பக்தவத்சல பாரதி
பக்தவத்சல பாரதி (பிறப்பு: ஜூன் 7, 1957), மானுடவியல் ஆய்வாளர், தமிழ் இலக்கியங்களை இனவரைவியல் அடிப்படையில் ஆராய்ந்தவர். ’பண்பாட்டு மானுடவியல்’, 'தமிழக மானுடவியல்’ போன்ற முக்கிய மானுடவியல் நூல்களை எழுதியவர்.
பிறப்பு, கல்வி
பக்தவத்சல பாரதி பாண்டிசேரியில் ஜூன் 7, 1957 அன்று பிறந்தார். தந்தை பா. சீதாராம், தாய் சு. தனலட்சுமி. ஆரம்ப பள்ளிக்கல்வியை திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள பாங்குளத்தூர் கிராம ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்றார். ஐந்தாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை ஆவனிபூர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் பி.யூ.சி பட்டம் பெற்றார்.
இளங்கலை கல்வியை விலங்கியலில் வண்ணார்பேட்டை தியாகராஜர் கல்லூரியில் பயின்றார். திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் எம்.ஏ மானுடவியல் பட்டம் பெற்றார். எம்.ஏ. சமூகவியல் பட்டத்தை அண்ணாமலை பல்கலைகழகத்தில் பெற்றார். தமிழகத்தில் ஜாமக் கோடாங்கிகள் என்றழைக்கப்படும் குடுகுடுப்பை நாயக்கர் நாடோடிச் சமூகத்தை ஆய்வு செய்து மைசூர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பக்தவத்சல பாரதி விஜயாவை 1985-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மகள் வைஷ்ணவி ஐ.ஓ.பி வங்கியில் பணியாற்றுகிறார். பக்தவத்சல பாரதிக்கு இரண்டு பேரன்கள்.
தமிழ் பல்கலைக்கழகத்தில் 1985-ம் ஆண்டு முதல் ஐந்தரை ஆண்டுகள் வாழ்வியல் களஞ்சிய மையத்தில் பணியாற்றினார். 1990-ம் ஆண்டு முதல் பாண்டிசேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். பாண்டிசேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஆய்வு வாழ்க்கை
பக்தவத்சல பாரதிக்கு மானுடவியல் ஆய்வு மீதான ஆர்வம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் எம்.ஏ. மானுடவியல் படிக்கும் காலத்திலேயே தொடங்கியது. கல்லூரி நாட்களில் சிறு ஆய்வுகளை மேற்கொண்டார். 1982-ல் தொடங்கிய ஆய்வு பணி 1985-ல் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் வாழ்வியல் களஞ்சிய மையத்தில் பணியாற்ற தொடங்கிய போது முறைமை கண்டது.
பக்தவத்சல பாரதி தமிழ் சமூகத்தின் மானுடவியலை அறிமுகம் செய்யும் வகையில் அறிமுகம் நூலாக எழுதிய பண்பாட்டு மானுடவியல் 1990-ம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் பக்தவத்சல பாரதி எழுதிய முதல் ஆய்வு நூல். பின் தமிழர் மானுடவியல், மானிடவியல் கோட்பாடுகள், வரலாற்று மானுடவியல், இன்றைய தமிழ்ச் சமூகம் என மானுடவியல் சார்ந்து இருபதிற்கு மேலான நூட்களை ஆய்வு செய்து எழுதினார்.
பக்தவத்சல பாரதி எழுதிய பாணர் இனவரைவியல் சங்க இலக்கியமும் முதல் உள்ள பாணர் சமூகத்தை பற்றிய நூல். பாணர் சமூகத்தின் பதினெட்டு உட்பிரிவுகளையும் இந்நூலில் ஆய்வு செய்து பட்டியலிட்டார். வீரயுக காலத்தில் பல்வேறு பணிகளில் இருந்த பாணர் சமூகம் சங்க காலத்தில் ஐந்திணைக்கும் பொதுவாக வாழ்ந்தனர். அவர்கள் சங்க காலம் முதல் சமகாலம் வரை எப்படி பரிணாமம் கொண்டனர் என்பதை ஆராயும் நூல் பாணர் இனவரைவியல். தமிழக உணவுவகைகள் பற்றி வெவ்வேறு எழுத்தாளர்கள் ஆய்வு செய்ததை தொகுத்து தமிழர் உணவு என்னும் நூலை உருவாக்கினார். அதன் தொடர்ச்சியாக சங்க கால தமிழர் உணவு என்னும் நூலை எழுதினார். இந்நூல் சங்க கால தமிழர் உணவு வகைகள் ஐந்திணையிலும் எப்படி பரிணாமம் கொண்டது என்பதை ஆராயும் நூல்.
