standardised

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

From Tamil Wiki
Revision as of 21:41, 25 April 2022 by Tamaraikannan (talk | contribs)
லட்சுமிகாந்தன்

லட்சுமிகாந்தன் கொலைவழக்கு தமிழக திரையுலகில் பெரிய பாதிப்புகளை உருவாக்கிய ஒரு நிகழ்வு. லட்சுமிகாந்தன் ஓர் இதழாளர். இந்துநேசன் என்னும் அவதூறு இதழை நடத்தி வந்தார். அவர் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவரையும் பற்றி அவதூறாக எழுதியதனால் அவர்கள் இருவரும் கூலிப்படையினரை ஏவி அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். அவ்வழக்கில் அவர்கள் ஆயுள் தண்டனை பெற்றனர். நான்காண்டு கால சிறைத்தண்டனைக்குப் பின் பின்னர் லண்டன் பிரிவி கௌன்ஸில் மேல்முறையீட்டில் விடுதலை அடைந்தனர். இவ்வழக்கால் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவருடைய திரைவாழ்க்கையும் சிதைவு கொண்டன. தமிழ் திரையுலகில் அது பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

லட்சுமிகாந்தன் கொலை

லட்சுமிகாந்தன் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவன். இளமையில் செய்த குற்றத்துக்காக அந்தமானில் தண்டனை அனுபவித்தவன். சென்னைக்கு திரும்பி வந்து வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்து வந்தான். 1943-ல் அவன் சினிமா தூதன் என்னும் பெயரில் ஒரு மாத இதழைத் தொடங்கி அதில் திரையுலகத்தவர் பற்றிய அவதூறுகளை எழுதிவந்தான். 1944-ல் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயடு ஆகியோர் சேர்ந்து சினிமாத்தூதன் இதழை தடை செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் ஒரு மனு கொடுத்தனர். சினிமாத்தூதன் தடை செய்யப்பட்டது. லட்சுமிகாந்தன் உடனே இந்துநேசன் என்னும் இதழை விலைகொடுத்து வாங்கி அதை நடத்த ஆரம்பித்தான். அதில் அவதூறு மற்றும் மிரட்டல்களை எழுதிவந்தான்.

8-11-1944 அன்று புரசை வாக்கத்தில் ரிக்‌ஷா ஒன்றில் சென்றுகொண்டிருந்த லட்சுமிகாந்தனை சிலர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவனை வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். காயத்திற்கு தன் மேலாடையாலேயே கட்டு போட்டுக்கொண்ட லட்சுமிகாந்தன், நடந்து சென்று தன் வழக்கறிஞர் நற்குணம் என்பவரைச் சென்று சந்தித்தான். அவர் மருத்துவமனைக்குச் செல்லும்படி சொல்லியும் கேட்காமல் காவல் நிலையம் சென்று தன்னை தாக்கியவர்கள் மேல் புகார் கொடுத்தான். அதன் பின் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டான். மறுநாள் காயங்களில் குருதி நிலைக்காமல் உயிர் துறந்தான். லட்சுமிகாந்தனின் சாவு மர்மமாகவே கருதப்படுகிறது. அவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவன் ஈரலில் நோய் இருந்தது என்றும் கூறப்படுகிறது.

லட்சுமிகாந்தன் கொடுத்த வாக்குமூலத்தின்படி 19-10-1944 அன்று லட்சுமிகாந்தனை சிலர் கழுத்தில் காயம் ஏற்படும்படி கத்தியால் கீறினர். அதைப் பற்றி காவல்துறையில் புகார் கொடுத்தான். அவ்வழக்கை நடத்தும் பொருட்டு அவன் தன் வழக்கறிஞர் நற்குணத்தைச் சந்திக்க சென்றுவிட்டு 8-11-1944 அன்று மாலை கோபால் என்பவனின் ரிக்‌ஷாவில் நீதிமன்றத்துக்கு சென்றுகொண்டிருந்தான். இந்த செய்தியை அறிந்த வடிவேலு என்பவன் தன் நண்பன் நாகலிங்கம் என்பவனுடன் ஆளரவம் இல்லாத ஜெனரல் காலின்ஸ் சாலையின் சந்து ஒன்றில் ஒளிந்திருந்தான். லட்சுமிகாந்தனைச் சந்தித்ததும் வழிமறித்து வாக்குவாதம் செய்தான். கோபால் மிரண்டு ரிக்‌ஷாவை விட்டுவிட்டு ஒளிந்துகொண்டான். லட்சுமிகாந்தனை வடிவேலு வயிற்றில் கத்தியால் குத்தினான். நாகலிங்கமும் விலாவில் குத்தினான். லட்சுமிகாந்தன் வயிற்றில் இருந்த கத்தியை பிடுங்கி வீசிவிட்டு நடந்தே நற்குணம் வீட்டுக்குச்சென்று ‘அவன் குத்திவிட்டான்’ என்று சொன்னான். பெயரைச் சொல்லவில்லை.

