being created

மண்ணும் மனிதரும்

From Tamil Wiki
மண்ணும் மனிதரும்

மண்ணும் மனிதரும் எழுத்தாளர் சிவராம் காரந்த் எழுதிய கன்னட மொழி நாவல். 1941ல் கன்னடத்தில் வெளியான இந்த நாவலின் மூலப்பெயர் 'மரளி மண்ணிகெ' [மண்ணக்கு திரும்புதல்]. தமிழில் 'மண்ணும் மனிதரும்' என்ற பெயரில் டாக்டர் தி.ப. சித்தலிங்கையாவால் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. 10 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல் செவ்வியல் படைப்பாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறது. 1850-லிருந்து 1940 வரை தெற்கு கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் மூன்று தலைமுறை கதை மண்ணும் மனிதரும். இந்த மூன்று தலைமுறைகள் வழியாக இந்தியாவின் கதையை, அந்த காலகட்டத்தில் அது சந்தித்த சமூக பொருளாதார கருத்தியல் கலாச்சார மாறுதல்களை சித்தரிக்க கூடியது இந்த நாவல்.

தமிழ் பதிப்பு

தமிழில் சாகித்திய அகாதமி வெளியீடாக முதல் பதிப்பு 1967-லிலும் இரண்டாவது பதிப்பு 2018-திலும் வந்துள்ளது. மண்ணும் மனிதரும் நாவலை தமிழுக்கு மொழிபெயர்த்த டாக்டர் தி.ப‌.சித்தலிங்கையா,‘ஊமைப் பெண்ணின் கனவுகள்’[மூகஜ்ஜிய கனஸுகளு] என்ற சிவராம காரந்தின் மற்றொறு நாவலையும் மொழிப்பெயர்த்துள்ளார்.

சிவராம் காரந்த்

ஆசிரியர் பற்றிய குறிப்பு

கே. சிவராம் காரந்த் [கோட்டா சிவராம் காரந்த்]. [10 ஆக்டோபர் 1902- 9 டிசம்பர் 1997]. கன்னட மொழி எழுத்தாளர். 47 நாவல்களை எழுதிய இவர் கன்னடத்தின் முதன்மையான நாவல் ஆசிரியர்களுள் ஒருவராகவும் கன்னட இலக்கியத்தில் பெரிய பாதிப்பை செலுத்தியவராகவும் விமர்சகர்களால் கருதப்படுகிறார். ஓவியர், நடன கலைஞர், நாட்டார் கலைகள் மற்றும் கன்னட வரலாற்று அறிஞர், சமூக சீர்திருத்தவாதி, சூழலியல் போராளி என பல முகங்கள் கொண்டவர். 47 நாவல்கள், 31 நாடகங்கள், 4 சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள் மற்றும் ஓவியங்கள் அடங்கிய 6 நூல்கள், கலைகுறித்து 13 நூல்கள், 9 கலை கலஞ்சியம், 2 கவிதை தொகுதிகள், ஆகியவற்றை எழுதிய சிவராம் காரந்த் இந்தியாவின் பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். (பார்க்க: சிவராம் காரந்த்)

கதைச்சுருக்கம்

தெற்கு கர்நாடகம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த கோடி, மானூர் என்ற கடலோர கிராமத்தில் நடக்கும் ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் கதையை நாவல் சொல்கிறது. முதல் தலைமுறை, இராம ஐதாளர். இவர் தன்னுடைய கிராமத்தில் புரோகித தொழில் செய்து குடும்பத்தை நடத்துகிறார். விவசாயமும் அவர்களுடைய வருவாய்க்கான மைய தொழிலாக இருக்கிறது. பிராமணர்களாக இருந்தபோதிலும் அந்த ஊரில் அம்மக்களும் பெண்களும் கடுமையான வெயிலில் வயலில் முழு நேரமும் உழைக்கிறார்கள். ஊர் முழுவதும் உள்ள வருமை காரணமாக மக்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரும் பெரிய மரங்களுக்காக அபாயமான ஆற்றின் ஆழங்களுக்கு சென்று பொறுக்கி வருகிறார்கள். இராம ஜதாளரின் தந்தை கோதண்டராம ஐதாளர் தன்னுடைய மகனின் திருமணத்தை கொட்டும் மழை காலத்தில் யாரும் வந்துவிடாதபடி சிக்கனமக நடத்தி முடிப்பதுதான் நாவலின் முதல் காட்சி. இராம ஐதாளரின் தங்கை சரஸ்வதி விதவையான காரணத்தினால் அவருடன் தான் பிறந்த வீட்டிலேயே வசிக்கிறாள். அவளும் இராம ஐதாளரின் மனைவி பார்வதி இருவரும் இனைந்து வயல் வேலைகளை செய்கிறார்கள் கால்நடைகளை பராமரிக்கிறார்கள். அவசியமற்றதாக இல்லாதபோதிலும் ஊராருடனான தன் கவுரவ பிரச்சனையின் காரணமா தான் வசிக்கும் பாரம்பரிய வீட்டுக்கு புது ஓடுகள் மாற்ற துவங்குகிறார் இராம ஐதாளர். நகரத்தில் ஹோட்டல் துவங்க முயற்சிக்கிறார். தன்னுடைய அப்பா சிக்கனத்தில் சேர்த்து வீடுமுழுவதும் பதுக்கி வைத்த பயம் இவற்றை செய்ய அவருக்கு பயன்படுகிறது. கூடவே தனக்கும் தன் மனைவிக்கும் குழந்தைகள் இல்லாத காரணத்தால் சத்தியபாமா என்ற பெண்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்கிறார். இந்த திருமணம் செய்துகொள்ள போகும் தகவலைகூட தன் முதல் மனைவிடம் சொல்லாது திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறார் இராம ஐதாளர்.

