under review

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

From Tamil Wiki
Revision as of 15:24, 9 September 2022 by Santhosh (talk | contribs)
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியாவில் தமிழ் இலக்கியத்தை முன்னெடுக்கும் நோக்கோடு 1962-ல் அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு சாரா அமைப்பு. தமிழ் மொழி சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் கடந்த அறுபது ஆண்டுகளாக இவ்வமைப்பு செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.

தோற்றம்

சுப. நாராயணன் அக்டோபர் 29, 1955-ல் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்றை கோலாலம்பூரில் இயங்கி வந்த தமிழ்க்கலை மன்றம் மூலமாக நடத்தினார். கோ. சாரங்கபாணி, சீ. வி. குப்புசாமி போன்றவர்களின் ஆதரவில் இந்த மாநாடு கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில்  நடைபெற்றது. 29 எழுத்தாளர்கள் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.  ஆனால் இந்த மாநாடு திடமான திட்டங்கள் இல்லாமல் கலைந்தது.

இந்த மாநாட்டுக்குப் பிறகு மலாயா தமிழ் எழுத்தாளர்களுக்கான சங்கம் ஒன்று அமைக்கும் எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது. ஆகவே ஜூலை 5, 1958 ஆம் நாள் சி. வேலுசுவாமி மலாயா தமிழ்  எழுத்தாளர் சங்க அமைப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார். 25 எழுத்தாளர்கள் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். இக்கூட்டம் கோலாலம்பூர் பங்சார் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவராக சீ. வி. குப்புசாமியும் துணைத்தலைவராக சு. சண்முகமும்  தேர்வு செய்யப்பட்டனர். சி. வேலுசுசாமி செயலாளராகவும் மு. அப்துல் லத்தீப் பொருளாளராகவும் பொறுப்பேற்றனர்.  இவ்வமைப்பு பிப்ரவரி 2,  1959-ல் அரசு பதிவைப் பெற்றது.

மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம் தன் ஆண்டுக் கூட்டத்தை மே 31, 1959-ல் தோட்ட மாளிகை கட்டிடத்தில் நடத்தியது. ஆண்டு கூட்டத்தில் புதிய நிர்வாகம் தேர்வானது. தமிழ் நேசன் துணையாசிரியர் கனகசுந்தரம் புதிய தலைவராகவும் செ. குணசேகர் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  ஆனால் அதன் பின் மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம் முறையாக செயல்படவில்லை. ஆகவே அதன் பதிவு ரத்தாகிவிட்டது.  

மீண்டும் சி. வேலுசுவாமியின் முயற்சியில் ஒரு அமைப்புக் கூட்டம் 1962-இல் கூட்டப்பட்டது. அம்பாங் செட்டியார்கள் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் மார்ச் 31,  1962-ல்  நடந்த இக்கூட்டத்தில் 28 எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பதிவுக்கான மறுமுயற்சிகள் செய்யப்பட்டன. இச்சங்கத்துக்கு, 'மலாயா எழுத்தாளர் சங்கம், மலாயா கூட்டரசு’ என்ற பெயர் முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டது. ஜூன் 26, 1963-இல் சங்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ற புதிய பெயரில் பதிவு பெற்றது. உறுப்பினர்களுக்கு சந்தா தொகை முடிவு செய்யப்பட்டது. மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை தலைவராக பொறுப்பில் இருந்த தனிநாயக அடிகளார் முதலாவது ஆயுள் உறுப்பினராகப் பதிந்து கொண்டார்.  

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர்கள்

முருகு சுப்ரமணியன்

செயல்பாடுகளும் திட்டங்களும்

சீ.வி. குப்புசாமி

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், நீண்ட கால குறுகிய கால திட்டங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டுள்ளது.  1997-ஆம் ஆண்டுமுதல் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனக்கான சொந்த கட்டிடம் ஒன்றை கோலாம்பூர் தாமான் ஶ்ரீ கோம்பாக்கில் கொண்டுள்ளது. மேலும் பத்து கொம்பெலேக்ஸ் பகுதியில் 2010-ல் தனி பணிமனையை அமைத்துக் கொண்டு செயல்படுகின்றது.  மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அடிப்படையில் தன் உறுப்பினர்களின் நலனுக்காக  செயல்படும் ஓர் அமைப்பு. ஆயினும் அது மலேசியாவில் பொதுவாக மொழி, இலக்கியம் சார்ந்து பல திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. அவற்றில்  சில திட்டங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தாலும் சில திட்டங்கள் சொற்பகாலத்தில் தடைபட்டு நின்று விட்டன.

