under review

வைகுண்டர்

From Tamil Wiki
Revision as of 09:07, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
சாமித்தோப்பு

வைகுண்டர் (ஜனவரி 1809- ஜூன்1851) அய்யா வைகுண்டர் .வைகுண்ட சாமிகள். சிவநாராயணர். தமிழகத்தில் தோன்றிய ஆன்மிக ஞானிகளில் ஒருவர். கன்யாகுமரி மாவட்டத்திலும், தெற்கு திருநெல்வேலி மாவட்டத்திலும் செல்வாக்குடன் இருக்கும் அய்யாவழி என்னும் வழிபாட்டு மரபின் நிறுவனர். இயற்பெயர் முத்துக்குட்டி சுவாமிகள்.

பிறப்பு, கல்வி

1956-க்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்த இன்றைய கன்யாகுமரி மாவட்டத்தில் அகத்தீஸ்வரம் வட்டம் தாமரைக்குளம் அருகே சாஸ்தாங்கோவில் விளை என்னும் சிற்றூரில் ( இது இன்று இவ்வூர் வைகுண்டரின் பெயரால் சாமித்தோப்பு என்று வழங்கப்படுகிறது) மூவண்டன் தோப்பு என்னும் இடத்தில் பொன்னு நாடாருக்கும் வெயிலாளுக்கும் 1809 ஜனவரி 14 (சில சோதிடக் கணக்குகளின்படி ஜனவரி 15) அன்று வைகுண்டர் பிறந்தார். (சுக்ல ஆண்டு தை மாதம் 1- ஆம் தேதி என்பது மரபார்ந்த கணக்கு). இவருக்கு இடப்பட்ட இயற்பெயர் முடிசூடும் பெருமாள். பேச்சுவழக்கில் முத்துக்குட்டி என்று அழைக்கப்பட்டார்.

வைகுண்டர் சான்றோர் எனப்படும் நாடார் இனத்தவர். இவரது தந்தை பனையேறும் தொழில் செய்துவந்தார். வைகுண்டரின் வாழ்க்கையை பற்றி குறிப்பிடும் அகிலத்திரட்டு அம்மானை 'சான்றோர் சித்தருட அருள்’ என வைகுண்டரின் அருளை குறிப்பிடுகிறது. இவருடைய தந்தையை பிறர் பழித்ததைப் பற்றிய 'சாணாப் பனையேறி பனை சிரங்குனின்றும் பற்றி தெளியல்லையே’ என்னும் வரியில் இருந்து அவர் பனையேறியவர் என்பது அறியத்தக்கது

சாமித்தோப்பு கொடியேற்றம்

அகிலத்திரட்டு அளிக்கும் தகவல்களின்படி இவர் மரபான முறையில் மொழிக்கல்வியும் சண்டைப்பயிற்சியும் வர்ம மருத்துவமும் கற்றிருந்தார். இளமையிலேயே வாய்மொழி மரபாக கதைகளையும் அடிப்படை சாஸ்திரங்களையும் பயின்றிருந்தார். ஆனால் பெரும்பாலான அவருடைய மெய்யறிவுகள் அவரிடம் ஞானியருக்குரிய முறையில் 'கல்லாமல்’ வந்தமைந்தவை என அகிலம் குறிப்பிடுகிறது

