being created

பவா செல்லதுரை

From Tamil Wiki

திருவண்ணாமலையைச் சேர்ந்த பவா செல்லதுரை தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் ,கதைசொல்லி, திரைப்பட நடிகர், இயற்கை விவசாயி, அரசியலாளர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மனித வாழ்வின் அவலங்களை, நெகிழ்ச்சியான தருணங்களைச் சித்தரிப்பவை. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மாவட்டச் செயலாளராகவும், தலைவராகவும், மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் களப்பணிகளில் நூற்றுக்கும் மேலான கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் அடங்கும்.

பிறப்பு

https://bavachelladurai.blogspot.com/2019/10/1.html
நன்றி bavachelladurai.blogspot.com

பவா செல்லதுரை தனக்கோட்டி அய்யாவிற்கும், தனம்மாளுக்கும் ஜுலை 27 ,1965 அன்று திருவண்ணாமலையில் பிறந்தார்.  

இளமை,கல்வி

பவா செல்லதுரை திருவண்ணாமலையிலுள்ள சாரோன் போர்டிங் பள்ளியில் தனது தொடக்ககால பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்தார்.  திண்டிவனம் அரசினர் கலைக்கல்லூரியிலும், பின்னர் திருவண்ணாமலைக் கல்லூரியிலும் பி. காம் பட்டப் படிப்பு பயின்றார்.

தந்தை ஆசிரியராகப் பணி புரிந்ததால் பவா செல்லதுரையின் பள்ளிப் பருவம் பல்வேறு ஊர்களில் கழிந்தது. அந்த அனுபவங்களும், ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்’ நாவலை வாசித்த தாக்கமும் சேர்ந்து பதினாறூவது வயதில் ‘உறவுகள் பேசுகிறது’ என்ற நாவலை எழுதினார். திருவண்ணாமலையிலிருந்து வெளிவந்த ‘தீபஜோதி’ இதழில் வெளியாகி சக மாண்வர்களின் பாராட்டைப் பெற்றது., ‘வசந்தம்’ என்ற கையெழுத்துப் பிரதி நடத்திய அனுபவம் அவரை மேலும் எழுதத் தூண்டியது.

குடும்பம்

1993-ல் திருவண்ணாமலை சாரோன் போர்டிங் பள்ளியில் நடந்த கலை இலக்கிய மாநாட்டில் கே.வி.ஷைலஜாவுடன் ஏற்பட்ட சந்திப்பு, காதலாக மலர்ந்து, இருவரும் ஏப்ரல் 10, 1994 அன்று திருமணம் செய்து கொண்டனர்.‌ கே. வி. ஷைலஜா 'சிதம்பர நினைவுகள்' , 'சுமித்ரா' போன்ற புகழ்பெற்ற மொழியாக்கங்களைச் செய்தவர், எழுத்தாளர். இருவரும் 2001-ல் 'வம்சி' பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். மகன் வம்சி . ஆவணப்படம் மற்றும் குறும்படங்களை இயக்குபவர். மகள் மானசி "ஆயிஷா" என்னும் புத்தகத்தை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தற்போது "Elephant Whisperer" என்னும் நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

இலக்கியப் பங்களிப்பு

பவா செல்லதுரைக்கு நண்பரும், எழுத்தாளருமான உதயசங்கருடனான நட்பும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனான தொடர்பும் தீவிர இலக்கிய வாசிப்புக்கு வழிவகுத்தன. புதுமைப்பித்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், சுந்தர ராமசாமி என வாசிப்பு வளர்ந்தது. 89இல் "எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்" கவிதைத் தொகுப்பு மூலமும்பவா செல்லதுரை மேடைகளில் வாசித்த, இதழ்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ''எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்' கந்தர்வனின் முன்னுரையோடு வெளிவந்து கி.ரா., தி.க.சி,வண்ணநிலவன் எனப் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. கல்கியில் வெளியான 'முகம்' என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்று பவா செல்லதுரைக்கு சிறுகதையாளர் என்ற அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. தொடர்ந்து வெளியான 'வேறுவேறு மனிதர்கள்' சிறுகதை பரவலாகப் பேசப்பட்டதுடன், காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றது.

