under review

தினவர்த்தமானி

From Tamil Wiki

தினவர்த்தமானி ( 1855 ) தமிழில் வெளிவந்த தொடக்ககால செய்தி, இலக்கிய வார இதழ். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த இந்த இதழின் ஆசிரியராக பெர்சிவல் பாதிரியார் பணிபுரிந்தார். அவருக்குப் பின் சி.வை. தாமோதரம் பிள்ளை இதன் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து கரோல் விசுவநாதப் பிள்ளை என்ற தமிழறிஞரின் மேற்பார்வையில் இவ்விதழ் நடைபெற்றது.

பதிப்பு, வெளியீடு

தினவர்த்தமானி ஒரு வார இதழ். 1855 முதல், வாரா வாரம் சனிக்கிழமை வெளிவந்தது. பீட்டர் பெர்சிவல் இதன் ஆசிரியர். அவருக்குப் பின் சி.வை. தாமோதரம் பிள்ளை இதன் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து கரோல் விசுவநாதபிள்ளை ஆசிரியராகப் பணிபுரிந்தார். திராவிடன் அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டது. எட்டு பக்கங்களுடன், செய்தித்தாள் வடிவில் வெளியான இவ்விதழின் ஆண்டு சந்தா, தமிழர்களுக்கு - மூன்று ரூபாய்; ஐரோப்பியர்களுக்கு - ஐந்து ரூபாய். தனிப் பிரதி விலை இரண்டனா. ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது. இந்த இதழ் வெளிவருவதற்கு அப்போதைய பிரிட்டிஷ் அரசு ஆண்டு தோறும் இருநூறு ரூபாய் நிதி உதவி செய்தது.

உள்ளடக்கம்

ஆங்கிலேயர்கள் தமிழ் மொழி பற்றி அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் இந்த இதழ் பயன்பட்டது. அறிவியல் வளர்ச்சி பற்றிய செய்திகளுக்கும், இலக்கிய ஆய்வுகளுக்கும் இந்த இதழ் முக்கியத்துவம் அளித்தது. பொது அறிவுக் கட்டுரைகள், இலக்கியம் சார்ந்த கதைகள், கட்டுரைகள் இதில் வெளியாகின. இவ்விதழில் அஷ்டாவதானம் வீராச்சாமிச் செட்டியார் எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘விநோதரசமஞ்சரி’ என்னும் பெயரில் நூலாக வெளிவந்தன.

பங்களிப்பாளர்கள்

  • பெர்சிவல் பாதிரியார்
  • சி.வை. தாமோதரம் பிள்ளை
  • கரோல் விசுவநாத பிள்ளை
  • அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
  • சே.ப. நரசிம்மலுநாயுடு