நற்குணம் லட்சுமிகாந்தனை கொண்டு செல்ல சின்னப்பை யன் என்னும் ரிக்‌ஷாக்காரனை அமர்த்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் லட்சுமிகாந்தன் நேராக வேப்பேரி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் எழுதி கொடுத்தான். இந்நிலையில் ரத்தக்கறை படிந்த பிச்சுவாவையும் ஒரு காகிதத்தையும் எடுத்துக்கொண்டு நற்குணம் இல்லத்திற்கு கோபால் வந்து சேர்ந்தான். நற்குணம் தன் நண்பர் ட்ரூ [Drew] என்னும் வெள்ளையரையும் கூட்டிக்கொண்டு லட்சுமிகாந்தன் சென்ற ரிக்‌ஷாவை தொடர்ந்து தானும் வேப்பேரி காவல் நிலையம் சென்றார். அங்கே சப்இன்ஸ்பெக்டர் எஸ்.இ. கிருஷ்ணன் நம்பியார் ஒரு காகிதத்தை கொடுத்து புகார் எழுதித் தரச்சொன்னார். லட்சுமிகாந்தனால் எழுத முடியவில்லை. ஆகவே லட்சுமிகாந்தன் ஆங்கிலத்தில் சொன்னதை நம்பியாரே எழுதிக்கொண்டு அதை லட்சுமிகாந்தனுக்கு வாசித்துக்காட்டி ஒப்புதல் பெற்று கையொப்பம் பெற்றுக் கொண்டார். அந்தப் புகாரில் லட்சுமிகாந்தன் வடிவேலு மற்றும் இன்னொருவன் தன்னை தாக்கியதாகவும், அதில் ஜானகி என்பவள் உடந்தை என்றும் சொல்லியிருந்தான்.

இதன்பின் அரசு பொதுமருத்துவமனையில் டாக்டர் ஏ.கே. ஜோசப் என்பவர் லட்சுமிகாந்தனை சோதனை செய்து மெல்லிய காயம் என்பதனால் புறநோயாளியாக எடுத்துக்கொண்டார். ஆனால் லட்சுமிகாந்தன் வலி இருக்கிறது என்று சொன்னதனால் மேலும் சிகிச்சைக்கு ஆணையிட்டார். டாக்டர் பி.ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் டாக்சர் நட்கர்னி மங்கேஷ் ராவ் ஆகியோர் அவனுக்கு சிகிச்சை அளித்தனர்.லட்சுமிகாந்தனின் சிறுநீரகம் செயலற்றதனால் 09-11-1944 அன்று அதிகாலை 4.15க்கு அவன் உயிர் பிரிந்தது. உடற்கூறாய்வை டாக்டர் ஏ. ஸ்ரீனிவாசலு நடத்தினார்.

லாட்சுமிகாந்தன் வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் கேசவ மேனனிடம் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. வடிவேலு கைதுசெய்யப்பட்டார். ராமலிங்கம், ராஜரத்தினம், ராஜகோபால் ஆகியோர் அன்று வடிவேலுவுடன் இருந்தார்கள் என்பதனால் கைதுசெய்யப்பட்டார்கள். நாகலிங்கம் சில நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டான்.

கொலைவழக்கின் விரிவு

எம்.கே.தியாகராஜ பாகவதர்

லட்சுமிகாந்தன் மீதான முதல் தாக்குதலின் பின்னணி இதுதான். லட்சுமிகாந்தன் தன் வீட்டின் முன்பகுதியை ஜானகி அம்மாள் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தான். அதை காலிசெய்யும்படி கேட்டபோது ஜானகி அம்மாள் மறுத்துவிட்டாள். நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கியும்கூட ஜானகி அம்மாள் காலி செய்யவில்லை. இதனால் கோபம் அடைந்த லட்சுமிகாந்தன் ஜானகி அம்மாளைப் பற்றியும் அவளுடைய மைத்துனன் வடிவேலுவைப் பற்றியும் இந்துநேசனில் அவதூறு எழுதினான். ஆகவே வடிவேலு தன்னைத் தாக்கியதாக 28-10-194 அன்று வெளிவந்த இந்துநேசனில் எழுதினான். 8-11-1944 அன்று அவன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக இருந்த புகார் ஜானகி அம்மாள், வடிவேலு இருவரைப் பற்றியும்தான். அதைத்தான் லட்சுமிகாந்தன் தன் புகாரில் சொல்லியிருந்தான்.