தமிழ் எழுத்தாளர் சங்கம், தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம், ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிலையத்துடன் இணைந்து நடத்திய நாவல் போட்டி சிறந்த விளைவுகளை ஏற்படுத்திய திட்டங்களில் ஒன்று. இப்போட்டி 2004-2012 க்கு உட்பட்ட காலத்தில் மூன்று முறை நடத்தப்பட்டது. இப்போட்டிக்காக எழுதப்பட்டு பரிசு பெற்றதோடு புத்தக வடிவம் பெற்ற நாவல்களான அ. ரெங்கசாமியின் லங்காட் நதிக்கரையில், சீ. முத்துசாமியின் மண் புழுக்கள், கே. பாலமுருகனின் நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள், கோ. புண்ணியவானின் செலாஞ்சார் அம்பாட் ஆகிய நாவல்கள் மலேசிய நாவல்களின் போக்கை பெரிதும் மாற்றியமைத்தன. ஆயினும் இப்போட்டியை தொடர்ந்து நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.     

மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் குறிப்பிடத்தக்க பிற திட்டங்கள்  

  • டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998 முதல் காலஞ்சென்ற அமைச்சர் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள் நினைவாக ஆண்டின் ஒரு சிறந்த நூலுக்கு 'தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு' என்ற பெயரில் சான்றிதழும் 5000 ரிங்கிட் ரொக்கமும் அளித்துக் கௌரவித்து வருகிறது.
  • தங்கப் பதக்கம் பரிசு: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1983 தொடங்கி எழுத்தாளர்களுக்கும் எழுத்துத் துறைக்குப் பணி புரிந்தவர்களுக்கும் ஆண்டு தோறும் தங்கப் பதக்கங்கள் வழங்கி வருகிறது. இவை மலேசியாவில் தமிழுக்குத் தொண்டாற்றி மறைந்த ஆளுமைகளின் பெயர்களில் வழங்கப்படுகின்றன. இந்தத் தங்க விருதுகள் வழங்குவதற்காக, சங்கம் தனியாக அறநிதி ஒன்றை 1981-ஆம் ஆண்டு தொடங்கி வங்கியில் வைப்புத் தொகையாக வைத்துள்ளது.  2022 நிலவரப்படி மொத்தம் எட்டு தமிழ் சான்றோர்களின் பெயரில் அந்த தங்க விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு நான்கு ஆளுமைகள் பெயரில் விருதுகள் வழங்கப் படுகின்றன. தமிழ்வேள் கோ. சாரங்கபாணி, தனிநாயக அடிகளார், எம். துரைராஜ், ஆதி குமணன் ஆகியோரின் பெயரில் ஓராண்டும், ர் முருகு சுப்ரமணியன், சீ. வி. குப்புசாமி, சா. ஆ. அன்பானந்தன், முனைவர் ரெ. கார்த்திகேசு ஆகியோரின் பெயரில் மறு ஆண்டும் விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.    
  • டான்ஶ்ரீ ஆதி. நாகப்பன் இலக்கியப் பரிசளிப்பு திட்டம்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மறைந்த பத்திரிகை ஆசிரியரும் அரசியல்வாதியும் அமைச்சருமான டான்ஸ்ரீ ஆதி. நாகப்பன் பெயரில், நாவல், சிறுகதை, கவிதை , நாடகம், கட்டுரை ஆகிய துறைகளில் சிறந்த படைப்புகளை அளித்த எழுத்தாளர்களுக்கு பண முடிப்புகள் கொடுக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விருதுகளும் நிதியும் அளிக்கப்பட்டன. இந்த முயற்சிக்கு  அவருடைய குடும்பத்தாரின் ஆதரவு பெரிதும் உதவியது. ஆனால், டான்ஶ்ரீ ஆதி. நாகப்பனின் மனைவி  புவான்ஶ்ரீ ஜானகியின் மறைவுக்குப் பிறகு அவரின் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள முடியாததால் இப்பரிசளிப்பு திட்டம் 2009 முதல் தடைபட்டுவிட்டது
  • சிறுகதை பயிலரங்குகள், சிறுகதை போட்டிகள்,  புதுக்கவிதைத் திறனாய்வு கருத்தரங்குகள், நாவல் பட்டறை, ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி  மற்றும் தோட்டத்தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய நாவல் போட்டிகள், அச்சு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை தேர்வு செய்து நூலாக்குதல் போன்ற பல செயல் திட்டங்களை எழுத்தாளர் சங்கம் முன்னெடுத்து வந்துள்ளது. தமிழ் வளர்க்கும் திட்டமாக தமிழ் நாட்டுக்கும் மொரிசியஸ் போன்ற நாடுகளுக்கும் எழுத்தாளர்களுடன் இலக்கிய சுற்றுலாக்களை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழ் நாட்டு கல்வி கழகங்கள், கல்லூரிகளோடு நட்பை வளர்த்துக் கொண்டு, மலேசிய படைப்புகளை தமிழ் நாட்டு கல்விபுலத்தில் புகுத்தி தமிழ் நாட்டு கல்வியாளர்கள், மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டது.

