வை.சுதர்மன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "== வை. சுதர்மன் == வை.சுதர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1928) சிங்கப்பூரின் மூத்த  கவிஞர்களில் ஒருவர். அன்றைய மலாயாவின் தொழிற்சங்கப் போராட்டவாதி. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் 1943-45 ஆண்...")
 
No edit summary
Line 1: Line 1:
== வை. சுதர்மன் ==
== வை. சுதர்மன் ==
வை.சுதர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1928) சிங்கப்பூரின் மூத்த  கவிஞர்களில் ஒருவர். அன்றைய மலாயாவின் தொழிற்சங்கப் போராட்டவாதி. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் 1943-45 ஆண்டுகளில் காலகட்டத்தில் முதலில் சிறார் படையிலும் (பாலசேனா) பிறகு ‘செக்‌ஷன் கமாண்ட’ராகவும் பணியாற்றியவர். பிரிட்டிஷார் 1948இல் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து, தொழிற்சங்கவாதிகளின் மீது கடும் ஒடுக்குமுறையை ஏவியபோது, சுமார் 9 ஆண்டுகள் (1949-57), கம்யூனிஸ்ட் ஆயுதப் படையின் இந்திய ரெஜிமெண்ட் தலைவராகக் காடுகளில் மறைந்து வாழ்ந்தார். மலாயா 1957இல் விடுதலை பெற்றபோது ஆயுதங்களைத் துறந்து சரணடைந்தார். சிங்கப்பூர் 1965இல் விடுதலை அடைவதற்கு முன்பே இரண்டாம் பாடமாகப் பள்ளிகளில் தமிழ் பரவலாக்கம் பெறக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியவர்.

[[File:V. Sutherman-anniversary.jpg|thumb]]
[[File:V. Sutherman-anniversary.jpg|thumb|வை. சுதர்­ம­னின் 95வது பிறந்தநாளை  ஒட்டி கவிஞர் மா. அன்­ப­ழ­கன் 7.8.2022  அன்று நடந்த தனது நூல் வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் சுதர்­மன் தம்­ப­தியை மேடையில் மரி­யாதை செய்­தார்.]]

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
Line 8: Line 8:
== இளமைக் காலம் ==
== இளமைக் காலம் ==
இவரது தந்தை காந்தியவாதி. திண்ணைப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய சுதர்மன் பிறகு அவரது தந்தை வைரவன், ராமநாதபுரம் மகாராஜாவின் ஆதரவில், நடத்திவந்த தமிழ்ப் பள்ளியில் படித்தார். அச்சமயத்தில் வீட்டுச் சூழ்நிலை காரணமாக,  அவரது தாயார் மலாயாவிலிருந்து தம் குடும்பத்தைக் காண வந்திருந்த தம் சகோதரருடன் மலாயாவுக்கு அவரை அனுப்பினார்.

[[File:V. Sutherman-award.jpg|thumb]]
[[File:V. Sutherman-award.jpg|thumb|சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் பெருமைக்குரிய தமிழவேள் விருது, 2021ஆம்  திரு. வை. சுதர்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவருமான திரு. விக்ரம் நாயர், திரு. சுதர்மனுக்கு விருது வழங்கினார்.]]
தாய்மாமன் பெருமாள் மண்டோருடன் பத்து வயதில் 1938ஆம் ஆண்டு கப்பல் ஏறி, மலாயாவில் கோலக் கிள்ளான்  (Kuala Klang) துறைமுகத்தில் வந்திறங்கினார்.  பின்னர்  நெகரி செம்பிலான் உள்ள கோலப்பிலாவில் (Kuala Pilah) தாய்மாமனுடன்  நகரசீரமைப்புத் தொழிலாளர் குடியிருப்பில் தங்கி தொழிலாளர்களுடன் வேலை பார்த்தார். அதேநேரத்தில், அங்கு காலையில் ஆங்கிலக் கல்வி, மாலையில் முருகன் கோவிலில் தமிழ்க் கல்வியும் கற்றார். தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய், இந்தி ஆகிய ஐந்து மொழிகள் இவருக்குத் தெரியும்.

Line 70: Line 70:

மாதவி இலக்கிய மன்றம் - முன்னாள் துணைத் தலைவர்
மாதவி இலக்கிய மன்றம் - முன்னாள் துணைத் தலைவர்
சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு - ஆலோசனைக் குழு உறுப்பினர்

தொழிற்சங்கம், பொதுவுடமை இயக்கம், மலாயா இந்தியன் காங்கிரஸ் ஆகியவற்றிலும் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.
தொழிற்சங்கம், பொதுவுடமை இயக்கம், மலாயா இந்தியன் காங்கிரஸ் ஆகியவற்றிலும் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.