இராம ஐதாளருக்கும் சத்தியபாமாவுக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. சுப்பி என்ற பெண் குழந்தை. லச்சன் என்று அழைக்கபடும் லட்சுமி நாராயணன் என்ற மகண். லச்சனை குறித்ததுதான் இரண்டாவது தலைமுறையின் கதை. தன் தாய் சத்தியபாமாவை விட தன் பெரியம்மாவான பார்வதி மீது மிகவும் அன்புடன் இருக்கிறான் லச்சன். வக்கீல் தாசில்தார் போன்ற உயரிய பதவிக்கு லச்சன் வரவேண்டும் என்ற கனவுடன் பள்ளி படிப்புகாக அவனை நகரத்திர்க்கு அனுப்புகிறார் இராம ஐதாளர். தன் மாமா வீட்டில் தங்கி உடுப்பியில் கல்வி கற்க்கிறான் லச்சன். பள்ளி படிப்பு முடிந்து ஊருக்கு வரும்பொழுது சூதாட்டம், பெண்போகம், ஊர்முழுவதும் கடன் என முற்றிலும் கட்டற்ற வாழ்க்கை உடையவனாக திரும்பி வருகிறான் . அவன் நல்வழிபடுவதற்க்காக நாகவேணி என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைக்கிறார் இராம ஐதாளர். அவளையும் அனைத்து வகையிலும் சுரண்டுகிறான். ஒருகட்டத்தில் நாகவேணியையும் அவளுக்கு தன்னில் பிறந்த குழந்தையான ராமனையும் அனாதையாக கைவிட்டுவிட்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறான் லச்சன்.

லச்சனுக்கும் நாகவேணிக்கும் பிறந்த மகனான ராமனை குறித்ததே முன்றாவது தலைமுறையின் கதை. இதற்க்கிடையில் இராம ஐதாளர், சரஸ்வதி, பார்வதி, சத்தியபாமா ஆகியோறின் இறப்பு நிகழ்கிறது. தன்னுடைய உழைப்பில் ராமனை பள்ளிகல்வி படிக்கவைகிறாள் நாகவேணி. அதன்பின் ராமன் தன் உழைப்பில் கல்லூரி இளங்கலை படிப்பை மெட்ராசில் படிக்கிறான். அந்த சமையத்தில் தன் கல்லூரிபடிப்பை விட்டுவிட்டு இந்திய சுகந்திர போராட்டதில் பங்கு பெற சென்றுவிடுகிறான் ராமன். தன் கல்வியை விட்டதை தாய் நாகவேணியால் தாங்கிகொள்ள முடியவில்லை. அதை தொடர்ந்து தன் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு, மெட்ராஸ், மும்பை என நகரங்ளில் வேலை தேடுகிறான் ராமன். எங்கும் மனதுக்கு உகந்த வேலை கிடைக்கவில்லை. தன் கிராமத்துக்கு வந்து குடும்ப தொழிலான விவசாயத்தை தொடர்கிறான், மண்ணுக்கு திரும்புகிறான்.

