under review

ஜி.அப்பாத்துரை

From Tamil Wiki
Revision as of 09:03, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
ஜி.அப்பாத்துரை

ஜி.அப்பாத்துரை (1890 - ஜனவர் 21, 1961) தமிழ் பௌத்த அறிஞர். தலித் இயக்கச் செயல்பாட்டாளர். திராவிடர் கழக அரசியல் செயல்பாட்டாளர். இதழாளர்.

பிறப்பு, கல்வி

ஜி.அப்பாத்துரை

ஜி.அப்பாத்துரை 1890-ல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். இளமையிலேயே கலைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் ஆர்வம் கொண்டிருந்தார்.

தனி வாழ்க்கை

1926-லிருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலாரில் இருந்து வெளிவந்த தமிழன் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார்.  இவருடைய மகள் அன்னபூரணியும் தலித் அரசியல் செயல்பாட்டாளர். அன்னபூரணிக்கும் ரத்தினசபாபதிக்கும் இடையேயான திருமண நிகழ்வு ஏப்ரல் 10, 1932-ல் பௌத்த சங்கத்தால் சுயமரியாதை இயக்கத்துடன் சேர்ந்து அமைக்கப்பட்டது. நிகழ்வில் பெங்களூர் பௌத்த சாக்கிய உபாசகர் பி,எம்.தருமலிங்கம் போதனாவுபசார வாழ்த்து அளித்தார். அவருடைய மகன் ஜெயராமனுக்கும் இந்திராணிக்கும் அக்டோபர் 14,1934-ல் ராகுகாலத்தில் சாதிமறுப்பு திருமணம் நடைபெற்றது.

பௌத்தப் பணி

ஜி.அப்பாத்துரை 1907-ல் க. அயோத்திதாச பண்டிதர் நடத்திவந்த தமிழன் இதழை வாசிக்கத் தொடங்கினார். தொடர்ந்து க.அயோத்திதாச பண்டிதர் நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டார். கிறிஸ்தவராக இருந்த இவர் 1911-ல் பௌத்தராக மாறினார். 1912-லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகைகளிலும் தமிழன் பத்திரிகையிலும் பௌத்தம், தலித் விடுதலை பற்றிய கட்டுரைகளை எழுதினார். 1914-ல் மயிலை பி.எம்.சாமி என்பவர் புத்தரை ஏசுவுடனும் முகமதுவுடனும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரைக்கு ஜி.அப்பாத்துரை விரிவான மறுப்பு எழுதினார். கிறிஸ்துவும் முகமதுவும் கடவுளின் தூதர்கள் அல்லது மைந்தர்கள், புத்தர் அப்படி தன்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ளவில்லை என அதில் கூறியிருந்தார்.

ஜி.அப்பாத்துரை எம்.ஒய். முருகேசம் இ.நா.அய்யாக்கண்ணு புலவர் ஆகியோருடன் இணைந்து 'இளைஞர் பௌத்த சங்கத்தை’ கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார். பௌத்தம் சார்ந்து சிறு நூல்கள் பல எழுதினார். ஏ.பி.பெரியசாமி புலவருடன் இணைந்து சாக்கிய சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். 1954-ல் அம்பேத்கர் கோலாருக்கு வந்து பௌத்த சாக்கிய சங்கச் செயல்பாடுகளைக் கேட்டு அறிந்துகொண்டார். பின்னாளில் அம்பேத்கர் பௌத்தமதம் மேற்கொண்டதற்கு அது தூண்டுதலாக அமைந்தது[1].

இதழியல்

அயோத்திதாச பண்டிதர் 1914-ல் மறைந்தார். அயோத்திதாசருக்குப் பிறகு தமிழன் இதழை சிறிதுகாலம் அவரது மகன் பட்டாபிராமன் நடத்தி வந்தார். அதன் பிறகு தமிழனை எம்.ஒய். முருகேசம் பின்பலத்துடன் ஜி.அப்பாத்துரை கொண்டு வந்தார். அப்பாதுரையாரை ஆசிரியராகவும் வி.பி.எஸ். மணியரை பதிப்பாளராகவும் கொண்ட தமிழன் 1921 முதல் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. எம்.ஒய். முருகேசம் மறைந்தபோது தமிழன் வெளிவருவது தடைப்பட்டது. ஜி.அப்பாத்துரை முயற்சியால் தமிழன் மீண்டும் 1926-ஆம் ஆண்டு ஜூலை முதல் வாரத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது.

