under review

புரசு பாலகிருஷ்ணன்

From Tamil Wiki
டாக்டர், எழுத்தாளர் புரசு பாலகிருஷ்ணன்
எழுத்தாளர் புரசு பாலகிருஷ்ணன் (படம் நன்றி: தினமணி)

புரசு பாலகிருஷ்ணன் (சு. பாலகிருஷ்ணன்; சுப்பிரமணியன் பாலகிருஷ்ணன்; பாலகிருஷ்ணன்) (ஆகஸ்ட் 5, 1914-1998) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். கவிஞர். நாடக ஆசிரியர். மருத்துவராகவும், மருத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றினார். மாறுபட்ட கதையம்சமுள்ள பல படைப்புகளைத் தந்தார். நாற்பதுக்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வேடுகளைப் படைத்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

புரசு பாலகிருஷ்ணன், ஆகஸ்ட் 5, 1914-ல், லாகூரில், சி.சுப்பிரமணிய ஐயர்-சீதாலக்ஷ்மி இணையருக்குப் பிறந்தார். தந்தை வயலின் இசைக் கலைஞர். தாயார் சீதாலக்ஷ்மி, இப்சன் எழுதிய ‘எ டாய்ஸ் ஹவுஸ்' (பொம்மை வீடு) என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர், புரசு பாலகிருஷ்ணனின் சகோதரர். பாலகிருஷ்ணனின் மாமா, நோபெல் விஞ்ஞானி சர்.சி.வி. ராமன்.

புரசு பாலகிருஷ்ணன், ஆரம்பக் கல்வி கற்றபின் சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் மேற் கல்வி பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவத்தில் பட்டம் பெற்றார். ’யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் ஃபார் சில்ட்ரன், சிகாகோ, யு.எஸ்.ஏ.’ (University Hospital for Children, Chicago, U.S.A) மற்றும் ’கனடாவின் டொராண்டோவில் உள்ள நோயுற்ற குழந்தைகளுக்கான மருத்துவமனை’ (Hospital for Sick Children, Toronto, Canada.) ஆகியவற்றில் குழந்தை மருத்துவ நிபுணராகப் பயிற்சி பெற்றார்.

கனடா ராயல் கல்லூரியில் ஃபெல்லோ பட்டம் பெற்றார். (Fellow of the Royal College of Physicians of Canada). டொரண்டோ பல்கலையில் நரம்பியல் மற்றும் எலக்ட்ரோ-என்செபலோகிராஃபியில் ஃபெல்லோ பட்டம் பெற்றார். (Fellow in Neurology and Electro-Encephalography of the University of Toronto)

தனி வாழ்க்கை

புரசு பாலகிருஷ்ணன், சில காலம் டெல்லியில் மருத்துவராகப் பணியாற்றினார். பின் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research) குழந்தை நல மருத்துவராகவும், குழந்தை மருத்துவத்துறைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். மனைவி சியாமளா பாலகிருஷ்ணன், எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர். இரண்டு மகள்கள்.

புரசு பாலகிருஷ்ணன் சிறுகதைகள்
’தமிழும் ஆங்கிலமும்’ - புரசு பாலகிருஷ்ணன் கட்டுரை

இலக்கிய வாழ்க்கை

புரசு பாலகிருஷ்ணன், கல்லூரியில் படிக்கும் போதே இதழ்களில் எழுதினார். தஞ்சாவூர் மாவட்டம் மாங்குடிக்கு அருகில் உள்ள 'புரசக்கொடி' இவரது சொந்த ஊர். தன் பெயருடன் ஊரின் பெயரையும் இணைத்துக் கொண்டு ‘புரசு பாலகிருஷ்ணன்’ என்ற பெயரில் எழுதினார். ‘மணிக்கொடி’ இதழில், ‘சிந்தனைகள்' என்ற தலைப்பில் இவரது சில கவிதைகள் வெளியாகின. ‘பெண்ணா? தெய்வமா?' என்ற இவரது ஓரங்க நாடகம் மணிக்கொடியில் தொடராக வெளிவந்தது.

