under review

பாதாசன்

From Tamil Wiki
Revision as of 06:45, 6 August 2022 by Navin Malaysia (talk | contribs)
பாதாசன்

பாதாசன் (ஏப்ரல் 29, 1943) மலேசியாவின் குறிப்பிடத்தக்க தமிழ் மரபுக்கவிஞர்களில் ஒருவர். மலேசிய மரபுக்கவிதையின் வளர்ச்சிக்காக தீவிரமாகப் பங்காற்றியவர்.

பிறப்பு / கல்வி

இளமையில் பாதாசன்

பாதாசன் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள காஜாங் நகரில் ஏப்ரல் 29, 1943 அன்று சின்னையா-லட்சுமி இணையருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் ஆறுமுகம். நான்கு அண்ணன்கள், ஒரு தமக்கை உள்ள குடும்பத்தில் இவர் கடைசி பிள்ளை. காஜாங் அரசு தமிழ்ப் பள்ளியில் 3-ஆம் ஆண்டு முதல் 6-ஆம் ஆண்டு வரை பயின்றார். அசல் பிறப்புச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் அரசு தேர்வு எழுதவில்லை. மேலும் இடைநிலைக்கல்வியை அரசுப் பள்ளியில் படிக்க இவருக்கு  அனுமதி கிடைக்கவில்லை. எனவே காஜாங் தமிழ்ப்பள்ளியில் தொடங்கப்பட்ட இரவு வகுப்பில் கலந்துகொண்டு L.C.E சான்றிதழ் பெற்றார். மேலும் Fitman Examination(English) இங்கிலாந்து ஆங்கிலத் தேர்வில் இரண்டாம் நிலை தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

1958-ஆம் ஆண்டு அங்காடி தேநீர் கடையில் மாத சம்பளம் 20 ரிங்கிட்டுக்கு வேலை செய்தார். பின்னர் ஈப்போ சாலை ஆறாவது மைலில் அமைந்துள்ள வில்கின்சன் ரப்பர் பதனிடும் தொழிற்சாலையில்  1964-65 ஆண்டுகள் தோட்ட வேலை செய்தார். 1967-ல் ஈப்போ சாலையில் அமைந்துள்ள பத்து காரிசன் இராணுவ முகாமில் 1967 முதல் 1983 வரை 16 ஆண்டுகள் அதிகாரியாகப் பணியாற்றினார்.

இதழியல்

  • சிறப்பு செய்யப்பட்டபோது
    1974-ல் தமிழ்நேசன் நாளிதழில் ஆசிரியர் முருகு சுப்ரமணியன் அவர்களது அழைப்பின் பேரில் பகுதி நேரமாக நிருபராகப் பணியாற்றினார்.  
  • 1976-ல் முருகு சுப்ரமணியன் தொடங்கிய 'புதிய சமுதாயம்' மாத இதழில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார்.
  • 1981 முதல் 1982 வரை ஆதி. குமணன் ஆசிரியர்  பொறுப்பில் நடந்த  தமிழ் ஓசை நாளிதழில் துணையாசிரியராக இணைந்து மொழிபெயர்ப்பாளராக பரிணாமம் எடுத்தார்.
  • 1983 முதல் 1984 வரை வி. டேவிட்  அழைப்பின் பேரில் தூதன் மாத இதழின் ஆசிரியராக இணைந்தார்.
  • 1985 முதல் மார்ச் 12,1993 வரை தமிழ் ஓசை ஞாயிறு பதிப்புப் பொறுப்பாசிரியராகத் திகழ்ந்தார். தமிழ் ஓசை மூடப்பட்டதும் மே 1993  முதல் 2005 வரை மலேசிய நண்பன் நாளிதழில் ஞாயிறு பொறுப்பாசிரியராக பணியாற்றினார்.  ஆதி. குமணன்  மறைவுக்குப் பிறகு அப்பணியில் இருந்து நீங்கினார்.
  • 2006-ல் சுமார் மூன்று மாதங்கள் ஆதி. குமணன் துணைவியார் தொடங்கிய 'தமிழ்க்குரல்' நாளிதழில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • 2007 - 2018 வரை  மீண்டும் மலேசிய நண்பன் நாளிதழில் தலையங்கம் எழுதும் பணி இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2018 ஆகஸ்டு 31 முதல் தன் பத்திரிகை பணியை நிறைவு செய்து பணி ஓய்வு பெற்றார்.

எழுத்துலகம்

1960-ல் ஞாயிறு நேசனில் 'ஓட்டையான மண் பாத்திரத்தில்' என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை மூலம் எழுத்துலகில் நுழைந்தார். கண்ணதாசன் கவிதைகள் மீதிலான ஈடுபாட்டினால் மரபு கவிதைகள் மேல் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

சில சிறுகதைகள் எழுதியுள்ள கவிஞர் பாதாசன் 1974-ல் குட்டிக்கதை என்னும் புதிய வடிவத்தை தமிழ் நேசன் ஞாயிறு மலரில் அறிமுகப்படுத்தினார். மேலும் வாசகர்களையும் அதே மாதிரியான குட்டிக் கதைகளை எழுதத் தூண்டினார்.

தமிழ் ஓசை ஞாயிறு இதழில் 'ஞாயிறு சந்தை. ஞாயிறு களம், கிறுக்கல்' ஆகிய தலைப்புகளில் ஞாயிறு தோறும் சிறப்புக் கட்டுரைகளை எழுதினார். மேலும் மலேசிய நண்பனில் சனி, ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் 'சமூகப் பார்வை எனும் தலைப்பில் சிறப்புக் கட்டுரையை எழுதினார்.

