under review

ச.து.சு. யோகியார்

From Tamil Wiki
Revision as of 09:03, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)

To read the article in English: S. D. S. Yogi. ‎

ச.து.சு. யோகியார்
ச.து.சு. யோகியார்
ச.து.சு.யோகியார்.வாழ்க்கை வரலாறு

ச.து.சு. யோகியார் (சுப்பிரமணியன் / ச. து. சுப்பிரமணிய யோகி / சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி) (நவம்பர் 30, 1904 – ஜூலை 27, 1963) எழுத்தாளர், தமிழறிஞர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர். சித்தர் மறைஞானத்திலும் யோகத்திலும் ஈடுபாடு கொண்டவர்.

பிறப்பு, கல்வி

சுப்பிரமணியன் என்னும் இயற்பெயர் கொண்ட ச.து.சு. யோகியார் கேரளாவில் எல்லப்பள்ளியில் துரைசாமி -மீனாட்சியம்மாள் இணையருக்கு 1904-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை துரைசாமி ஐயர் ஹிந்தி, பாரசீகம், உருது மொழிகளில் புலமை கொண்டிருந்தார். குரானின் உட்பொருளை விளக்குவதில் வல்லவர். ஐதராபாதில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். தந்தையார் தனது 38-வது வயதில் மறைந்தார்.

தந்தையின் மறைவுக்குப் பின் ச.து.சுயோகியார் குடும்பம் சங்ககிரிக்கு குடிபெயர்ந்தது. சுப்பிரமணியன் அங்கிருந்த தொடக்கப் பள்ளியிலும் பின்னர் ஈரோடு மகாஜன பள்ளியிலும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். 1921-ல் பள்ளியிறுதி வகுப்பை முடித்தார். ச.து.சு.யோகியாரின் சிறியதந்தை சு.வெங்கடேச ஐயர் சம்ஸ்கிருத புலமையால் 'பாரதி' என பட்டம்பெற்றவர். ச.து.சு.யோகியார் சம்ஸ்கிருதத்தில் பெற்ற புலமையால் அவர் குருநாதர் குணவேல் சுவாமிகளால் 'பாலபாரதி' என பாராட்டப்பட்டார். அது அவருடைய பட்டமாக நீடித்தது.

தனிவாழ்க்கை

ச.து.சு. யோகியார்
ச.து.சு. யோகியார்

ச.து.சுயோகியார் இளமையிலேயே யோகத்திலும், பக்தியிலும், சித்தர்களிடமும் ஆர்வம் கொண்டிருந்தார். ஈரோடு அப்பாச்சியார் மடத்தில் இருந்த குணவேல் சுவாமிகளை தன் ஆசிரியராக ஏற்றுக்கொண்டிருந்தார். அந்நிலையில் அவருக்கு உறவிலேயே பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இல்லற வாழ்வில் நாட்டமின்றி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தேடியலைந்தவர்கள் இளமையில் அவரை நன்கறிந்த ஈ.வெ.ராமசாமிப் பெரியாரிடம் போய் கேட்டதாகவும் அவர் குணவேல் சுவாமிகளிடம் போய் முறையிடும்படிச் சொன்னதாகவும் ச.து.சு.யோகியாரின் மகன் சலன் பதிவு செய்கிறார்.

திருமணத்தால் அவரது யோக வாழ்வுக்கு இடர் வராதென்று குரு அறிவுறுத்தியதை ஏற்றுக்கொண்டு 1925-ல் கமலம்மாவை மணந்தார்.   சில குழந்தைகள் பிறந்த சில காலத்திலேயே இறந்து விட்டன. எஸ்.ஆர். அசோக்குமார்(சலன்) என்னும் மகன் இருக்கிறார், அவர் இதழியல் துறையாளர்.

