தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளை

From Tamil Wiki
Revision as of 17:37, 10 August 2022 by Subhasrees (talk | contribs) (தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளை - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளை (1879 - பிப்ரவரி 23, 1960) கிடிகிட்டி என்னும் தாளவாத்தியல் புகழ் பெற்ற கலைஞர்.

இளமை, கல்வி

ஸ்ரீனிவாச பிள்ளை மாயவரத்துக்கு அருகே உள்ள தில்லையாடி என்னும் ஊரில் 1879-ல் அகிலாண்டம் பிள்ளை என்னும் தமிழாசிரியருக்கும் காமாக்ஷியம்மாளுக்கும் பிறந்தார்.

ஸ்ரீனிவாச பிள்ளை முதலில் தில்லையாடி இருளப்பன் என்பவரிடம் மிருதங்கம் கற்றார். இருளப்பன் வாசித்து வந்த நாட்டியக் குழுவின் நட்டுவனாரிடம் அறிமுகமாகி ஸ்ரீனிவாச பிள்ளை நாட்டியக் கலையும் கற்றார். ஏழாண்டுகளுக்குப் பிறகு தன் குல முன்னோர்கள் வாசித்து வந்த தவிற் கலை மீது ஸ்ரீனிவாச பிள்ளைக்கு ஆர்வம் உண்டானது. இரண்டாண்டுகளில் அதிலும் தேர்ச்சியடைந்தார். ஒருமுறை வீதிஉலாவில் ஒருவர் கிடிகிட்டி வாத்தியம் இசைப்பதைப் பார்த்து கிடிகிட்டியில் வாசித்து சாதகம் செய்யத் தொடங்கினார். அந்த வாத்தியத்தில் சிறந்த தேர்ச்சி பெற்று அதனையே தன் முதன்மை வாத்தியமாக ஆக்கிக் கொண்டார்.

தனிவாழ்க்கை

ஸ்ரீனிவாச பிள்ளைக்கு ரத்தினம்மாள் என்ற ஒரு மூத்த சகோதரி.

அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளையின் மூத்த சகோதரி செல்லக்கண்ணம்மாளை மணந்தார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. தன் சகோதரி ரத்தினம்மாளின் பேத்திகளைத் தன் குழந்தைகளாக வளர்த்தார்.

மிருதங்கம், தவில், நாட்டியக் கலை தவிர குஸ்தி, சிலம்பு விளையாட்டுகளிலும் வல்லவராக இருந்தவர். பொறையார், திருவிடைச்சுழி, தில்லையாடி, திருக்கடையூர், கோட்டுச்சேரி என்னும் ஐந்து கிராமங்களுக்கு நாட்டாண்மைக்காரராகவும் இருந்தார்.

இசைப்பணி

ஸ்ரீனிவாச பிள்ளை ராமநாதபுர ஆஸ்தான வித்வானாக இருந்தார். தருமபுரம் போன்ற ஆதீனங்களிலும் செட்டிநாட்டுப் பகுதிகளிலும் ஸ்ரீனிவாச பிள்ளையின் கிடிகிட்டி கச்சேரிகள் பல நிகழ்ந்தன.

முருக பக்தராக விளங்கிய தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளை யாழ்ப்பாணத்துக்குப் பலமுறை சென்று வாசித்து பல தங்கப் பதக்கங்களும் சாதராக்களும் பெற்றிருக்கிறார். தன் 59ஆவது வயதில் கிடிகிட்டி வாசிப்பதை நிறுத்திவிட்டார்.

உடன் வாசித்த இசைக்கலைஞர்கள்

தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளையுடன் நாதஸ்வரம் வாசித்த கலைஞர்கள்:

தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மாணவர்கள்

தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளையிடம் தவில் பயின்ற மாணவர்களில் முக்கியமானவர்கள்:

  • காரைக்கால் பழனிவேல் பிள்ளை
  • காரைக்கால் சோணாசிப் பிள்ளை
  • தண்டபாணிப் பிள்ளை
  • பொறையார் வேணுகோபால பிள்ளை

ஸ்ரீனிவாச பிள்ளையிடம் நாட்டியம் பயின்றவர்கள் சிலர்:

  • குமுதவல்லி (திருக்கடையூர் சின்னையாத் தவில்காரரின் தங்கை)
  • ஆச்சியம்மாள் (திருக்கடையூர் சின்னையாத் தவில்காரரின் தங்கை)
  • சரஸ்வதி (பேத்தி முறை)

காரைக்கால் நடேச நாதஸ்வரக்காரரின் மகளும், பிரபல நாட்டிய வித்வான் கே.என். தண்டாயுதபாணிப் பிள்ளையின் சகோதரியுமான அஞ்சுகம் என்பவர் இவரிடம் மிருதங்கம் பயின்றார்.

மறைவு

தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளைக்கு தில்லையாடி குருமூர்த்தி சன்னிதியில் சதாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு மூன்று மாதம் கழித்து பிப்ரவரி 23, 1960 அன்று சென்னையில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013