under review

யோகி

From Tamil Wiki
யோகி

யோகி (பிறப்பு: ஜனவரி 4,1981) மலேசிய எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளராக அறியப்படுபவர்.

பிறப்பு, கல்வி

யோகியின் இயற்பெயர் யோகேஸ்வரி. இவர் ஜனவரி, 4, 1981-ல் மலேசியாவின் பேராக் தெலுக் இந்தானில் பிறந்தார். பெற்றோர் பெரியசாமி, நாகம்மாள். நாகம்மாள் 1982-ல் இறந்த பிறகு அவரின் அக்காள் அஞ்சலையை பெரியசாமி 1985-ல் மணந்துகொண்டார். யோகியின் உடன்பிறப்புகள் அண்ணன் மணிவண்ணன், தங்கைகள் திலகா, ரேவதி. யோகி தொடக்கக் கல்வியை 1988 முதல் 1993 வரை, ஆறாண்டுகள் சிங்பாங் அம்பாட் ஊத்தான் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளியில் கற்றார். 1994 முதல் 1999 வரை சிங்பாங் அம்பாட் ஊத்தான் மெலிந்தாங் இடைநிலைப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார்.

தனி வாழ்க்கை

யோகி தன் தந்தையார் காலமான பிறகு தலைநகர் வந்தார். கிடைத்த வேலைகளையெல்லாம் செய்தார். 2012 முதல் 2017 வரை ‘நம் நாடு’ மற்றும் ‘தினக்குரல்’ நாளிதழ் செய்தி ஊடகங்களில் தலைமை நிருபராகவும், செய்தி ஆசிரியராகவும், ஞாயிறு பதிப்பு ஆசிரியராகவும் பணியாற்றினார். 2019 நவம்பர் முதல் 2023 வரை மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.

யோகி செப்டம்பர் 24, 2007-ல் ஓவியர் சந்துருவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

யோகியின் இலக்கிய ஆர்வம் அவரது தாத்தா பெருமாள் வாத்தியாரின் அணுக்கத்தால் அமைந்தது. இளம் வயதுமுதல் நாளிதழ்களும் நூல்களும் வாசிக்கப் பழகினார். இடைநிலைப் பள்ளியில், மலாய், ஆங்கில மொழிகளைக் காட்டிலும், தமிழ்மொழியில் அதிகமாக வாசிக்கவும் எழுதவும் தொடங்கினார். அவர் எழுதிய தமிழ்க்கட்டுரைகள் பள்ளியில் பாராட்டைப் பெற்றன.

தலைநகருக்குக் குடிபெயர்ந்த பிறகு 2005 முதல் நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் கவிதை, கட்டுரைகள் எழுதினார். 'மன்னன்' மாத இதழில் நிருபராகவும் இருந்தார். 2005-ம் ஆண்டு எம். துரைராஜ் அவர்களிடம் நிருபருக்கான அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றார்.

யோகி 2005-ல் மலேசியாவில் தொடங்கப்பட்ட 'காதல்' சிற்றிதழின் வழி நவீன கவிதைகள் எழுதத் தொடங்கினார். 2006 முதல் 2016 வரை வல்லினத்தில் கவிதை, பத்தி, கட்டுரைகள் என தொடர்ந்து பங்களித்து அக்குழுவின் செயல்பாடுகளிலும் இணைந்து பணியாற்றினார். 2006-ல் மலேசிய நவீன இலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு யோகியின் பத்திகள் குறிப்பிட்ட பங்கை வகித்தன. 'துடைக்கப்படாத ரத்தக் கறைகள்' எனும் தலைப்பில் நூலாக்கம் கண்ட அக்கட்டுரைகள் பரந்த கவனத்தைப் பெற்றன.

பிற ஈடுபாடுகள்

யோகி புகைப்படக்கலையிலும், பயணங்கள் செய்வதிலும் ஆர்வம் கொண்டவர். அவருடைய முதல் புகைப்படக் கண்காட்சி 2019-ல் சிங்கப்பூரில் நடந்த அனைத்துலக ஊடறு பெண்கள் சந்திப்பில் ஓர் அங்கமாக நடத்தப்பட்டது.

பதிப்புத்துறை

யோகி, கூகை பதிப்பகத்தை 2018-ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். இப்பதிப்பகம் வழி இலக்கிய நூல்களோடு மலேசிய இடதுசாரி வரலாறுகளையும் பதிப்பித்து வருகிறார்.

சமூக செயல்பாடுகள்

யோகி 2019 முதல் மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் பணிபுரிவதோடு அக்கட்சியின் அனைத்து திட்டங்களிலும் இணைந்து செயலாற்றுகின்றார். முக்கியமாக பூர்வக்குடிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் யோகி கூடுதல் கவனம் செலுத்திவருவதோடு, மலேசிய பூர்வக்குடிகள் சார்ந்த தன் அனுபவங்களையும் ஆய்வையும் கட்டுரைகளாக எழுதி வருகிறார்.

இயற்கைப் பேரிடர், மக்களுக்கான அவசர உதவிகள் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்திவருகின்ற 'ஆளுவோம் தமிழா' தொண்டூழிய நிறுவனத்தில் கௌரவ ஆலோசகராகவும் செயலாளராகவும் யோகி இருக்கிறார்.

2015 முதல் ஊடறு பெண்கள் அமைப்பில் இணைந்து, செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

விருதுகள்

  • 2015/16-ம் ஆண்டுக்கான சிறந்த கட்டுரைக்காக தேசிய விருது - சுற்றுலாத் துறை அமைச்சு
  • சிங்கப்பெண்ணே விருது - 2022 - கவியரசர் கலைச் சங்கம் - தமிழ்நாடு

இலக்கிய இடம்

யோகி 2000-களில் மலேசியாவில் எழுந்த நவீன எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தொடக்க காலத்தில் இவர் எழுதிய கவிதைகள் தனித்தன்மை கொண்டவை. நவீன வாழ்க்கையில், புறநகர் பகுதி சாமானியப் பெண்களின் இருப்பை தன் கட்டுரைகளில் அழுத்தமாக பதிவுசெய்தவர்.

நூல்கள்

  • துடைக்கப்படாத ரத்தக் கறைகள் ( பத்திகள் தொகுப்பு, 2012)
  • யட்சி (கவிதை தொகுப்பு, 2016)
  • பெண்களுக்கு சொற்கள் அவசியமா?( கட்டுரை தொகுப்பு, 2019)
  • எனும்போது, கவிதை தொகுப்பு
  • கோறனி நச்சில் (கட்டுரைகள், 2021)

உசாத்துணை

  • துடைக்கப்படாத ரத்தக் கறைகள் ( பத்திகள் தொகுப்பு, 2012)


✅Finalised Page