தொடர்ந்து பாரதமணி, கல்கி, தீபம் போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் அறிந்தவர் என்பதால் சம்ஸ்கிருத நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். மருத்துவம் சார்ந்து சில ஆங்கிலக் கட்டுரைகளை ராஜாஜியின் ‘ஸ்வராஜ்யா' இதழில் எழுதினார். ‘திரிவேணி’ ஆங்கில இதழில் கதை, கட்டுரைகள் எழுதினார். காளிதாசன், வள்ளலார், ஆன்டன் செகாவ், மில்டன், கீட்ஸ், ஷேக்ஸ்பியர், பீத்தோவன் பற்றி ஆங்கிலத்தில் நூல்களை எழுதினார். கதை, கட்டுரை, நாடகம் எனத் தமிழில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். ‘நேஷனல் புக் டிரஸ்ட்' தொகுப்பில் இவரது கதைகள் இடம்பெற்றன.

புரசு பாலகிருஷ்ணனின் படைப்புகள் இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது படைப்புகளை ஆராய்ந்து சில மாணவர்கள் பிஎச்.டி பட்டம் பெற்றனர்.

பாரதி பதக்க விருதாளர்கள்

விருதுகள்

  • ஆனந்த விகடன் வழங்கிய பாரதியார் தங்கப் பதக்க விருது.
  • சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் பரிசு (ஆங்கிலப் படைப்புகளுக்கு, இருமுறை)
  • ‘தீபம்' இலக்கிய இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு

மறைவு

தன் இறுதிக் காலத்தில் பெங்களூர் ஜெயநகரில் மகள்களுடன் வசித்த புரசு பாலகிருஷ்ணன், 1998-ல், தனது 84-ம் வயதில் காலமானார்.

இலக்கிய இடம்

மனித அனுபவத் தெறிப்புகளை அதன் உணர்ச்சிகளை மிகவும் நுட்பமாக தனது எழுத்தில் கொண்டுவரும் படைப்பாளியாக புரசு பாலகிருஷ்ணன் மதிக்கப்பட்டார். உளவியல் சித்திரிப்புகளுடன் கூடியனவாக இவரது படைப்புகள் அமைந்தன. ரா.ஸ்ரீ. தேசிகன், புரசு பாலகிருஷ்ணனின் படைப்புகள் குறித்தும் கூறும்போது, “புரசு பாலகிருஷ்ணனிடம் அநுபவத்தில் வேரூன்றிய கற்பனை பூர்ணமாக நிறைந்திருக்கிறது” என்றார். வல்லிக்கண்ணன், புரசு பாலகிருஷ்ணன் பற்றி, ‘மனித மனதின் மர்மங்களைப் பதிவு செய்தவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

புரசு பாலகிருஷ்ணனின் ’பொன் வளையல்’ சிறுகதைத் தொகுப்பு

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • பொன் வளையல்
  • கல்யாணம் நடந்தது
  • காதல் கடிதம்
  • இரு நெருப்புகள்
  • சிவநேசனின் சபதம்
நாவல்கள்
  • காவிரிக் கதையிலே
  • மல்லிகையும் சம்பங்கியும்
நாடகம்
  • கிருஷ்ணகுமாரி
கட்டுரை நூல்கள்
  • தமிழும் ஆங்கிலமும்
  • ஆண்டன் செகாவ்
  • ஞானக்கவி ராமலிங்கர்
புரசு பாலகிருஷ்ணனின் ஆங்கில நூல்கள்
ஆங்கில நூல்கள்
  • The Gold Bangle and other stories
  • Glimpse of Kalidasa
  • Ramalinga poet and prophet
  • Kasi and other poems
  • The Bhagvad Gita and Nuclear Policy
  • The Big Bang & Brahma's Day
  • Nineteen Forty Two and Other Poems on Indian Themes

உசாத்துணை


✅Finalised Page