under review

ஜெகாதா

From Tamil Wiki
எழுத்தாளர் ஜெகாதா

ஜெகாதா (ஜெயகாந்ததாசன்; ரெ. குமரன்; குமரவேலு) (பிறப்பு: ஜனவரி 3, 1956) கவிஞர். எழுத்தாளர். தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் பணியாற்றினார். எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் இணைந்து 'அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம்' என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதன் மூலம் பல இலக்கியப் பயிற்சி முகாம்களை நடத்தினார். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

குமரவேலு என்னும் இயற்பெயர் கொண்ட ஜெகாதா, ஜனவரி 3, 1956 அன்று, இராமநாதபுர மாவட்டத்தில், ரெத்தினம் – சண்முகத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். இராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வி கற்றார். சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜெகாதா, திருவாடனையில், தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் பணியாற்றினார். மனைவி: திலகவதி. பிள்ளைகள்: ராதிகா, அருண்குமார்.

ஜெகாதா நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ஜெகாதா, நூலகங்களில் வாசித்து இலக்கிய அறிவு பெற்றார். ஜெயகாந்தன் மீது கொண்ட ஈர்ப்பால், ‘குமரவேலு’ என்னும் தன் பெயரை ‘ஜெயகாந்ததாசன்’ என்று மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமான ‘ஜெகாதா’ என்ற பெயரில் எழுதினார். கல்லூரியில் படிக்கும்போது, 'ஒரு நிழல் தயாராகிறது' என்னும் முதல் சிறுகதை, ‘முகவை முரசு’ இதழில் வெளியானது.

ஜெகாதா புத்தகங்கள்

கடலில் மூழ்கி சங்கு எடுத்து வரும் தொழிலாளர்களில் போராட்ட வாழ்வை மையமாக வைத்து ஜெகாதா எழுதிய ‘சமுத்திரக் குமாரர்கள்’ ஜெகாதாவின் முதல் புதினம். இப்புதினம் மதுரை காமராசர் பல்கலைக்கழக எம்.ஏ. தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டது.

ஜெகாதா தமிழின் முன்னணி இதழ்கள், நாளிதழ்கள் என 70-க்கும் மேற்பட்ட இதழ்களில் சிறுகதை, கட்டுரை, நாவல் தொடர்களை எழுதினார். நக்கீரன் வெளியீடுகளான ‘ஓம் சரவண பவ', 'இனிய உதயம்', 'பாலஜோதிடம்' போன்ற இதழ்களில் நூற்றுக்கணக்கில் இவரது படைப்புகள் வெளியாகின. 'ஓம் சரவண பவ' மாத இதழின் இலவச இணைப்பாக ஜெகதாவின் 300 பக்க 'மகாபாரதம்' நூல் வெளிவந்தது.

ஜெகாதா, ஜெயகாந்தனுடன் இணைந்து 'அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம்' என்பதைத் தோற்றுவித்தார். அதன் மூலம் பல இலக்கியப் பயிற்சி முகாம்களை நடத்தினார். ஜெகாதா 300-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் ‘நக்கீரன்' வெளியீடாக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்தன. ஜெகாதாவின் படைப்புகள் சில கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக வைக்கப்பட்டன. மாணவர்கள் சிலர் ஜெகாதாவின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டம் பெற்றனர்.

ஊடகம்

ஜெகாதா, திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சன் தொலைக்காட்சியில் இயக்கிய 'மகாபாரதம்' மெகா தொடருக்கு வசனம் எழுதினார்.

பொறுப்புகள்

  • தமிழ்நாடு கூட்டுறவுத் தணிக்கைத்துறை அலுவலர் சங்க உறுப்பினர்
  • கலை இலக்கியப் பெரு மன்ற உறுப்பினர்
  • அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளன நிறுவனர்

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை அமைப்பு, ஜெகாதாவின் 'கூட்டாஞ்சோறு' சிறுகதையை 1983-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுத்தது.
  • ஜெகாதாவின் பல்வேறு படைப்புகள் பல்வேறு இதழ்கள் நத்திய போட்டிகளில் பரிசு பெற்றன.
  • தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது (2015)

ஆவணம்

பேராசிரியர், முனைவர் செ. கிளிராஜ், ஜெகாதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து 2015-ல் வெளியிட்டது.