தொடர்ந்து மானுடவியல் பண்பாட்டு ஆய்வினை செய்து வந்த பக்தவத்சல பாரதி முக்கிய பண்பாட்டு நூல்களை பதிப்பதிலும், மொழிபெயர்ப்பதிலும் ஆர்வம் கொண்டார். யாழ்பாணம் பல்கலைகழகத்தில் உள்ள் என். சண்முகசுந்தரம் எழுதிய துர்க்கையின் புதுமுகம் என்னும் ஈழ மானுடவியல் சார்ந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தார். இலங்கை - இந்திய மானுடவியல் ஆய்விற்கும், மலைவாசம் பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள் சார்ந்த ஆய்விற்கு இணையாசிரியராக பணியாற்றினார். இராபர்ட் டி.ஹார்டுகிரேவ் எழுதிய தமிழக நாடார்கள் நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.
’கி.ரா வின் கரிசல் பயணம்’ என்னும் இவரது நூல் கி. ராஜநாராயணனின் இலக்கியத்தை மானுடவியல் பார்வையில் ஆராயும் ஆய்வு நூல். இலக்கிய மானுடவியல் என்னும் நூலையும் பக்தவத்சல பாரதி எழுதியுள்ளார்.
விருதுகள்
தமிழர் மானுடவியல் நூல் 2002-ம் ஆண்டின் சிறந்த மானுடவியல் நூலுக்கான தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசை பெற்றது. தொடர்ந்து மானுடவியல் கள ஆய்வில் உள்ள பக்தவத்சல பாரதி பன்னிரெண்டிற்கு மேலான விருதுகள் பெற்றுள்ளார்.
நூல்கள்
- பண்பாட்டு மானுடவியல் (1990)
- தமிழர் மானுடவியல் (2002, தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.)
- மானிடவியல் கோட்பாடுகள் (2005)
- தமிழகப் பழங்குடிகள் (2008)
- பாணர் இனவரைவியல் (2012)
- பிற்காலச் சமய விழாக்கள் (2012)
- வரலாற்று மானுடவியல் (2013)
- இன்றைய தமிழ்ச் சமூகம் (2013)
- இலக்கிய மானிடவியல் (2014)
- திராவிட மானிடவியல் (2014)
- இலங்கையில் சிங்களவர் (2016)
- பண்பாட்டு உரையாடல் (2017)
- சாதியற்ற தமிழர், சாதியத் தமிழர் (2018)
- இலங்கை – இந்திய மானிடவியல் (இணையாசிரியர் - 2004)
- மலைவாசம் (பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள், இணையாசிரியர் - 2019)
- பெண்ணிய ஆய்வுகள் (பதிப்பாசிரியர் - 1998)
- தமிழகத்தில் நாடோடிகள் (பதிப்பாசிரியர் - 2003)
- பண்டைத் தமிழர் சமய மரபுகள் (பதிப்பாசிரியர் - 2010)
- தமிழர் உணவு (பதிப்பாசிரியர் - 2011)
- சமூக-பண்பாட்டு மானுடவியல் (மொழிபெயர்ப்பு - 2005)
- துர்க்கையின் புதுமுகம் (மொழிபெயர்ப்பு - 2013)
- Coromandel Fisherman (1999)
- Vagri Material Culture (2009)
- கிராவின் கரிசல் பயணம் (2020)
- தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்
- தமிழர் பண்பாட்டு வரலாறு இன வரலாறு நவீன ஆய்வு முடிவுகள்
- தமிழக தொல்குடிகள் (பதிப்பாசிரியர், 2018)
- தமிழக நாடார்கள் (பதிப்பாசிரியர், 2019)
வெளி இணைப்புகள்
- மக்கள்தொகைக் கணக்கெடுப்பு - 2021 குரலற்றவர்களைக் கணக்கிலெடுக்குமா?, பக்தவத்சல பாரதி, தமிழ் இந்து, ஜனவரி 23, 2019
- பச்சைப் பாலைவனங்களில் பழங்குடிகள்!, பக்தவத்சல பாரதி, தமிழ் இந்து, ஆகஸ்ட் 16, 2018
- வட்டார வரலாறு - வழக்காறுகளை முன்வைக்கும் வரலாற்றியல், உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2011
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Apr-2023, 16:40:53 IST