தனிவாழ்க்கை

1840-ல் இவர் பரதேவதை என்னும் பெண்ணை மணந்துகொண்டார். அகிலத்தில் அவர் பெயர் திருமாலம்மா என்று குறிப்பிடப்படுகிறது. பரதேவதை நெல்லைமாவட்டம் புலியூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். பரதேவதை ஊரல்வாய்மொழி என்னும் ஊரைச் சேர்ந்த ஒருவரை முதலில் மணம் புரிந்திருந்தார். அவர் இருமல் நோயால் மறைந்தார். அவர் பெயர் எமலோகபுருடன் என்று அகிலம் குறிப்பிடுகிறது. 1926-ல் இந்தத் திருமணம் நடந்திருக்கலாம். பரதேவதை வைகுண்டரின் முறைப்பெண் என்றும் வயதில் மூத்தவர் என்றும் வாய்மொழிச்செய்திகள் உள்ளன. அய்யா வைகுண்டர் திருமாலை அம்மாள் தம்பதியினருக்கு புதுக்குட்டி என்னும் மகனும் ரெத்னாவதி என்னும் மகளும் பிறந்தனர். புதுக்குட்டி மூன்று மைந்தர்களை பெற்றார். அவர்களில் மூத்தவரான நாராயண வடிவு சுவாமித்தோப்பு பதியின் பொறுப்பில் இருந்தார். அவர் மகன் செல்லவடிவு. செல்லவடிவின் மகன் கிருஷ்ணமணி. இப்போது இம்மரபில் பாலபிரஜாபதி அடிகளாக இருக்கிறார்.

ஞானம் பெறுதல்

இருபதாம் வயதில் வைகுண்டர் கடுமையான நோய் ஒன்றுக்கு ஆளானார். அவருடைய உடல்நிலை நலிந்து சாவை நெருங்கினார். இது உலகியலில் இருந்து அவரை விலக்கி ஞானம் நோக்கிக் கொண்டு சென்றது. அவர் அன்னை வெயிலாளின் கனவில் திருமால் தோன்றி அவரை திருச்செந்தூர் கோயிலுக்குக் கொண்டு செல்லும்படி ஆணையிட்டதாக அகிலத்திரட்டு பாடல் சொல்கிறது. மார்ச் 3 ( அல்லது 4 ),1833 அன்று திருச்செந்தூருக்கு வைகுண்டர் கொண்டு செல்லப்பட்டார் (மலையாள ஆண்டு 1008 மாசி மாதம் இருபதாம் தேதி) அங்கே அவர் தைலப்பதம் என்னும் எண்ணெய்க் குளத்தில் மூழ்கி நீராடினார். திருச்செந்தூர் கடலுக்குள் ஓரிடத்தில் மூன்று நாட்கள் தனிமையில் இருந்தார் என்றும் கதைகள் சொல்கின்றன. அங்கே அவர் மெய்ஞானம் அடைந்தார்.

சாமித்தோப்பு தேர்

வைகுண்டர் முத்துக்குட்டி என்ற பெயரை வைகுண்டர் என்று மாற்றிக்கொண்டார். இந்நாளைத்தான் அய்யா வைகுண்டர் அவதார நாள் என அய்யாவழி மரபு கொண்டாடுகிறது. திருச்செந்தூர் கடலில் இருக்கையில் திருமால் இவருக்கு அருளிச் செய்தவை அகிலம் செய்யுட்களில் விரிவாக சொல்லப்படுகிறது. 'நீ திருமாலின் அவதாரம். இதை துணிந்து சொல். ஆடம்பரமான விழாக்களும் காணிக்கைகளும் வேண்டாம். விலங்கு பலி வேண்டாம். பேய்த்தெய்வங்கள் வேண்டாம். உன்னை சமூகமும் மக்களும் முதலில் அடையாளம் காண மறுப்பார்கள். கலிதேவனை நீ அழிப்பாய். அதன் பின் உன் புகழ் விளங்கும்’ என்பது அந்த அருளுரையின் சாரம்.

திருச்செந்தூரில் இருந்து வைகுண்டர் நடந்தே சாமித்தோப்புக்கு வந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலையில் மூல நட்சத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய நேரத்தில் அவர் வந்ததாக அகிலம் சொல்கிறது. பச்சரிசி, தேங்காய், சிறுபயிறு, மிளகு ஆகியவை கலந்த உணவை ஒரு வேளை உண்டு அவர் தவம் செய்தார். 4 ஆண்டுகள் 8 மாதம் அவர் தவம் செய்தார்.