Revision as of 23:52, 16 May 2023

வை. சுதர்மன்

வை.சுதர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1928) சிங்கப்பூரின் மூத்த  கவிஞர்களில் ஒருவர். அன்றைய மலாயாவின் தொழிற்சங்கப் போராட்டவாதி. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் 1943-45 ஆண்டுகளில் காலகட்டத்தில் முதலில் சிறார் படையிலும் (பாலசேனா) பிறகு ‘செக்‌ஷன் கமாண்ட’ராகவும் பணியாற்றியவர். பிரிட்டிஷார் 1948இல் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து, தொழிற்சங்கவாதிகளின் மீது கடும் ஒடுக்குமுறையை ஏவியபோது, சுமார் 9 ஆண்டுகள் (1949-57), கம்யூனிஸ்ட் ஆயுதப் படையின் இந்திய ரெஜிமெண்ட் தலைவராகக் காடுகளில் மறைந்து வாழ்ந்தார். மலாயா 1957இல் விடுதலை பெற்றபோது ஆயுதங்களைத் துறந்து சரணடைந்தார். சிங்கப்பூர் 1965இல் விடுதலை அடைவதற்கு முன்பே இரண்டாம் பாடமாகப் பள்ளிகளில் தமிழ் பரவலாக்கம் பெறக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியவர்.

வை. சுதர்­ம­னின் 95வது பிறந்தநாளை ஒட்டி கவிஞர் மா. அன்­ப­ழ­கன் 7.8.2022 அன்று நடந்த தனது நூல் வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் சுதர்­மன் தம்­ப­தியை மேடையில் மரி­யாதை செய்­தார்.

தனி வாழ்க்கை

சுதர்மன், தமிழகத்தின் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில், தேவகோட்டையை அடுத்த திருமணவயலில், வைரவன் – பெரியாள் தம்பதியினருக்கு 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி  பிறந்தார். 10 வயதில் மலாயாவுக்கு வந்த சுதர்மனுக்கு மலேசியா 1957 ஆகஸ்டில் சுதந்திரம் அடைந்த ஆண்டில் சுதர்மனுக்கு மலேசியக் குடியுரிமை கிடைத்தது. பின்னர் 1959இல் சிங்கப்பூர் வந்த அவர் அதே ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியன்று தமது மாமா மகளான அன்னமுத்தைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் (அமரராகிவிட்டார்), எட்டுப் பேரப் பிள்ளைகள், ஐந்து கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

இளமைக் காலம்

இவரது தந்தை காந்தியவாதி. திண்ணைப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய சுதர்மன் பிறகு அவரது தந்தை வைரவன், ராமநாதபுரம் மகாராஜாவின் ஆதரவில், நடத்திவந்த தமிழ்ப் பள்ளியில் படித்தார். அச்சமயத்தில் வீட்டுச் சூழ்நிலை காரணமாக,  அவரது தாயார் மலாயாவிலிருந்து தம் குடும்பத்தைக் காண வந்திருந்த தம் சகோதரருடன் மலாயாவுக்கு அவரை அனுப்பினார்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் பெருமைக்குரிய தமிழவேள் விருது, 2021ஆம் திரு. வை. சுதர்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவருமான திரு. விக்ரம் நாயர், திரு. சுதர்மனுக்கு விருது வழங்கினார்.

தாய்மாமன் பெருமாள் மண்டோருடன் பத்து வயதில் 1938ஆம் ஆண்டு கப்பல் ஏறி, மலாயாவில் கோலக் கிள்ளான்  (Kuala Klang) துறைமுகத்தில் வந்திறங்கினார்.  பின்னர்  நெகரி செம்பிலான் உள்ள கோலப்பிலாவில் (Kuala Pilah) தாய்மாமனுடன்  நகரசீரமைப்புத் தொழிலாளர் குடியிருப்பில் தங்கி தொழிலாளர்களுடன் வேலை பார்த்தார். அதேநேரத்தில், அங்கு காலையில் ஆங்கிலக் கல்வி, மாலையில் முருகன் கோவிலில் தமிழ்க் கல்வியும் கற்றார். தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய், இந்தி ஆகிய ஐந்து மொழிகள் இவருக்குத் தெரியும்.

