under review

சுவாமி கமலாத்மானந்தர்

From Tamil Wiki
Revision as of 23:41, 19 July 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Internal link name வாலி to வாலி (கவிஞர்);)
சுவாமி கமலாத்மானந்தர்

சுவாமி கமலாத்மானந்தர் (பிறப்பு: ஜூன் 30, 1948) துறவி, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். தமிழகத்தில் விவேகானந்தரின் செய்திகளை பரப்ப உழைத்தவர். பாரதி ஆய்வாளர்.

பிறப்பு, கல்வி

சுவாமி கமலாத்மானந்தர் ஜூன் 30, 1948 அன்று காட்பாடியில் சங்கரி அம்மாள்-சி. வடிவேல் இணையருக்குப் பிறந்தார்.1948-ம் ஆண்டு இவரது குடும்பம் அரக்கோணத்துக்கு இடம் மாறியது. அங்கு பள்ளியிறுதி(எஸ்.எஸ்.எஸ்-சி) வரை கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில்[1] ஆகஸ்ட் 8, 1968-ல் சிரவண பூர்ணிமை அன்று பிரம்மச்சாரியாகச் சேர்ந்தார். ஸ்ரீமத் சுவாமி கைலாசானந்தஜி மகராஜ் இவருக்கு 'தயாள்’ என்று பெயரிட்டார். 1969-ல் ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜிடம் பிரம்மச்சாரி தயாள் மந்திரதீட்சை பெற்றார்.

அரக்கோணத்தில் 1970-ல் பிரம்மச்சாரி தயாள் தொடங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கம் 2020-ல் பொன்விழாவைக் கொண்டாடியது. பிரம்மச்சாரி தயாள் 1974-1975 ஆகிய ஆண்டுகளில் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலுள்ள பிரம்மச்சாரிகளுக்குரிய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, மார்ச் 3, 1976-ல் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தியன்று பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். அப்போது, இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களால், பிரம்மச்சாரி நிரஞ்ஜன சைதன்யா என்ற பெயர் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 28,1979-ல் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தியன்று இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் சந்நியாச தீட்சை வழங்கினார். அப்போது இவருக்கு 'சுவாமி கமலாத்மானந்தர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 1, 2000-ல் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின்[2] தலைவராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

பொது வாழ்க்கை

சுவாமி கமலாத்மானந்தர்

கமலாத்மானந்தருக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். கொத்தமங்கலம் சுப்பு, பி.ஸ்ரீ. ஆச்சார்யா , அகிலன், சாண்டில்யன், தமிழ்வாணன், கவிஞர் வாலி (கவிஞர்), கல்கி, ரா.கணபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., கி.வா. ஜகந்நாதன், கல்கி சதாசிவம், திருமுருக கிருபானந்தவாரியார், நா. பார்த்தசாரதி, எழுத்தாளர் ஆர்வி ,பாரதி ஆய்வாளர் சீனி. விஸ்வநாதன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பத்திரிகையாளர்களான 'தினமணி’ ஏ.என். சிவராமன், 'தினந்தந்திபா. சிவந்தி ஆதித்தன், துக்ளக் சோ. ராமசாமி, துக்ளக் எஸ். குருமூர்த்தி ஆகியோர்களுடன் தொடர்பு இருந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கம் தொடர்புடைய எழுத்தாளர் பெ.சு.மணி எழுதிய ஏழு நூல்களுக்கு அணிந்துரை எழுதினார்.

இதழியல்

ஜனவரி 1977-ல் 'ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜால் நியமிக்கப்பட்டு, டிசம்பர் 2000 வரை (24 ஆண்டுகள் ) அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

ஆன்மிகப் பணிகள்

கமலாத்மானந்தர் இளமையில் சுவாமி தன்மயானந்தர் 'ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ மூன்று தொகுதிகளை தமிழில் மொழிபெயர்த்தபோது, மொழிபெயர்ப்புப் பணிக்கு உதவியாளர்களில் ஒருவராகப் பங்காற்றினார்.

கமலாத்மானந்தர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சுமார் 20 ஆண்டுகள் வாரம் ஒரு முறை ஆன்மிக வகுப்புகள் எடுத்தார். 1979-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு முடிய அந்தர்யோகங்கள் உட்பட நடைபெற்ற எல்லா முக்கிய நிகழ்ச்சிகளிலும் கமலாத்மானந்தரின் சொற்பொழிவுகள் இடம் பெற்றன. தமிழ்நாட்டின் பல பாகங்களில் ஸ்ரீராமகிருஷ்ணர் - விவேகானந்தர் பெயரால் இயங்கி வரும் அமைப்புகள் பலவற்றிலும்,பொதுநிகழ்ச்சிகளிலும் சொற்பொழிவாற்றினார். 1985-ம் ஆண்டு ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜுடன் அந்தமான் சென்று பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

கமலாத்மானந்தர் மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள், மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியவர்களுக்காக நடத்தும் இளைஞர் முகாம்களில் சுய முன்னேற்றம், நேர்மறை சிந்தனை மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கான( Self improvement, Positive Thinking & Personality Development) பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அமைப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர் பெயரில் இயங்கி வரும் பல அமைப்புகளை ஒன்றிணைத்து, 'ஸ்ரீ ராமகிருஷ்ண - விவேகானந்தர் பாவ பிரச்சார் பரிஷத்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் துணைத் தலைவராக நவம்பர் 7, 2009 முதல் மார்ச் 31, 2011 வரையும் தலைவராக ,ஏப்ரல் 1, 2011 முதல் மே 31, 2016 வரையிலும் பங்காற்றினார்.