விருதுகள்

  • 2020 - தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ. ராஜேந்திரன், இந்தியாவுக்கு வெளியே, உலகளாவிய நிலையில் சிறந்த தமிழ்த் தொண்டு ஆற்றிய தலைவர் என்ற சிறப்பு இலக்கிய விருதை தமிழக அரசிடம் இருந்து பெற்றார்.
  • 2022- மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு, தமிழ்த் தாய் விருது தமிழ் நாட்டு அரசால் வழக்கப்பட்டது.

சர்ச்சைகள்

பெ. ராஜேந்திரன்

தொடக்கத்தில் எழுத்தாளர்களின் நலனிலும் இலக்கிய அக்கறையிலும் எழுத்தாளர் சங்கம் தொடர்ந்து ஊக்கமுடன் செயல்பட்டது, எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கை 1964 -ல் மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்தியது. ம.பொ. சிவஞானம் சங்கத்தின் அழைப்பை ஏற்று மலேசியாவில் 1964-ல் இலக்கியப் பேருரை ஆற்ற வந்துள்ளார். மேலும் பல இலக்கிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தியது. 80-களுக்குப் பிறகு அதன் இலக்கில் தடுமாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் எழுத்தாளர் சங்கம் பல சர்ச்சைகளுக்கு உட்பட்டது.

அ. அரசியல் சார்பு

அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவை வேண்டியும், பொருளாதார உறுதிபாட்டை மனதில் வைத்தும்,  அரசியல்வாதிகளின் தீவிர ஆதரவு தரப்பாக செயல்பட தொடங்கியது. இலக்கியம் என்கிற பொதுவான தளத்தில் இருந்து அரசியல்வாதிகளின் ஆதரவை முதன்மை படுத்திக் கொள்ளும் அமைப்பாக அது தொடர்ந்து செயல்பட்டது. இதனால் இலக்கிய முக்கியத்துவம் குறைந்து அரசியல்வாதிகளின் அனுமதிக்கும் இணைவுக்கும் காத்திருக்கும் நிலை உருவானது. அதோடு அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவோடுதான் இலக்கியம் செயல்பட முடியும் என்ற தவறான தோற்றத்தையும் இது எழுத்தாளர்களிடம் ஏற்படுத்தியது.