அரசியல் வாழ்க்கை

ச.து.சு. யோகியார் ஆரம்ப காலத்தில் உதகமண்டலம் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றினார். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அரசாங்க வேலையை உதறி, காங்கிரஸில் இணைந்தார். சென்னையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். ஈ.வெ.ராமசாமிப் பெரியாருடன் வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

ஜனவரி 22, 1932 அன்று ஈரோட்டில் நடந்த மறியல் போராட்டத்தில், தடையை மீறிக் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். ஈ.வெ.ராமசாமிப் பெரியார், சி.ராஜகோபாலாச்சாரியார் ஆகியோருடன் சிறையில் இருந்துள்ளார் . ச.து.சு.யோகியார். அந்த அனுபவத்தை பின்னர் 'எனது சிறைவாசம்' என்ற பெயரில் நூலாக எழுதினார். ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இதழியல்

ச.து.சு யோகியார் (சுதேசமித்திரன்)

திருமணத்துக்குப் பிறகு இதழியல் துறையில் வேலை கிடைத்து ச.து.சுயோகியார் சென்னைக்கு வந்தார். பத்திரிக்கைகளில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதி வந்தார்.

ச.து.சு. யோகியார் இந்து நாளிதழில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுக்கு விமர்சன உரையும் எழுதியுள்ளார். பின்வரும் இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் யோகியார் பணியாற்றினார்.

ஆன்மிகம்

ச.து.சு.யோகியார் முதலில் குணவேல் சுவாமிகளிடம் யோகப்பயிற்சிகளைப் பெற்றார். பின்னர் காரைச் சித்தர் என்னும் யோகியிடம் ஆன்மிகப்பயிற்சி பெற்றார். காரைச்சித்தர் எழுதிய 'கனகவைப்பு 'என்னும் நூலை ச.து.சு.யோகியார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். ஞானானந்தகிரி சுவாமிகளுடன் அணுக்கமான உறவு கொண்டிருந்தார். இளமையில் காளிபக்தராக இருந்தவர் பின்னாளில் சித்தர் மரபைச் சார்ந்து சில மறைஞானச் சடங்குகள் செய்பவராக ஆனார்.

இலக்கிய வாழ்க்கை

ச.து.சு.யோகியார் ’புதுமை’ இதழின் ஆசிரியராக இருந்தபோது ஒவ்வொரு இதழின் முதல் பக்கத்திலும் காளிதாசன் என்ற புனைப்பெயரில் கவிதை எழுதியுள்ளார். இதே இதழில் உமர்கய்யாமின் ருபாயத் (பாரசீக மொழியின் நான்கடி செய்யுள்) கவிதைகளை எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்டின்(Edward Fitzgerald) ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து மொழியாக்கம் செய்து வெளியிட்டார். சுதந்திரச் சங்கு இதழில் இவர் எழுதிய 'குளத்தங்கரைக் குயில்கள்' சிறுகதை வெளியானது.பேயன், காளிதாசன், பித்தன் என்ற புனைப்பெயர்களில் எழுதியிருக்கிறார்.தீவிர காளி பக்தராக இருந்த ச.து.சுயோகியார் காளி மீது பல பாடல்களை இயற்றியுள்ளார்.

ச.து.சுயோகியாருக்கு யோகம் தவிர, தத்துவம், , தந்திரம், ஜோதிடம் ஆகியவற்றிலும் ஆர்வம் இருந்தது. நாடிஜோதிட நூலான ’தரிக்கால்’ என்ற அச்சில் இல்லாத கிரந்த நூலுக்கு விரிவுரை எழுதியுள்ளார்.

1947-ல் சுதந்திர தினக் கவிதையை அப்போதைய பிரதமராக இருந்த நேரு முன்னிலையில் பாடி, பாராட்டைப் பெற்றார். அவரது அக்கவிதை, தமிழிலும், ஆங்கிலத்திலும் அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

யோகியாரின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.

