under review

அமுதசுரபி

From Tamil Wiki
Revision as of 23:09, 23 September 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Amuthasurabi (Magazine). ‎

அமுதசுரபி 1948 நான்காவது இதழ்

அமுதசுரபி (1948) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். பழைய இலக்கியம் மற்றும் பொதுவாசிப்புக்குரிய படைப்புகள் ஆகியவற்றை கலந்து அளிக்கிறது. எழுத்தாளர் விக்ரமன் 54 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். 1976 முதல் ஸ்ரீராம் குழுமத்தின் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது

வரலாறு

1948-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வித்வான் வே.லக்ஷ்மணன் ஆசிரியராகவும் டி.கே.சாமி வெளியீட்டாளராகவும் அமுதசுரபி வெளிவந்தது. இதழுக்கு அமுதசுரபி என்ற பெயரை தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை சூட்டினார் பிரபல ஓவியர் ஆர்யா முதல் அட்டைக்கு படம் வரைந்தார். இரண்டு இதழ்கள் வருவதற்குள் தொடர்ந்து நடத்த முடியாமல் வித்வான் லட்சுமணன் விலகி விட்டார். விக்ரமன் அவ்விதழின் பொறுப்பை ஏற்று ஆசிரியர்- நிர்வாகி என்ற இரண்டு பணிகளையும் ஆற்றினார்.

1976-ல் ஸ்ரீராம் குழுமம் அமுதசுரபி இதழின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 2003 வரை விக்ரமன் ஆசிரியராக இருந்தார். அண்ணாகண்ணன் 2003 ஜூலை இறுதியில் ஆசிரியர் பொறுப்பை செப்டம்பர் 8, 2005 வரை நடத்திவந்தார். பின்னர் திருப்பூர் கிருஷ்ணன் இதன் ஆசிரியராக பணியேற்றுள்ளார். பதிப்பாளர். ஏ.வி.எஸ். ராஜா.

அமுதசுரபி 2021

உள்ளடக்கம்

பாரதிதாசன், பெ.நா. அப்புசாமி, சுத்தானந்த பாரதி, நாடோடி, கி.ஆ.பெ. விசுவநாதம், மா. இராஜமாணிக்கனார், பி.ஸ்ரீ, ஆச்சார்யா, ம.பொ.சிவஞானம் , எஸ். வையாபுரிப் பிள்ளை, லா.ச. ராமாமிர்தம், தி. ஜானகிராமன், தமிழ்வாணன், பூவை.எஸ்.ஆறுமுகம், வல்லிக்கண்ணன், துமிலன், த.நா. குமாரசுவாமி, கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை, விந்தன், ஜெயகாந்தன், தேவபாரதி, ரா.ஸ்ரீ தேசிகன், சுகி. சுப்ரமணியன், மீ.ப.சோமு, சாண்டில்யன், மாயாவி, அகிலன், ரா.பி. சேதுப்பிள்ளை,மு. வரதராசன், க.நா.சுப்ரமணியம், அ.மு. பரம சிவானந்தம், கம்பதாசன், சுரதா, எல்லார்வி, நாரண துரைக்கண்ணன், கோவி. மணிசேகரன், லட்சுமி, வசுமதி ராமசாமி என பல ஆசிரியர்கள் அமுதசுரபியில் எழுதியிருக்கிறார்கள்.

போட்டிகள்

அமுதசுரபியின் போட்டிகள் பல இளம்படைப்பாளிகளை அறிமுகம் செய்தவை

  • அமரர் ராமரத்னம் குறுநாவல் போட்டி
  • அமரர் ராமரத்னம் நாவல்போட்டி
  • வை. மு. கோதைநாயகி நினைவுச் சிறுகதைப் போட்டி
  • வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி

இலக்கிய இடம்

அமுதசுரபி கலைமகள் இதழ் உருவாக்கிய வாசகர்வட்டத்தைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கம் கொண்டது. குடும்பச்சூழலுக்கான பொதுவாசிப்புக் கதைகளும், மரபிலக்கியமும், பக்தி எழுத்தும் கலந்த பல்சுவை இதழ் இது. தீபாவளி இதழ்களிலும் சிறப்பிதழ்களிலும் தமிழறிஞர்கள் மற்றும் புகழ்பெற்றவர்களின் படைப்புகள் வெளிவந்தாலும் இலக்கியத் தரமான பழந்தமிழ் ஆய்வுகளோ நவீன இலக்கிய ஆக்கங்களோ அதிகமும் வெளிவந்ததில்லை. பொதுவாசகர்களின் ரசனைக்கும் தரத்துக்கும் உகந்த ஆக்கங்களே வெளிவந்தன.

உசாத்துணை


✅Finalised Page