being created

பம்மல் சம்பந்த முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
Line 160: Line 160:
* https://cinema.vikatan.com/literature/137856-story-about-pammal-sambandha-mudaliar-on-his-death-anniversary
* https://cinema.vikatan.com/literature/137856-story-about-pammal-sambandha-mudaliar-on-his-death-anniversary
* https://www.hindutamil.in/news/blogs/30962-10-2.html
* https://www.hindutamil.in/news/blogs/30962-10-2.html
* https://www.tamilvu.org/courses/diploma/a061/a0614/html/a06144l2.htm




{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:05, 10 August 2022

பம்மல் சம்பந்த முதலியார் (பிப்ரவரி 1, 1873 - செப்டெம்பர் 24, 1964) நாடக முன்னோடிகளில் ஒருவர். வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர். தமிழில் சொந்த நாடகங்களையும், தழுவல் நாடகங்களையும் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நாடகங்களை மொழிபெயர்த்தார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பிறப்பு, கல்வி

பம்மல் சம்பந்த முதலியார் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிப்ரவரி 1, 1873 பிறந்தவர். விஜயரங்க முதலியார், மாணிக்கவேலு அம்மாள் இணையருக்கு பிப்ரவரி 1, 1873இல் பிறந்தார். இயற்பெயர் திருஞான சம்பந்தம். விஜயரங்க முதலியார் மதுரை திருஞான சம்பந்தர் மடத்து அடியவரிடம் 1872இல் சிவதீட்சை எடுத்துக் கொண்டார். அதன் பிறகு இவர் பிறந்ததால் 'திருஞான சம்பந்தம்' என்று பெயர் சூட்டினார். தந்தை தமிழ் ஆசிரியராகவும், கல்வித்துறை ஆய்வாளராகவும் இருந்தவர், தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதனால் சிறுவயது முதலே புத்தக வாசிப்பு பழக்கம் இருந்தது.

அக்கால வழக்கப்படி முதலில் திண்ணைப் பள்ளி்க்கூடத்திலும் பிறகு பிராட்வேயிலிருந்து 'ஹிந்து புரொபரைடர் என்ற பள்ளிக்கூடத்திலும் பிறகு செங்கல்வராய நாயக்கர் பள்ளிக்கூடத்திலும் பள்ளிக்கல்வி பயின்றார். 1885-ல் முதல் மாணவராக தங்கப்பதக்கம் பெற்றார். 1886இல் பச்சையப்பன் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டபடிப்பு முதல் வகுப்பில் தேறினார். 1896இல் சட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

1890இல் திருமணம் நடந்தது. 1898இல் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். சுந்தரம் சாஸ்திரியார் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சியில் சேர்ந்தார். சர்.சி.பி. ராமசாமி ஐயரின் வேண்டுகோளின்படி 1924-ஆம் ஆண்டு சிறு வழக்கு நீதிமன்றத்தின் நீதிபதியானார். 1924 முதல் 1928 வரை நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் மனைவி காலமானார்.

சமயப் பணிகள்

சம்பந்த முதலியார் மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலராக 1900 முதல் 1924ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில்தான் அக்கோயில் கோபுரம் கட்டப்பட்டது. கோயில் திருக்குளம் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது.

சமூகப் பணிகள்

சென்னைப் பல்கலைக் கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் செனட் அங்கத்தினராக இருந்தார். இந்து தர்ம சமாஜத்தில் உறுப்பினராக இருந்தார். விளையாட்டுத்துறை தொடர்பான குழுக்களில் அங்கத்தினராக இருந்து பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

சிவாலயங்கள் பற்றி நான்கு பாகங்கள் கொண்ட நூல் எழுதினார். 1946இல் அந்நூல் அச்சேற திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து அதிபர் பொருளுதவி செய்தார். காலக் குறிப்புகள், சாதாரண உணவுப் பொருளின் குணங்கள், நாடகத் தமிழ் போன்ற நூல்களை எழுதினார். நாடகங்களை உரை நடை வடிவில் எழுதினார். ஆங்கில நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்தார். பம்மல் சம்பந்தரின் நூல்களுக்குப் பரிதிமாற் கலைஞர், டாக்டர் உ.வே.சா, பூசை.கலியாண சுந்தர முதலியார் போன்றோர் சாற்றுக் கவிகள் எழுதிக் கொடுத்தனர். சம்பந்த முதலியார், நாடகங்களையும், பிற நூல்களையும் பென்சிலால் மட்டுமே எழுதினார். வடமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு சகுந்தலை நாடகத்தை 'மானியர் வில்லியம்ஸ்' என்பவர் மொழிபெயர்த்திருந்தார். அந்நாடகத்தைத் தமிழில் சம்பந்தர் மொழிபெயர்த்தார்.