லட்சுமிகாந்தன் தனக்கு மெய்க்காப்பாளனாக ஆரியவீர சீனன் என்னும் குத்துச்சண்டை வீரனை வைத்திருந்தான். ஏ.கே. ராமண்ணா என்பவன் ஆரியவீர சீனனின் நண்பன். அவன் திரைத்துறையில் நுழைய முயன்றுகொண்டிருந்தான். தனக்கு சினிமா தூது இதழிலாவது வாய்ப்பு வாங்கி தரும்படி அவன் ஆரியவீர சீனனிடம் கோரி வந்தான். 8-1-1944 அன்று லட்சுமிகாந்தன் தாக்கப்பட்டபோது அதற்கு மறுநாள் 9-11-1944 அன்று ராமண்ணா தன் நண்பன் வி.எஸ். மணி அய்யர் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் “நேற்று காலை 10 30 மணி அளவில் வக்கீல் சி.என்.எல் நற்குணம் வீட்டிலிருந்து திரும்புகையில் மேடக்ஸ் தெருவில் மிகக் கொடூரமாக பிச்சுவாவினால் மூன்று இடங்களில் குத்தப்பட்டான். இதனால் அவன் இன்று காலை 4 மணி அளவில் இறந்துவிட்டான். ஒரு ஆசாமியால் லட்சுமிகாந்தன் தாக்கப்பட்டான் நேற்றுக்காலையில் 11 மணிக்கு – என்பவன் என்னிடம் வந்து லட்சுமிகாந்தனை நான் தொலைத்துக் கட்டிவிட்டேன் என்றும் இதை எந்த பத்திரிகையிலும் எழுதவேண்டாம் என்றும் சொன்னான் மற்றவை நேரில்” என எழுதியிருந்தான்.

இந்த கடிததித்தின் அடிப்படையிலேயே இது திட்டமிட்ட சதியால் நிகழ்ந்த கொலை என்று காவல்துறை முடிவு கட்டியது. ஏ.கே. ராமண்ணா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தங்கள் மீதான அவதூறுகளால் சினம் அடைந்து திட்டமிட்டு லட்சுமிகாந்தனை கொலை செய்தனர் என்றும் அதற்காக வடிவேலு, நாகலிங்கம், ஆரியவீர சீனன் ஆகியோரை அமர்த்திக் கொண்டனர் என்றும் வழக்கு தொடுக்கப்பட்டது.

சிவகவி படத்தின் இயக்குநரான ஸ்ரீராமுலு நாயுடு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டதற்கு காரணமாக அமைந்தவன் கமலநாதன் என்பவன். இவன் லட்சுமிகாந்தனுக்கு உறவினன். இந்துநேசனில் பணியாற்றியபோது பணமோசடி செய்தமையால் லட்சுமிகாந்தனால் வெளியேற்றப்பட்டான். சமரசம் என்னும் இதழில் வேலை பார்த்தான். அப்போது பாகவதரைச் சந்திக்க முயன்றான். போலீஸாரிடம் கமலநாதன் அளித்த வாக்குமூலத்தில் 19-10-1944 அன்று லட்சுமிகாந்தன் தாக்கப்பட்ட பின் அவன் ஸ்ரீராமுலு நாயுடு , என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரைச் சந்தித்தான் என்றும் அப்போது அவர்கள் லட்சுமிகாந்தனை தப்பவிடாமல் கொலை செய்யும்படி ஆணையிடுவதை காதால் கேட்டான் என்றும் குறிப்பிட்டான்.

இவ்வழக்கில் இன்னொரு முக்கியமான சாட்சி ஜெயானந்தன். சூசை என்னும் மீனவரின் மகன். இவன் தங்கை கிளாரா. பின்னாளில் இவர் மாதுரிதேவி என்ற பெயரில் நடிகையாகி புகழ் பெற்றார். ஜெயானந்தனையும் மாதுரி தேவியையும் பற்றி தரக்குறைவாக லட்சுமிகாந்தன் எழுதியமையால் அவனைக் கொல்ல ஜெயானந்தன் எண்ணியதாகவும் அப்போது அவனுக்கு தாங்கள் உதவி செய்வதாக எம்.கே. தியாகராஜ பாகவதர் உள்ளிட்டோர் சொன்னதாகவும் அவன் வாக்குமூலம் அளித்தான்.

ஜெயானந்தனின் வாக்குமூலம் இது. 7 -11 -19 44 அன்று நாகலிங்கம் தன்னை சந்தித்தான். லட்சுமிகாந்தனை தீர்த்துக் கட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் இதற்கு பாகவதரும் கிருஷ்ணனும் பண உதவி செய்வதாகவும் சொன்னான். இதற்காக ஒரு பூங்காவிற்கு அனைவரையும் அழைத்தான். “மூர் மார்க்கெட்டுக்கு போனபோது நானும் நாகலிங்கமும் அங்கு இருந்த ராஜபாதர் என்பவரையும், வடிவேலு, ஆரியவீர சீனன், கமலநாதன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரையும் சந்தித்தோம். அதன்ப பின்னர் வால்டாக்ஸ் டோட்டில் இருந்த ஒற்றைவாடை தியேட்டருக்குச் சென்றோம். கமலநாதன் மற்றவகளை வெளியே நிற்கும்படி சொன்னான். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தில் இருபுறமும் கிருதாவுடன் கூடிய ஒரு நபர் வந்தார். ஆறுமுகம் வெளியே இருந்தான். வடிவேலு நடைபாதையில் ஒரு காபி ஓட்டலில் இருந்தான். மற்றவர்கள் எல்லாரும் தியேட்டருக்குள் சென்றோம். அங்கே பாகவதரும் கிருஷ்ணனும் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய் பெயர் எந்த நிலையிலும் வெளியே வந்துவிடக்கூடாது என்று சொல்லிவிட்டு இந்தக் கொலைக்காக தலா 2500 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். என்.எஸ். கிருஷ்ணன் 500 ரூபாய் அளித்துவிட்டு வேலை முடிந்த பின் மிச்சத்தைத் தருவதாகச் சொன்னார். அங்கிருந்து அருகில் இருந்த மக்கள் பூங்காவுக்குச் சென்று அங்கிருந்த வடிவேலு ஆறுமுகம் இருவரையும் சந்தித்து பணத்தை பங்கிட்டுக்கொண்டோம்” இந்த வாக்குமூலமே பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை வழக்கில் சிக்க வைத்த முதன்மைச் சான்றாக அமைந்தது.