அடக்குமுறைகள்

வைகுண்டர் ஞான உரைகளை நிகழ்த்த ஆரம்பித்தார். ஏராளமான மக்கள் அவரை நாடி வந்தனர். அவரை திருமாலின் அவதாரமாக வழிபட்டனர். இது உயர்சாதியினருக்கு சமயநெறிகளின் மீறலாக தோன்றியது 1837-ல் மாதத்தில் வைகுண்டர் கைது செய்யப்பட்டார். இவர் சாதியக் குற்றச்சாட்டுகளாலேயே கைது செய்யப்பட்டார் என்பது அகிலத்திரட்டில் உள்ளது. கைது செய்ய வரும் காவலன் "ஏய் சாணாப்பனையேறி பனைச்சிரங்கு, உனக்கு இன்னும் புத்தி தெளியவில்லையே. உன்னை சாமி என்றால் ஒருவருக்கும் ஏற்காதே’ என்றுதான் பேசுகிறான்.

அய்யா ஆலயம்

சுசீந்திரத்தில் விசாரணை செய்யப்பட்டபின் வைகுண்டரை திருவனந்தபுரம் கொண்டு சென்றனர். அங்கே அவரை அரசத்துரோகியாக நடத்தினர். அவர் பலவகையான கொடுமைகளுக்கு ஆளானதாக அகிலத்திரட்டு சொல்கிறது. அவருக்கு மக்கள் செல்வாக்கு ஓங்கியதைக் கண்ட அரசு அவரைக் கொல்லாமல் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லும்படி ஆணையிட்டது.

ஒப்போடு உறவாய் ஒத்திருந்து வாழ்வது அல்லாமல்

சற்பம்போல் ஒத்த சகலசாதி தமக்கும்

உத்தரவு சொல்லாமல் உபாயமாய் தானிருந்து

மற்றும் ஒரு சாதிகளை வா என்று உரையாமல்

தன் ஒரு சாதி தன்னொரு இருப்பது அல்லால்

பின் ஒரு சாதி பிதரம் வைத்து பாராமல்

இனத்தொடு சேர்ந்து இருப்பேன் நான் என்று சொல்லி

கனத்தொடு அவனும் கைச்சீட்டு எழுதிவைத்துவிட்டு போ

என்று அரசு சொன்னதாக அகிலம் சொல்கிறது. வைகுண்டர் அரசு சொன்னபடி எழுதி கையொப்பம் இட்டுக் கொடுத்தார். மார்ச் 3,1838 (மலையாள மாதம் 1013 மாசி 19) அன்று இந்த ஒப்பந்தம் நிகழ்ந்தது

திருஏடு வாசிப்பு

அய்யாவழி உருவாக்கம்

திருவனந்தபுரம் சிறையில் இருந்து விடுதலையான பின்பு வைகுண்டர் ஓர் ஆண்டுக் காலம் தவம் செய்தார். 1837 முதல் 1838 வரை இந்த தவக்காலம் நீடித்தது. பன்னிரண்டு ஆண்டு காலம் ஞான உபதேசங்கள் செய்தார். சிறைக்குச் சென்று வந்த பின் அவர் ஞான உரைகளையே பெரும்பாலும் செய்து வந்தார். ஆனால் அவர் மேல் மூன்று தரப்பினர் கடும் எதிர்ப்பு கொண்டிருந்தனர். அவர் பின்னால் நாடார் சாதிகள் இணைவதைக் கண்டு உயர்சாதியினர் சீற்றம் கொண்டனர். அவர் சிறுதெய்வ வழிபாட்டை மறுப்பதை கண்டு நாடார் சாதியின் பெரிய தனவந்தர்கள் எதிர்த்தனர். அப்போது சான்றோர் நடுவே பரவி வந்த சீர்திருத்த கிறிஸ்தவத்தை அவர் எதிர்த்தமையால் அவர்களும் எதிர்த்தனர். முந்தைய இரு எதிர்ப்புகளைப் பற்றிய செய்திகளையும் நாம் அகிலத்திரட்டிலேயே காண்கிறோம். கிறிஸ்தவத் தரப்பினரின் எதிர்ப்பு அவர்களால் விரிவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைகுண்டர் பல அற்புதங்களைச் செய்தார் என்று அகிலத்திரட்டு சொல்கிறது. அவர் காலகட்டத்திலேயே அவரை விஷ்ணுவின் அவதாரமாக மக்கள் வழிபட ஆரம்பித்துவிட்டிருந்தனர். பின்னாளில் இந்நம்பிக்கை அய்யாவழி என்னும் வழிபாட்டு மரபாக ஆகி இன்றும் நீடிக்கிறது.

