under review

பூதங்கண்ணனார்

From Tamil Wiki

பூதங்கண்ணனார் சங்ககாலத் தமிழ்ப்புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணனார் என்ற இயற்பெயரையுடைய இப்புலவர் பூதம் எனத் தொடங்கும் தன் தந்தையின் பெயரையும் சேர்த்து பூதங்கண்ணனார் என அழைக்கப்பட்டார். குறுந்தொகையில் ஓர் பாடல் பாடிய பூங்கண்ணனாரும் இவரும் ஒருவரே எனத் தன் நற்றிணை உரையில் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

பூதங்கண்ணனார் நற்றிணயில் 140-ம் பாடலைப் பாடினார்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்

  • பெருங்கண் ஆயம் – அணுக்கத் தோழிமார் கூட்டம் – கூந்தலை வாரி ஐம்பால் ஒப்பனை செய்துகொண்டிருப்பவர்கள் சிலர். கூந்தல் உலர்ந்த பின்னர் பின்புறம் கூழைச்சிண்டு போட்டுக்கொண்டிருப்பவர்கள் சிலர். அவர்கள் சந்தனத் தழைகளைச் செருகித் தலையை ஒப்பனை செய்துகொண்டிருப்பவர்கள். ஆயக் கூட்டமாகச் சேர்ந்து பந்தாடுவர்.
  • சாந்தம் – சந்தனம் – கீழைக்காற்று மேற்குத் திசைக்குச் செல்லும்போது பொழிந்த மழையில் தழைத்திருப்பது.
  • நான் விரும்பும் அவள் தன்னைக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சினம் கொள்ளாமல் அவளைப் பின் தொடர்ந்து செல்லத் தயங்காதே. காரணம் என் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து அவளைத் தவிர வேறு யாரும் இல்லை என தலைவன் ஹன் நெஞ்சிடம் கூறுகிறான்.

பாடல் நடை

திணை: குறிஞ்சி

குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
பெருங் கண் ஆயம் உவப்ப தந்தை
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம்
அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே

உசாத்துணை


✅Finalised Page