மதிப்பீடு

ஜெகாதா பொதுவாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், குறுநாவல்கள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள், இசை, திரைப்படம், வாழ்க்கை வரலாறு, ஆன்மீகம், இலக்கிய ஆய்வு, வரலாறு, சட்டம், கணினி, விளையாட்டு, சித்தர் நெறி என்று பல வகைமைகளில் அதிகம் நூல்களை எழுதிய எழுத்தாளராக ஜெகாதா அறியப்படுகிறார்.

நூல்கள்

  • அரவிந்த் கெஜ்ரிவால்
  • ஆட்சியை கவிழ்த்த ஆன்மீக குருமார்கள்
  • வெடியோசையால் உலகை விடியச் செய்தவர்கள்
  • உலகை மாற்றிப் போட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகள்
  • சிந்தனையை தூண்டும் 1000 விடுகதைகள்
  • சூப்பர் க்விஸ் அறிவு வேட்டை
  • 3581 உலகப் பழமொழிகள்
  • சகல விஷக்கடிகளுக்கும் சிரஞ்சீவி
  • அரிச்சந்திர காண்டம்
  • எங்கெங்கு காணினும்
  • சத்தியவான் சாவித்திரி
  • மேடையை மாற்றிய நாடக கலைஞர்கள்
  • இருபதாம் நூற்றாண்டின் இந்திய சினிமா
  • மறக்க முடியாத மங்கையர் திலகங்கள்
  • குழந்தைகளுக்கான மனோதத்துவ கதைகள்
  • உலக கோப்பை கிரிக்கெட் அட்டகாசங்கள்
  • ஈழக்கனவும் எழுச்சியும்
  • இத்தாலியின் யுத்தப்பேய் முசோலினி
  • ஹிட்லரின் அந்தரங்கக் காதலி
  • அழகிய அதிசயங்களான அரண்மனைகளும்
  • களம் பல கண்ட ஐதர் அலி
  • இல்லறத்துக்கு பின்பும் இளமையாய் இருக்க
  • பாம்பாட்டிச்சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • யூகிமுனிச் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • கருவூரார் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • புலிப்பாணிச் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • கொங்கணவச் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • தேரையர் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • இராமதேவர் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • காலாங்கிநாதர் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • காகபுசுண்டர் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • இடைக்காடர் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • சிவவாக்கிய சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • நந்தீசர் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • போகர் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • திருமூலர் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • அகத்தியர் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • பிரம்ம கோரக்கர் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • சடடைமுனிச் சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • பதஞ்சலி சித்தர் வாழ்வும் ரகசியமும்
  • கௌதம புத்தர்
  • ஆன்மீக மகுடம் ராமானுஜர்
  • வீரத்தின் அடையாளம் மராட்டிய சிவாஜி
  • ஆதிசங்கரர்
  • சீரடி சாய்பாபா
  • உலகை உலுக்கிய திகில் நாடகங்கள்
  • வரலாற்றை நடுங்கச் செய்த வீரத் தடயங்கள்
  • நுரையீரல் நோய் நீக்கும் ஆசனப் பயிற்சி
  • முதுகு வலியா மூட்டு வலியா
  • ராகவேந்திரர்
  • நரம்பு முறுக்கேற்றும் ஆசனப் பயிற்சி
  • சிறுநீரக நோய் விரட்டும் ஆசனப் பயிற்சி
  • ஆட்கொல்லி நோயை விரட்டும் யோகப் பயிற்சிகள்
  • மூலநோயை விரட்டும் முறையான ஆசனங்கள்
  • கருவிலே திருவான குருநானக்
  • வள்ளலார்

மற்றும் பல

உசாத்துணை


✅Finalised Page