மறைவு

வைகுண்டர் ஜூன் 3 (அல்லது 4),1851 அன்று [மலையாள ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ஆம் தேதி] பூர்வபட்சத்தில் பூச நட்சத்திரத்தில் திங்கள்கிழமை பகல் 12 நாழிகையில் (காலை 10:40) வைகுண்டர் சமாதியானார். வைகுண்டம் சென்றார் என்பது அய்யாவழி நம்பிக்கை.

நூல்கள்

வைகுண்டருடைய மெய்யுரைகளை அவர் சொல்ல அவருடைய முதன்மைச்சீடர் அரிகோபாலர் கேட்டு அம்மானை என்னும் செய்யுள் வடிவில் எழுதியவையே அகிலத்திரட்டு என்று சொல்லப்படுகிறது. தெந்தாமரைக்குளம் இராமகிருஷ்ண நாடார் மகன் சகாதேவன் என்னும் அரிகோபாலன் என இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நூலே அய்யாவழியின் முதல்நூலாக கருதப்படுகிறது. டிசம்பர் 12,1941 அன்று (மலையாளம் ஆண்டு 1016 கார்த்திகை 27 வெள்ளி) இவர் இந்நூலை எழுதி முடித்தார் என்று குறிப்பிடுகிறார். அருள் நூல் என்னும் இன்னொரு நூலும் அய்யா வழியினரின் மூலநூலாக உள்ளது.

வரலாற்றுப் பின்னணி

இந்தக் காலத்தில் திருவிதாங்கூர் அரசராக இருந்தவர் புகழ் பெற்ற இசை நிபுணரும் கவிஞருமான சுவாதித்திருநாள் ராமவர்மா. (1813—1851)ஆனால் இளமையிலே நோயுற்றிருந்த சுவாதி திருநாள் ராமவர்மா ஆட்சியில் ஆர்வமில்லாதவராக இருந்தார். ஆட்சிப்பொறுப்பு திவான் கிருஷ்ணராயர் என்னும் தெலுங்கு பிராமணரின் பொறுப்பில் இருந்தது. அன்றைய திருவிதாங்கூர் ஆட்சி பிரிட்டிஷ் ரெசிடெண்ட் என்னும் படைத்தளபதியால் நேரடியாகவே நடத்தப்பட்டது. இக்காலத்தில் கர்னல் மாரிசன், கர்னல் கல்லன், கர்னல் ஆகியோர் ரெசிடெண்டுகளாக இருந்தனர். ஆட்சியதிகாரம் அவர்களிடமே பெரும்பாலும் இருந்தது.

ரெசிடெண்ட் மாரிசனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கிருஷ்ணராயர் ரெசிடெண்டால் திவானாக நியமிக்கப்பட்டவர். இவர் சுவாதித்திருநாள் மன்னரை எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. ஆட்சியில் அதிகாரம் பறிக்கப்பட்ட சுவாதித்திருநாள் மன்னர் மனம் வருந்தி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் வைரத்தை விழுங்கி தற்கொலை செய்துகொண்டதாகவும் கதைகள் உண்டு.

இக்காலகட்டத்தில் சுவாமித்தோப்பு பகுதிகள் சுசீந்திரம் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. பொ.யு. 12-ஆம் நூற்றாண்டில் இருந்து 1812 வரை இந்த கோயிலில் யோகக்காரர்கள் என்னும் குழுவினரின் ஆட்சி நடந்தது. இதுநம்பூதிரிகளின் அவை. 1812 முதல் இது அரசுக் கட்டுப்பாட்டில் வந்தது. ஆலயச் சொத்துக்களை வலிய சர்வாதியக்காரர் என்னும் அதிகாரி நிர்வாகம் செய்தார். கோயில் பணிகளை ஸ்ரீகாரியக்காரர் கவனித்துக்கொண்டார். வைகுண்டர் முதலில் இவர்களாலேயே விசாரிக்கப்பட்டார்.