ஆண்களுக்கான நாள் சம்பளம் 50 காசாகவும் பெண்களுக்கு 45 காசாகவும் இருந்த அக்காலத்தில் சிறுவர்களுக்கான நாள் சம்பளம் 35 காசுகள். சம்பளமும் இருந்தன.

நகரசீரமைப்புத் தொழிலாளர் குடியிருப்பில் குடி, கூத்து, வம்பு, பஞ்சாயத்து என்று இருந்த சூழல் சுதர்மனுக்கு ஒவ்வாமல் போனதால் வீட்டைவிட்டு வெளியேறினார். போக்கிடமற்றுத் திரிந்த சுதர்மனை ஒரு யூரேசியக் குடும்பத்தினர் தம் பிள்ளைகளுள் ஒருவராக ஏற்றனர். அவர்களது காலணி கடையில் சிறிது காலம் வேலை செய்தார். குடும்பத்தின் மூத்த மகள் திருமணம் செய்த பின்னர் அந்தத் தம்பதியுடன் சுதர்மன் ஜோகூரின் குளுவாங் நகரை அடைந்தார்.

V. Sutherman-family.jpg

பிறகு அங்கிருந்தும் வெளியேறிய சுதர்மன், இந்திய தேசிய ராணுவத்தின் (INA) மாநிலத்தலைவராக இருந்த இலங்கைத் தமிழரான மாப்பணம் பிள்ளையைச் சந்தித்தார்.  அவர் சுதர்மனை தன்வீட்டில் தங்கவைத்து அன்பு காட்டினார். ‘ஸ்டோர் கீப்பர்’ போன்ற ஒரு வேலையும் கொடுத்தார். ஒருநாள் மாமா பெருமாள் மண்டோரை குளுவாங் ரயில் நிலையத்தில் பார்த்த சுதர்மன், அவருடன் மீண்டும் கோலப்பிலாவுக்கே திரும்பினார். சில ஆண்டுகள் கழித்துத் திரும்பக் கிடைத்த பிள்ளையைப் பெற்றோரிடமே சேர்க்கலாம் என்று மாமா நினைத்தபோது இரண்டாம் உலகப்போர் உச்சமடைந்து ஊர்க்கப்பல் போக்குவரத்து நின்றுபோனது.

இந்திய  தேசிய இராணுவம், தொழிற்சங்கப் பங்களிப்பு

இந்திய விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1943-இல் இந்திய தேசிய இராணுவத்துக்கு (INA) மறுவெழுச்சி ஊட்டியபோது, அவரது உணர்ச்சிமிக்க பேச்சால் உந்தப்பட்ட ஐஎன்ஏ-வில் ஆயிரக்கணக்கில் இணைந்த மலாயாத் தமிழர்களில் வை.சுதர்மனும் ஒருவர். சிரம்பானில் அமைந்திருந்த இந்திய தேசிய ராணுவத்தின் பயிற்சி முகாமில் பதின்மவயது சுதர்மன்  சேர்ந்தார்.

முதலில் ‘பாலசேனா’ என்றழைக்கப்பட்ட சிறுவர் படையிலும் 16 வயதான பிறகு ‘செக்‌ஷன் கமாண்ட’ராகவும் ஆனார். சிரம்பான் பயிற்சி முகாமில் மூன்றாண்டுகள் செக்‌ஷன் கமாண்டராக சுதர்மன் பணிபுரிந்த காலத்தில், 1944-இல், நேதாஜியை அங்கு சந்தித்தார்.

வை.சுதர்மன்

இரண்டாம் உலகப்போர் 1945-இல் ஜப்பானிய சரணாகதியுடன் முடிவுக்கு வந்தபோது, நேதாஜியும் மறைந்தார். இந்திய தேசிய இராணுவம் பலவாறாகச் சிதைந்தது. சிலர் பிரிட்டிஷ் எதிர்ப்பைத் தொடர்ந்தனர். சுதர்மன் அவர்களுள் ஒருவராகத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மலாயா தொழிற்சங்கத்தின் முகமாக அறியப்பட்ட எஸ்.ஏ. கணபதியின் அறிமுகமும் அவருக்குக் கிடைத்தது. மலாயா கணபதியும் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர்.

