under review

நெஞ்சில் ஒரு முள்

From Tamil Wiki
Revision as of 09:07, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
நெஞ்சில் ஒரு முள்

நெஞ்சில் ஒரு முள் (1956) மு. வரதராசன் எழுதிய நாவல். பெண்களின் அகவாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிப் பேசும் நாவல் இது.

எழுத்து, வெளியீடு

1956-ல் மு. வரதராசன் இந்நாவலை எழுதினார். அவருடைய 'தாயகம்' வெளியீடாக பிரசுரிக்கப்பட்டது.

கதைச்சுருக்கம்

நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவள் வடிவு. பெற்றோர் அவளைப் பி.ஏ. வரை படிக்கவைக்கிறார்கள். அவளுடைய திருமணத்திற்கு அவளது படிப்பே தடையாக அமைகிறது. அவளது கல்விநிலைக்கு ஒத்த மணமகன் கிடைக்காமையால் விஜயா என்னும் பெண் மூலமாக தன்னைவிட இருமடங்கு வயதான ஒரு பணக்காரனுக்கு இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்படுகிறாள். அவனோடு மனம் பொருந்தாத நிலையில் தான் கல்லூரியில் படித்தபோது பழகிய காதலனைச் சந்திக்கநேர்ந்து நெறிபிறழ்கிறாள். அதனால் கருத்தரித்தாலும் அதை மறைத்து, தன் கணவனோடு வாழ்ந்து குழந்தையைப் பெற்றுவளர்த்துப் படிக்கவைக்கிறாள். மகனுக்குத் திருமணம் செய்யவேண்டிய வேளையில் கணவன் இறந்து விடுகிறான். தன் மகன் தன் காதலனின் மகளையே காதலிப்பதை அறியும் வடிவு அவர்கள் திருமணத்தைத் தடுக்கப் போராடுகிறாள். உடன்பிறந்தவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தடுக்கப்பெற்றதைக் குறிப்பாகப் புலப்படுத்துவதுடன் புதினம் நிறைவடைகிறது.

இலக்கிய இடம்

பாலியல் சுதந்திரம் எல்லை மீறலாகாது என்பதையும் பெண்கல்வி பற்றிய சரியான கண்ணோட்டம் சமுதாயத்தில் இன்னும் ஏற்படவில்லை என்பதையும் மு.வ.வின் 'நெஞ்சில் ஒரு முள்' புதினம் உணர்த்துகிறது என்று அவ்வை நிர்மலா மதிப்பிடுகிறார். இந்நாவல் வடிவு,விஜயா,கிந்திரா, கீதா, மங்கையர்க்கரசி என வெவ்வேறு பெண் கதைமாந்தர்கள் வழியாக சமூக உறவுகளில் பெண்கள் சிக்கியிருக்கும் நிலை பற்றி விவாதிக்கிறது. பிரெஞ்சுப் பெண் ஒருத்தி கூறுவது போல் வரும் 'ஒருவன் ஒருத்தி என்று வாழ்வதுதான் நாகரிகம். பொருத்தமில்லை யானால் விட்டு விலகுவதற்கு இருசாரார்க்கும் உரிமை வேண்டும்’ என்னும் வரியே நாவல் வலியுறுத்த விரும்பும் கருத்து.

இந்நாவல் மு.வ பாலுறவு பற்றி கொண்டிருந்த கருத்துக்களை வெவ்வேறு கதைமாந்தர் வழியாக முன்வைக்கும் அமைப்பு கொண்டது. தமிழகத்தில் ஆண் பெண் உறவு தொடர்ச்சியான மறுபரிசீலனைக்குள்ளான காலகட்டத்தில் ஒரு விவாதத்தை உருவாக்க முற்பட்டமையால் இந்நாவல் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாக கருதப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page