுறாமீன், உவர்கேணி. நெய்தல் மற்றும் தாழம்பூ, புன்னைமரம் மற்றும் ஞாழல் மரம், மீன் பிடித்தல் மற்றும் மீன் விற்றல், உப்பு வணிகம் போன்றனவாகும். உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகும்.

அம்மூவனார் ஐங்குறுநூற்றில் முப்பொருளும் சிறக்கப் பாடியுள்ளார். சிறுவெண்காக்கைப் பத்து (ஏழாம் பத்து) வெள்ளாங்குருகு பத்து (ஆறாம் பத்து) ஆகியன கருப்பொருள்களின் வரிசையில் அமைந்த பறவைகள் பற்றி அமைவனவாகும். நெய்தல் நில மரமான ஞாழல் பற்றி இவர், ஐந்தாம் பத்தில் பாடியுள்ளார். நெய்தல் பூ பற்றி ஒன்பதாம் பத்தில் இவர் பாடியுள்ளார். இதன் காராணமாக கருப்பொருள்களை மையமிட்டு எழுதுவதில் வல்லவர் அம்மூவனார் என்பது குறிக்கத்தக்கது. இவற்றுள் தொண்டிப் பத்து நெய்தல் நிலத்தின் முதற்பொருளான கடற்கரை சார்ந்து பாடப்பெற்றுள்ளதால் முதல் பொருளைச் சிறப்பிப்பதாக உள்ளது. தாய்க்கு உரைத்த பத்து. தோழிக்கு உரைத்த பத்து, கிழவர்க்கு உரைத்த பத்து, பாணற்கு உரைத்த பத்து ஆகியன உரிப்பொருளைச் சிறப்பிப்பனவாக உள்ளன

பாடல்வழி அறியவரும் சில செய்திகள்

  • இவருடைய பாடலால் மலை நாட்டின் கடற்கரையில் மாந்தை, தொண்டி என்பனவும், பாண்டிநாட்டின் கடற்கரையில் கொற்கை என்பதும் மலையமானாட்டில் கோவலூர் என்பதும் இவர் காலத்தில் சிறந்த நகரங்களாக இருந்தனவென்று தெரிய வருகின்றன.
  • தமிழில் கோவை ஒரு தனியிலக்கியமாகத் தோன்றி வளர்தற்கு அம்மூவனாரின் ஐங்குறு நூற்றுத் தொண்டிக் கோவையே மூலம் என்று அறிக.
  • நெய்தல் நிலம் உப்பு வயலாக வெண்மை பூத்துக் கிடக்கின்றது. இவ்வயலில் உழாமலே விளையும் செல்வம் வெள்ளிய கல்உப்பாகும். அதனை பொதிகளாகக் கட்டி வண்டிகளில் ஏற்றி விலை கூறி விற்றுக்கொண்டே உமணர்கள் செல்கின்றனர். அவர்களின் கரங்களில் மாடுகளை விரைந்து செலுத்தப் பயன்படுத்தப்படும் கோல்கள் உள்ளன. இவர்களின் வண்டிகள் குன்றங்களைக் கடந்து சென்றுகூட உப்பு வி;லை கூறி விற்கும். நிலையில் பயணித்துக் கொண்டுள்ளன.
  • கடற்கரையின் சோலைகள் நிறைந்த பகுதிகளில் சிறுகுடிலில் வாழும் பரதவர்கள் கடலின்மேல் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மீன் பிடித்த வலைகளை புன்னை மர நிழலில் உலர்த்தி காய வைக்கின்றனர்.
  • தொண்டி கடற்கரையில் செப்பம் செய்ய வேண்டிய படகுகளைச் செப்பம் செய்து புதுப் பொலிவுடன் கொண்டுவந்து நிறுத்தி மீன்பிடிக்கச் செல்லுகின்றனர். அவ்வாறு செல்லும் அவர்கள் சுறா மீனுடன் வருகின்றனர். சுறாவினைக் கரையில் உள்ளோர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கின்றனர்.

நெய்தல் நில வாழ்வு

அம்மூவனார் பாடல்களில் சங்ககாலத்தில் நெய்தல் திணை சார்ந்த மக்கள் வாழ்ந்த முறை பற்றி அறிந்து கொள்ளமுடிகிறது. நெய்தல்நில மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தம் பாடல்களில் பதிவு செய்து சங்க கால நெய்தல் வாழ்க்கை ஆவணமாக தன் பாடல்களை ஆக்கியுள்ளர் அம்மூவனார். நெய்தல் நிலத்தில் பரதவர்கள் மீன்வளத்தை கொண்டு வருபவர்களாகவும், உமணர்கள் உப்பினை வணிகம் செய்பவர்களாகவும் விளங்கியுள்ளதை இவர் பாடல்கள் காட்டுகின்றன.

ஐங்குறுநூறு வகைமை ( நெய்தல் திணை )

ஐங்குறு நூறு [101-110]- தாய்க்கு உரைத்த பத்து

ஐங்குறு நூறு [111-120]- தோழிக்கு உரைத்த பத்து

ஐங்குறு நூறு [121-130]- கிழவர்க்கு உரைத்த பத்து

ஐங்குறு நூறு [131-140]- பாணற்கு உரைத்த பத்து

ஐங்குறு நூறு [141-150]- ஞாழல் பத்து

ஐங்குறு நூறு [151-160]- வெள்ளாங்குருகுப் பத்து

ஐங்குறு நூறு [161-170]- சிறுவெண் காக்கைப் பத்து

ஐங்குறு நூறு [171-180]- தொண்டிப் பத்து

ஐங்குறு நூறு [181-190]- நெய்தல் பத்து

ஐங்குறு நூறு [191-200]- வளைப் பத்து

பாடல் நடை

திணை: நெய்தல் கூற்று : வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது.

நனைமுதிர் ஞாழற் சினைமருள் திரள்வீ
நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்
டன்னா வென்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினளென் தோழி
தன்னுறு விழுமங் களைஞரோ இலளே.

(அரும்புகள் முதிர்ந்த ஞாழல் மரத்தின், மீனின் முட்டையைப் போன்ற உருண்டையான மலர்களை, கீழே உள்ள நெய்தலின் கரிய மலர்களின்மேல் பெய்வதைப்போல, குளிர்காற்று வீசி நீர்த்துளிகளைத் தூற்றும் வலிய கடற்கரைத் தலைவ! தாய் சினந்து அடித்தாலும், வாய்திறந்து ”அம்மா!” என்று அழும் குழந்தையைப் போல, என் தோழியாகிய தலைவி, நீ அவளுக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தாலும், இனிதாக அவளிடம் கருணை காட்டினாலும், அவள் உன்னால் பாதுக்காக்கப்படும் எல்லைக்கு உட்பட்டவள்; அவள் உன்னையன்றித் தனது துன்பத்தைக் களைபவர்கள் எவரும் இல்லாதவள்).

உசாத்துணை


✅Finalised Page