under review

பெருஞ்சித்திரனார்

From Tamil Wiki
பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார் (பெருஞ்சித்திரன்; துரைமாணிக்கம்; துரைமா; இராசமாணிக்கம்) (மார்ச் 10, 1933 – ஜூன் 11, 1995) தனித்தமிழ் இயக்க அறிஞர். கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர். தனித் தமிழை ஆதரித்து இதழ்களை நடத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழீழப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். பாவலரேறு என்று போற்றப்பட்டார். தமிழக அரசு பெருஞ்சித்திரனாரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

பிறப்பு, கல்வி

இராசமாணிக்கம் என்னும் இயற்பெயரை உடைய பெருஞ்சித்திரனார், சேலம் மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் என்ற ஊரில், மார்ச் 10, 1933 அன்று, இரா. துரைசாமி - குஞ்சம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். சேலம் நகராட்சித் தொடக்கப்பள்ளியிலும், கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். சேலம் நகராண்மைக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.

பெருஞ்சித்திரனார், மனைவி தாமரையுடன் (நன்றி: தென்மொழி இதழ்)

தனி வாழ்க்கை

பெருஞ்சித்திரனார், சேலத்தில் கூட்டுறவுத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றினார். வனத்துறையில் எழுத்தராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். தொடர்ந்து புதுச்சேரி அஞ்சல் துறையில் எழுத்தராகச் சில வருடங்கள் பணியாற்றினார். கடலூர் அஞ்சலகத்தில் துணை அஞ்சல் தலைவராகப் பணிபுரிந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். பெருஞ்சித்திரனார் மணமானவர். மனைவி, கமலம் (எ) தாமரை. மகன்கள்:பூங்குன்றன், பொழிலன். மகள்கள்: பொற்கொடி, தேன்மொழி, செந்தாழை, பிறைநுதல்.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - நூல்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

பெருஞ்சித்திரனார் பள்ளியில் படிக்கும்போதே 'மல்லிகை', 'பூக்காரி' என்னும் பாடல் தொகுப்புகளை இயற்றினார். தமிழறிஞர் வை. பொன்னம்பலனார், சேலம் க. நடேசனார் ஆகியோர் பெருஞ்சித்திரனாரின் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர்களாகவும், தேவநேயப் பாவாணர், பேராசிரியர் வீ. உலகவூழியனார், பேராசிரியர் காமாட்சி குமாரசாமி ஆகியோர் கல்லூரியில் தமிழாசிரியர்களாகவும் அமைந்து பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப் பற்றை வளர்த்தனர்.

இதழ்களில் பங்களிப்பு

பெருஞ்சித்திரனார் வானம்பாடி, குயில், தென்றல், தமிழ்நாடு, முல்லை, பகுத்தறிவு, குத்தூசி, ஜனநாயகம், செந்தமிழ்ச் செல்வி, தமிழீழம், பூஞ்சோலை, தமிழ்ப் பொழில், நெய்தல், தமிழ்நெஞ்சம், தமிழ்ப் பார்வை, குறள் நெறி, தேனமுதம், உரிமை முழக்கம், பாவை, செம்பருதி போன்ற இதழ்களில் பல மரபுப் பாடல்களை எழுதினார். 'மெய்மைப்பித்தன்', 'தாளாளன்', 'அருணமணி', 'பாஉண்தும்பி', 'கெளனி' போன்ற புனைபெயர்களில் எழுதினார்.

நூல் வெளியீடு

பெருஞ்சித்திரனார், கவிஞர் பாரதிதாசனுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்ட பின்னர், தனது ‘பூக்காரி’ என்னும் தனது பாடல் தொகுப்பைச் செம்மைப்படுத்தி ‘கொய்யாக்கனி’ என்று பெயர் மாற்றம் செய்தார். அந்நூல் பாரதிதாசனின் ‘குயில்’ இதழ் அச்சகத்தில் அச்ச்சிடப்பட்டது. அந்நூலுக்குப் தேவநேயப் பாவாணர் அணிந்துரையும் பாரதிதாசன் வாழ்த்துப் பாடலும் அளித்து ஊக்குவித்தனர். பெருஞ்சித்திரனார், கொய்யாக்கனியை தொடர்ந்து பல பாடல் தொகுப்புகளையும், கட்டுரை நூல்களையும் வெளியிட்டார்.

பெருஞ்சித்திரனார், தமது படைப்புகளில் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்கியும், பிறமொழிச் சொற்கள் கலவாமலும் எளிய நடையில், தனித் தமிழில் எழுதினார். பெருஞ்சித்திரனார் கவிதைகள், பாடல்கள், கட்டுரை நூல்கள் என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றுள் நான்கு பகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மெய்ப்பொருளுரை நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

இதழியல்

பெருஞ்சித்திரனார் பள்ளியில் படிக்கும்போதே 'குழந்தை', 'மலர்க்காடு' போன்ற கையெழுத்து இதழ்களை நடத்தினார்.