இதன்பின் கொலையை எப்படி கூட்டாகச் செய்தோம் என்று ஜெயானந்தன் வாக்குமூலம் அளித்தான் கொலைநடந்த அன்று நாகலிங்கம் தன் வீட்டுக்கு வந்து தன்னை கூட்டிக்கொண்டு பெரம்பூர் பேரக்ஸ் சோட்டுக்கு சென்று அங்கிருந்த ராஜாபாதர், சீனன் மற்றும் ஆறுமுகம் ஆகியவர்களை சேர்த்துக் கொண்டான். அங்கிருந்து சென்று லட்சுமிகாந்தன் வீட்டைக் கண்காணித்தனர். அவர்கள் ஒரு டீக்கடையில் காத்திருந்தனர். ஆறுமுகம் வந்து தயாராக இருக்குமப்டி கூறினான். லட்சுமிகாந்தன் ரிக்‌ஷாவில் செல்வதை அவன் சுட்டிக்காட்டினான். அவர்கள் ரிக்ஷாவை பின்தொடர்ந்தனர். லட்சுமிகாந்தன் நற்குணத்தின் வீட்டுக்குள் சென்றான். ஜெயானந்தன், ராஜாபாதர்,ந் ஆகலிங்கம் மூவரும் நற்குணத்தின் வீட்டின் முன் நின்றனர். சற்று நேரம் கழித்து வக்கீல் வீட்டில் இருந்து லட்சுமிகாந்தன் வெளியே வந்தான். நாகலிங்கமும் வடிவேலுவும் அவனை பின் தொடர்ந்து சென்றனர். சற்றுநேரத்தில் நாகலிங்கம் வந்து ஜெயானந்தனை அங்கிருந்து ஓடிவிடும்படியும், லட்சுமிகாந்தன் குத்தப்பட்டான் என்பதையும் சைகையால் தெரிவித்தான். மறு நாள் வடிவேலு இறந்த செய்தி ஜெயானந்தனுக்குத் தெரிந்தது.

ஜெயானந்தன் இந்த வாக்குமூலத்தை 22-12-1944 அன்று முதல்நிலை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வழங்கினான். இந்த வாக்குமூலத்தில் இருந்து பின்வாங்கினால் தண்டனை உண்டு என்று மாஜிஸ்ட்ரேட் சொன்னபோதும் உறுதியாக வாக்குமூலம் அளித்தான். ஆனால் முதலில் அவன் வாக்குமூலம் அளிக்க மறுத்ததாகவும் ஆனால் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டதாகவும் சொன்னான்.

இவ்வழக்கில் பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கவர்னர்னரிடம் 1944 ஜனவரி மாதம் லட்சுமிகாந்தன் மேல் நடவடிக்கை எடுக்கும்படிக் கோரி அளித்த மனுவே அவர்களுக்கு எதிரான சான்றாகியது. லட்சுமிகாந்தனைக் கொல்ல அவர்களுக்கு வலுவான காரணம் இருப்பதற்கான ஆதாரமாக அது வழக்கறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கைதுகளும் விசாரணையும்

27-12-1944 அன்று என்.எஸ். கிருஷ்ணன் கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டுடியோவில் கைதுசெய்யப்பட்டார். ப்ளூ மௌண்டன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டார். அதேநாளில் பாகவதர் சென்னையில் உதயணன் வாசவதத்தை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். என்.எஸ். கிருஷ்ணனின் இல்லத்தில் அம்பாசமுத்திரத்திலிருந்து கணபதி முதலியார் என்பவர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு எழுதிய ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில் அவரும் பாகவதரும் சேர்ந்து அக்கொலையைச் செய்துவிட்டதாகவும், காவலர் தேடிவருவதாகவும், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதுவும் வழக்கில் முக்கியமான சான்றாக ஆகியது.