பல இதழ்களில் வெளியான சிறுகதைகள் 'நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை' என்ற தொகுப்பாக வெளிவந்தன. இச்சிறுகதைத் தொகுப்பில் வேட்டை[1], பச்சை இருளன், சத்ரு[2] கதைகள் வாசகர்களின் பரவலான பாராட்டைப் பெற்றவை. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 'ஏழுமலை ஜமா'[3]ஆங்கில பாடத்திட்டத்திலும், சத்ரு சிறுகதை தமிழ்ப் பாடத்திட்டத்திலும் பாடமாக வைக்கப் பட்டுள்ளது. ஜெயமோகன் வெளியிட்ட சிறந்த சிறுகதைகள் பட்டியலில் பவா செல்லதுரையின் இரண்டு கதைகளான 'ஏழுமலை ஜமா' மற்றும் 'ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் [4] இடம் பெற்றுள்ளன[5]. மேலும் இந்நூல் தொகுப்பு திருப்பத்தூர் சேக்ரெட் கலைக்கல்லூரியில் 8 வருடங்களாக இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக உள்ளது.

'19 டி.எம். சாரோனிலிருந்து' என்னும் கட்டுரைத் தொகுப்பு பவா செல்லதுரை தன் வாழ்வில் எதிர்கொண்ட பல்வெறு தனித்தன்மையுடைய ஆளுமைகளைப் பற்றிய சித்திரம். திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாருடனான பவா செல்லதுரையின் அனுபவங்கள், அவர்கள் இருவருக்கிடையேயும் இருக்கும் அன்பையும், நட்பையும், பிணைப்பையும் பறைசாற்றுகின்றன

பவா செல்லதுரை, கோணங்கி, ராமகிருஷ்ணன் மூவரும் சேர்ந்து ‘தமிழில் யதார்த்தவாத கதைகளை நிராகரிப்பது. பேன்டசியான, மேஜிக்கல் ரியலிச கதைகளை முன்வைப்பது. இதை வெறும் வார்த்தைகளால் அல்லாமல் படைப்பால் முன்வைப்பது’ என்ற முடிவின் உருவம்தான் ‘ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்’ என்ற தமிழ் மற்றும் இலத்தீன் அமெரிக்க கதைகளின் தொகுப்பு. அந்நூல் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, ச.தமிழ்ச்செல்வன், பவா செல்லதுரை, கே.ஷாஜகான், போப்பு ஆகியோரின் தமிழ்க் கதைகளும், போர்ஹேயில் துவங்கி பல பிரபலமான இலத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் கதைகள்வரை அத்தொகுப்பில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டன.

பவா செல்லதுரை கவிதை, கட்டுரை, நாவலும் எழுதியிருக்கிறார். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் பவாவின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன.

இரண்டாவது கதைத் தொகுப்பு 'டொமினிக்' வம்சி வெளியீடாக 2016-ல் வந்தது.

இலக்கிய விமர்சனம்

பவா செல்லதுரை மனித வாழ்வின் அவலங்களை, நெகிழ்ச்சியான தருணங்களை தன் கதைகளின் மூலம் இயல்பாகக் கண்முன் உலவச் செய்கிறார்.விளிம்பு நிலை மக்களை, அவர்களது வாழ்வியலை, சமூக அமைப்பை உலகறியச் செய்ததில் அவர் சிறுகதைகளுக்கு இடமுண்டு. பவா செல்லதுரை தனது புனைவில் காட்டும் நிலப்பரப்பு முற்றிலும் புதிதானது.மலைகளும் காடுகளும் காட்டில் வாழும் உயிரினங்களும் மரங்களும் கதாபாத்திரங்களுக்கு இணையாக உலாவுகின்றன. இவருடைய கதைகள் கலைஞன், கள்வன், வேட்டைக்காரன்,கிணறு வெட்டும் ஒட்டன், இருளர், பறையர்என எளிய, விளிம்பு நிலை மனிதர்களை வாசகனுக்கு நெருக்கமாக்குவதில் தனித்தன்மையோடு மிளிர்கிறது. இக்கதை மாந்தர்கள் பவா செல்லதுரையின் கற்பனையில் உதித்தவர்கள் அல்லர்.  அவரைச் சுற்றி வாழ்ந்த உண்மை மனிதர்கள் என்பதை அவரது மொழியின் வழியாக உணர முடிகிறது. எளிய மனிதர்களின் வாழ்வு. அது தரும் வலி, அது காட்டும் போலி முகம், அதன் குரூரம், அதன் அன்பு என ‘முகம்’ மண்டிதெரு பரோட்டா சால்னா’ ‘ஏழுமலை ஜமா’ போன்ற கதைகள்  அந்த வகைமைகளில் நிற்பவை. இவரது 'ஏழுமலை ஜமா' ஒரு கூத்துக் கலைஞனின் அக உணர்வை துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அச்சிறுகதையில் கூத்து வாத்தியார் வாழ்க்கைத் தேவைகளுக்காக என்னென்னவோ செய்தாலும் கூத்துக்கு மீளும் தருணம் சிறப்பாக வந்திருக்கிறது.