தென்மொழி - தனித்தமிழ் இதழ்
தென்மொழி (1952)

பெருஞ்சித்திரனார், 1952-ல், தென்மொழி என்ற பெயரில் தனித் தமிழ் இயக்க ஆதரவு இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். தேவநேயப் பாவாணர் இதழின் சிறப்பாசிரியராகப் பணிபுரிந்தார். பெருஞ்சித்திரனார், அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை மாணிக்கம் என்பதற்குப் பதிலாக ‘பெருஞ்சித்திரன்’ என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டு அவ்விதழை நடத்தினார். இந்தி மற்றும் வடமொழியை எதிர்த்தும், தனித்தமிழை ஆதரித்தும் பல கட்டுரைகளை அவ்விதழில் எழுதினார். ம. இலெ. தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் தொடங்கி பலர் இவ்விதழுக்குப் பங்களித்தளனர். ’தென்மொழி’ இதழ் சில ஆண்டுகாலம் அரசால் தடை செய்யப்பட்டுப் பின் மீண்டும் வெளிவந்தது.

தமிழ்ச்சிட்டு - சிறார் இதழ்
தமிழ்ச் சிட்டு (1965)

பெருஞ்சித்திரனார், சிறார்களிடம், இளம் வயது முதலே தமிழ்ப் பற்று வளர வேண்டும் என்று விரும்பினார். குறிப்பாக, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்ப் பற்று மிக்கவர்களாக உருவாக வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே தனித் தமிழ் சிறார் இதழான தமிழ்ச்சிட்டு இதழை, 1965-ல் தொடங்கினார். இளம் மாணவர்களுக்குத் தேவையான கலை, அறிவியல், வாழ்வியல் கருத்துகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது.

தமிழ்நிலம் (1982)

பெருஞ்சித்திரனார், 1981-ம் ஆண்டு தமிழ், தமிழர் நலன்களைக் காக்க, ‘உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்’ என்ற கழகத்தைத் தொடங்கினார். அவ்வியக்கத்திற்காக வெளியிடப்பட்ட செய்தி இதழ் 'தமிழ்நிலம்'.

பதிப்பு

பெருஞ்சித்திரனார், தனது நூல்களை அச்சிடுவதற்காக தென்மொழி மின் அச்சகத்தை கடலூரில் தொடங்கி அதன் மூலம் பல நூல்களையும், தென்மொழி உள்ளிட்ட இதழ்களையும் வெளியிட்டார். பின் சென்னையில் ‘தென்மொழி பதிப்பகம்’ என்பதைத் தொடங்கி அதன் மூலம் நூல்களை, இதழ்களை வெளியிட்டார்.

நாடகம்

பெருஞ்சித்திரனார், நாடகங்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 'சிதைந்த வாழ்வு', 'அரக்கு மாளிகை' - எனச் சேலம் வட்டாரங்களில் நடைபெற்ற நாடகங்கள் பலவற்றுக்குப் பாடல்கள் எழுதினார்.

அமைப்புப் பணிகள்

பெருஞ்சித்திரனார், தமிழகம் முழுவதும் பயணம் செய்து பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பெருஞ்சித்திரனார் தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழ் மொழியின் தனித்தன்மை குறித்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மலையகம், ஐரோப்பா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றினார் உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்று உரையாற்றினார். தமிழ்நாட்டு ஆலயங்களில் தமிழ் மொழி வழி்பாட்டு மொழியாக வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

பெருஞ்சித்திரனார் மொழி, இன, நாட்டு விடுதலை முயற்சிகளை வலுவாக்கவும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கவும் 1981-ல், ‘உலகத் தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்பதைத் தோற்றுவித்தார். ‘தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி’ என்பதை ஒருங்கிணைத்து அதன் பொறுப்பாளராகச் செயல்பட்டார். ‘ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்டுக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பின் தலைவராகப் பணிபுரிந்தார். ‘தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு’ என்பதன் அமைப்பாளராகப் பணிபுரிந்தார். தேவநேயப் பாவாணர் தலைவராக இருந்த ’உலகத் தமிழ்க் கழக’த்தின் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தார். ‘தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு' என்ற பெயரில் பல மாநாடுகளை நடத்தினார்.

தனித்தமிழ் இயக்கப் பணிகள்

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் படிக்கும்போது பாவாணரின் தமிழாராய்ச்சி, தனித்தமிழ்க் கொள்கை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். தனித்தமிழ் இயக்க ஆதரவாளரானார். வடமொழியும் பிறமொழியும் கலவாத தூய தமிழ் வழக்கு, தமிழின நலமுன்னேற்றம், பொதுவுடைமைக் கோட்பாடு போன்றவற்றை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். தமிழ்மொழியின் சிறப்பு குறித்தும் இந்தி எதிர்ப்பு குறித்தும் இதழ்களில் எழுதினார், பேசினார். போராட்டங்களில் கலந்துகொண்டார். தனித்தமிழில் இதழ்களையும் நூல்களையும் படைத்தார். தனித் தமிழ் இயக்க வளர்ச்சிக்காக மூன்று இதழ்களைத் தொடங்கி நடத்தினார். தம்முடைய இதழ்களில் பல தமிழறிஞர்கள் குறித்தும் அவர்களின் தமிழ்ப் பணிகள் குறித்தும் எழுதி கவனப்படுத்தினார்.