எம்.கே.தியாகராஜ பாகவதர் கைதானபின் இரண்டு நாட்கள் கழித்து 29-12-1944 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பாகவத்ருக்காக நியூஜெண்ட் கிராண்ட் என்னும் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஆஜரானார். என்.எஸ்.கிருஷ்ணனுக்காக வி.எல். எதிராஜ் ஆரஜானார். வழக்கு முடியும் வரை சென்னையில் இருக்கவேண்டும் என்னும் நிபந்தனையுடன் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. 5-1-45 அன்று ஸ்ரீராமுலு நாயு,டு ஜாமீனுக்காக விண்ணப்பித்தார். அது நிராகரிக்கப்பட்டது. வடிவேலு, ஆரியவீர சீனன், ராஜாபாதர், ஆறுமுகம், நாகலிங்கம், ராஜரத்தினம், ராமலிங்கம், ராஜகோபால் ஆகியோர் நீதிமன்றத்தில் 16-1-1945 அன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 27-1-1945 அன்று அறுவருக்கும் எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ராமலிங்கம், ராஜகோபால், ராஜரத்தினம் மூவரும் குற்றத்துடன் நேரடியாக தொடர்புறுத்தும் சான்றுகள் இல்லை என்பதனால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு மனு போட்டது. அதை ஏற்று 12-2-1945 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பையர்ஸ் ஜாமீனை ரத்து செய்து ஆணையிட்டார். பாகவதருக்காக வி.வி. ஸ்ரீனிவாச அய்யங்கார் ஆஜரானார். 19-2-1945 அன்று எழும்பூர் தலைமை மாகாண கூறவியல் நடுவர் முன் விசாரணை தொடங்கியது. எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயிடு ஆகியோர் தவிர எம்.வடிவேலு, ஏ.நாகலிங்கம், ஆரியவீர சீனன், ஆர். ராஜபாதர், ஆறுமுகம் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் எட்டு பேர். நடுவர் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எந்த சாட்சியங்களும் விசாரிக்கப்படவில்லை. நடுவர் முன் விசாரணை முடிந்த பின் செஷன்ஸ் விசாரணைக்கு அடிபப்டை இருப்பதாகக் கருதி வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வியர் மாக்கெட் என்னும் நீதிபதியின் முன்னிலையில் 9 பேர் கொண்ட ஜூரிகளின் அவையில் வழக்கு நடைபெற்றது. 2-4-1945 அன்று தொடங்கிய வழக்கு 3-5-1945 அன்று முடிவுற்றது. அரசுத்தரப்பில் பி.வி. ராஜமன்னார் வழக்கை நடத்தினார். குற்றவாளிகளுக்காக ரோலண்ட் பிராடல், கே.எம். முன்ஷி, வி.டி. ரங்கசாமி ஐயங்கார், வி.என். சாமா உட்பட பல வழக்கறிஞர்கள் வாதிட்டனர். லட்சுமிகாந்தனின் வக்கீலான நற்குணம், ரிக்‌ஷாக்காரனாகிய கோபால், சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நம்பியார், ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆகியோர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். முதன்மை சாட்சிகளான ஜெயானந்தன், கமலநாதன், ராமண்ணா போன்றவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

இவ்விசாரணையின்போது ஜெயானந்தன் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் தன்னிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டது என்றும் சொல்லிவிட்டான். வழக்கின் முதன்மைச் சாட்சியே பிறழ்சாட்சியாக ஆன பின்னரும்க கூட ஜெயானந்தனின் நேர்மை ஐயத்துக்கிடமானது என்று நிறுவிய அரசுத்தரப்பு வழக்கறிஞர் அவன் முதலில் அளித்த வாக்குமூலத்தையே ஜூரிகள் ஏற்கும்படிச் செய்தார். ஜெயானந்தனை எவ்வகையிலும் கட்டாயப்படுத்தவில்லை என்று இன்ஸ்பெக்டர் கேசவ மேனன் சாட்சியம் அளித்தார்.

கமலநாதன் குறிப்பிட்டபடி குற்றவாளிகளை அவன் பார்த்த அந்த நாளில் தான் சென்னையிலேயே இல்லை என்று ஸ்ரீராமுலு நாயிடு வாதிட்டார். 25-10-1944 முதல் 2-11-1944 வரை அவர் மும்பையில் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்தமைக்காகச் சொல்லி அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீராமுலு நாயிடு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

என்.எஸ். கிருஷ்ணன் அவர் சதிசெய்ததாகச் சொல்லப்பட்ட அன்று சேலத்தில் இருந்ததாகச் சொன்னார். 7-11-1944 மற்றும் 8-11-1944 தேதிகளில் கிருஷ்ணன் சேலத்தில் பாத்ததாக பல சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. அன்று கிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்ட பதிவுத்தபாலை அளித்த தபால்காரர் சான்றளித்தார். திருவேங்கடம் என்னும் தொலைபேசி ஊழியர் அன்று கிருஷ்ணனுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும் அவர் அழைத்து இணைப்பளித்ததாகவும் சான்று கூறுக்னார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஊழியர் இருவரும் சாட்சி சொன்னார்கள்.