அந்த சமயத்தில் சிங்கப்பூரில் பினாங்கு வரையில்  மலாயாவெங்கும் தோட்டம், நகரங்கள் எல்லா இடங்களிலும் தொழிற்சங்கங்கள், மக்கள் சங்கங்கள், மாதர் சங்கங்கள், இளைஞர் சங்கங்களை அமைக்கப்பட்டன. அப்போதுதான் முதல் முறையாக மலாயாவில் வாழ்ந்த சீனர், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் மூன்று சமூகங்களும் சேர்ந்த ஒரே அமைப்பாக, கோலாலம்பூரைத் தலைமையகமாகக் கொண்டு மலாயா தொழற்சங்க சம்மேளம் உருப்பெற்றது.

ஜோகூர்பாரு – சிங்கப்பூர் போக்குவரத்து ‘கிரீன் பஸ்’ நிறுவனத்தின் பட்டறையில் வாகன பழுதுபார்ப்பவராகப் பணிபுரிந்த சுதர்மன், 1945-46 காலகட்டத்தில் ஜோகூர்பாரு மாநிலப் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் பரப்புரைப் பிரிவுத் தலைவராகவும் ஜோகூர்பாரு ரப்பர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் பொது மருத்துவமனை ஊழியர் தொழிற்சங்கத்தின் செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போதுதான் நேருவின் மலாயா வருகை நிகழ்ந்தது. ஜோகூர் மாநிலப் பொதுவுடைமைக் கட்சியின் பரப்புரைத் தலைவராக சுதர்மன் இருந்தபோது, 1946-இல் மலாயாவுக்கு வந்த நேருவைக் காணும் வாய்ப்பு திரு சுதர்மனுக்குக் கிடைத்தது. அப்போது, சுதர்மனிடம், “இளம் தலைவனே, உன்னை நான் பாராட்டுகிறேன்” என்று நேரு கூறியதாக திரு சுதர்மன் பதிவுசெய்துள்ளார்..

அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் முதல் மாநாடு 1945ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம்  சிங்கப்பூரில் நடந்தது. அதை நடக்கவிடாமல் தடுக்க பிரிட்டிஷ் அரசின் கைது நடவடிக்கைகள் அரங்கேறின. மாநாட்டைத் தடைசெய்து  ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் சிங்கப்பூர் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வீரசேனன் உள்பட பலரும் காயமடைந்தனர். மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய லூ சிங்கும் இன்னும்  சிலரும் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த மாநாட்டில் சுதர்மனும் பங்கேற்றார்.

வை.சுதர்மன் இளமைக்காலத்தில்

சட்டப்படி தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்கும் பிரிட்டிஷ் அரசைக் கண்டித்து 1946ல்  ஜோகூரில் ஆளுநர் அலுவலகத்திற்கு எதிரே போராட்டம் நடத்தப்பட்டது. முன்வரிசையில் நின்ற சுதர்மன், ஒரு பிரிட்டிஷ் அதிகாரியால் தலையில் தாக்கப்பட்டார். ஆளுநர் வெளியே வந்து சுதர்மனைத் தன் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று முதலுதவி செய்ததோடு கூட்டத்தையும் அமைதிப்படுத்தினார். கைதான தொழிற்சங்கத் தலைவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இச்சம்பவத்தினால் சுதர்மன் தொழிற்சங்கத் தோழர்களும் மக்களும் பரவலாக அறிந்த ஒருவராக ஆனார்.

ஆயுதப் போராட்டமும் அடித்தளச் செயல்பாடுகளும்

ஆயுதம் தாங்கி பிரிட்டிஷாரை எதிர்க்கும் கம்யூனிச ‘கொரில்லா’ குழுக்களும் மலாயாவின் காடுகளில் பதுங்கி செயல்பட்டன. கம்யூனிச சக்திகளின் எழுச்சியை பிரிட்டிஷார் ஆகப்பெரிய அச்சுறுத்தலாகக் கண்டனர். ஜூன் 1948-இல் பிரிட்டிஷ் அரசு அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து கம்யூனிச சக்திகளையும் கடுமையாக ஒடுக்கத் தொடங்கியது.

முதலில் சீனர்கள் பிறகு இந்தியர், மலாய்க்காரர் என சந்தேகிக்கப்பட்ட அனைவரும் வேட்டையாடப்பட்டனர். அதில் தப்பித்த தோழர்கள் ஒன்றுகூடி மறைந்திருந்து போராடுவது என்று முடிவெடுத்தனர். பெரும்பகுதி சீனர்களாக இருந்த அக்குழுவினரில் ஒரு ரெஜிமெண்ட் மலாய்க்காரர்கள், இன்னொரு ரெஜிமெண்ட் இந்தியர்கள். இந்திய ரெஜிமெண்டின் தலைவர் சுதர்மன். அவருடைய தளபதி சாம்பசிவம் என்ற தோழர்.

