under review

தென்னூல்

From Tamil Wiki
Revision as of 12:17, 18 May 2022 by Kavitha (talk | contribs)
தென்னூல்

தென்னூல் (1991) ச.பாலசுந்தரம் எழுதிய இலக்கண நூல். தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் வரையிலான தமிழ் இலக்கணநூல்களின் வரிசையில் நவீனச் சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய இலக்கண நூல். செய்யுளில் அமைந்தது.

எழுத்து, வெளியீடு

’தொல்காப்பியம் அதன்பின் ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகளுக்கு பின்னர் வீரசோழியம் நேமிநாதம் நன்னூல் என்று வரிசையாக இலக்கண நூல்கள் தோன்றின. ஆனால் தொல்காப்பியம் தவிர அதன் பின்னர் தோன்றிய நூல்கள் எவையும் சரிவர இலக்கிய இலக்கண விதிகள் அமைக்கவில்லை. தொல்காப்பியத்தை தவிர ஏனையவை அக்காலகட்ட மொழியின் இயல்புகளைப் பிரதிபலிக்கவில்லை’ என்று ஆசிரியர் ச.பாலசுந்தரம் கூறுகிறார். அவர் தென்னூல் என முழுமையான இலக்கண நூல் ஒன்றை உருவாக்குவதற்கான காரணம் இதுவே.

1991-ல் தஞ்சாவூர் தாமரை வெளியீட்டகம் தென்னூலை வெளியிட்டது. மூன்று பகுதிகள் கொண்ட இந்நூலின் முதல் இரண்டு பகுதிகள் ஒரு நூலாகவும் மூன்றாம் பகுதி இன்னொரு நூலாகவும் வெளிவந்தது.

நூல் அமைப்பு

எழுத்து, சொல், இலக்கணம் என மூன்று பகுப்புகளாக இந்நூல் அமைந்துள்ளது. செறிவாகச் சொல்லவும், மனப்பாடத்துக்கு உகந்ததாக இருக்கவும் இந்நூலை யாப்பில் அமைத்துள்ளார் ஆசிரியர். எழுத்து படலத்துக்கும், சொல் படலத்தில் பதினொரு இயல்களுக்கும் ஆசிரியரே உரையும் அளித்துள்ளார்.

எழுத்து படலம்

342 நூற்பாக்களில் 14 இயல்கள் கொண்டது இது

  1. தோற்றம்
  2. வகைவரி
  3. குறியீடு
  4. அளவை
  5. இனம்முறை
  6. மயக்கம்
  7. மொழிமுதல்நிலை
  8. மொழிஇறுதிநிலை
  9. இடைநிலை
  10. மாற்றொலி எழுத்துக்கள்
  11. பிறமொழி எழுத்துக்கள்
  12. பிறப்பியல்
  13. கிளவியியல்
  14. புணரியல்
சொற்படலம்

307 நுற்பாக்கள் 14 இயல்களாக அமைந்துள்ளது

  1. மொழியமைப்பியல்
  2. பெயரியல்
  3. வினையியல்
  4. இடைச்சொல்லியல்
  5. உரிச்சொல்லியல்
  6. தொகையியல்
  7. ஆகுபெயரியல்
  8. எச்சவியல்
  9. வழாநிலை-வழுவமைதி
  10. செப்புவினாவியல்
  11. மரபுவழக்கு
  12. தொடரியல்
  13. கூற்றியல்
  14. ஒழிபியல்
இலக்கியப் படலம்

இப்படலம் 789 பாக்களால் 24 இயல்களாக அமைந்துள்ளது

  1. பாயிரவியல்
  2. ஈரேழ் திணையியல்
  3. இருவகை கைக்கோளியல்
  4. சுவையியல்
  5. அணியியல்
  6. பொருள்மடபியல்
  7. யாப்பியல்
  8. இயற்பாவியல்
  9. இசைப்பாவியல்
  10. உரைப்பாவியல்
  11. உரையியல்
  12. நூலியல்
  13. காவிய இயல்
  14. புராணவியல்
  15. கதைபொதிப் பாடலியல்
  16. சிற்றிலக்கியவியல்
  17. செய்யிள்மாலையியல்
  18. சிறுகதையியல்
  19. புதினவியல்
  20. நாடகவியல்
  21. கட்டுரையியல்
  22. திறனாவியல்
  23. ஒப்பியலாய்வியல்
  24. ஒழிபியல்

சிறப்பு

இந்நூல் மரபான இலக்கண முறையில் அமைந்திருந்தாலும் புதுக்கவிதை (உரைப்பாவியல்) நாவல் (புதினவியல்) சிறுகதை (சிறுகதையியல்) என இந்நூற்றாண்டில் உருவான இலக்கிய வடிவங்களுக்கும் இலக்கணம் வகுக்கிறது. எழுத்து மற்றும் சொல் படலங்களிலும் இன்றைய உரைநடையையும் இன்றைய சொற்களையும் கருத்தில்கொண்டுள்ளது.

உதாரணமாக

தைதிகழ் காலமும் இடமும் சூழலும்

வண்ணனை விளக்கமும் நிகழ்ச்சிக் கோவையும்

உறுப்பினர் பேச்சும் செய்கையும் சுவையும்

திருப்பமும் கதையின் குறிக்கோள் நோக்கி

ஒத்தியைந்து நடத்தல் ஒருமைப்பாடாம்

என்று சிறுகதை இலக்கணம் வரையறை செய்யப்படுகிறது. நவீன திறனாய்வாளர்களான க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா போன்றவர்கள் அளித்த அதே வரையறையே இந்நூலில் செறிவாக சூத்திரவடிவில் அளிக்கப்பட்டுள்ளது.

இணைப்புகள்

தென்னூல் இணையத்தில் தரவுறக்கம் செய்ய

https://drive.google.com/file/d/1cT1OtyhtlTBuDG1WB7m5zhdBlUfhxsP6/view

உசாத்துணை


✅Finalised Page