under review

து.ஆ.தனபாண்டியன்

From Tamil Wiki
Revision as of 09:04, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
தனபாண்டியன்

து.ஆ.தனபாண்டியன் ( அக்டோபர் 1, 1921-1997 ) தமிழிசை ஆய்வாளர். பண் அமைப்பாளர். இசைப்பேராசிரியர். தமிழிசை முன்னோடியான தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் கொள்ளுப்பெயரர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறையின் முதல் பேராசிரியராக விளங்கினார்.

பிறப்பு, கல்வி

பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன் தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதரின் பெயரர். ஆபிரகாம் பண்டிதரின் பண்ணிசையை இசைமாநாடுகளில் வீணையில் வாசித்துக்காட்டியவர்.

ஆபிரகாம் பண்டிதரின் மகள் மரகதவள்ளிக்கும் துரைப்பாண்டியனுக்கும் அக்டோபர் 21,1921 அன்று தூத்துக்குடியை அடுத்த சேர்வைக்காரன் மடம் என்னும் சிற்றூரில் தனப்பாண்டியன் பிறந்தார். குடும்பச்சூழலில் இசைக்கல்வி பெற்றார். செய்தி விளம்பரத்துறையில் பட்டயப்படிப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

மத்திய அரசின் செய்தி - ஒலிபரப்புத் துறையின் செய்திப் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார். களச்செய்தியாளராகப் பணியாற்றினார். 1962 முதல் 1979 வரை சென்னை அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவுத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இசைப்பணி

இசை ஆய்வு

அரசுப்பணியில் இருக்கையிலேயே தனபாண்டியன் சென்னை வானொலியில்  "பி" கிரேட் இசைக் கலைஞராகவும் செயல்பட்டார்.  தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியாரின் பெத்லகேம் குறவஞ்சி, ஞான நொண்டி நாடகம், வீரமாமுனிவரின் தேம்பாவணி, எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை இயற்றிய இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய தேவாரம் போன்ற கிருத்துவ படைப்புகளுக்கு இசையமைத்து, கதாகாலட்சேப வடிவங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான முனைவர் வ.ஐ.சுப்பிரமணியத்தின் அழைப்பின் பேரில் ஜனவரி 27,1983 அன்று பல்கலைக்கழகத்தின் முதல் இசைத்துறைப் பேராசிரியராகப் பணியேற்றார். தமிழிசை ஆய்வாளராகவும் பண்ணமைப்பாளராகவும் பணியாற்றினார். ஆபிரகாம் பண்டிதர் வகுத்த இசை நெறிகளின் அடிப்படையில் 32 புதிய இராகங்களை உருவாக்கி அவற்றில் கீதம், சுவரஜதி, வர்ணம், கீர்த்தனைகளை இயற்றினார். இவை ’புதிய இராகங்கள்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலுக்கான இசைப்பாடல்களை ச.பாலசுந்தரம் இயற்றினார். 1991 அக்டோபர் வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியில் செயலாற்றினார்

தனபாண்டியன் புல்லாங்குழல் கலைஞர். புல்லாங்குழலின் சுருதி அமைப்பைப் பற்றி இவர் எழுதிய ’புல்லாங்குழல் - ஓர் ஆய்வு’ (1991) முக்கியமான இசைநூல். 'நுண்ணலகுகளும் இராகங்களும்' என்ற தலைப்பில் தமிழ்ப்பண்களின் பாலை அமைப்பு பற்றிய நூலை எழுதினார். இராகங்களில் என்னென்ன சுரங்கள் நுண்ணலகுகளுடன் வருகின்றன என்பதனை குறிப்பிட்டுள்ளார். அதோடு 'இசை ஆய்வாளர்கள் நுண்ணலகுகள் பற்றித் தெரிந்துகொள்ள இராகங்களின் சிறப்பியல்புகளையும், இன்சுவையினையும் அறிந்து, அனைவரும் பயன்பெறும் வகையில் இராகங்களில் வரும் நுண்ணலகுகளின் விவரங்களை விவரித்துள்ளார். தமிழிசை என்பது 24 அலகுகளும், 48, 96 என்று பல்கிப்பெருகும் நுண்ணலகுகளும் கொண்டது என்பதை விளக்கியுள்ளார்’ என்று ஆய்வாளர் பா.தேவி யசோதா குறிப்பிடுகிறார்

’இசையுடன் இறைவழிபாடு’, ’இசை வழி இறை பணி’, ’இசைத்தமிழ் வளர்த்த கிறித்துவப் பெரியார்கள்’ ஆகிய நூல்களையும் தனபாண்டியன் எழுதினார். அவர் எழுதிய ஏராளமான ஆய்வரங்கக் கட்டுரைகள் தொகுக்கப்படவில்லை.