நாடக வாழ்க்கை

சிறுவயது முதலே சம்பந்த முதலியார் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். 1883இல் பள்ளி விழாவில் அலெக்சாண்டரும் கள்வனும் என்னும் ஆங்கில நாடகத்தில் கள்வனாக நடித்தார். தொடர்ந்து பிற நாட்கக்குழுக்களின் நாடகங்கள், ஆங்கில நாடகங்களை கவனித்து வந்தார். மேனாட்டு நாடக முறையை அறிமுகப்படுத்த எண்ணி பயின்முறை (Amateur) நாடக முறையில் நாடகம் படைக்க முடிவு செய்தார். பயின்முறை நாடக முறை என்பது நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாமல், கற்றவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் மேற்கொள்ளும் நாடகப் படைப்பு முறை. தமது சுகுணவிலாச சபையின் நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சியும், பிற தொழில் நுட்பப் பயிற்சியும் அளித்தார்.

சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். பெல்லாரி ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரின் 'சரச விநோதினி சபா' எனும் நாடகக் கம்பெனி நடத்திய தெலுங்கு நாடகமே சம்பந்தர் தமிழ் நாடகம் எழுதக் காரணமாக அமைந்தது.

கீதமஞ்சரி, நாடகத்தமிழ், நாடகமேடை நினைவுகள் (ஆறுபாகங்கள்), நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி, தமிழ் பேசும் படம், பேசும்பட அனுபவங்கள் போன்ற நூல்களை எழுதினார்.

சுகுண விலாச சபா

ஜூலை 1, 1891இல் நண்பர்களுடன் சேர்ந்து ”சுகுண விலாச சபா” என்ற நாடக சபையை நிறுவினார். நாடக அரங்காற்றுகை செய்து, நடித்தார். டாக்டர்கள், வக்கீல்கள் போன்றோர் சுகுண விலாச சபா நாடகங்களில் நடிக்க ஊக்குவித்தார். முதன்முதலில் 1893இல் கோவிந்தராவ் நாடகக் கம்பெனி நடத்திய 'ஸ்திரி சாகசம்' நாடகத்தைத் தழுவி 'புஷ்பவல்லி’ என்ற நாடகத்தை உரைநடை வடிவில் எழுதி சென்னை விக்டோரியா ஹாலில் அரங்கேற்றி நடித்தார். 22-வது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற ஹாம்லெட், ஆஸ் யு லைக் இட், மெக்பெத் உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார். ஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார்.

இன்பியலும், அங்க அசைவு மிக்க நகைச்சுவைகளுமே மிகுந்திருந்தன. சம்பந்த முதலியார். இன்பியலில் சமூக உணர்வுகளை உட்புகுத்தி நாடகமாக்கினார். மனோகரன், இருசகோதரிகள், தாசிப்பெண், புஷ்பவல்லி, உத்தமபத்தினி போன்ற நாடகங்கள் இவ்வகை நாடகங்களாகும்.புராண இதிகாச வடிவ நாடகங்களே புகழ் பெற்றிருந்த அக்காலகட்டத்தில் கர்ணன், சிறுத்தொண்டர் போன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து சில மாற்றங்களை செய்து. அது மக்களிடம் வரவேற்பு பெற்ற பிறகு சமூகக் கதைகளை நாடக வடிவில் எழுதினார். நாட்டுப்புறக் கதைப் பாடல்களையும் நாடகமாக்கினார். நல்லதங்காள், சாரங்கதாரன் போன்றன இவற்றுள் அடங்கும். தொன்ம (புராண)க் கதைகளையும் சம்பந்த முதலியார் மக்களுக்கான நாடகமாக்கினார். யயாதி, காலவரிஷி, சிறுத்தொண்டன், மார்க்கண்டேயன் போன்றவை குறிப்பிடத்தக்கன. சமுதாயச் சீர்கேடுகளை வெளிப்படுத்தும் வண்ணம் பல அங்கத நாடகங்களை (Satirical Plays) எழுதியுள்ளார். சபாபதி நாடகம் (ஆறு பாகங்கள்) இவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். அரிச்சந்திரன் நாடகக் கதையைப் பெயர் மாற்றி சந்திரகரி என்ற பெயரில் நையாண்டி செய்தார். பொய்யை மட்டுமே பேசுபவனாகச் சந்திரகரி படைக்கப்பட்டான்.