1836-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி திருவிதாங்கூரில் பன்னிரண்டு லட்சம் (1280668)மக்கள்இருந்திருக்கிறார்கள். தோவாளை வட்டத்தில் சதுர மைலுக்கு 139 பேரும் அகத்தீஸ்வரம் வட்டத்தில் 531 பேரும் இருந்திருப்பதாக திவான் டி.கே. வேலுப்பிள்ளையின் திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல் சொல்கிறது. திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவலின் கணக்கின்படி இக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் ஒன்றரை லட்சம் பேர்தான். (164864). இவர்களில் நேரடியாக அடிமைப்பணி செய்தவர்கள் இரண்டாயிரத்துக்கும்குறைவானவர்கள்.

புராணம்

வைகுண்டர் பற்றிய வரலாற்றுக்கு அய்யாவழி சார்ந்த புராணக் கதைகள் உள்ளன. வைகுண்டர் ஏகப்பரம்பொருளின் ஏகனேக (ஒன்றும் பலவுவான) அவதாரமாவார். அவர் நாராயணருக்கும் லட்சுமி தேவிக்கும் மகனாக திருச்செந்தூர் கடலினுள் கொல்லம் ஆண்டு 1008, மாசி மாதம் 20-ஆம் தேதி அவதரித்தார். இது நாராயணரின் பத்தாவது பிறப்பு. இப்பிறப்புகள் கலியனை சம்ஹாரம் செய்யவும், கலியுகத்தை பூர்த்தி செய்யவும் நோக்கம் கொண்டவை.

கலியுகத்தின் அறுதிகாலகட்டம் நெருங்கி வரக்கண்டு நாராயணர் வைகுண்டரை பெற்றெடுப்பதற்காக பிரபஞ்சத்தின் அனைத்து பெண்சக்திகளையும் உள்ளடக்கி லெட்சுமி தேவியை முதலை வடிவில் திருச்செந்தூர் கடலினுள் வளர விட்டிருந்தார்.அந்த லெட்சுமியின் கருவிலே ஏகப்பரம்பொருள் வைகுண்டராக பிறந்தார்.பிறந்த உடனேயே கலியை அழித்து தர்மயுகத்தைத் தோற்றுவிப்பதற்கான ஆணை ’விஞ்சை’ என்னும் பெயரில் கடலினுள்ளேயே நாராயணரால் வைகுண்டருக்கு வழங்கப்பட்டது. 'கலியழிப்பு' 'தர்மயுகத் தோற்றம்' என்ற இரு நோக்கங்களுக்காக இப்பிறப்பு நிகழ்ந்தது. பிரபஞ்சத்தின் அனைத்து தெய்வ சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக அவர் அமைந்தார்.

கடலில் வைகுண்டராக அவதரித்த நாராயணர் திருச்செந்தூரில் கடற்கரைக்கு வந்து தருவைக்கரை என்னுமிடத்தில் பண்டாரமாக மனித வடிவம் எடுத்தார். நாராயண பண்டாரமாக மானிடர்களுக்கு காட்சி அளித்த அவர் வைகுண்டர் என்ற பெயரோடு இப்போது அம்பலப்பதி இருக்குமிடத்தில் சிவலிங்கத்தை நிலை பெறச் செய்து விட்டு மணவைபதி இருக்கும் இடமான சுவாமிதோப்பு வந்தார். தெட்சணம் எனப்படும் பூவண்டன் தோப்பை (தற்போதய சுவாமி தோப்பு) அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டார். மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.

முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே

தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே

மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்

நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்

முதல் தவம் கலியுகத்தை முடித்து வைக்க. இரண்டாம் தவம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக. மூன்றாம் தவம் பெண்களுக்காகவும் முன்னோர் காட்டிய நல்ல வழிகளை நிறுவுவதற்காகவும். வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும் தூய பிரம்மமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் மணம்புரிந்தார் என்று அவரைப் பற்றிய புராணங்கள் சொல்கின்றன.

வைகுண்டர் வரலாற்றை கலியன் கேட்ட வரங்கள், அய்யாவழி புராணம், அய்யாவழி மும்மை ஆகிய பிற்கால நூல்கள் விரிவாகச் சொல்கின்றன.

சமகாலப்பதிவுகள்

1847-ஆம் ஆண்டின் சீர்திருத்தக் கிறிஸ்தவ அறிக்கை ஒன்று தேங்காய்ப்பட்டணம் அருகே உள்ள கிராமங்களில் 'சீர்திருத்த கிறிச்தவத்திற்கு சென்ற மக்களின் எண்ணிக்கையைப் போலவே அய்யா வழிக்கும் மக்கள் சென்றனர்’ என்று சொல்கிறது [G.Patrick 2003 P91]

பிரடரிக் வில்கின்ஸன் என்னும் கிறிஸ்தவச் சமயப்பணியாளர் 1864-ல் ஓர் அறிக்கையில் 'இளைஞரான முத்துக்குட்டி கால்நடை மேய்ப்பவராகவும் பனையேறியாகவும் இருந்தார். ஆனால் ஞானம் பெற்ற பின்பு நீண்ட சடைமுடியுடன் வழிபடு தெய்வமானார். இவர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என மக்கள் நம்பினர். இவரைத்தேடி பெரும் மக்கள்கூட்டம் வந்தது’ என்கிறார் [G.Patrick Religion and Subaltern Agency. Madras University 2003 P84]

ஆன்மிகக்கொள்கைகள்

வைகுண்டரின் ஆன்மிக கொள்கைகள் நான்கு மையக்கொள்கைகளாகச் சுருக்கத் தக்கவை. அவை

  • சிறுதெய்வ வழிபாட்டில் இருந்து பெருந்தெய்வ வழிபாடுக்குச் செல்லுதல்
  • மதமாற்ற எதிர்ப்பு
  • வேதாந்த தத்துவக் கொள்கைக்கு அணுக்கமான ஓரிறைக்கொள்கை அல்லது பரப்பிரம்மக் கொள்கை
  • ஆன்ம விடுதலைக்கு நிகராகவே மானுட சமத்துவத்திற்கும் உலக வாழ்க்கையை சிறப்புற வாழ்வதற்கும் ஆன்மிகம் உதவ வேண்டும் என்னும் இகவிடுதலைக் கொள்கை.
சிறுதெய்வ மறுப்பு

வைகுண்டர் ஞானம் அடைந்தபோது நாராயணர் என்னும் விஷ்ணு அவருக்கு அளித்த முதன்மை அறிவுரையிலேயே சிறுதெய்வங்களும் பேய்த்தெய்வங்களும் தெய்வங்கள் அல்ல என்று சொன்னதாக அகவல் குறிப்பிடுகிறது. "வைகுண்டசாமி தாமே பேய் பல சீவ செந்து ஊர்வன புற்பூண்டு கல் காவேரி அறிய உபதேசித்தார். எப்படி என்றால் வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து காணிக்கை கைக்கூலி காவடி ஆடு கிடா கோழி பன்றி இதுவும் இரத்த வெறி தீபதூபம் இலை பட்டை இது முதல் அவசியமில்லை. பேய்களை அறிந்து பேய்களிடம் நீங்களும் ஒதுங்கி இருங்கோ’ என்று அவர் சொன்னதாக அகிலத்திரட்டு சொல்கிறது

அய்யா மந்திரவாதம் நாட்டுப்புறத் தெய்வங்களின் பூசாரிகளின் பலிகொடை முறைகள் ஆகியவற்றை எதிர்த்தார். சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களை வழிபடுதெய்வங்களாக முன்வைத்தார். தன்னை விஷ்ணுவின் அவதாரம் என அறிவித்தார். சிவலிங்கத்தை நிறுவினார். கன்யாகுமரி தேவியை புகழ்ந்து பாடினார்.