'சத்ரு' சிறுகதை நாட்டார் கதை வழக்குகளின் தர்க்கத்தை மீறிய மிகைத்தன்மையும், நாடகீயமும், எளிமையும் கொண்டிருந்தாலும் நாட்டார் கதைகளோ ,பிற ஆன்மிகக்கதைகளோ மிக அரிதாகவே சென்று தொடும் ஒரு உச்சத்தை அடைய,வாசக இடைவெளி அதை இலக்கியமாக்குகிறது.மானுடர்கள் தங்கள் கீழ்மைகளைத் துறந்து ஒரு சொல் அல்லது செயலின் வழியாக தெய்வ நிலைக்கு உயரும் உன்னத தருணங்களைக் காட்சிப்படுத்துவது பவா செல்லத்துரை கதைகளின் சிறப்பம்சம். ‘வலி’சிறுகதையில் வரும் ரகோத்தமனும் ‘நீர்’ சிறுகதையில் வரும் அஞ்சலையும் அறத்தின் பக்கம் நின்று மானுட மேன்மையை முன்வைக்கிறார்கள்.

'எல்லா நாளும் கார்த்திகை' தொகுப்பு, ஜெயகாந்தன், பாலுமகேந்திரா, மம்முட்டி, சுந்தர ராமசாமி, பாரதிராஜா, நாசர், வண்ணநிலவன், சா.கந்தசாமி போன்ற நாம் அறிந்த பிரபலங்களின் அறியாத மற்றொரு முகத்தை, அவர்களது அக உலகை, ஆசைகளை, ஏக்கங்களை, எண்ணங்களை மிக விரிவாகக் காட்டுவது.

எழுத்தாளர் பிரபஞ்சன், "பரவசம் தோய்ந்த, உணர்ச்சியில் சில்லிட்ட, வியப்பில் பூரித்த, அற்புதத்தில் ஸ்தம்பித்த, வார்த்தைகளால் பவா பேசுகிறார். பவாவின் கண்கள் பத்து வயதுச் சிறுமியின் விழிகள். கிராமத்திலிருந்து பட்டணம் வந்து, பேரடுக்குப் பெருவீடுகளைக் கண்டு திகைத்து நிற்கும் பத்து வயதுக் குழந்தையின் நிர்மலமான ஆச்சரியப் பார்வை அது. உணர்ச்சிகளை ஒளித்துப் போலி பெரிய மனுஷத்தனம் காட்டாத சத்தியத்தின் குரல் அவருடையது. மனித உன்னதங்கள் தன் தொட்டுவிடும் தூரத்தில் நின்றுகொண்டு தன் விகாசத்தை வெளிக்காட்டுகையில் அத் தருணத்தின் பேரொளியைக் கைகளுக்குள் பொத்தி அப்படியே, தொங்கும் உண்மையின் கவிச்சி வாசனையோடு எழுதுகிறார்" என்று பவாவின் எழுத்தை மதிப்பிடுகிறார். எழுத்தாளர் ஜெயமோகன்," பவா செல்லதுரையின் புனைவல்லாத படைப்புகளில் அன்பு, பரிவு ஆகியவை நிறைந்த ஒரு கொண்டாட்ட மனநிலை இருக்கும். எதிர்மறை அம்சமும், துயரமும் இல்லாத தன்மையிருக்கும். புனைவில் நேர்மாறாக பெருங்கருணையோடு துயரப் படுபவர்களைப் பார்த்து அல்லது துயரப் படுபவர்களின் குரலாக ஒலிக்கிற தன்மையைப் பார்க்கலாம்" என்று விமர்சிக்கிறார்.