சம்பந்த முதலியார் எழுதிய இரண்டு நண்பர்கள், இரத்தினாவளி, காலவ ரிஷி, வேதாள உலகம், லீலாவதி சுலோசனா, சபாபதி, கள்வர் தலைவன் ஆகிய நாடகங்கள் தொழில் முறை நடிக்கப் பெற்ற வெற்றிகரமான நாடகங்கள். புஷ்பவல்லி, சுந்தரி, லீலாவதி, சுலோசனா, கள்வர் தலைவன், யயாதி, மனோகரா, சாரங்கதாரா, இரண்டு நண்பர்கள், முற்பகல் செய்யின் பி்ற்பகல் விளையும், ரத்னாவளி, காலவரிஷி, மார்க்கண்டேயர், அமலாதித்தியன், வாணீபுர வணிகன், சபாபதி, வேதாள உலகம், பொன் விலங்கு, மகபதி, சிறுத்தொண்டர், அரிச்சந்திரன், வள்ளி மணம், கொடையாளி கர்ணன், சகுந்தைலை, காளப்பன் கள்ளத்தனம், நல்லதங்காள், ஏமாந்த இரண்டு திருடர்கள், ஸ்திரி ராஜ்யம், இந்தியனும் ஹிட்லரும், கலையோ காதலோ போன்றன சம்பந்த முதலியாரின் குறிப்பிடத்தக்க நாடகப் படைப்புகள்.

இவரது குழுவில் ஆண்களே பெண் வேடமிட்டனர். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் இலங்கையிலும் சம்பந்த முதலியார் நாடகங்கள் அரங்கேற்றம் செய்தார்.

மனோகரா
துருவன் கதையின் தாக்கத்தால் 'மனோகரா' என்ற புகழ்பெற்ற கதையை எழுதி அதை நாடகமாக்கினார். சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகம் தமிழ் நாடக மேடையில் குறிப்பிடத்தக்க சிறப்பினைப் பெற்றது. தமது படைப்புகளில் மனோகரா நாடகம் முதன்மையானது எனச் சம்பந்த முதலியார் குறிப்பிடுகிறார். மனோகரா நாடகம் 70 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக மேடையில் தன் செல்வாக்கினைச் செலுத்தியது. தொழில் முறை நாடக சபையினர் அனைவரும் இந்த நாடகத்தை நடத்தினர். அனுமதி பெற்றே 859 முறை இந்நாடகம் நடத்தப்பட்டுள்ளது. பிற்காலத்தில் மனோகரா நாடகம் திரைப்படமாகவும் வெளிவந்து வெற்றியை ஏற்படுத்தியது. 
சீர்திருத்தங்கள்
  • கால நேரம் நிர்ணயிக்காமல் நடந்துகொண்டிருந்த நாடகத்தை, 3 மணி நேரம் என ஒரு கால அளவுக்குள் கொண்டுவந்தார்.
  • கதை, நடிப்பு, இயக்கம், நவீன கருத்துகள்கொண்ட வசன உச்சரிப்பு, சீர்த்திருத்தமான காட்சியமைப்பு, நடிப்பு ஆகியவற்றில் மாற்றம் கொணர்ந்தார்.
  • நாடக மேடை, நடிக்கும் முறை, நடிகர்கள் தேர்வு முறை போன்றவற்றில் சீர்திருத்தம் செய்தார்.
  • அக்காலத்தைய கலை மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ப செயல்படும் பாங்கான நாடகங்களை எழுதினார்.
  • மேல்நாட்டு அமைப்பு முறையிலான நாடகமாக்கம் செய்தார்.
  • தமிழ் நாடகத்தில் தலைப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரையிலான அனைத்துத் துறையிலும் புதுமையைப் புகுத்தினார்.
  • நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார்.
  • சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார்.
  • நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார்.
  • திட்டமிடப்பெற்ற நாடக ஒத்திகை மேற்கொள்வதைக் கட்டாயமாகக் கடைப்பிடித்தார்.
  • நாடக உரையாடல்களை உள்ளபடியே பேசி நடிக்க வேண்டுமென்பதில் கண்டிப்புக் காட்டினார்.
  • நாடகங்களின் இயல்புத் தன்மைக்கு முக்கியத்துவம் தந்தார்.
  • படித்தவர்களை நடிக்க வைத்து நல்ல பார்வையாளர்களை உருவாக்கினார்.
  • வேற்றுமொழி நாடகங்கள், மேனாட்டு நாடகங்கள் என புதிய நாடகங்களை அறிமுகப்படுத்தினார்.
புகழ்பற்ற நடிகர்கள்
  • சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர்
  • எஸ்.சத்தியமூர்த்தி
  • எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை)
  • ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்
  • வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார்
  • வி.சி.கோபாலரத்தினம்

திரைப்படம்

சம்பந்த முதலியார் பேசும் படங்கள் வந்த காலத்தில் அதிலும் பணியாற்றினார். 1931 முதல் திரைப்படத் துறையில் பணியாற்றினார். இவரது பல நாடகங்கள் திரைப்படங்களாகவும் வந்தன. 1936இல் மனோகரா திரைப்படத்தில் புருஷோத்தமனாக நடித்தார். காலவரிஷி, ரத்னாவளி, லீலாவதி, சுலோசனா, சந்திரஹரி, சபாபதி, பொங்கல் பண்டிகை, இராமலிங்க சுவாமிகள் போன்ற நாடகங்களும் திரைப்படமாயின.