அமைப்புப் பணிகள்

1976 - திருவள்ளுவர் மண்டப நூலகத் திறப்பு விழாவில்

1960-ல் செந்தூல் முத்தமிழ்ப் படிப்பகத்தில் 50 காசு மாணவர் சந்தாசெலுத்தி இணைந்தார். அப்போதிருந்தே முத்தமிழ்ப் படிப்பகத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றார். தொடர்ந்து, கோலாலம்பூர் தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் 1962-ல் உறுப்பினராக இணைந்தார். மணிமன்றம் முன்னெடுத்த 'தமிழர் திருநாளில்' பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, சொற்போர் ஆகியவற்றில் கலந்துகொண்டு பல பரிசுகள் பெற்றார். மணிமன்றத்தின் வளர்ச்சிக்காகத் தமிழ்த் திரைப்படப் பாடல்களின் மெட்டில் பாடல்கள் எழுதியுள்ளார்.  சா. ஆ. அன்பானந்தன், சை. பீர்முகமது ஆகியோருடன் இணைந்து நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் சிற்றூர்களிலும் தோட்டங்களிலும் நிகழ்ந்த மணிமன்றக் கூட்டங்களில், தமிழர் திருநாள் விழாக்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

1977-ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் 'கோலாலம்பூர் கவிதைக் களம்' என்னும் மரபுக்கவிதைக்கான அமைப்பு சா.ஆ. அன்பானந்தனின் ஆலோசனைக்கு இணங்க  தோற்றுவிக்கப்பட்டது. அரசுபதிவு பெறாத கவிதைக்களத்தின் தலைவராக சா.ஆ. அன்பானந்தனும் செயலாளராக பாதாசனும் பணியாற்றினர்.  .

1999-ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ் மரபு கவிஞர்களின் முதலாவது தேசிய மாநாடு தலைநகர் தேசிய மொழி வளர்ப்பு நிறுவன (டேவான் பகாசா டான் புஸ்தகா) மண்டபத்தில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக கவிஞர் காரைக்கிழார் பொறுப்பேற்றார். செயலாளராக பாதாசன் பொருளாளராக பழ.ஏ.அன்பழகன், சக்திதாசன் ஆகியோர் பொறுப்பெற்று செயல்படுத்தினர்.

கோலாலம்பூர் முச்சங்கம் என்னும் பெயரில் அரசு பதிவு செய்யப்பட்ட சங்கத்தால் ஜனவரி 13, 2001 அன்று புத்ரா உலக வாணிப சுதந்திர (மெர்டேக்கா) மண்டபத்தில் தமிழர் திருநாள் நடத்தப்பட்டது. அந்தத் தமிழர் திருநாளை நடத்திய முச்சங்கத்தின் தலைவராகக் கவிஞர் காரைக்கிழாரும் ,செயலாளராகப் பாதாசனும் ,பொருளாளராகப் பழ.எ.அன்பழகனும் பணியாற்றினர்.

முச்சங்கத்தின் பெயர் 'கோலாலம்பூர் தமிழ்ச்சங்கம்' எனப் மாற்றப்பட்டது. பின்னர் அது மலேசியத் தமிழர் சங்கம் எனப் பெயர் மாற்றம் கண்டது. மலேசியத் தமிழர் சங்கத்திற்கெனக் கடனில்லாத வகையில் சொந்தமான ஒரு மாடிக்  கட்டடத்தை ஈப்போ  சாலை 6-ஆவது கிலோ மீட்டரில் உள்ள முத்தியாரா காம்பிளக்சில் பாதாசன் இச்சங்கத்தில் செயலாளராக இருந்தபோது அமைத்தனர்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் 1972 - ஆம் ஆண்டில் எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்களின் ஊக்குவிப்பின் பேரில் இணைந்தவர் துணைச் செயலாளராகவும் செயலாளராகவும் தொடர்ந்து இடைவெளியின்றி 16 ஆண்டுகள் சங்கத்திற்காகப் பணிபுரிந்தார். சங்கத்திற்கான இரண்டு மாடி சொந்தக் கட்டடம் பாதாசன் செயலாளராக இருந்த காலகட்டத்தில் ஆதி. குமணன் முனைப்பில் வாங்கப்பட்டது.

1991ல் சிகாம்புட் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பெடுத்த பாதாசன் கிடப்பில் கிடந்த அப்பள்ளியின் புதிய கட்டட பணிகளைத் துவக்கி பத்து ஆண்டுகளில் அப்பள்ளிக்கு புதிய கட்டடம் ஒன்றை கட்டி முடிக்க முதன்மை பங்காற்றினார்.

2020 -ல் கொரோனா தொற்று மலேசியாவில் பரவுவதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் & தமிழ் இலக்கியப் பாடங்களை இலவசமாகக் கற்பித்தார்.

விருது

பாதாசானுக்கு 'மணிக்கவிஞர்' என்னும்  விருது 1977 - ஆம் ஆண்டு தமிழக உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் நிகழ்ந்த பாதாசனின் கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவில் சுரதா அவர்களால் வழங்கப் பெற்றது.

இலக்கிய இடம்

பாதாசன் தமிழ் மரபுக்கவிதையை மலேசிய இலக்கியச் சூழலில் நிலைநிறுத்தவும், இலக்கியக் கலாச்சாரச் செயல்பாடுகள் மலேசியாவில் நிலைபெறவும் பங்காற்றியவர்.

நூல்கள்

  • பாதாசன் கவிதைகள் - மரபுக்கவிதைகள் (1977) பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்
  • ஞாயிறு களம் - கட்டுரைத் தொகுப்பு (1996) ஜெயபக்தி பதிப்பகம்
  • சமூகப்பார்வை - கட்டுரைத் தொகுப்பு (2013) உமா பதிப்பகம்

உசாத்துணை


✅Finalised Page