வெ.ஸ்ரீராம்

From Tamil Wiki
Revision as of 22:44, 3 September 2022 by Muth r (talk | contribs)

வெ.ஸ்ரீராம் (செப்டெம்பர் 1, 1944) தமிழ் மொழிபெயர்ப்பாளர். பிரெஞ்சு மொழியில் இருந்து நேரடியாக தமிழில் பல்வேறு படைப்புக்களை மொழிபெயர்த்தவர்.

வெ.ஸ்ரீராம்
வெ.ஸ்ரீராம்

பிறப்பு, கல்வி

வெ.ஸ்ரீராம் ஈரோட்டில் செப்டெம்பர் 1, 1944 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் திரு. வெங்கட்ராமன், திருமதி கௌரி. அவருடன் உடன் பிறந்தவர்கள் பத்து பேர். வெ. ஸ்ரீராம் இரண்டாவதாகப் பிறந்தவர்.

ஐந்தாம் வகுப்பிலிருந்து நான்கு ஆண்டுகள் ஈரோடு மகாஜன உயர்நிலை பள்ளியில் படித்தார். ஒன்பதாம் வகுப்பிலிருந்து கரூர் முனிசிபல் பள்ளியில் படித்தார். செயின்ட் ஜோசப் கல்லுரி, திருச்சியில் பட்டப்படிப்பும் முடித்தார்.

பிரெஞ்சு மொழி, பண்பாட்டு நட்புறவுக் கழகமான அலியன்ஸ் பிரான்சேயில் 1971 முதல் 1974 பிரெஞ்சு மொழில் முதுநிலை பட்டம் பெற்றார்.

வெ. ஸ்ரீராம் - குடும்பம்
வெ. ஸ்ரீராம் - குடும்பம்

தனிவாழ்க்கை

வெ.ஸ்ரீராம் 1965 - 2001  சென்னையில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஏப்ரல் 12, 1982 இல் மரகதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மகன் வித்யாசாகர், மருமகள் ரூபா, பேத்தி நிர்மயி. சென்னை சாலிகிராமதில் வசித்து வருகிறார்.

இலக்கியவாழ்க்கை

வெ.ஸ்ரீராம் 1965-66 இல் தேவநேய பாவாணர் கட்டிடத்தில் நடைபெறும் இலக்கிய கூடங்களில் கலந்துகொண்டு நிறைய எழுத்தாளர்களை சந்தித்து உரையாடி சமகால இலக்கிய அறிமுகம் பெற்றார்.

"கொள்ளை நோய்" எனும் பிரெஞ்சு நாவலில் வரும் ஜோசப் கிராண்ட் எனும் கதாபாத்திரத்தை பற்றிய விவரணையை தமிழில் மொழி பெயர்த்து "கிரியா" அலுவலகத்தில் ந. முத்துசாமி, திலீப்குமார், ராமரிஷ்ணன் இவர்களிடம் படித்து காண்பித்தார். அவர்களின் ஊக்கத்தால் 1980 இல் ஆல்பர் காம்யுவின் நாவல் அந்நியனை தமிழில் மொழிபெயர்த்தார். ‘க்ரியா’ பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. அதன் பிறகு பிரெஞ்சு மொழியில் இருந்து நேரடியாக தமிழில் பல்வேறு படைப்புக்களை மொழிபெயர்த்துள்ளார்.

பிரெஞ்சிலிருந்து தமிழில் மட்டுமல்லாமல் தமிழில் இருந்து பிரெஞ்சில் மொழிபெயர்க்கும் அளவுக்கு புலமையும் மொழித்தேர்ச்சியும் கொண்டவர்.

இலக்கிய இடம்

வெ.ஸ்ரீராம் பிரெஞ்சு இலக்கியம், சினிமா, கலாச்சாரத்தை தமிழ் மக்களிடம் தொடர்ந்து அறிமுகப்படுத்துபவர்.

தமிழ் இந்து, அம்ருதா, காலச்சுவடு சஞ்சிகைகளில் எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி எழுதிய கட்டுரைகள், ஆளுமை அறிமுகக் குறிப்புகள் முக்கியமானவை.