தமிழன் இதழில் தொடர்ந்து சாதிமறுப்பு குறித்து எழுதிவந்தமையால் மைசூர் அரசிடம் பலர் புகார் சொன்னதை ஒட்டி 1934-ல் தமிழன் அரசு தடை செய்யப்பட்டது. ஈ.வெ.ராமசாமி பெரியார் தொடர்ச்சியாக தமிழன் தடைக்கு எதிராக எழுதினார். ஜி.அப்பாத்துரை தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். வேறொரு பேரில் இதழை நடத்திக்கொள்ள நீதிமன்றம் கூறியும் அவர் ஒப்பவில்லை. தமிழன் பின்னர் வெளிவரவில்லை.

அரசியல்

அயோத்திதாச பண்டிதர் முன்வைத்த தலித் அரசியலை முன்னெடுத்தார். 1917-ல் மாண்டேகு சேம்ஸ் போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை விளக்கி எழுதினார். 1924-ல் காந்தியுடன் சமுதாயச் சீர்த்திருத்தத்தைப் பற்றி நீண்ட விவாதம் ஒன்றை நடத்தினார். அயோத்திதாசருக்குப் பின் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் நடத்திய திராவிட இயக்கத்தின் ஆதரவாளர் ஆனார். தன் மகளுக்கும் மகனுக்கும் சாதிமறுப்பு மணங்களை பௌத்த மரபின்படி சுயமரியாதை இயக்க ஆதரவுடன் நடத்தினார்.

தாழ்த்தப்பட்ட தமிழர்களின் குடும்ப, சமூக வளர்ச்சிக்கு மதுவிலக்கை ஒரு முக்கிய காரணியாய் கொண்ட அப்பாதுரை ஏப்ரல் 27,1931 அன்று மது ஒழிப்பு மாநாடு ஒன்றைக் கூட்டினார். அன்றைய சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் டி.வி. ராஜகோபால் தலைமை தாங்கினார். தொடர்ந்து மது அருந்துவதில்லை என்று சபதமேற்கும் கூட்டங்கள் கோலார் தங்கவயலெங்கும் நடைபெற்றன.

1938-ல் தமிழ்மாகாண முதல்வராக இருந்த சி.ராஜகோபாலாச்சாரியார் இந்தி படிப்பை கட்டாயமாக்கியபோது அதற்கு எதிராக உருவான போராட்டங்களில் ஜி.அப்பாத்துரை ஈ.வெ.ராமசாமி பெரியாருக்கு துணைநின்றார். கோலார் பௌத்த சாக்கிய சங்கம் போராட்டத்தில் கலந்துகொண்டது. ஜூன் 26,1938-ல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் ஜி.அப்பாத்துரை பேசினார்.

பிரிட்டிஷ் அரசு அறிவித்த லண்டன் வட்டமேசை மாநாட்டை (1930 -1932) அப்பாதுரை வரவேற்று அதில் தாழ்த்தப்பட்டோரின் உண்மையான பிரதிநிதிகள், அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும்தான் என்று தங்கவயல் பவுத்த சங்கத்தின் சார்பில் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டுக்கு பவுத்த சங்க முக்கிய பிரகர் வி.வி. டேவிட் பெருமாள் அவர்களையும் இணை சேர்த்து தந்தி கொடுத்தார்.