பவா செல்லதுரையின் கதைகளில் சின்னஞ்சிறு கதாபாத்திரங்களும் தனித்தன்மையோடு நுணுக்கமாகப் படைக்கப்பட்டுள்ளன. ‘முகம்’ கதையில் அம்முக்குட்டி, ‘சிங்காரக்குளம்’ கதையில் பிணமாய் மிதக்கும் மல்லிகா, ‘சத்ரு’ கதையில் மருத்துவச்சியாய் வரும் ரங்கநாயகி கிழவி, ‘சிதைவு’ கதையில் விலைமாதாக வரும் விஜயா, ‘கரடி’ கதையில் “வேணாண்ணா” என்று கத்தும் கிராமத்துச் சிறுமி, ‘கால்’ கதையில் சூம்பிய கால்களைக் கொண்டவன் எனப் பல உதாரணங்களைப் பார்க்கலாம். சிறுவயது முதல் தான் கண்டவற்றை, கேட்டவற்றை, அனுபவித்தவற்றை ஒரு பாத்திரமாக நெருங்கியும், சாட்சியாக விலகியும் நின்று வெளிப்படுத்துபவையாக பவா செல்லதுரையின் படைப்புகள் உள்ளன. அவற்றின் பாசாங்கின்மையும், முகத்தில் அறையும் நிஜமும் வாசகனைத் தாக்குகின்றன. சமூகத்தின் பார்வையில் அரதப் பழசானவர்கள், ஒன்றுக்கும் ஆகாதவர்கள், ஏழை, எளியவர்கள், செல்லாக்காசுகள் என்றெல்லாம் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள் இவரது படைப்புகளில் சிறந்த சொற்சித்திரமாக, மிகச் சிறந்த ஆளுமையாக வெளிப்படுகிறார்கள். வாழ்க்கையின் முன் தங்கள் நிஜ முகத்தைக் காட்டுகிறார்கள்.

"பவாவின் எழுத்து வாசிப்பவர்களைத் தடுமாற வைக்கிறது. சதா மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மனதைச் சற்றே இடம்பெயர வைக்கிறது" என்கிறார் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத். . “பல ஆண்டுகளாக என்னுள் ஊறிக் கிடக்கும் கதைகளோடு வாழ்வது சுகானுபவமான ஒன்று. அவற்றை வெளியே எடுக்க மனம் வரவில்லை” என்று தான் குறைவாக எழுதுவதற்கான காரணத்தைப் பவா செல்லதுரை முன்வைக்கிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

நாவல்

  • உறவுகள் பேசுகிறது -1986
கவிதை
  • எஸ்தரும், எஸ்தர் டீச்சரும் – 1989
நன்றி வம்சிபுக்ஸ்.காம்
சிறுகதைத் தொகுப்பு
  • நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை -  2008
  • டொமினிக் -2016
  • நீர் மற்றும் கோழி - 2017
கட்டுரைகள்
  • 19, டி. எம். சாரோனிலிருந்து 2011
  • எல்லா நாளும் கார்த்திகை – 2013
  • நிலம் – 2014
  • பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல -  2016
  • பங்குக்கறியும் பின்னிரவுகளும்- 2018
  •  மேய்ப்பர்கள்- 2020
  • இலக்கில்லா பயணங்கள்-2021
மொழிபெயர்த்த நூல்கள்
  • மலையாளத்திலிருந்து பால் சக்கரியா எழுதிய "தேன்"என்ற நூலை தமிழில் 2018-ல் மொழிபெயர்த்தார்.
தொகுத்த புத்தகங்கள்
  • கந்தர்வன் கதைகள் – 2012
  • ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்-1992
  • சிறகிசைத்த காலம் – 2013
  • நிராயுதபாணியின் ஆயுதங்கள் (ஜெயந்தனின் சிறுகதைகளடங்கிய தொகுப்பு )-2005

பிற மொழிகளில் பவா செல்லதுரையின் நூல்கள்

மலையாளம்

சிறுகதை தொகுப்பு
  • நட்சத்திரங்கள் ஒளிக்குந்ந   கற்ப பாத்ரம் - திரு.ஸ்டான்லி
  • டொமினிக் - கே.எஸ். வெங்கடாசலம்
கட்டுரை  
  • எல்லா நாளும் கார்த்திகை - மலையாளத்தில் டாக்டர் டி.என். ரகுராம்
  • வழிகாட்டி (மேய்ப்பர்கள்)- ஷஃபி  செருமா விளவில்-2022
  • கிழக்கு நோக்கி சிரிச்ச பூ- அனுபவங்களும், கட்டுரைகளும்- கே.எஸ். வெங்கடாசலம்
ஆங்கிலத்தில் சிறுகதை மற்றும் கட்டுரைகள்
  • Dominic  - சித்ராஜ் பொன்ராஜ்
  • Ruins of the Night - ஜானகி வெங்கட்ராமன்
  • From 19 DM Saron - பி. ராம்கோபால்
  • Shepherd - டாக்டர் கே. சுப்ரமணியன்
  • Shared Meat and Late Nights –2021 டாக்டர். லக்ஷ்மிபிரியா
  • Earth- டாக்டர். லக்ஷ்மிபிரியா
  • Carnival Called Life- லதா ராமகிருஷ்ணன்
தெலுங்கு சிறுகதைத் தொகுப்பு
  • நக்‌ஷத்தாரலூ தக்குண்ணா அபாயரான்யம் ( நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை கதைகளின் முழுத் தொகுப்பு) - ஜில்லாலே பாலாஜி