போராட்டங்கள்

பெருஞ்சித்திரனார், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் தன்னுடைய அஞ்சல்துறைப் பணியை இழந்தார். தமிழக விடுதலை மாநாடு, தலைநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய மொழிக்காப்பு போராட்டம் போன்றவற்றில் கலந்துகொண்டு சிறை சென்றார். மனுதர்ம நூலுக்குத் தீ வைத்துச் சிறை சென்றார். மிசா சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்தார். தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டை நடத்தியதற்காகவும், ராஜீவ் காந்தி கொலையை ஆதரித்துப் பேசியதற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டார். தடா சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்தார்.

விருதுகள்

தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனாருக்கு ‘பாவலரேறு’ என்ற பட்டத்தை அளித்தார்.

மறைவு

பெருஞ்சித்திரனார், ஜூன் 11, 1995-ல், தனது 62 -ம் வயதில் காலமானார்.

நாட்டுடைமை

தமிழக அரசு, பெருஞ்சித்திரனாரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

ஆவணம்

பெருஞ்சித்திரனாரின் நூல்கள் சில தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்க்களம் - பெருஞ்சித்திரனார் நினைவிடம், மேடவாக்கம்

நினைவு

பெருஞ்சித்திரனாருக்கு, சென்னை மேடவாக்கத்தில், ’தமிழ்க்களம்’ என்னும் பெயரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இலக்கிய இடம்

பெருஞ்சித்திரனார், தீவிரத் தமிழ்ப் பற்று மிக்கவராக இருந்தார். தம்மை ஆதரித்த திராவிட இயக்கங்களையும், அவர்களிடையே தனித் தமிழ்ப்பற்று இல்லாததால் கண்டித்துப் பல கட்டுரைகளை எழுதினார். எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடாமல், தனித் தமிழில் இல்லாததால் தம் இதழுக்கு வந்த விளம்பரங்களை எல்லாம் மறுத்து, பொருளிழப்புகளை எதிர்கொண்டு இதழ்களை நடத்தினார். தமிழ், தமிழர் நலன் உயர்வு சார்ந்த பல போராட்டங்களில் கலந்துகொண்டு பல முறை சிறைவாசம் அனுபவித்தார். மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பாரதிதாசன் வழியில் வந்த தனித் தமிழ் இயக்க அறிஞர்களுள் ஒருவராக பெருஞ்சித்திரனார் மதிக்கப்படுகிறார்.

“கள்ளம் எப்படி அப்படிக்
கடுகளவும் இலாதநெஞ் சினார்முக்
கனிகள் எப்படி அப்படிப்
போன்றமுத் தமிழின்மே லன்பர்
குள்ளம் எப்படி அப்படி
இலாப்பெருங் கொள்கை யுடையார்
குரைகடல் எப்படி அப்படிக்
குண நிறை துரைமாணிக்கனார்”

- என்று பாரதிதாசன், பெருஞ்சித்திரனாரை வாழ்த்தினார்.

நூல்கள்

கட்டுரை நூல்கள்
  • தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  • இலக்கியத் துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
  • ஓ! ஓ! தமிழர்களே!
  • கற்பனை ஊற்று
  • ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
  • இட்ட சாவம் முட்டியது
  • இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
  • இளமை உணர்வுகள்
  • இளமை விடியல்
  • சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
  • சாதி ஒழிப்பு
  • செயலும் செயல்திறனும்
  • தன்னுணர்வு
  • தமிழீழம்
  • பாவேந்தர் பாரதிதாசன்
  • பெரியார்
  • அருளி
  • மொழி ஞாயிறு பாவாணர்
  • வேண்டும் விடுதலை
  • நெருப்பாற்றில் எதிர்நீச்சல்
  • தமிழா எழுச்சி கொள்
  • நமக்குள் நாம்
பாடல்/கவிதை நூல்கள்
  • ஐயை - தனித்தமிழ்ச் சிறுபாவியம்
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • உலகியல் நூறு
  • பள்ளிப்பறவைகள்
  • வாழ்வியல் முப்பது
  • கொய்யாக்கனி
  • அறுபருவத் திருக்கூத்து
  • நூறாசிரியம்
  • பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
  • பாவியக் கொத்து - இரண்டு தொகுதிகள்
  • கனிச்சாறு (மூன்று தொகுதிகள்)
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்- இரண்டு தொகுதிகள்
கதை நூல்
  • கழுதை அழுத கதை
உரை நூல்கள்
  • திருக்குறள் மெய்ப்பொருளுரை - நான்கு பகுதிகள்

உசாத்துணை


✅Finalised Page