under review

லோகமாதேவி

From Tamil Wiki
Revision as of 09:10, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
முனைவர் லோகமாதேவி

லோகமாதேவி (பிறப்பு: பிப்ரவரி 12, 1970) தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பணியில் உள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

லோகமாதேவி கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் அழுக்குராஜ், பரமேஸ்வரி இணையருக்கு பிப்ரவரி 12, 1970-ல் இரண்டாவது மகளாகப் பிறந்தார். ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி உடன்பிறந்தவர்கள். புனித லூர்து மெட்ரிகுலேஷன் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றியப்பள்ளி, செயிண்ட் அலோஷியஸ் மேல்நிலைப்பள்ளி தாராபுரம், மற்றும் பொள்ளாச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார்.

நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை அறிவியல் (BSc) பட்டம் பெற்றார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டம் (தாவரவியல்) பெற்றார். ஆய்வியல் நிறைஞர்(M Phil) மற்றும் முனைவர் (1997) பட்டங்களை கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

லோகமாதேவி முனைவர் பட்டத்திற்காக பொள்ளாச்சியில் 90-களில் பெரும் பிரச்சினையாக இருந்த தேங்காய்நார்க்கழிவுகளை பூஞ்சைகளின் உதவியால் மட்கச் செய்து உரமாக்கும் ஆய்வை சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செய்தார். அந்த ஆய்வு தொடர்பான அவரது 6 சர்வதேச ஆய்வறிக்கைகள் இங்கிலாந்தில் வெளியாயின. சால்போர்ட் (Salford) பல்கலைக்கழகத்தின் அறிவியல் சஞ்சிகை(journal) யில் இந்த ஆறு ஆய்வறிக்கைகள் ஓர் இதழாக வெளிவந்தன. அப்போது இந்த அரிய சாதனை பரவலாகப் பேசப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு இந்த ஆய்வைக் குறித்த பயிற்சியை அளிக்கும் வாய்ப்பையும் சால்போர்ட் பல்கலைக்கழகம் லோகமாதேவிக்கு வழங்கியது.

தனி வாழ்க்கை

ஏப்ரல் 22, 1999-ல் அண்ணாதுரையை மணந்து கொண்டார். சரண், தருண் இரு மகன்கள். இருபது ஆண்டுகளாக தாவரவியல் பேராசிரியையாக பொள்ளாச்சி, நல்லமுத்துகவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பணி புரிந்து வருகிறார். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டி. இவரின் வழிகாட்டுதலில் 16 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம்பெற்றுள்ளனர். மூன்று முனைவர் பட்ட மாணவர்கள் பழங்குடியின தாவரவியலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

தாவர உலகம் (முனைவர் அ. லோகமாதேவி)

லோகமாதேவி தாவரவியல் துறைசார் எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். தாவரவியல் தொடர்பான ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார். விஞ்ஞான் ப்ரசார் வெளியிட்ட "தாவர உலகம்" முக்கியமான படைப்பு. தொடர்ந்து தாவரவியல்-இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை இலக்கிய, நாளிழ்களில் எழுதி வருகிறார். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பணியில் மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.

தினமலரில் 'பட்டம்' சிறப்பிதழில் தொடர்ந்து மூன்று வருடங்கள் தாவரவியல் கட்டுரைகள் எழுதினார். சொல்வனம், நீர்மை, ஆனந்த சந்திரிகை போன்ற மின்னிதழ்களிலும், எழுத்தாளர் ஜெயமோகன் தளத்திலும் தாவரவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். தாவரவியல் கலைச்சொல் அகராதியைத் தயாரித்து வருகிறார்.

ஜி. கே. செஸ்டர்டனின் (G.K.Chesterton) 'நீலச் சிலுவை' (Blue Cross) சிறுகதையைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.[1]

தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர் மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் பங்களிப்பாளர், மேற்பார்வையாளர்.

விருது

  • 2019-ல் தினமலரும், கனடாவின் அநித்தம் அமைப்பும் இணைந்து அறிவியலை தமிழில் எழுதுவதற்காக "தோழி விருது" வழங்கியது.

நூல் பட்டியல்

  • தாவர உலகம் (விஞ்ஞான் பிரசார் வெளியீடு: 2022)
  • இயற்கை முறை மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறித்தோட்டம்
ஆங்கில நூல்கள்
  • A Compendiyum of NGM college Campus Flora (2016)
  • Plant Anatomy, A practical handbook
  • Medicinal Monocots
  • Ethnobotanical traditions of kodanthur tribes

இணைப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் உள்ள லோகமாதேவியின் சில கட்டுரைகள்:

அடிக்குறிப்புகள்


✅Finalised Page