பெற்ற விருதுகள்

  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
  • தமிழக அரசின் சிறந்த கட்டுரைக்கான விருது -  எல்லா நாளும் கார்த்திகை
  • நொய்யல் இலக்கிய விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
  • சிறந்த நடிகருக்கான விருது- 2021 - செந்நாய்

திரைப்பட நடிகர்

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கியவர், இப்போது முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் குணச்சித்திர நடிகராக அறியப்படுகிறார்.

நடித்துள்ள திரைப்படங்கள்
  • ஜோக்கர் -2016
  • பேரன்பு -2019
  • குடிமகன் – 2019
  • அமிபா – 2019
  • சைக்கோ  -2020
  • வால்டர் – 2020
  • யாதும் ஊரே யாவரும்கேளிர் – 2020
  • செந்நாய் -  2020
  • புத்தம் புது காலை -2020
  • ஜெய்பீம்- 2021
  • வெள்ளை யானை – 2021

வரவிருக்கும் படங்கள்

  • வெந்து தணிந்தது காடு-2022
  • நித்தம் ஒரு வானம் -2022
  • ரெஜினா-2022
  • குள்ளன் (dwarf) -2022
  • சட்டம் ஒரு இருட்டறை -2022

கதை சொல்லி

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பவா செல்லதுரையை "இந்த நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லி"என்று கூறியிருக்கிறார். பவா செல்லதுரை தான் ரசித்த கதைகளை அவ்வப்போது நண்பர்களோடு பகிர்ந்துகொள்வது வழக்கம். அவருடைய நண்பர் ஜே.பி. யின் வேண்டுகோளுக்கிணங்க ஐம்பது பேர் முன்னிலையில் ஆரம்பித்து நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தில் கதை சொல்ல ஆரம்பித்ததாக பவா செல்லத்துரை கூறுகிறார்.தான் எழுத்தாளனாக அடைந்ததைவிட, பத்துமடங்கு வாசகர்களை ஒரு கதைசொல்லியாக அடைந்திருப்பதாகவும், தனது புத்தகங்களை மட்டுமல்லாது தான் கதை சொல்லும்போது குறிப்பிடுகின்ற அனைத்து எழுத்தாளர்களின் கதைகளையும் தனது வாசகர்கள் தேடித்தேடி வாசிக்கிறார்கள் என்பதை ஒரு வெற்றியாகவே பாரப்பதாகவும் தெரிவிக்கிறார். கதை சொல்லும் விதம், இவரின் குரல் மற்றும் எதார்த்தமான கதை சொல்லும் நடை எளிய மக்களையும் மற்றும் படித்தவர்களையும் மிகவும் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒன்று. கம்பீரத் தோற்றம் கொண்ட அவருடைய குரலில் இழைந்தோடும் குழைவு, வாஞ்சை, நகைச்சுவை உணர்வு, அழுகை, விசும்பல் என எல்லாம் சேர்ந்து வாசகனைக் கேட்க வைக்கிறது.