மதமாற்ற எதிர்ப்பு

அய்யா வைகுண்டரின் காலகட்டத்தில் தென்திருவிதாங்கூரில் சீர்திருத்த கிறிஸ்தவத்திற்கு மக்கள் செல்வது மிகுதியாக இருந்தது. அதை அய்யா கடுமையாக கண்டித்தார் என்று அகிலத்திரட்டு சொல்கிறது. கிறிஸ்தவ போதகர்களும் அய்யாவை மோசடியாளர் என்று எழுதியிருக்கிறார்கள்.

ஒருவேதம் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான்

மற்றொரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான்

அத்தறுதி வேதம் அவன் சவுக்கம் போடு என்பான்

குற்றம் உரைப்பான் கொடுவேதக்காரன் அவன்

ஒருத்தருக்கு ஒருத்தர் உனக்கு எனக்கு என்றே தான்

உறுதி அழிந்து ஒன்றிலும் கைகாணாமல்

குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டு உடைந்து

மறுகி தவித்து மாள்வார்

என இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டு மதங்களுமே ஏற்புடையவை அல்ல என்று அகிலத்திரட்டில் அய்யா சொல்கிறார்.

ஓரிறைக் கொள்கை

வேதாந்த மரபின் பிரம்மதத்துவத்துக்கு அணுக்கமான ஓரிறைக் கொள்கையை அய்யா வைகுண்டர் முன்வைக்கிறார். பெரும்பாலான இடங்களில் பரப்பிரம்மம் என்னும் சொல்லையே கையாள்கிறார். "எறும்பு கடையானை முதல் பேதாபேதம் எண்பத்துநான்கு உயிர்களுக்கும் ஏகமாய் உறுபொருளாய் நின்ற குரு நீயே அல்லாமல் உலகத்திலே யாருளதோ உடைய மாலே’ என்று அகிலத்திரட்டு சொல்கிறது.

இவ்வுலகின் சாராம்சமானது பரப்பிரம்மம் என்னும் இறைச்சக்தியே என்றும், அதுவே இங்குள்ள அனைத்தும் என்றும் அகிலம் சொல்கிறது. அய்யா வைகுண்டரின் மரபில் சைவ வைணவ இணைப்பு இருந்து கொண்டே இருந்தது. அரகர சிவ சிவ என்பது அவர்களின் வழிபாட்டொலியாகும். அகிலத்திரட்டிலும் சைவம் வைணவம் இரண்டும் ஒன்றென்றே சொல்லப்படுகிறது.

மானுடப் பார்வை

அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டில் 'தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம்’ என்கிறார். பெரிய ஆலயங்களை உருவாக்குவது அவருக்கு உடன்பாடானது அல்ல. என் அடியார் ஒருவருக்கொருவர் அன்பிற்குரியவர் என்று அவர் சொல்கிறார். திருமால் வைகுண்டருக்கு அளிக்கும் நற்சொல்லிலேயே

சாதி சாதி தோறும் சக்கிலி புலச்சிவரை

ஆதிசாதி முதலாம் ஆராதனை காட்டுவிட்டேன்

என்று சாதிகளுக்கு அப்பாற்பட்டு அவருடைய சொற்கள் சென்று சேரவேண்டும் என்று சொன்னதாக அகிலத்திரட்டு சொல்கிறது.

