மதார்
மதார் (முழுப்பெயர்: சா. முகமது மதார் முகைதீன், பிறப்பு: ஏப்ரல் 14, 1993) நவீனத் தமிழ் கவிஞர். கவிதைகள்.இன் இணைய இதழின் பொறுப்பாசிரியர். கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
பிறப்பு, கல்வி
மதார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஏப்ரல் 14, 1993 அன்று சாகுல் ஹமீது- மும்தாஜ் சாய்பா இணையருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர் மூத்த சகோதரி ஆயிஷா பப்பி திருமணமாகி தற்போது திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.
ஆறாம் வகுப்பு வரை அந்தோணியார் துவக்கப்பள்ளியிலும், ஏழு முதல் பன்னிரண்டு வரை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். தூத்துக்குடியில் உள்ள இன்பேண்ட் ஜீசஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை(இயந்திரவியல் பொறியியல்) பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஆகஸ்ட் 26, 2021 அன்று ஹஸ்மத் ரெஜிபாவை மணந்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி புரிந்து வருகிறார். அம்மா, மனைவியுடன் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
ஆரம்பத்தில் சிறுகதை மற்றும் கவிதைகள் எழுதினார். மதாரின் முதல் கவிதை 2005-ம் ஆண்டு தினத்தந்தி மாணவர் சிறப்பு மலரில் வெளியானது. துபாயில் வசித்தபோது 'அடிக்கோடுகள்’ என்ற சிறுகதை எழுதினார். துபாய் எழுத்தாளர்கள் சேர்ந்து வெளியிட்ட 'ஒட்டக மனிதர்கள்’ தொகுப்பில் அக்கதை இடம்பெற்றது. மதார் தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி ஆகியோரை குறிப்பிடுகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'வெயில் பறந்தது' பிப்ரவரி 13, 2021-ல் அழிசி பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது.
இலக்கிய இடம்
மதார் அரசியல் தீவிரம், மனிதர்களின் துயரம், கசப்பு ஆகியவற்றிலிருந்து விலகி குழந்தைகளின் கள்ளமின்மை நோக்கி தன் கவிதைகளை விரித்தவர். வயது வந்த மனிதர்களின் எந்த இடையூறுமின்றி குழந்தையும், தெய்வமும் சந்தித்து விளையாடும் ஆன்மீகம் மதாருடையது. இதன் காரணமாக தேவதேவனின் கவிதை உலகிற்கு மதார் கவிதைகள் அணுக்கமாகிறது. மதார் கவிதையில் அவர் வளர்ந்த பாளையங்கோட்டை ஊரின் வெயிலும், குழந்தைகளும் திரும்ப, திரும்ப பேசுப்பொருளாகின்றன.
நூல் பட்டியல்
கவிதை தொகுப்பு
- வெயில் பறந்தது (அழிசி, பிப்ரவரி 2021)
விருதுகள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
- குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார், விஷ்ணுபுரம்வட்டம்.இன்
- குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது, மதார் அரங்கு, ஜூன் 16, 2022
- நூல் அறிமுகம்: புன்னகையின் தரிசனம் – பாவண்ணன்
- மதார் கவிதைகள் மயிர் இணையதளம்
- மதார் கவிதைகள் சொல்வனம் இணையதளம்
- மதார் கவிதைகள் உயிர்மை இணையதளம்
- மதார் கவிதைகள் வேணுதயாநிதி
- வெயில் பறந்தது விழா மதார் ஏற்புரை
- மதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்
- அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன், பிச்சைக்காரன்.காம், ஜூன் 2021
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:38 IST