அப்பாதுரையாரின் வழிகாட்டுதலில் வி.கே. ஆறுமுகம் மாநாட்டுச் செயலாளர் பொறுப்பேற்பில், மே 21, 1932 அன்று நாள் கோலார் தங்கவயல் சாம்பியன் ரீப்ஸ் பவுத்த சங்கத்தின் முகப்பில் நான்காவது தென்னிந்திய பவுத்த மாநாடும், 23-ஆம் நாள் மூன்றாவது ஆதி திராவிடர் மாநாடும், 25-ஆம் நாள் முதலாவது சுயமரியாதை மாநாடும் பவுத்த அறிஞர் பேராசிரியர் பி. லட்சுமி நரசு, திருப்பத்தூர் ஏ.பி. பெரியசாமி புலவர், குத்தூசி எஸ்.குருசாமி ஆகியோர் தலைமையின் கீழ் நடத்தப்பட்டன. இம்மூன்று மாநாடுகளிலும் பவுத்த மார்க்க ஆதிதிராவிடர் இயக்க சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்கள் கே. பிரம்மாச்சாரி, குஞ்சிதம் குருசாமி, வி.வி. டேவிட் பெருமாள், திருப்பத்தூர் கவுரவ மாஜிஸ்டிரேட் டி.என். அனுமந்து, எம்.பி. சங்கரசாமி, ஆர்.டி. அய்யாக்கண்ணு புலவர், வி.பி.எஸ். மணியர், கே.வி. கே.வி. அழகிரிசாமி, எஸ். முனிசாமியார், ஜோலார்பேட்டை வி. பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதிகளைத் தாழ்த்தப்பட்டோர் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுக்கக்கூடிய தனி வாக்காளர் தொகுதி முறையையும், இரட்டை வாக்குரிமையையும் ஏற்றுக்கொண்டு அம்பேத்கரை பம்பாய்க்குச் சென்று சந்தித்தும் ,ரெட்டைமலை சீனிவாசனை சென்னைக்குச் சென்று சந்தித்தும் ஆதரவளித்தார். அக்கருத்துக்களை கோலார் தங்கவயல், பெங்களூர், வட தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் விளக்கும் கூட்டங்களை நடத்தினார்.பூனா ஒப்பந்தத்தை பவுத்த சங்கம் ஏற்கவில்லை என்பதை காந்திக்கு அறிவித்து அப்பாதுரையார் கடிதம் எழுதினார்.

கலைத்துறை

நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த ஜி.அப்பாத்துரை தன் மருமகனும் நடிகருமாகிய பி.ஆர்.ரத்தினசபாபதியுடன் இணைந்து சமத்துவ நடிகர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அவர்கள் நடத்திய கலப்பு மணம் என்னும் நாடகம் கோலார், வட ஆர்க்காடு மாவட்டங்களில் நடிக்கப்பட்டது. மரபுவாதிகளின் கடுமையான எதிர்ப்பையும் கலவரைத்தையும் மீறி அதை ஜி.அப்பாத்துரை நடத்தினார்.

பாராட்டுகள்

  • 1942-ல் கோலார் சாக்கிய சங்கத்தில் ஜி.அப்பாத்துரையின் படத்திறப்பு விழா நடைபெற்றது. ஈவெரா கல்விக்கழகம், சமரச சன்மார்க்க நடிகர் சபா, சீர்திருத்த வாலிபர் கழகம் ஆகியவை கலந்துகொண்டன
  • 1950-ல் திராவிடர் கழகம் ஜி.அப்பாத்துரைக்கு பாராட்டுவிழா எடுத்தது
  • 1954-ல் ஈ.வெ.ராமசாமி பெரியார் புத்தர் கொள்கைப்பிரச்சார மாநாட்டை கோலாரில் கூட்டினார். அதில் உலக பௌத்த சங்கத்தலைவரும் இலங்கையின் ருஷ்யத்தூதருமான ஜி.டி.மல்லலசேகர கலந்துகொண்டார். அதில் ஜி.அப்பாத்துரை பௌத்தம் பற்றி பேருரையாற்றினார். மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார்
  • அக்டோபர் 6, 1951-ல் கோலார் கென்னடிஸ் கலையரங்கில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஜி.அப்பாத்துரைக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் நெடுஞ்செழியன் அவருக்கு பணமுடிப்பு அளித்தார்.
  • 1959-ல் கோலாரில் நடந்த புத்தர்விழாவில் அப்பாத்துரையுடன் ஈ.வெ.ராமசாமி பெரியாரும் கலந்துகொண்டார்.
  • மைசூர் சமஸ்தான அரசு பொன்னாடை அணிவித்து சமஸ்தான தமிழ்ப் புலவர் என கௌரவித்தது.

மறைவு

ஜி.அப்பாத்துரை ஜனவரி 21, 1961 அன்று வாலாஜா வன்னிமேடு கிராமத்தில் காலமானார். அவரின் உடல் தங்கவயலுக்கு கொண்டு வரப்பட்டு பவுத்த முறையில் அடக்கம் செய்யப்பட்டது. (ஏ.பி.வள்ளிநாயகம் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டது )

நூல்கள்

  • புத்தர் அருளறம்
  • பரலோகத்தில் இருக்கும் பரமசிவனுக்கு
  • கலப்புமணம் (நாடகம்)

உசாத்துணை

குறிப்புகள்


✅Finalised Page