கூத்தநூல்

ச.து.சு.யோகியார் 1962-ல் ஈரோடு சென்றிருந்தபோது அவருக்கு சாத்தனார் எழுதிய கூத்தநூல் என்னும் நாட்டிய சாஸ்திரம் குறித்த சுவடி கிடைத்தது. அந்த சூத்திர வடிவிலான நூலைப் படித்து ஏறக்குறைய 1800 சூத்திரங்களுக்கு பதவுரையும் பொழிப்புரையும் எழுதினார். ச.து.சுயோகியார் தன் இறுதி நாட்களில் அந்நூலின் உரையை எழுதி முடித்தார். அந்த கையெழுத்துப் பிரதியை அச்சிட எண்ணி முதலில் தட்டச்சு செய்வதற்கு கொடுத்தார். தட்டச்சு செய்பவரின் மனைவி தவறுதலாக அந்தக் கையெழுத்துப் பிரதியை எரித்துவிட்டார். உடல் நலம் குன்றியிருந்த ச.து.சுயோகியாரிடம் மிகுந்த தயக்கத்தோடும் வருத்தத்தோடும் மருத்துவர் வழியாக இத்தகவலை சொன்னார்கள். மனம் தளராமல் மீண்டும் 1800 சூத்திரங்களுக்கும் விளக்கவுரை எழுதி நிறைவு செய்தார். ச.து.சு.யோகியாரின் மறைவுக்குப் பின் மத்திய சங்கீத நாடக அகாடமியும், மாநில சங்கீத நாடக சங்கமும் சேர்ந்து இதன் முதல் பகுதியைப் பதிப்பித்தன. ச.து.சு.யோகியாரின் மனைவி இரண்டாம் பகுதியை 1987-ல் வெளியிட்டார். ( பார்க்க கூத்தநூல் )

கண்மணி ராஜம்

ச.து.சு.யோகியாரின் மகள் ராஜம் இளமையில் மறைந்தபோது மனம் வருந்திய அவர் கண்மணி ராஜம் என்னும் நீள் கவிதையை எழுதினார். தமிழில் எழுதப்பட்ட சிறந்த இரங்கல் கவிதையாக அது விமர்சகர்களால் கருதப்படுகிறது. இந்தியாவின் பலமொழிகளில் அக்கவிதை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வாழ்த்து

’பங்கயத்து குமரிமுனை பாதம் சேர்த்தாள், பொங்கிவரும் காவிரியை இடையில் கோத்தாள்’ என தொடங்கும் ச.து.சு.யோகியாரின் பாடல் இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் பெரும்புகழ்பெற்றிருந்தது. தமிழக அரசின் அதிகாரபூர்வ தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு அது பரிசீலிக்கப்பட்டது.

ச.து.சு யோகியார்

இலக்கிய நண்பர்கள்

ச.து.சு யோகியார் நவீன இலக்கிய முன்னோடிகள் பலருக்கு அணுக்கமானவராக இருந்தார். அவர்களின் நினைவுக்குறிப்புகளில் அவர் பதிவாகியிருக்கிறார். க.நா.சுப்ரமணியம் ச.து.சு.யோகியார் குறித்த நினைவுகளை சொல்லும்போது தான் சந்தித்துப் பழகிய மனிதர்களிலேயே மிகவும் சுவாரசியமானவர் என்றும் யோகியார் தன்னை திருமூலர் மரபில் வந்த 49-வது தலைமுறை சித்தர் என்று சொல்வதையும் குறிப்பிடுகிறார். பல நாட்கள் க.நா.சுவும் புதுமைப்பித்தனும் யோகியாரும் புதுமைப்பித்தன் வீட்டு மாடியில் இரவு பேசிக் கொண்டிருக்கும் போது புதுமைப்பித்தன் அடியெடுத்துக் கொடுக்க யோகியார் கவிதை பாடுவதையும் க.நா..சு சொல்லியிருக்கிறார்.

அசோகமித்திரன் ச.து.சு.யோகியார் போல் பல துறை வித்தகர் ஒருவரை தான் சந்தித்ததே இல்லை என பதிவுசெய்கிறார். அசோகமித்திரனுக்கு காரைச்சித்தர் என்னும் யோகியை ச.து.சு யோகியார் அறிமுகம் செய்து வைத்தார். அவ்வனுபவங்கள் அவரை 'மானசரோவர்', 'ஆகாயத்தாமரை' போன்ற நாவல்களை எழுத வைத்தன. கோமல் சுவாமிநாதன் தன்னுடைய பறந்து போன பக்கங்கள் நாவலில் ச.து.சு.யோகியார் காகபுசுண்டரை உபாசனை செய்தார் என்று சொல்லியிருக்கிறார்.