மூவாரின் பஞ்சூர் கிராமத்தில் சாம்பசிவம் பிடிபட்டார். ஆயுதம் வைத்திருந்ததற்காகத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில்தான் (1949) எஸ்.ஏ. கணபதி கோலாலம்பூர் புடு சிறையில் தூக்கிலடப்பட்டிருந்தார். அது பிரிட்டிஷ் அரசுக்கு இந்தியாவிலும் இங்கிலாந்திலும் கடும் எதிர்ப்புகளை உண்டாக்கியிருந்தது. ஆகவே மேலும் எதிர்ப்பைத் தேடிக்கொள்ள விரும்பாத பிரிட்டிஷார், சாம்பசிவத்தை இந்தியாவுக்கு நாடுகடத்தினர். மலாயா கம்யூனிஸ்ட் கட்சி தன் எஞ்சிய தலைவர்களைக் காத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது.

சுதர்மனின் இருப்பிடம் ஜோகூர் மாநிலத்தின் உயர்ந்த மலைகளுள் ஒன்றான ‘கூணம் புக்கேட் குபேர்’ என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது. அங்கும் பிரிட்டிஷ் தாக்குதல் தொடர்ந்தபோது நெகிரி செம்பிலான், பகாங் என்று தொடர்ந்து காட்டுப் பகுதிகளிலேயே இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார் சுதர்மன். சுதர்மன் உட்பட சுமார் 200 தோழர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை மனமாற்றம் செய்யும் களப்பணிகளிலும் இறங்கினர். இவர்கள் சிங்கப்பூர் உட்பட்ட அன்றைய தென்மலாயாப் பகுதியின் பொதுவுடைமை இயக்கப் பொறுப்பாளர்களாக இருந்தனர். அப்படியாக கிட்டத்தட்ட 9 ஆண்டுகள், 1957-இல் மலாயா விடுதலை பெறும்வரை, இவர்களது தலைமறைவுப் போராட்ட வாழ்க்கை நீடித்தது.

கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடும் சரணடைதலும்

மலாயாவின் விடுதலைக்கு பிரிட்டிஷார் ஒப்புக்கொண்டுவிட்டதால், ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று சுதந்திர மலாயாவின் பிரதமராக வரவிருந்த துங்கு அப்துல் ரகுமான் அறிவித்தார். மலாயா விடுதலை பெறவிருக்கிறது என்பதால் தங்களின் வெற்றியாகவும் அதைக்கருதி சரணடையலாம் என்பது சுதர்மனின் கருத்து. ஆனால் இது பிரிட்டிஷார் சூழ்ச்சி என்பதும் சரணடைவது இத்தனை ஆண்டுகாலத் தியாகங்களை வீணாக்கிவிடும் என்பதும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைத்துவத்தின் கருத்து. சரணடையும் ஆலோசனையை எழுத்துபூர்வமாக சுதர்மன் கட்சித் தலைமைக்குத் தெரிவித்தார். “போலிகளின் சுதந்திரத்தில் நம்பிக்கை இருந்தால் தாங்கள் அவர்களோடு செல்லலாம்” என்று அதற்குக் கட்சித் தலைமை பதில் அளித்தது. சுதர்மன் கட்சியால் கைவிடப்பட்டார்.

1957 அக்டோபர், ஒருநாள் காலையில் அவர் எழுந்து பார்த்தபோது பொதுவுடைமைப் படையினர் மொத்தமாக அவரை விட்டுச் சென்றிருந்தனர். பத்தாண்டுகளுக்கும் மேல் கட்சிக்காக உழைத்துப் பல தியாகங்களைச் செய்தபின் எஞ்சிய துரோகிப் பட்டத்தால் மனமுடைந்த சுதர்மன் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். துப்பாக்கி வேலை செய்யாததால் உயிர்பிழைத்தார். தலைமறைவுப் படையின் ராணுவ உடையுடன் காட்டிலிருந்து வெளியே வந்த சுதர்மன் காவல் நிலையத்தில் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தார்.