விருதுகள்

  • பம்மல் சம்பந்த முதலியாருக்கு இராவ்பகதூர் பட்டம் 1916இல் வழங்கப்பட்டது.
  • 1916இல் நாடகப் பேராசிரியர் விருது பெற்றார்.
  • பத்மபூஷண் விருது 1959இல் வழங்கப்பட்டது.
  • 1959இல் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார்.

மறைவு

1950 முதல் உலகியல் பொறுப்புகள் அனைத்தையும் மகன் வரதராஜனிடம் ஒப்படைத்தார். முதுமையால் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டது. பிறரது உதவியுடன் நூல்களை எழுதினார். செப்டம்பெர் 24, 1964இல் காலமானார்.

திரைப்படங்களாக்கப்பட்ட நாடகங்கள்

  • காலவா ரிஷி (1932)
  • சதி சுலோச்சனா (1934, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
  • மனோகரா (1936, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)
  • ரத்னாவளி (1935)
  • யயாதி (1938)
  • ராமலிங்க சுவாமிகள் (1939)
  • சந்திரஹரி (1941)
  • ஊர்வசி சாகசம் (1940)
  • தாசிப் பெண் (1943)
  • சபாபதி (1941)
  • வேதாள உலகம் (1948)

நூல்கள் பட்டியல்

  • காலக் குறிப்புகள்
  • சாதாரண உணவுப் பொருளின் குணங்கள்
  • நாடகத் தமிழ்
மொழிபெயர்ப்புகள்
  • அமலாதித்யன் (Hamlet)
  • நீ விரும்பியபடியே (As You like it)
  • மகபதி (Macbeth)
  • சிம்மளநாதன் (Cymbeline)
  • வணிபுர வானிகன் (Merchant of Venice)

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

தமிழ்
  • இந்தியனும்-ஹிட்லரும்
  • இல்லறமும் துறவறமும்
  • என் சுயசரிதை
  • என் தந்தை தாயர்
  • ஒன்பது குட்டி நாடகங்கள்
  • ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
  • கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
  • கள்வர் தலைவன்
  • காதலர் கண்கள்
  • காலக் குறிப்புகள்
  • குறமகள், வைகுண்ட முதலியார் (இரு நாடகங்கள், 1934)
  • சபாபதி
  • சபாபதி முதலியாரும்-பேசும் படமும்
  • நான் குற்றவாளி
  • சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
  • தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
  • தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
  • தீபாவளி வரிசை
  • தீயின் சிறு திவலை
  • நாடகத் தமிழ்
  • நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
  • நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
  • பலவகை பூங்கொத்து
  • மனை ஆட்சி
  • மனோகரா
  • மூன்று நகைச்சுவை நாடகங்கள்
  • யயாதி
  • வாணீபுர வணிகன்
  • விடுதிப் புஷ்பங்கள்
ஆங்கிலம்
  • Amaladitya
  • As you like it
  • an Adaptation of Shakespear's as We Sow-so We Reap
  • Blessed in a Wife
  • Brahmin Versus Non-brahmin
  • Bricks Between and at Any Cost
  • Chandrahari
  • Dikshithar Stories
  • Harischandra
  • Humorous Essays
  • Lord Buddha
  • Mixture
  • Over Forty Years Before the Footlights-1
  • Over Forty Years Before the Footlights-2
  • Sahadeva's Stratagem
  • Sarangadara
  • Sati Sakti a Farce in Tamil,sati Sulochana
  • Siruthondar
  • Siva Shrines in India & Beyond Part - Ii
  • Siva Shrines in India & Beyond Part - Iii
  • Siva Shrines in India & Beyond Part Iv,siva Shrines in India & Beyond Part-v
  • Siva Temple Architecture Etc,
  • Subramanya Shrines in Tamil
  • The Fair Ghost
  • The Good Fairy
  • The Good Sister
  • The Gypsy Girl and Vaikunta Vaithiyar
  • The Idle Wife
  • The Knavery of Kalappa
  • The Surgeon General's Prescription and Vichu's Wife
  • The Wedding of Valli

வெளி இணைப்புகள்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.