திரைப்படத் துறை

ச.து.சு யோகியார் தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன் சில படங்களில் இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்:

  • இரு சகோதரர்கள் (1936) – கதை, வசனம், பாடல்
  • பக்த அருணகிரி (1937) - கதை, வசனம், பாடல், இயக்கம்
  • அதிர்ஷ்டம் (1939) - கதை, வசனம், பாடல், இயக்கம்
  • கிருஷ்ணகுமார் (1941) – இயக்கம்
  • ஆனந்தன்(1942) - இயக்கம், தயாரிப்பு
  • லட்சுமி (1953) - வசனம், பாடல்
  • கிருஷ்ண பக்தி (1949) - வசனம்

ச.து.சு.யோகியார் இதுதவிர சில திரைப்படங்களில் பாடல்கள் மட்டும் எழுதியிருக்கிறார். வானொலிக்கு பல நாடகங்கள் எழுதினார்.

விருதுகள்

ச.து.சு.யோகியார் 1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் வழங்கும் சிறந்த திரைப்பட வசன கர்த்தாவுக்கான தங்கப் பதக்கம் பெற்றார்

மறைவு

ச.து.சு.யோகியார் ஜூலை 27, 1963 அன்று காலை ஐந்து மணியளவில் மறைந்தார்.

வாழ்க்கைப் பதிவுகள், நினைவகங்கள்

  • 1932-ல் சிறைவாச அனுபவங்களை ச.து.சு.யோகியார் ’எனது சிறைவாசம்’ என்னும் தன் வரலாற்று நூலாக எழுதினார்.
  • சாகித்திய அகாடமி வெளியிட்ட இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் "ச.து.சு. யோகியார்" என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் அவரது மகன் எஸ்.ஆர். அசோக்குமார்(சலன்) எழுதி வெளியானது.  

விவாதங்கள்

  • ச.து.சு.யோகியார் எழுதிய கூத்தநூலின் மூலச்சுவடிகள் ஆய்வாளர்களுக்கு காட்டப்படவில்லை. ஆகவே அந்நூலின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அந்நூல் வெளிவந்தபோது வெளியிட்ட நிறுவனங்களுக்கும் அதன் பதிப்பாசிரியரான மே.வீ.வேணுகோபால பிள்ளைக்கும் எதிராக கண்டனம் எழுந்தது. அது ஒரு போலிநூல், அது ச.து.சு.யோகியாரே எழுதியதாக இருக்கலாம் என்று ஔவை நடராசன் ஒரு பேட்டியில் கூறுகிறார். (அவ்வை நடராசன் பேட்டி 14.3.2011)
  • ச.து.சு.யோகியார் சித்தர் பாடல்களை பதிப்பித்தபோது அதில் பொதுவுடைமைச் சித்தர் என்னும் பெயரில் சில கவிதைகளை தானும் எழுதிச் சேர்ந்த்தார். பின்னர் அவை இனம்கண்டு நீக்கப்பட்டன. ஆனால் கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற ஆய்வாளர்கள்கூட சித்தர்களைப் பற்றிய தங்கள் ஆய்வுகளில் பொதுவுடைமைச் சித்தர் பாடல்களை மேற்கோள்காட்டுகின்றனர். (கா. சிவத்தம்பி 'தமிழ் இலக்கியத் தில் மதமும் மானுடமும் 1984)
  • ச.து.சு.யோகியார் காரைச் சித்தர் என்பவரை தன் ஞானாசிரியராக முன்வைத்தவர். காரைச்சித்தர் எழுதியதாக கனகவைப்பு என்னும் நூலை ச.து.சு.யோகியார் விரிவான உரையுடன் பதிப்பித்தார். ஆனால் ரசவாதம் பற்றிய அந்நூல் ச.து.சு.யோகியார் எழுதியது என்று கால சுப்ரமணியம் போன்ற ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இலக்கிய இடம்