மற்றும் பலர்

இதழ் பற்றிய செய்திகள்

இவ்விதழ் பற்றி இதன் பங்களிப்பாளர்களில் ஒருவராக இருந்த சே.ப. நரசிம்மலுநாயுடு, “குடிகளுக்கு அறிவை விருத்தியாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் (பிரிட்டிஷ்) கவர்மென்டால் மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துத் தினவர்த்தமானி (வாரப்பதிப்பு) என்னும் பெயரால் கனம் பெர்சிவல் அவர்களையும் ஸ்ரீ விஸ்வநாதப் பிள்ளையவர்களையும் பத்திராதிபர்களாக நியமித்துப் பதிப்பித்து வந்தார்கள். அவ்விருவருவர்களும் இறந்த பிறகு தினவர்த்தமானியும் இறந்துவிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினவர்த்தமானி பற்றி சுதேசமித்திரன் ஆகஸ்ட் 3, 1895 இதழ், “வர்த்தமான பத்திரிகைகள் நம் சமஸ்தானத்தில் பிறந்துலாவச் செய்ய வேண்டுமெனும் கருத்தால் சர்க்கார் தினவர்த்தமானிக்கு வருஷம் இருநூறு ரூபாய் தந்து வந்தார்கள். பிறகிட்டு இங்கங்கு பத்திரிகைகள் பிறந்திட்டதினால் ஈந்து வந்ததை அம்மட்டோடு நிறுத்தினார்கள். இஷ்டர்கள் பலம் கொண்டு அது சில தினம் நடைபெற்று வந்தது. தம் கைப்பணம் செலவிட்டு கனம் விஸ்வநாதப் பிள்ளை அவர்கள் சில காலம் நடத்தியும், இஷ்டர்கள் ஆமளவிற்கு அதன் மீது கருத்து செலுத்தாது போனதினால், அவர் அதை மெல்ல கைநழுவ விட்டார்கள். பிறகிட்டு ஒரு கம்பெனியால் இதை நடத்தியும் அவர்களாலும் மாளாது போயிற்று.” என்று குறிப்பிட்டுள்ளது. மா.சு.சம்பந்தன் தினவர்த்தமானி பற்றி இவ்வாறு சொல்கிறார். ‘தினவர்த்தமானி - பெரிய அளவில் (Largs Quarto ) 8 பக்கங்கள் கொண்டது . ஆண்டுக் கட்டணம் ஐரோப்பியர்க்கு ரூ 5 / - சுதேசியர்க்கு ரூ .3 /- இதில் செய்திகள் மட்டுமின்றி இலக்கியம் விஞ்ஞானம் முதலிய பொருள் குறித்தும் , வெளியிடப்பட்டது .அவ்வப்போது தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டும் வந்தது . சுதேச நிருபர்கள் தங்கள் கருத்துக்களைத் தாராளமாகத் தெரிவிக்க அனுமதிக்கப்பட்டார்கள் ! இவ்வார இதழைத் தமிழில் வெளி விடுவதற்கு வசதியாக இதன் ஆசிரியர் பெர்சிவல் பாதிரியார் ஆங்கிலத் தமிழ் அகராதியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது! இவ்வகையில் ஏற்பட்ட முதல் முயற்சியும் இதுதான் தினவர்த்தமானிக்கு ஈடாக அக்காலத்தில் வேறு இதழ்கள்-ல்லை’(தமிழ் இதழியல் வரலாறு)

முதல் இதழ் விவாதம்

தினவர்த்தமானி தான் தமிழின் முதல் இதழ் என்று மயிலை சீனி. வேங்கடசாமி சொல்கிறார் “பெர்சிவல் பாதிரியார் (Rev P. Percival) இதைத் தொடங்கி இதன் ஆசிரியராக இருந்தார். தினசரி பத்திரிகையின் பெரிய அளவில் அச்சிடப்பட்டது. செய்திகளுடன் இலக்கியம், விஞ்ஞானம் முதலிய கட்டுரைகளும் வெளிவந்தன. அரசாங்கத்தார் மாதம் 200 ரூபாய் இப்பத்திரிகைக்கு நன்கொடை அளித்தனர். பெர்சிவல் ஐயர் விலகிக் கொண்ட பிறகு இந்நன்கொடை நிறுத்தப்பட்டது. அவருக்குப் பிறகு ஏட்டுச் சுவடியிலிருந்து பல நூல்களைப் பதிப்பித்தவரான சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இதன் ஆசிரியராக சில காலம் இருந்தார். பிறகு விசுவநாத பிள்ளை இதன் ஆசிரியராக இருந்தார். தமிழில் செய்திகளை வெளியிட்ட முதல் பத்திரிகை இதுவே”. (19-ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்)

ஆனால் அயோத்திதாச பண்டிதர் ‘தமிழன்’ (21 ஏப்ரல் 1909) இதழில், “இச்சென்னை ராஜதானியில் ஆதியாகத் தமிழ்ப் பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டவர்களும் இக்குலத்தோர்களேயாகும். அதாவது புதுப்பேட்டை திருவேங்கிடசாமி பண்டிதர் ‘சூரியோதயப் பத்திரிக்கை’ என்னும் ஒன்றை வெளியிட்டிருந்தார்” என்றும், மற்றொரு கட்டுரையில், “இச்சென்னையில் பர்ஸீவேலையர் தமிழ்ப் பத்திரிக்கை வெளியிடுவதற்கு முன், புதுப்பேட்டையில் ‘சூரியோதயப் பத்திரிக்கை’யென வெளியிட்டுவந்த திருவேங்கிடசாமி பண்டிதரால் சித்தர்கள் நூற்களையும், ஞானக்கும்மிகளையும், தேரையர் வைத்தியம் ஐந்தூரையும், தன்விந்தியர் நிகண்டையும் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கின்றனர்” என்றும் குறிப்பிடுகிறார். பர்ஸீவேலையர் என அவர் குறிப்பிடுவது பீட்டர் பெர்ஸிவலைத்தான் என்றும், அவர் சொல்லும் இதழ் தினவர்த்தமானிதான் என்றும், குறிப்பிடும் ஆய்வாளர் ஜே.பாலசுப்ரமணியம் ”தினவர்த்தமானி’ 1855-ல் தொடங்கப்பட்டது ஆகும். அயோத்திதாசர் சொல்வது காலப்பிழை-ல்லை என்றால், ‘சூரியோதயம்’ இதழின் வரலாறு இன்னும் முற்பட்டதாகும்” என்கிறர்.