மற்றவை

இலக்கிய கலை நிகழ்ச்சிகள்

பவா செல்லதுரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் களப்பணி, இலக்கியப்பணி, இலக்கியக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் என நூற்றுக்கும் மேலாக நடத்தியுள்ளார். முற்றம் மற்றும் டயலாக்' போன்ற இலக்கிய அமைப்புகளை உருவாக்கி மாதாமாதம் ,நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். முக்கிய எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

நட்பு, விருந்தோம்பல்

இலக்கிய எழுத்தாளர்கள், திரைப் பிரபலங்கள், வாசகர்கள், நண்பர்கள் என்று யார் அவரைத் தேடி வந்தாலும் உபசரித்தலும் நட்பு பாரட்டுவதும் அவருடய சிறப்பியல்பாக பலராலும் கூறப்படுகிறது."எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு. பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதும் உத்வேகம் அளித்து வருகிறது" என்று நெகிழ்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். பவா செல்லத்துரை தன் பலமே தன்னுடைய நட்பு வட்டம்தான் என்று பலமுறை கூறியிருக்கிறார். தன்னுடைய இலக்கிய உரையாடல்களாலும், அன்பாலும் ஒருங்கிணைந்த தன்னியல்பான பெரும் நண்பர்களின் படை பவா செல்லதுரையைச் சுற்றி எப்போதும் இருப்பதைப் பார்க்க முடியும்.

அரசியலாளர்

பவா செல்லதுரை இடதுசாரி அரசியலைச் சேர்ந்தவராக அறியப்பட்டாலும் அவர் ஒருபோதும் நேரடியான தீவிர அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. தன்னுடைய இடதுசாரி சிந்தனைகள் தன்னுடைய எழுத்தில் பிரதிபலிக்கிறது, ஆனால்  அதையும் மீறி  மக்களுக்காக களப்பணிகள், போராட்டங்களில் அவர்களுடன் நிற்பதையே விரும்புவதாகவும் கூறுகிறார்

ஆவணப்படம்  

ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கத்தில் “பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப்படம் வெளிவந்துள்ளது.

இதனை உருவாக்கிய செந்தழல் ரவி, மற்றும் எஸ்கேபி கருணா, ஒளிப்பதிவு செய்த சரவணக்குமார், படத்தொகுப்பாளர் தயாளன். அவரது குடும்பம், படைப்புகள், அவரது இலக்கிய ஈடுபாடு, நட்பு வட்டம், அவர் நடத்திய இலக்கியக் கூட்டங்கள், முகாம்கள்,  கண்காட்சிகள், அதில் கலந்து கொண்ட ஆளுமைகள், பவா செல்லதுரை வெளியிட்டுள்ள புத்தகங்கள், பதிப்பகம் என விரிவாகச் சொல்வதற்கு நிறைய இருந்த போதும் படம் பவா என்ற கதை சொல்லியின் ஆளுமை என்ற ஒரு கோணத்தில் மட்டுமே இந்த ஆவணப்படம் அடையாளப்படுத்துகிறது.

குறும்படம்

  • நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற சிறுகதைத் தொகுப்பில் வரும் ”ஏழுமலை ஜமா” என்னும் சிறுகதையை அவருடைய தோழர் கருப்பு கருணா குறும்படமாகவும் இயக்கியுள்ளார்.
  • அதே கதை புகழ்பெற்ற இயக்குநர் பாலுமகேந்திராவின் செயலர் ரோஸ்லின் அவர்களால் ‘கூத்தே’ என்ற பெயரில் குறும்படமாக்கப்பட்டுள்ளது.
  • நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை கதையை மைக்கேல் அருண் எழுதி இயக்க பினு ஒளிப்பதிவு செய்தார்.
  • வலி என்ற கதையை 'காயம்' என்னும் பெயரில் கணேஷ் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

உசாத்துணை

எழுத்தாளர் பவா செல்லதுரை-தமிழ் எழுத்தாளர்.இன்

யார் சத்ரு-ஜெயமோகன்.இன்

பவா செல்லதுரை-ஜெயமோகன்.இன்

பவா செல்லதுரை-சஞ்சிகை

பவா செல்லதுரை சிறுகதைகள்-சிலிகான்ஷெல்ஃப்

மனிதனை விட மேன்மையான ஒருவனை என்னிடம் சொல்லுங்கள் -கனலி.இன்

பவா கதை சொல்கிறார்-எஸ். ராமகிருஷ்ணன்

பவா செல்லத்துரை சொன்ன கதை- அ. முத்துலிங்கம்

பவா என்ற கதைசொல்லியின் புனைவுலகம்-வல்லினம்

எழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது-தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் .காம்

கதை கேட்க வாங்க-ஸ்ருதி டீவி

பவா என்றொரு கதை சொல்லி- 1ஆவணப்படம்

பவா என்றொரு கதை சொல்லி-2

பவா என்றொரு கதை சொல்லி -3

பவா என்றொரு கதை சொல்லி-4

பவா செல்லதுரையின் இணையதளம்

அடிக்குறிப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.