ச.து.சு. யோகியார் இன்று ஒரு மரபுக்கவிஞர், நாடகவியல் ஆய்வாளர் என்னும் இரு நிலைகளில் மதிக்கப்படுகிறார். பாரதிக்குப் பின் உருவான மரபுக்கவிதை இயக்கத்தில் பாரதிதாசன் பரம்பரை , நாமக்கல் கவிஞர் மரபு என இரண்டு சரடுகள் உண்டு. நாமக்கல் கவிஞர் மரபில் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை , கம்பதாசன், கொத்தமங்கலம் சுப்பு , மீ.ப.சோமு என பல படைப்பாளிகள் உள்ளனர். தேசிய இயக்கச் சார்பும், மரபான விழுமியங்கள் மீது பற்றும், நாட்டார் இலக்கிய சாயலும் கொண்ட பாடல்களை எழுதியவர்கள் இவர்கள். ச.து.சு யோகியார் அவர்களில் ஒருவர். கண்மணி ராஜம் முக்கியமான படைப்பு

ச.து.சு.யோகியாரின் கூத்தநூல் உள்ளிட்ட படைப்புகள் மீது ஐயங்கள் உள்ளன. ஆகவே அவற்றை அவருடைய சாதனைகளாக கொள்ள இயலாதென்றாலும் அந்நூல் ஓர் இலக்கியப் படைப்பாக கருத்தில் கொள்ளத்தக்கது.

நூல்கள்

கவிதை நூல்கள்

  • தேசபக்த கீதம் (1924)
  • தமிழ்க்குமரி (1942)
  • கதையைக் கேளடா தமிழா (1952)

கவிதை நாடகங்கள்

  • காமினி (1946) – காவியக் கவிதை
  • பவானி (1956) – குறவஞ்சி
  • நவபாரதம் (1962) - குறவஞ்சி
  • அகல்யா - குறுங்காப்பியம்

சிறுகதைத் தொகுப்பு

  • குளத்தங்கரைக் குயில்கள் (1934) – இதழ்களில் வந்தவற்றின் தொகுப்பு
  • மரண தாண்டவம் (1948)

மொழிபெயர்ப்பு

ஆங்கிலம் - தமிழ்

  • ருபயாத் (1963) - உமர் கய்யாமின் கவிதைகள் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து
  • மனிதனைப் பாடுவேன் (1958) – புதுக்கவிதை
  • அத்தர் – கவிதை
  • இதுதான் ருசியா – உரைநடை
  • கடலும் கிழவனும் (1957) - நாவல்
  • மான்குட்டி (1956) – நாவல்
  • சந்நியாசியும் சர்வாதிகாரியும் (1958) – கட்டுரை
  • வுட்ரோ வில்சன் வாழ்க்கை வரலாறு
  • வால் விட்மேன், ஹெமிங்வே ஆகியோரது ஆங்கிலக் கவிதைகளையும் தமிழில் கவிதை வடிவிலே மொழி பெயர்த்து அளித்துள்ளார்.

தமிழ் - ஆங்கிலம்

  • காரைசித்தர் எழுதிய "கனகவைப்பு" என்ற தமிழ் நூலையும், கம்பராமாயணத்தில், "சீதா கல்யாணம்" என்ற பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ளார்.

பிற நூல்கள்

  • எனது சிறைவாசம் (1932) – தன் வரலாறு
  • கவிபாரதி (1932) – திறனாய்வு
  • சங்கம் வளர்த்த தமிழ் (1956) - திறனாய்வு
  • கவி உலகில் கம்பர்(1979) – உரைநடை
  • கொங்கர் குறவஞ்சி - நாட்டிய நாடகம்
  • சாத்தனார் எழுதிய கூத்த நூலுக்கு (பரதநாட்டியம் பற்றியது) பொழிப்புரையும் பதவுரையும் (1968)

உசாத்துணை


✅Finalised Page