ஆய்வாளர் மா.சு.சம்பந்தன் தினவர்த்தமானிக்கு முன்பு வெளிவந்த தமிழ் இதழ்களை அட்டவணைப்படுத்துகிறார். “1831-ல் தமிழ் மாகசீன் ( The Tamil magazine ) என்ற பெயரில் . சென்னையிலிருந்த கிறித்துவ சமயப்பரப்புக் கழகம் ( TheMadras Christian Tract Society ) . ஒரு மாத இதழை முழுதும் தமிழிலேயே முதன் முதலில் வெளியிட்டுப் பெருமையடைந்துள்ளது . இது தமிழில் முழுதும் செய்திகள் கொண்டதாக இருந்தது ! 1833-ல் சென்னையில் விருத்தாந்தி என்ற பெயரில் வெளிவந்த இதழில் ,தமிழிலும் தெலுங்கிலுமாகச் செய்திகள் வெளியிடப்பட்டன என்று திரு ஜே . வாங் என்பவர் கூறியிருக்கிறார் . இதற்கு ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதரவு இருந்தும் 1838 க்குப் பிறகு மறைந்து போனது . 1835-ல் சென்னை யில் வெளியான மெட்ராஸ் கிரானிக்கல் ( The Madras

Chronicle ) எனும் பெயரில் வெளியான இதழில் , தமிழும் தெலுங்குடன் இடம் பெற்றது . 1855-ல் “ இராஜவர்த்தினி போதினி என்ற பெயரில் மாத மும்முறை இதழ் ஒன்று சென்னையில் வெளி வந்தது . இதில் ஆங்கில இதழ்களில் வெளியானவற்றின் மொழி பெயர்ப்புகளே இடம் பெற்றிருந்தது . 1852-ம் ஆண்டில் ரெவ . பி . பெர்சிவல் பாதிரியாரால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது . தினவர்த்தமானி என்னும் வார இதழாகும்” (தமிழ் இதழியல் வரலாறு)

ஆகவே தினவர்த்தமானி தமிழின் முதல் இதழ் அல்ல என்று ஆய்வாளர் முடிவு செய்கிறார்கள். 1831ல் வெளிவந்த தமிழ் மாகசீன் இதழே தமிழகத்தில் இருந்து வெளிவந்த முதல் இதழ். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த உதயதாரகை தமிழில் வெளிவந்த இரண்டாவது இதழ்.

நிறுத்தம்

எவ்வளவு காலம் ‘தினவர்த்தமானி’ இதழ் வெளிவந்தது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. பிரபல தெலுங்கு இதழியல் ஆய்வாளரான ஆருத்ராவின் குறிப்பு, 1872 வரை தினவர்த்தமானி இதழ் வெளிவந்ததாகக் கூறுகிறது.

இலக்கிய இடம்

தமிழில் செய்திகளை வெளியிட்ட தொடக்ககால இதழ் தினவர்த்தமானி. செய்திகள், அக்கால இலக்கியங்கள் ஆகியவற்றை வெளியிட்டது. ஆங்கில ஆட்சிக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் தொடர்பூடகமாக அமைந்தது. தொடர்ந்து வந்த பிற இதழ்களுக்கு வடிவமைப்பில், செய்திகளைத் தொகுத்துத் தருவதில், ‘தினவர்த்தமானி' இதழ், முன்னோடி இதழாக இருந்தது.

உசாத்துணை


✅Finalised Page