விசாரணைச் சித்திரவதைகள்

சம்பந்தமூர்த்தி என்ற தமிழ் காவல்துறை அதிகாரியின் வீட்டிலேயே சுதர்மனைத் தங்கவைத்த பிரிட்டிஷார் அவரிடம் பிற தோழர்களைக் குறித்த தகவல்களை பெற முனைந்துள்ளனர். ஜோகூர் மாநிலப் காவல்துறை தலைமையத்தில் வைத்து அன்றாடம் ஒரேவிதமான கேள்விகளை நாள்முழுக்கக் கேட்பதை ஒரு சித்திரவதையாகச் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் சலிப்பும் வெறுப்பும் எல்லைமீற மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார் சுதர்மன். அவரைத் தடுத்து மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர். அங்கு சுதர்மனுக்கு எதிர்பாராத ஓர் உதவி கிட்டியது.

இந்திய தேசிய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிய ‘டாக்டர் ஹில்’ என்ற  ஒரு பஞ்சாபி இந்தியர் அந்த மனநோய் மருத்துவமனையின் மேலதிகாரியாக அப்போது இருந்தார். ஜப்பானிய மன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, 1945இல் நடந்த விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்றவர் டாக்டர் ஹில். அதில் ஐந்து மைல் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக சுதர்மனை அவர் அறிந்திருந்தார்.  டாக்டர் ஹில் தன் பழைய நண்பனைக் கைவிடவில்லை. சுதர்மனை மனநோய் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப் பரிந்துரைத்து டாக்டர் ஹில்லிடமிருந்து காவல்துறைக்கு தொடர்ந்து கடிதங்கள் வந்தன. அவர்களுக்குள் எழுத்துப் போரே நடந்தது. ஏழு மாதம் கழித்து அங்கிருந்து சுதர்மனை வெளியேற்றினர். அதன்பின் ஐந்து மாதங்கள் காவல்துறை கண்காணிப்பில் சுதர்மன் இருந்தபோதும் விசாரணைக் கொடுமைகள் கணிசமாகக் குறைந்தன.  

பின்னாளில் மலேசியக் காவல்துறையின் ஆணையராக உயர்ந்த முகமது ஹனீஃப் பின் ஒமார் ஒருநாள் சுதர்மனிடம், “இன்று முதல் நீங்கள் சுதந்திரமாக வாழலாம்” என்று தெரிவித்தார். அதன்பின் சுதர்மனின் மீதான கெடுபிடிகளும் கண்காணிப்பும் முற்றிலுமாக நீங்கியது. காவல்துறையிலேயே பணியாற்ற ஏற்பாடு செய்வதாக ஹனீஃப் தெரிவித்தபோதும் தோழர்களிடையே காட்டிக் கொடுத்தவனாக அறியப்படலாம் என்பதால் சுதர்மன் அதை மறுத்துவிட்டார். சுதந்திர மலாயாவில் சுதர்மன் குடியுரிமை பெற்றார்.

இந்தியப் பயணம்

பெற்றோரைச் சந்திப்பதற்காக 1958 டிசம்பரில் கப்பலில் தமிழகம் சென்றார். இருபதாண்டுகளுக்குப் பிறகு தேவகோட்டைக்குச் சென்ற சுதர்மன் தன் தந்தையைச் சந்தித்தார்.மலாயாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுத் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த தோழர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்கள் ‘நாடுகடத்தப்பட்டோர் சங்கம்’ என்ற அமைப்பைச் சென்னையில் அமைத்திருந்தனர். அதைக் கலைத்துவிட்டு, தமிழக மக்களாக வாழ்வைத் தொடர சுதர்மன் ஆலோசனை சொன்னார். அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கேயே தங்கிவிடக் கூறினார். எனினும் மலாயா திரும்புவதே அவரது நோக்கமாக இருந்தது. 1959 மார்ச்சில் மலேசியா திரும்பினார் சுதர்மன்.