சமூகப் பணிகள்

அய்யா வைகுண்டர் அன்றிருந்த சாதிய மேலாதிக்கத்தை எதிர்த்தார். ஆலயங்கள் உயர்சாதியினருக்கு உரியனவாக இருந்தமையால் அவர் சமானமான இன்னொரு வழிபாட்டு முறையாக தன் மரபை உருவாக்கி எடுத்தார். அவர் சார்ந்த சான்றோர் குலத்தவர் அன்று பயணங்கள் செல்ல தடை இருந்தது. வழியில் தங்கும் வசதிகளும் இல்லை. ஆகவே அவர் நிழற்தாங்கல் என்னும் அமைப்புகளை உருவாக்கினார். இவை பயணிகள் தங்கிச் செல்லும் இடங்களாக அமைந்தன.

சிறுதெய்வங்களை வழிபட்டு வந்த சிறு கோயில்களை பதிகள் என்னும் வழிபாட்டிடங்களாக அய்யா மரபினர் மாற்றிக் கொண்டனர். இவற்றில் பெரும்பாலானவை இன்று அய்யாவழி ஆலயங்களாக ஆகிவிட்டன. இங்கே ஆண்டுதோறும் மார்கழியில் அகிலத்திரட்டு 17 நாட்கள் வாசிக்கப்படுகிறது.

அய்யா வைகுண்டர் சான்றோர் மரபினரை வணிகம் செய்யவும், திண்ணை வைத்து வீடு கட்டிக் கொள்ளவும், தலைப்பாகை அணிந்து கொள்ளவும் ஆணையிட்டார். இது தற்சார்பு, தன்மானம் ஆகியவற்றை அவர்கள் பேண வேண்டும் என்னும் வழிகாட்டலாகும்.

வழிபாட்டிடங்கள்

அய்யா வைகுண்டர் மரபில் வழிபாட்டிடங்கள் பதிகள் எனப்படுகின்றன. அவற்றில் ஆறு இடங்கள் முதன்மையான பதிகள் எனப்படுகின்றன

  • அய்யா வைகுண்டரின் சமாதி அமைந்துள்ள சுவாமித்தோப்பு பதி தோப்புப்பதி எனப்படுகிறது. இது கல்லால் ஆன பெரிய ஆலயம். இங்கே அய்யா வைகுண்டரின் வழிவந்தவர்களால் பூசை மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அய்யா அமர்ந்த நாற்காலி பூசைக்கு வைக்கப்பட்டுள்ளது. அய்யாவின் துணைவி திருமாலம்மையாரின் சன்னிதியும் உள்ளது
  • முட்டப்பதி கன்யாகுமரி மாவட்டத்தில் கடலோரம் முட்டம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது முத்துப்பதி என்றும் சொல்லப்படுகிறது. இங்குதான் அய்யா வைகுண்டர் துவையல்பந்தி என்னும் சமபந்தி விருந்து முறையைத் தொடங்கினார். எழுநூறு குடும்பங்கள் அவருடைய மரபை ஏற்றுக்கொண்டன.
  • தாமரைக்குளம் பதி. தாமரைக்குளம் என்னும் ஊரிலுள்ளது இந்த பதி. இங்குதான் அரிகோபாலர் பிறந்தார். அகிலத்திரட்டு அம்மானை நூல் இங்கே உருவானது
  • அம்பலப்பதி அய்யா வைகுண்டர் குமரிமாவட்டத்தில் பள்ளம் என்னும் ஊரில் தங்கினார். இங்கே அவருடைய பதி அமைந்தது. இது அம்பலப்பதி எனப்படுகிறது
  • பூபதி என்னும் பதி குமரிமாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ளது. இங்கே வாழ்ந்த பூமதன்தாய் என்னும் சிறுமி அய்யா வைகுண்டரை தன் கணவராக ஏற்றுக்கொண்டதாகவும், அவர் பூமிதேவியின் அம்சம் என்றும் சொல்லப்படுகிறது. அவரை அய்யா வைகுண்டர் மணம் புரிந்துகொண்டார். திருமாலம்மாள் திருமகள் என்றும் பூமதன்தாய் புவிமகள் என்றும் வைகுண்டர் திருமாலின் அம்சம் என்பதனால் இருவரையும் மணந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் சமாதியான இடம் பூபதி என அழைக்கப்படுகிறது

இணைப்புகள்


✅Finalised Page