ஆ. சினிமா ஆதரவு

தமிழக திரைப்பட பாடலாசிரியர்களை கவிதைத் துறை ஆளுமைகளாக சித்தரிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சிகளை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் முன்னெடுத்தது. தனிப்பட்ட நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் இலக்கிய முக்கியத்துவம் அற்றவர்களை தமிழ் நாட்டிலிருந்து அழைத்து வாசகர்களின் இலக்கியப் புரிதலில் குழப்பங்களை ஏற்படுத்தியது.  பாடலாசிரியர் பட்டறை போன்ற நிகழ்ச்சிகள் கால பண விரயத்தை கொடுக்கக்கூடியவை என்ற விமர்சனங்கள் எழுந்தன. மலேசிய எழுத்தாளர்களுக்கு நன்மை செய்ய தொடங்கப்பட்ட சங்கம் தமிழக பாடலாசிரியர் வைரமுத்துவிடம் கொண்டிருந்த நட்பின் காரணமாக பலமுறை அவரது நூல்களுக்கு வெளியீட்டு விழா நடத்தி பணம் திரட்ட மும்முறம் காட்டியமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இ. நிபுணத்துவமற்ற நிலை
  • 2009-ல் நடைபெற்ற மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பில் அப்போதைய நடப்புத் தலைவராக இருந்த பெ. ராஜேந்திரன் தனது மனைவி இராஜம் ராஜேந்திரன் அவர்களின் 'மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்' எனும் நூலுக்கு விருது கிடைக்க அனுமதித்தது செ. சீனி நைனா முகம்மது போன்ற இலக்கிய ஆளுமைகளாலும் பெரு. அ. தமிழ்மணி போன்ற பத்திரியையாளர்களாலும் வல்லினம் இலக்கியக் குழுவாலும் கடுமையான கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டது.
  • தமிழ் எழுத்தாளர் சங்கம் அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிலையம் ஆகியவற்றுடன் நடத்திய மூன்றாவது நாவல் போட்டி(2012) முதன்மை பரிசு (ரிம10000) 'துளசி’ என்ற நாவலுக்குக் கொடுக்கப்பட்டது. எழுத்துலகில் அதுவரை அடையாளம் இல்லாத மாதுரி மனோகரன் என்பவர் இந்த விருதைப் பெற்றார். இந்த நாவலுக்குப் பின் அவர் வேறு எங்கும் எழுதுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாவல் குறித்த உரையாடல்களும் எழவில்லை. இதனால் இந்த நாவல் போட்டி பல எழுத்தாளர்களின் நம்பகத்தை இழந்தது.
  • 2013 -ஆம் ஆண்டு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நாளிதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து அதை நூலாக கொண்டுவரும் ஆண்டுத் திட்டம், காப்புரிமை விதிமுறைகளை மீறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த காப்புரிமை மீறலில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் அ.பாண்டியன், தயாஜி, கே.பாலமுருகன் போன்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வல்லினம் இதழ் தனது கண்டனங்களைப் பதிவு செய்தது. அதன் காரணமாக அந்த ஆண்டு வெளியிட தொகுக்கப்பட்ட 'பந்துவான்’ என்னும் சிறுகதை நூல் வினியோகிக்கப்படவில்லை. 2004-ஆம் ஆண்டு முதல் நாளிதழ் சிறுகதைகளை நூலாக தொகுக்கும் திட்டத்தில் சில விதிமுறை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.  
ஈ. தெளிவற்ற நிலைபாடுகள்

2021-ஆம் ஆண்டு மலேசியாவில் தைப்பொங்கலை சமய சார்பற்ற விழா என்றும் அதுவே தமிழ்ப் புத்தாண்டு என்றும் போலிப் பரப்புரை செய்யும் அமைப்புகளோடு கை கோர்ந்து, தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற பரப்புரை மாநாட்டை மலேசிய தமிழ் எழுத்தாளர்  சங்கம் முன்னின்று நடத்தி மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கியது. இது பலருக்கும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகளில் சந்தேகத்தை உண்டாக்கியது.

உ. பயனற்ற திட்டங்கள்
  • தமிழில் நவீன கவிதை உச்சமாக இருந்த 90-களில் வானம்பாடி ரக கவிதைகள் எழுதுவதற்கான பட்டறைகளைத் தொடர்ந்து நடத்தி கேளிக்கை நிகழ்வுகளாக மாற்றியது.
  • நிபுணத்துவமும் ஆளுமையும் அற்ற எழுத்தாளர்களைக் கொண்டு உலகக் கருத்தரங்குகளில் தவறான தகவல்களைப் பகிர காரணியாகச் செயல்பட்டது.
  • ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்தாத தமிழக இலக்கியப் பயணங்களை கேளிக்கையின் பொருட்டு தொடர்ச்சியாக முன்னெடுத்தது.

உசாத்துணை


✅Finalised Page