தீர்ப்பு

ஜூரிகளுக்கு முன்பாக நீதிபதி வியர் மாக்கெட் சில வினாக்களை முன்வைத்தார். ஜெயானந்தன் நம்பத் தக்கவனா, அவனுடைய வாக்குமூலங்களில் உள்ள முரண்பாட்டை எப்படி எடுத்துக்கொள்வது? என்.எஸ். கிருஷ்ணன் அன்று சேலத்தில் இருந்தார் என்பதற்கான சான்றுகள் நம்பத் தக்கவையா, அந்தக் கடிதத்தை அவருக்கு அளித்தவர் ஏன் விசாரிக்கப்படவில்லை? இவ்வினாக்களை கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்கும்படி நீதிபதி ஜூரிகளை கோரினார். 3-5-1945 அன்று மாலை 7.40க்கு ஜூரிகள் தங்கள் தீர்ப்பை அறிவித்தனர். ஆறுமுகம் என்பவரை தவிர அனைவருமே குற்றவாளிகள் என்று அவர்கள் கருதினர்.

பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் நேரடியாக வழக்குடன் தொடர்புபடுத்திய சாட்சிகள் இருவர். கமலநாதனின் சாட்சியம் பொய் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ஜெயானந்தன் தன் சாட்சியத்தை மாற்றிக் கொண்டாலும் அவன் நேர்மையற்றவன் என்பதனால் மாஜிஸ்ட்ரேட் முன் அவன் அளித்த முதல் வாக்குமூலமே உண்மை என்று கொள்ளப்பட்டது. என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஆதரவாகச் சாட்சியமளித்தவர்கள் அவருடைய நிறுவன ஊழியர்கள், ஆகவே அவர்களின் சாட்சியங்கள் நம்பகமானவை அல்ல என்று கொள்ளப்பட்டது.

நீதிபதி வியர் மாக்கெட் ஆறுமுகம் தவிர ஐந்துபேருக்கும் ஆயுள்த ண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.

வழக்கின் மீதான ஐயங்கள்

லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் முதன்மை ஐயமே ஜெயானந்தன் ஏன் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரை வழக்கில் தொடர்புபடுத்தி சாட்சியம் அளித்தான் என்பதுதான். அவன் அந்த வாக்குமூலம் காவல்துறை கட்டாயத்தின் பேரில் தன்னிடமிருந்து பெறப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் சொன்னான். இருந்தும் அவன் அளித்த வாக்குமூலமே முதன்மைச் சான்றாக கொள்ளப்பட்டது. எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் இவ்வழக்கில் தொடர்புபடுத்தப்பட இருந்த ஒரே சாட்சி அதுதான். அந்த சாட்சியத்தின் நம்பகத்தன்மை என்ன? போலீஸ் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவரையும் வழக்கில் சேர்க்கும் பொருட்டு ஜெயானந்தனை சாட்சியாக ஆக்கியதா? அந்த வாக்குமூலம் காவல்துறையால் உருவாக்கப்பட்டதா? அவ்வாறென்றால் காவலர்களின் நோக்கம் என்ன? இவ்வழக்கில் காவலர்கள் வேறு சிலருடைய ஆணைப்படிச் செயல்பட்டார்களா? எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவருக்கும் அவ்வாறு ஆற்றல் மிக்க எதிரிகள் இருந்தார்களா?

ஜெயானந்தன் நேர்மையற்றவன் என்று நீதிபதியும் ஜூரிகளும் கருதினர். ஆனால் வாக்குமூலத்தை மாற்றிச் சொன்னது தவிர அவனுடைய நடத்தையில் வேறு எந்த நேர்மையின்மையும் சுட்டிக் காட்டப்படவில்லை. ஜெயானந்தன் காவலர்களை அஞ்சியே அவ்வண்ணம் வாக்குமூலம் அளித்ததாகவும், உண்மையைச் சொல்லும்பொருட்டு பின்னர் மாற்றிச் சொல்வதாகவும் நீதிமன்றத்தில் தெளிவுறச் சொல்லவும் செய்தான். இன்னொரு சாட்சியான கமலநாதனின் வாக்குமூலம் முழுக்க காவல்துறையால் சொல்லவைக்கப்பட்ட பொய்கள் என அரசுத்தரப்பு வழக்கறிஞரே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஸ்ரீராமுலு நாயுடுவை விடுதலை செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டது.அப்படி இருக்க ஜெயானந்தனின் வாக்குமூலம் மட்டும் காவலர்களின் கட்டாயம் இன்றி தானாகவே அளிக்கப்பட்டது என எப்படி நம்ப முடியும்?