கதாபாத்திரங்கள்

  • இராம ஐதாளர் - கிராமத்தில் புரோகிதம் செய்வதை தன் தொழிலாக கொண்டவர்.
  • கோதண்டராம ஐதாளர் - இராம ஜதாளரின் தந்தை. கஞ்சம் என்று சொல்லதக்க சிக்கனத்தை தன் இயல்பாக கொண்டவர். தன் அடுத்த தலைமுறைக்காக சேமித்து வைத்தபடி இருப்பவர்.
  • சரஸ்வதி - இராம ஐதாளரின் தங்கை. கணவனை இழந்த விதவை. அண்ணன் இராம ஐதாளருடன் பிறந்த வீட்டில் வந்து வசிக்கிறார்.
  • பார்வதி - இராம ஐதாளரின் மனைவி. இருவருக்கும் குழந்தைகள் இல்லை.
  • சத்தியபாமா - இராம ஜதாளரின் இரண்டாவது மனைவி. லட்சுமி நாராயணன், சுப்பி ஆகிய இரண்டு குழந்தைகளின் தாய்.
  • லட்சுமி நாராயணன் - இராம ஐதாளர்க்கும் சத்தியாபாமாவுக்கும் பிறந்த முதல் குழந்தை. சூத்தாட்டம், பெண்போகம் என கட்டற்றவாழ்கையை இயல்பாக கொண்டவன். நாவல் முழுக்க நசிந்தபடி இருக்கும் கதாப்பாத்திரம்.
  • நாகவேணி - லட்சுமி நாராயணனின் மனைவி. குந்தாபுரத்தை சேர்ந்தவள். ராமனின் அம்மா.
  • பிட்டு - லச்சனுக்கும் நாகவேணிக்கும் பிறந்து இறந்து விடும் முதல் குழந்தை.
  • ராமன் - லச்சனுக்கும் நாகவேணிக்கும் பிறக்கும் இரண்டாவது குழந்தை. கல்லூரி படிப்பை விட்டுவிட்டு சுகந்திர போராட்டத்தில் கலந்துகொள்கிறான். திரும்பி ஊருக்கு வந்து காந்திய வழியிலான லட்சிய வாழ்க்கையை வாழ்வதற்கான முயற்ச்சியில் ஈடுபடுகிறான்,

இலக்கிய இடம்

" ‘மண்ணும் மனிதரும்’ ஒரு யதார்த்தவாதப் படைப்பு. இன்னும் கறாராகக் கூறப்போனால் இயல்புவாத (நாச்சுரலிசம்) படைப்பு அது. செவ்வியல் பண்பு கொண்ட பிற யதார்த்தவாத நாவல்களைப் போலவே இதிலும் ‘கதை’ என்ற வடிவம் இல்லை. தொடர்ந்து வளர்ந்து விரிவடையும் சம்பவங்கள் தாம் உள்ளன. மனித உறவுகளின் அர்த்தமும் அர்த்தமின்மையும் தொடர்ந்து வெளிப்படும் சம்பவங்களினூடாக முதிர்ந்து ஒரு மொத்தச்சித்திரத்தைத் தந்து முழுமைபெறும் இந்நாவலை சுருக்கியோ விளக்கியோ கூறுவதில் பொருளில்லை. நதியென ஒழுகிச்செல்லும் காலாதீதம் மையச்சரடு. அதில் மனிதர்கள் பிறந்து இறந்து மறைகிறார்கள். அவர்களின் கண்ணீரும் கனவுகளும் ஓயாது நீண்டு செல்கின்றன.

எவ்விதமான பாரபட்சமும், விருப்பு வெறுப்பும் இன்றி காரந்த் கதையைச் சொல்லும் முறை. ஆசிரியர் என்று ஒருவர் இப்படைப்பின் பின் உள்ளார் என்ற பிரக்ஞையே உருவாகாதபடி அத்தனை துல்லியமாகத் தன்னை விலக்கிக் கொண்டிருக்கிறார் காரந்த். இரண்டாவது சிறப்பம்சம் உணர்ச்சிகளையும் உறவுகளின் நுட்பங்களையும் கூறுமிடத்து மிகுந்த கவனத்துடன் அவர் கொள்ளும் எளிமையுணர்ச்சி. மொத்த நாவலுமே மிக வயதான ஒரு பாட்டி அதிக ஈடுபாடு இன்றி தான் கண்ட வாழ்வை கூறுவது போன்று அமைந்துள்ளது. ஊமைப் பெண்ணின் கனவுகளிலும் இதே கூறுமுறையே உள்ளது.

காரந்தின் குணச்சித்திரச் சித்தரிப்பு முறையும்கூட எதனுடனும் கலந்து விடாமல் தனித்து நிற்பதன் மூலம் உருவாவதுதான். குறைந்தது சரி தவறுகள் குறித்துகூட அவர் அழுத்தமளிக்கவில்லை. முதிர்ந்து விலகிய ஒரு மனம் பற்றின்றிச் சொல்லும் கதையாக உள்ளது இந்நாவல். இது செவ்விலக்கியப் பண்பாகும். உணர்ச்சி நெருக்கடிகளை காரந்த் உருவாக்கவேயில்லை. ஆகவே நாடகீய சந்தர்ப்பங்கள் ஏதும் இந்நாவலில் இல்லை. இதுவும் செவ்விலக்கியத்தின் பண்பு என்றே சொல்லவேண்டும்" என்று எழுத்தாளர் ஜெயமோகன் 'சிவராம் காரந்தின் மண்ணும் மனிதரும்' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். [1]

உசாத்துணை

குறிப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.