சிங்கப்பூரில் குடியேற்றம்

ஜோகூரில் வசித்த திரு சுதர்மன் அடிக்கடி சிங்கப்பூர் வந்த சென்ற போதிலும், மலாயா சிங்கப்பூர் ஏர்லைன்சில் வேலைக்குச் சேர்ந்த பின்னர் 1959 ஜூலையில் சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடியேறினார். முதலில் ஆசிரியர் வேலைக்கு முயன்றார். ஆனால் கல்விச் சான்றிதழ்கள் இல்லாததால், ‘மலாயன் ஏர்வேய்ஸ்’ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அந்நிறுவனம் மலாயா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என ஆனது. இந்நிறுவனங்களின் கேட்டரிங் பிரிவில் 24 ஆண்டுகள் பணியாற்றிய  திரு சுதர்மன் பாயலேபார், சாங்கி ஆகிய விமான நிலையங்களிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  மலேசியர்களான அவரும் அவரதும் மனைவியும் இரு பிள்ளைகளும் 1975இல் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றனர். சிங்கப்பூரில் பிறந்த மற்ற இரு பிள்ளைகளும் முன்னரேயே குடியுரிமையைப் பெற்றிருந்தனர்.

இலக்கியப் பங்களிப்பு

வாசிப்பு, எழுத்தில் 1940களிலிருந்தே ஆர்வம் கொண்டிருந்த சுதர்மனின் எழுத்துப் பணி 1946இல் தொடங்கியது. தொடக்கத்தில் பத்திரிகைகளில் தொழிற்சங்கச் செய்திகள், தகவல்களை நிறைய எழுதியுள்ளார். கடிதங்களையும் எழுதினார்.

சாதிச் சங்களுக்கிடையே தமிழ் முரசு பத்திரிகையில் எழுத்துப் போராட்டம் நடந்தபோது, இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு சாதிச் சங்கங்களை ஊக்குவிக்கக்கூடாது என்று முரசின் ஆசிரியர் கோ.சாரங்கபாணிக்கு 1950ஆம் சுதர்மன் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தைப் பிரசுரித்த சாரங்கபாணி, அதன்பின்னர் தமிழ் முரசில் சாதிச் சங்கங்களிடையேயான சச்சரவுகளை வெளியிடுவதையும் நிறுத்தினார். 1946இலிருந்து 1957வரையில்  காடுகளில் வசித்தபோது, மலாயா விடுதலைப் போராட்டச் செய்திகளை பாட்டாளி முரசு, போர் முரசு போன்ற பெயர்களில்   மெழுகுத் தாளில் எழுதி, மை தடவி, கை உருளையைக் கொண்டு அச்செடுக்கும் முறையில் கையெழுத்துப் பிரதியாக எழுதி மலாயாவின் மாநிலங்களுக்கும் மற்ற நாடுகளும் விநியோகித்தார்.

பணி ஓய்வு பிறகு 1983ல் போராட்ட அனுபவங்களை எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் நூல் 1989இல் வெளிவந்தது. தொடர்ந்து  பயணக் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை நூல்களாக எழுதி வெளியிட்டார்.

அமைப்புகளில் வகித்த பொறுப்புகள்:

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் - முன்னாள் செயலவை உறுப்பினர், முன்னாள் துணைத் தலைவர்

மாதவி இலக்கிய மன்றம் - முன்னாள் துணைத் தலைவர்

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு - ஆலோசனைக் குழு உறுப்பினர்

தொழிற்சங்கம், பொதுவுடமை இயக்கம், மலாயா இந்தியன் காங்கிரஸ் ஆகியவற்றிலும் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.

1946இல் ஜவஹர்லால் நேரு மலாயா வந்தபோது ஜோகூர் பாருவில் அவருக்கு வரவேற்பளித்த குழுவின் தலைவராகச் செயல்பட்டிருக்கிறார்.

பள்ளிகளில் தமிழ்ப் பரவலாக்க முன்னெடுப்பு (1959-63)