என்.எஸ்.கிருஷ்ணனுக்கு சென்னையில் இருந்து சேலத்துக்கு கடிதம் எழுதியவர் விசாரிக்கப்படாமையால் அந்தக் கடிதம் அளிக்கப்பட்டதைப் பற்றிய தபால்காரரின் சாட்சியம் கருத்தில்கொள்ளப்படவில்லை. ஆனால் என்.எஸ். கிருஷ்ணனுக்கு அம்பாசமுத்திரத்தில் இருந்து கடிதம் எழுதியவர் விசாரிக்கப்படவில்லை. அவர் என்.எஸ். கிருஷ்ணனும் எம்.கே. தியாகராஜ பாகவதர்ரும் கொலை செய்தார்கள் என்று அக்கடிதத்தில் சொன்னது சாட்சியமாகக் கொள்ளவும்பட்டது. அரசுத் தரப்பின் மிகப் பெரிய குளறுபடி இது. அதை குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் எப்படி கோட்டை விட்டனர்?

குற்றவாளிகளின் தரப்பில் நிகழ்ந்த இன்னொரு குளறுபடி அவர் சேலத்தில் இருந்தமைக்கான சான்றுகள் எதையும் நடுவர் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை. அவற்றை உயர்நீதிமன்றத்திலேயே முன்வைத்தார். ஆகவே அவை இடைக்காலத்தில் உண்டு பண்ணப்பட்ட போலிச் சான்றுகள் என்பதை அரசுத்தரப்பு வழக்கறிஞர் திரும்பத் திரும்பச் சொல்லி நிலைநாட்டினார். சட்டப்படி நடுவர் நீதிமன்றத்தில் முன் வைக்கப்படாத புதிய சான்று ஒன்றை உயர்நீதிமன்றத்தில் வைப்பதில் பிழை இல்லை. என்.எஸ். கிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் அதை வேண்டுமென்றே செய்யாமல் விட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வழக்கு உயர்நீதிமன்றம் சென்றால் கூடுதல் பணமும் புகழும் கிடைக்கும் என்றும், உயர்நீதிமன்றத்தில் அச்சான்றை முன் வைக்கலாம் என்றும் அவர்கள் எண்ணியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

எம்.கே. தியாகராஜ பாகவதர் எல்லா நாட்களிலும் படப்பிடிப்பு அல்லது இசை நிகழ்ச்சிகள் அல்லது சந்திப்புகள் கொண்டவர். அவருடைய அன்றைய நாள் செயல்பாடுகளை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன்ம முன்வைத்து அவர் அங்கில்லை என நிறுவியிருக்கலாம். அதை ஏன் குற்றம்ச சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் செய்யவில்லை என்பதும் ஐயம் அளிப்பதுதான். எம்.கே. தியாகராஜ பாகவதரை வழக்குடன் இணைக்கும் சாட்சியங்களில் ஒன்று பொய் என்றாகி அதன் அடிப்படையில் சதி செய்தவர்களில் ஒருவர் என்று சொல்லப்பட்ட ஸ்ரீராமுலு நாயுடு விடுதலை ஆனார். அவ்வண்ணம் பார்த்தால் சதி செய்யப்பட்டது என்பதே பொய் என ஆகிறது. எனில் ஏன் பாகவதர் எப்படி தண்டிக்கப்பட்டார்?

இந்த வழக்கில் ஜூரிகளின் காழ்ப்பே எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் தண்டிக்கப்படக் காரணம் என பரவலாகக் கருதப்படுகிறது. பின்னாளைய வழக்கறிஞர்கள் பலர் அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் வி.சி. கோபால்ரத்னம் ‘இது காழ்ப்புணர்ச்சியால் தீர்மானிக்கப்பட்ட ஜூரியின் தீர்ப்பு’ என்று சொன்னதாக டி.வி. பாலகிருஷ்ணன் எழுதிய எம்.கே.டி.பாகவதர் இசையும் வாழ்க்கையும் நூலில் மேற்கோள் காட்டப்படுகிறது.

உண்மையில் லட்சுமிகாந்தனைக் கொன்றவர்கள் யார் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. 28-10-1944 தேதியிட்ட இந்துநேசன் இதழில் போட்மெயில் ரயிலில் நடந்த ஒரு கொலையில் செட்டிநாட்டைச் சேர்ந்த ஒரு செல்வந்தர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றும், அதற்கு அவருடன் சென்ற நடிகை சாட்சி என்றும் லட்சுமிகாந்தன் எழுதியிருந்தான். அதுதான் கொலைக்குக் காரணம் என்னும் வதந்தி உண்டு. ஆனால் கொலை நடந்த விதத்தைக் கொண்டு பார்த்தால் அது வெறும் வாய்ச்சண்டையில் நிகழ்ந்த கைகலப்பின் விளைவாக செய்யப்பட்ட சிறிய தாக்குதல்தான் என்று தெரிகிறது. லட்சுமிகாந்தன் இறந்தது தற்செயல்தான். திட்டமிட்ட கொலை என்றால் இத்தனை மெல்லிய காயங்கள் நிகழ வாய்ப்பில்லை. கொலை செய்தவர்கள் கொலை செய்யும் வழக்கம் கொண்டவர்களும் அல்ல.