இசை வரலாறு

'இசைத்தமிழ் வரலாறு' என்னும் தலைப்பில் தமிழிசை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதினார். முதல் தொகுதி இசைத்தமிழின் தொடக்கக்காலம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரை பதிவு செய்துள்ளது. இரண்டாவது தொகுதி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பதிவு செய்கிறது. மூன்றாவது தொகுதி பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை வந்துள்ள இசைத்தமிழ் வரலாற்றை எடுத்துரைக்கிறது.

ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கை வரலாற்றை 1984-ல் எழுதினார். இசைத்தமிழ் பேரறிஞர்கள் குறித்து இவர் ஆற்றிய சொற்பொழிவுகளையும், மற்றவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளையும் தொகுத்து 'இசைத்தமிழ் பேரறிஞர்கள்' என்னும் நூலை வெளியிட்டுள்ளார்.

இசை நிகழ்த்தல்

தனபாண்டியன் சிறந்த பாடகர். வாய்ப்பாட்டுக் கலைஞராகப் பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது இவர் தயாரித்த 25 இசை நிகழ்ச்சிகள் வானொலியில் ஒலி பரப்பப்பட்டுள்ளன. கதா காலட்சேபத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு 30 இசைச்சொற்பொழிவுகளையும், 60 பக்தி இசைப் பாடல்களையும் பாடியுள்ளார். எச்.எம்.வி. நிறுவனத்தின் வாயிலாகக் கிறித்துவ பக்தி இசைப் பாடல்கள் அடங்கிய 12 இசைத் தட்டுகளையும் வெளியிட்டுள்ளார்.

சுவரக்குறிப்பு அமைத்தல்

தனபாண்டியன் மூன்று சுவரக்குறிப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். ஓதுவார்களை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வந்து, மூவர் திருமுறைப்பாடல்களை பாடச்சொல்லி அதிலிருந்து 75 பாடல்களுக்கு பண், அதற்கிணையான இராகம், தாளம் ஆகியவற்றை அறிந்து சுவரக்குறிப்புகளை எழுதினார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப்பாடல்களையும் அதே வடிவில் கலைஞர்களை கொண்டு பாடவைத்து, அதற்குரிய சுவரக்குறிப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். மூவர் திருமுறைகள், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப்பாடல்கள் ஆகிய நூல்களாக அவை தஞ்சை தமிழ்ப்பல்கலையால் வெளியிடப்பட்டன. கிருஸ்துவர்களுக்கான கர்நாடக இசைப்பயிற்சி நூல் ஒன்றை சுவரக்குறிப்புகளுடன் வெளியிட்டார். இது அவருடைய இறுதி நூல்.

கல்விப்பணி

பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இசைத்துறைப் பாடத்திட்டக் குழுக்களில் உறுப்பினராகவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

மறைவு

தனபாண்டியன் 1997-ல் தனது 76-வது வயதில் மறைந்தார்

விருதுகள்,பட்டங்கள்

  • 1976-ல் மதுரை இறையியல் கல்லூரி, "இசைக்கதைச்செல்வர்’ பட்டம்
  • 1981-ல் உலகத் தமிழ்க் கிறித்துவ மாநாடு, "அருட்கலைஞர்" பட்டம்
  • 1990-ல் கலைமாமணி.

நூல்கள்

ஆய்வுகள்
மதம்
  • ஜெயஜீவியம்
வரலாறுகள்
  • புதிய இராகங்கள் (ச. பாலசுந்தரத்துடன் இணைந்து)
  • ஆபிரகாம் பண்டிதர் வரலாறு
  • இசைத்தமிழ்ப் பேரறிஞர்கள் (தொகுப்பு)
  • இசை வளர்த்த கிறித்துவப் பெரியார்கள்
சுவரக்குறிப்பு நூல்கள்
  • மூவர் திருமுறைகள்
  • சங்கரதாசு சுவாமிகளின் நாடகப்பாடல்கள்
  • கிருத்துவர்களுக்கான கர்நாடக இசைப்பயிற்சி நூல்

உசாத்துணை


✅Finalised Page