being created

வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்

From Tamil Wiki

வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் (Vincent Arthur Smith, ஜூன் 3, 1843 – பெப்ருவரி 6,1920) டப்லினில் பிறந்த இந்தியவியலாளர், வரலாற்றெழுத்தாளர், இந்திய ஆட்சிப் பணியாளர், அருங்காட்சியகக் காப்பாளர்(curator).

பேரரசர் அசோகர், முகலாயப் பேரரசர் அக்பர் உட்பட இந்திய ஆட்சியாளர்கள் பலரைப் பற்றி இவர் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய, மற்றும் இலங்கையைச் சேர்ந்த நுண் கலைகள் பற்றி நூல்கள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் அயர்லாந்த் டப்ளினில் ஜூன் 3, 1843 அன்று புகழ்பெற்ற ஐரிஷ் மருத்துவர், நாணயவியலாளர், தொல்துறை ஆய்வாளரான அக்வில்லா ஸ்மித்திற்கு பதின்மூன்று குழந்தைகளில் மூன்றாவது மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பை அயர்லாந்தில் முடித்தார். டப்ளின் ட்ரினிடி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

1871-ல் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்வாகி அவத் பகுதியை உள்ளடக்கிய வடமேற்கு மாகாணத்தில் (Northwest frontier) நிலத்தீர்வை அதிகாரியாகப் பணியாற்றினார். 1898-ல் தலைமைச் செயலராகப் பதவி உயர்வு பெற்றார். 1871-ல் மேரி எலிசபெத்தை மணந்து கொண்டார். குழந்தைகள் மூன்று மகன்கள், ஒரு மகள்.

இந்தியவியல்/வரலாற்றாய்வு

வின்சென்ட் ஸ்மித் ஆட்சிப்பணியில் இருந்தபோதே இந்திய வரலாற்றைப் பற்றி கட்டுரைகளும் நூல்களும் எழுதினார். 1875-ல் 'புந்தேல்கண்ட் பகுதியின் நாட்டுப்பாடல்கள், மூத்த குடியினர் மற்றும் வரலாறு பற்றிய அவரது ஆய்வுக்கட்டுரைகள் Royal Asiatic Society of Bengal வெளியிட்ட சஞ்சிகைகளில் வெளிவந்தன. 'Notes on the Bhars and Other Early Inhabitants of Bundelkhand' என்ற நூலையும் எழுதினார். வட இந்தியாவின் வரலாற்றை கலைச் சின்னங்களிலிருந்து எழுதும் பணியை மேற்கொண்டார். கங்கைச் சமவெளியில் நிறைந்திருந்த பழம்பொருட்கள், நாணயங்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டு குப்தப் பேரரசின் நாணயங்கள் பற்றியும் பண்டை இந்திய நாகரிகத்தில் ரோம-கிரேக்கப் பண்பாடுகளின் தாக்கம் பற்றியும் கட்டுரைகள் எழுதினார்.

வின்சென்ட் ஸ்மித் தனக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றியல் ஆய்வுகள் அனைத்தையும் ஒன்று திரட்டி பண்டை இந்திய வரலாற்றை 'Early History of India' என்ற நூலாக எழுதினார். 1904-ல் வெளிவந்து, 1924-ல் மேலும் தரவுகளுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட இந்நூல் அதிகாரபூர்வமான வரலாறாகவே கருதப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கையின் நுண்கலை வரலாறு (History of Fine Art in India and Ceylon (1911)), அசோகரின் வரலாறு (a Life of Asoka (1901)), அக்பரின் வரலாறு (aLife of Akbar (1917)), மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் இந்திய வரலாறு (Oxford History of India (1918)) ஆகிய குறிப்பிடத்தக்க வரலாற்று நூல்களை எழுதினார்.

தேர்ந்த நாணயவியலாளரான(numismatist) ஸ்மித் கல்கத்தா அருங்காட்சியகத்தின் பண்டை நாணயங்களையும் இலச்சினைகளையும் தொகுத்து அவற்றின் விரிவான பட்டியலைத் (catalogue) தயாரித்தார்.

தமிழ்நாட்டில்ன் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். புகழ்பெற்ற கல்வெட்டாய்வாளர் கே.வி. சுப்ரமணிய ஐயர் வின்சென்ட் ஸ்மித்தின் உதவியாளராக இவ்வாய்வுகளில் பணிபுரிந்தார்.

1900-ல் பதவியிலிருந்து விலகி, ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள தாயகம் திரும்பினார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஜான்ஸ் கல்லூரியில் இந்தியவியல் கழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் மான்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்களுக்கு தனது வலுவான மறுப்பைப் பதிவு செய்தார்.

விருதுகள்

  • Companion of the Order of the Indian Empire (C.I.E)-1919
  • டப்லின் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு டாக்டர் பட்டம் (honorary degree of Doctor of Literature the University of Dublin),
  • Gold Medal of the Royal Asiatic Society.

மதிப்பீடு

வின்சென்ட் ஸ்மித் சிறந்த தொல்பொருள் ஆய்வாளராகவும், நாணயவியலாளராகவும், வரலாற்றாசிரியராகவும் மதிப்பிடப்படுகிறார். தொல்பொருள்களிலிருந்து வரலாற்றை எடுத்துரைக்கும் முறையைக் கையாண்டார். 'Early History of India' அக்காலத்தில் எழுதப்பட்ட இந்திய வரலாற்று நூல்களில் காலவரிசை கவனமாகப் பின்பற்றப்பட்ட நூலாகவும் அதிகாரபூர்வமான பண்டை இந்திய வரலாறாகவும் மதிப்பிடப்படுகிறது.

மிகச் சுருக்கமாகவும், அலங்கார விவரணைகளைத் தவிர்த்தும் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்தவராக அறியப்படுகிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையிலும், ராயல் எஷியாடிக் சொசைடியிலும் அவரது ஆய்வுப் பணி குறிப்பிடத்தக்கது. கே.வி. சுப்ரமணிய ஐயர் போன்ற வரலாற்றாய்வாளர்களை உருவாக்கியதில் ஸ்மித்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.




மறைவு

படைப்புகள்

உசாத்துணை

Online books library-Books by Vincent Arthur Smith











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.