ஒரு சாதாரண தாக்குதல்; தாக்கப்பட்டவர் எதிர்பாராதபடி இறந்ததனால் கொலையாக ஆகி அதில் எவரோ எதனாலோ எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டவர்களை இணைத்து தண்டனை வாங்கித் தந்தனர் என்றுதான் இதை ஆராய்ந்த வெவ்வேறு வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். எம்.கே.தியாகராஜ பாகவதர் பற்றிய வாழ்க்கை வரலாறுகளை எழுதிய டி.வி. பாலகிருஷ்ணன், லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பற்றி எழுதிய ராண்டார் கை ஆகியோர் இந்த ஐயங்களை எழுதியிருக்கிறார்கள்.

சிறை வாழ்க்கையும் மேல்முறையீடுகளும்

எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் சென்னையில் சிறையில் பி வகுப்பில் அடைக்கப்பட்டனர். அவர்கள் செய்த மேல்முறையீடு அக்டோபர் 1945ல் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. என்.எஸ். கிருஷ்ணனும் எம்.கே.தியாகராஜ பாகவதரும் வழக்குக்காக ஏராளமாகச் செலவு செய்துவிட்டிருந்தனர். லண்டன் பிரிவி கௌன்ஸிலுக்கு மேல்முறையீடு செய்ய ஏராளமாகப் பணம் தேவைப்பட்டது. அவர்களின் ஆதரவாளர்கள் அதற்காக நிதி திரட்டினர். மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அவர்கள் அளித்த மனு 1945 டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரிவி கௌன்ஸிலுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு பிரிவி கௌன்ஸிலுக்கே மனு செய்வது ஒன்றே எஞ்சியிருந்த வழி.

சிறையில் எம்.கே.தியாகராஜ பாகவதர் என்.எஸ்.கிருஷ்ணன் இருவருக்கும் ஏ வகுப்பு கோரி அளிக்கப்பட்ட மனு உள்துறை அமைச்சகரத்தால் நிராகரிக்கப்பட்டது. 1946ல் பிரிவி கௌன்சிலுக்கு மேல்முறையீடு செய்யும் மனுவை ஏற்று அனுமதி அளித்தது பிரிவி கௌன்சில். 1947 பிப்ரவரியில் பிரிவி கௌன்சிலில் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவருக்காகவும் டி.என். பிரிட் ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்றம் 1945ல் தள்ளுபடி செய்த மேல்முறையீட்டை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பிரிவி கௌன்ஸில் ஆணையிட்டது.

21-4-1947, 22-4-1947 தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு தள்ளுபடி செய்த மேல்முறையீட்டை மீண்டும் விசாரித்தது இந்த மேல்முறையீட்டில் வி.எல்.எதிராஜ் என்.எஸ்.கிருஷ்ணன் எம்.கே.தியாகராஜ பாகவதர் இருவருக்காகவும் ஆஜரானார். வி.டி. ரங்கசாமி அய்யங்காரும் இணைந்து ஆஜரானார். அட்வகேட் ஜெனரல் கே. ராஜா அய்யர் அரசுத் தரப்பில் ஆஜரானார். எதிராஜ் ஜெயானந்தன் நம்பத் தகாதவன் என்ற நீதிபதியின் கருத்தையே தன் வாதத்திற்கு ஆதாரமாகக் கொண்டார். நம்பத் தகாத ஒருவனின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒருவனை தண்டிக்கலாமா என்று வாதாடினார். லட்சுமிகாந்தனின் புகாரில் பாகவதர்,என்.எஸ்.கிருஷ்ணன் இருவர் பெயரும் இல்லை என்னும் நிலையில் அவர்களை வழக்கில் தொடர்புபடுத்த முகாந்திரமே இல்லை என்றும், வழக்கின்பொருட்டு லட்சுமிகாந்தன் எழுதி அளித்த புகார் மனு திரிக்கப்பட்டிருக்கிறது என்றும் வாதிட்டார்.

வி.டி. ரங்கசாமி அய்யங்கார் மாடர்ன் தியேட்டர்ஸ் ஊழியர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டு வெள்ளையர், அவருக்கு என்.எஸ். கிருஷ்ணனிடம் எந்த தொடர்பும் இல்லை, அவருடைய சாட்சியம் நிராகரிக்கத் தக்கது அல்ல என்று வாதிட்டார். அரசுத் தரப்பில் ராமண்ணாவின் கடிதம் முக்கியமான சாட்சியம், அது எந்த நோக்கமும் இல்லாமல் எழுதப்பட்டதாகையால் முக்கியமானதாகிறது என்று சொல்லப்பட்டது.

நீதிபதிகள் ஹாப்பலும் ஷஹபுதீனும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் ஒருமித்த முடிவுக்கு வந்தனர். 1947 ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயானந்தனின் வாக்குமூலம் நம்பத் தக்கது அல்ல, அதை மேலதிகமாக உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லாத நிலையில் அதை மட்டும் கொண்டே ஒருவரை தண்டிக்க முடியாது என்று அவர்கள் கூறினர். அதன் அடிப்படையில் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரையும் தண்டித்தது செல்லாது என்று சொல்லி அவர்கள் இருவரையும் விடுவித்தனர்.


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.