சிங்கப்பூர் தனி நாடாக ஆவதற்குமுன் தமிழ் பள்ளிகள் அல்லாத ஆங்கிலப்  பள்ளிகளில் சிலவற்றில் மட்டுமே தமிழ் இரண்டாம் பாடமாக இருந்தது. தமிழை இரண்டாம் பாடமாகத் தேர்ந்தெடுத்தால் வெகுதூரத்திலுள்ள பள்ளிக்குச் சென்று தங்கள் பிள்ளைகள் படிக்க நேரிடுமோ என்று அஞ்சிய பெற்றோர், பிள்ளைகளின் இரண்டாம் மொழியாகச் சீனம் அல்லது மலாய் மொழியைத் தேர்வு செய்தனர். போதிய தமிழ் மாணவர்கள் இல்லை என்று பள்ளி நிர்வாகம் காரணமாகக் காட்டுவதற்கு பெற்றோரின் அத்தயக்கம் தோதாக அமைந்தது. அதை உணர்ந்துகொண்ட சுதர்மன், அல்ஜூனியட் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.வி.லிங்கத்திடம் இப்பிரச்சனையைக் கொண்டுசென்றார். பெற்றோர் தமிழை இரண்டாம் பாடமாகத் தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்தால் தேவையானதைச் செய்வதாக லிங்கம் உறுதியளித்தார். தன் மகள் படித்த ‘மெக்பர்சன்’ பள்ளியில் தமிழ் மாணவர்களிடமிருந்து அவர்களின் வீட்டு முகவரிகளைப் பெற்ற சுதர்மன், பெற்றோர் ஒவ்வொருவரையும் வீட்டில்சென்று சந்தித்து நிலைமையை விளக்கித் தமிழ்ப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கச் சம்மதிக்க வைத்தார். அதன்பிறகு பள்ளி முதல்வரையும் சந்தித்துத் தமிழ்ப் பாடங்களை பள்ளியில் இருந்த கட்டமைப்புகளைக் கொண்டே நடத்துவதற்கான சில ஆலோசனைகளையும் வழங்கினார். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து வாங்கி சிங்கப்பூரில் உள்ள எல்லா ஆங்கிலப் பள்ளிகளிலும் சீன, மலாய் மொழிகளைப் போல தமிழ் மொழியும் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்ற அந்தக் கோரிக்கையை அவ்வேளையில் கல்வி அமைச்சுக்கும் அவர் அனுப்பி வைத்தார்.  பிறகு பல்வேறு பள்ளிகளில் அதே முறையில் தமிழ் இரண்டாம் பாடமாகப் பரவலானது.

நூல்கள்

1989  - வரலாற்று நினைவுகள்: ஆசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு தமிழ்ப்புரட்சியாளன்

1990 - நினைவலைகள் (7வது உலகத் தமிழ் மாநாடு)

1992 - சமயத்தால் ஓர் உலகம்

1995 - இனிய நினைவுகள்

1996 - எண்ண அலைகள்

2017 - ‘விடுதலைக் கவி’  வை.சுதர்மன் கவிதைகள்

2019 - வாழ்வியல் வரலாறு

2019 - ஒரு சிறுவனின் கதை

2000 - சுழலும் உலகில் சுற்றுகின்ற வாழ்க்கை

2001 - நான் பெற்ற இன்பம்

2002 - யார் குற்றவாளி, சமுதாயமா, சம்பிரதாயமா?

2002 - உலக வரலாற்றுத் தோற்றக்கூறுகளும் மனித நேயமும்

2003 - தணியாத தாகம்

2004 - சிங்கப்பூரும் தமிழரும்

2019 - ஒரு சிறுவனின் கதை

2021 - உயிரோவியம்

விருதுகள்

  1. ‘வரலாற்று நினைவுகள்’ எனும் நூலுக்காக தமிழக அரசின் பாராட்டுச் சான்றிதழ் 1991ஆம் கிடைத்தது
  2. கவிமாலை அமைப்பின் கணையாழி விருது 2011
  3. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தமிழவேள் விருது 2021

வரலாற்று இடம்

இந்திய தேசிய இராணுவம், மலாயா தொழிற்சங்கம், இடதுசாரி ஆயுதப் போராட்டம் என மலாயாவின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளில் பங்காற்றியிருப்பவர். கடைநிலை ஊழியராகத் தொடங்கி தலைமைத்துவம் வரை உயர்ந்து நீண்ட அனுபவத்தைப் பெற்றவர். புலம்பெயர்ந்த நாடான மலேசியாவிலும் பின் இடம்பெயர்ந்த சிங்கப்பூரிலும் தமிழ் மொழியைப் பேணி வளர்க்க தன்னால் இயன்ற பணிகளை ஆற்றியவர். வரலாற்றை விரிவாக எழுத்தில் பதிவுசெய்ய ஆர்வம்கொண்ட முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

உசாத்துணை

  1. வரலாற்று நினைவுகள்: ஆசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு தமிழ்ப்புரட்சியாளன் (1989)
  2. ஜப்பானியர் ஆக்கிரமிப்பு ஏற்படுத்திய சுதந்திர வேட்கை
  3. சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும் - கவிஞர் வை சுதர்மன்.
  4. வை.சுதர்மன்: போராட்ட வாழ்க்கையும் வாழ்க்கைப் போராட்டமும் சிவானந்தம் நீலகண்டன்