சோ. தர்மன்

From Tamil Wiki
Revision as of 08:30, 16 January 2022 by Ramya (talk | contribs) (Created page with "== சோ. தர்மன் == சோ தர்மராஜ் எனும் சோ தர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) நவீனத் தமிழிலக்கியத்தின் புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சோ. தர்மன்

சோ தர்மராஜ் எனும் சோ தர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) நவீனத் தமிழிலக்கியத்தின் புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் அவர்களின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் தனியிடம் பெற்றவர்.

==பொருளடக்கம்: • 1தனிவாழ்க்கை • 2இலக்கிய வாழ்க்கை o 2.1நாவல்கள் o 2.2சிறுகதைகள் • 4விவாதங்கள் • 5விருதுகள்

தனிவாழ்க்கை

சோ. தர்மன் பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1953 ஆகஸ்ட் 8-ஆம் நாள் பிறந்தார். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் ”உருளைகுடி” என்னும் சிற்றூர் ஆகும். எழுத்தாளர் பூமணியின் மருமகன். கோயில்பட்டியின் இலக்கியச் சூழலில் உருவானவர். கோவில்பட்டியிலுள்ள தனியார் பஞ்சாலையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அதன் பின்னர் முழு நேர எழுத்தாளராக கோவில்பட்டியில் வசித்து வருகிறார். இலக்கிய வாழ்க்கை

கரிசல் காட்டின் முன்னத்தி ஏர் என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளர் ஆனவர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். 1980-ல் எழுதத் தொடங்கிய சோ.தர்மன், அன்பின் சிப்பி, ஈரம், சோகவனம், வனக்குமாரன் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார். இதுவரை 13 நூல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு நாவலையும் எழுதி முடிக்க இவர் எடுத்துக்கொண்டது 10 ஆண்டுகளாகும். இவர் எழுதிய முதற்கதை 1980-ஆம் ஆண்டில் அச்சேறியது. சோ.தர்மனின் நாவல்களான கூகை, சூல், தூர்வை, பதிமூன்றாவது மையவாடி ஆகியவை தமிழிலக்கியத்தில் முக்கியமான ஆக்கங்களாகக் கருதப்படுகின்றன. வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி பற்றிய வாழ்க்கைவரலாற்று நூலும் எழுதியிருக்கிறார். 2019க்கான மைய அரசின் சாகித்ய அக்காதமி விருதைப்பெற்றார். 2016-ம் ஆண்டு பிரசுரமான ‘சூல்’ நாவலுக்காகத்தான் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் நவீன வாசகர்களுடன் தொடர்பிலிருந்து வரும் சோ தர்மன் அவர்கள் அதன் மூலம் சுற்று சூழல் விழிப்புணர்வையும், இயற்கையோடு இயைந்த வாழ்வையும் மரபின் அறிவையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கிறார். ``அரசின் குத்தகை கண்மாய்களில் ஆடு, மாடு நீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. மேய்ப்பவர் அடித்து விரட்டப்படுகிறார்.” என்ற அவரின் ஆதங்கமான முக நூல் பதிவை மேற்கோள்காட்டி மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாவல்கள்

சோ. தர்மன் நான்கு நாவல்களை எழுதியுள்ளார். கூகை நாவல் (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும் "மூங்கா" என்னும் பெயரில் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மாறாத விதி கொண்டவர்களுக்குத்தான் கூகை குறியீடாகிறது. கூகைக்கு பகலில் கண்தெரியாது. சின்னச் சின்ன பறவைகள் அதன் பலவீனம் தெரிந்து பகலில் அதைச் சுற்றி வந்து கொத்தி குதறும். கூகை பயந்து ஒடுங்கிக் கிடக்கும் செய்வதறியாது. இரவில்தான் அதன் ஆக்ரோஷம் வெடித்துச் சிதறும். அந்த குறியீட்டைக் கொண்டு இது கோயில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்களின் இரண்டு தலைமுறை வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு காலத்தில் நிலத்தில் கூலி வேலை செய்து வயிறு நிரப்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, காலவோட்டத்தில் தீப்பெட்டி பட்டாசுத் தொழிற்சாலைகளும், ஜின்னிங் பாக்டரிகளில் மறுபடியும் கூலி வேலைதான் விதிக்கப்பட்டிருக்கிறது. அன்று பண்ணை முதலாளிகளாக இருந்தவர்கள் நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு குடி பெயர்கிறார்கள் அல்லது இங்கு பாக்டரி முதலாளி ஆகிறார்கள். அவதாரங்கள் தான் மாறுகின்றன. விதி மாறுவதில்லை. சூல் (2016) நாவலுக்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார். சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார். விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்த கண்மாய்களின் இன்றைய நிலை குறித்து எழுதப்பட்ட நாவல் இது. குழந்தைகளையும் உயிர்களையும் பிரசவிக்கும் தாயின் உருவமாகக் கண்மாய்களை வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார். எட்டாம் பிறை வடிவ ஊர்க் கண்மாயைத்தான் சூலியாக, ஒரு குறியீடாக, ஆழ்படிமமாக சோ.தர்மன் மாற்றியுள்ளார். கண்மாயை முன்வைத்து வரக்கூடிய எதிரும்புதிருமான பிரச்சினைகள்தான் நாவல். இப்பிராந்தியத்து மனிதர்கள் காலம்காலமாக அடைகாத்த கவலைகள் இந்த நாவலின் அத்தியாயங்களாக விரிகின்றன. தூர்வை (2017) அது மினுத்தான் – மாடத்தி என்னும் தலித் தம்பதியினரைச் சுற்றி உருளக்குடி கிராமத்து மக்களின் இரண்டு தலைமுறை வாழ்க்கையைச் சுற்றி நடைபெறும் கதையாகும். கடைசியில் உருளக்குடி கிராமம் வரண்டு, தீப்பெட்டி தொழிற்சாலைகளும் சாக்குக் கம்பெனிகளும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. நிலத்தில் உழைத்தவர்கள் இப்போது தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். பதிமூனாவது மையவாடி (2020): உருளைக்குடி கிராமத்திலிருக்கும் கருத்தமுத்துவை மையமாகக் கொண்ட கதையிது. ஒரு கிராமத்திலிருந்து கல்வியின் நிமித்தம் வெளியே சென்று உலகத்தை அவன் அனுபவங்களால் கற்றுக் கொள்வதாக கதை விரிகிறது. இந்த நாவலுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார்.

சிறுகதைகள்

சிறுகதைத்தொகுதிகள்

  • ஈரம் (சிறுகதைத்தொகுதி)
  • சோகவனம்
  • வனக்குமாரன்
  • அன்பின் சிப்பி (2019)
  • நீர்ப்பழி
  • சோகவனம்

ஆய்வு நூல்

  • வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)

விருதுகள்

1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். கூகை என்னும் புதினத்திற்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார். சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார். சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடமிருந்து மாநில அரசு விருதுகளும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது, சுந்தரனார் விருது, கனடா தோட்ட விருது, சுஜாதா விருது, ஆனந்த விகடன் விருது என பல விருதுகளைத் தன் படைப்புகளுக்காக வாங்கியுள்ளார்.

இணைப்புகள்

https://www.jeyamohan.in/159665/ https://www.hindutamil.in/news/opinion/columns/531139-so-dharman.html https://www.vikatan.com/government-and-politics/agriculture/hc-judge-cited-writer-cho-dharman-fb-post-regarding-water-bodies-in-his-judgement