ஆண்டுதோறும் ராமகிருஷ்ண மடத்தில் நடைபெறும் 'தமிழ்நாடு, ஸ்ரீ ராமகிருஷ்ண - சுவாமி விவேகானந்தர் பக்தர்கள் மாநாட்டில்’ 25 முறை சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 2010-ல் தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்து சுமார் 10,000 பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டை மதுரையில் நடத்தி, மீனாட்சி மலர்’ என்ற சிறப்பு மலரை வெளியிட்டார்.தொடர்ந்து அருப்புக்கோட்டை(2011), திருநெல்வேலி(2012), பொள்ளாச்சி(2013), திருவண்ணாமலை(2014), பெரம்பலூர்(2016) ஆகிய இடங்களில் மாநாடு நடத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். 2014-ம் ஆண்டு திருவண்ணாமலை மாநாட்டில் 'அண்ணாமலையார் மலர்’ என்ற சிறப்பு மலரை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தி விழா 2013-ம் ஆண்டு விமரிசையாக நடைபெற்றபோது, தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்தினார். இவ்விழாவின்போது, இவரது முயற்சியால் தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயரமுள்ள சிலைகள் 78 இடங்களில் வைக்கப்பட்டன. இவற்றில் 17 வெண்கலச் சிலைகளும், 61 கண்ணாடி இழை (fiber) சிலைகளும் அடக்கம். சுவாமி விவேகானந்தரின் இரண்டரை அடி அளவுள்ள மார்பளவு சிலைகள் 100 இடங்களிலும், ஒன்றே கால் அடியில் இருக்கும் சுவாமி விவேகானந்தர் சிலைகள் 386 இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றன.மதுரை மடத்தில் டிசம்பர் 22, 2009-ல் சுவாமி விவேகானந்தரின் 12 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

பயணக்கட்டுரைகள்

கமலாத்மானந்தர் இலங்கை அரசின் அழைப்பின் பேரில் 1996-ல் இலங்கைக்குச் சென்று சொற்பொழிவாற்றினார். அது பற்றிய பயணக் கட்டுரையை இவர் 'இலங்கையில் கண்டதும் கேட்டதும்’ என்ற தலைப்பில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் தொடர் கட்டுரையாக எழுதினார்.1998-ல் கமலாத்மானந்தர் 20 பக்தர்களுடன் மேற்கொண்டா கைலாஸ் - மானசரோவர் யாத்திரை பற்றிய தொடர் கட்டுரைகள் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் வெளிவந்தன.கமலாத்மானந்தர் தன்னுடைய பிருந்தாவன யாத்திரை அனுபவங்களை 'பிருந்தாவனத்திற்கு யாத்திரை’ என்ற பெயரில் 2018-ல் புத்தகமாக எழுதி, வெளியிட்டார்.

ஆன்மிகக்கட்டுரைகள்

கமலாத்மானந்தர் தேசமித்திரன், விஜயபாரதம், தினமலர், தினமணி, தர்ம சக்கரம், ஸ்ரீ ராமகிருஷ்ண ஆனந்தம், குமுதம் பக்தி ஸ்பெஷல், ஓம் சக்தி, அமுதசுரபி உட்பட பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்[3] சார்பாக 'தர்மசக்கரம்’ என்ற ஆன்மிக மாத இதழில் 2012 முதல், 'ஒவ்வொரு மாதமும் ஒரு கதை’ என்று தொடர்ந்து ஆன்மிகம் சார்ந்த கதைகளை எழுதி வருகிறார்.'தினமணி’ நாளிதழ் வெள்ளிக்கிழமை தோறும் வெளியிடும் 'வெள்ளிமணி’ என்ற ஆன்மிகச் சிறப்பிதழில் பிப்ரவரி 10, 2017 முதல் இவர் தொகுத்த பொன்மொழிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் முதல் ஆயிரம் மட்டும் 2022-ல் 'மகான்களின் பொன்மொழிகள் - 1000 (பாகம் - 01) என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளன. கமலாத்மானந்தர் 'குமுதம் பக்தி ஸ்பெஷல்’ பத்திரிகையில் ஆகஸ்ட் 2020 முதல் மாதம் இருமுறை தொடர்ச்சியாக பக்திக் கதைகள் என்ற தலைப்பில் கதைகள் எழுதி வருகிறார். இது தவிர 'குமுதம் பக்தி ஸ்பெஷல்’ இதழில் பல ஆன்மிக கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

சிறுவர் இலக்கியம்

கமலாத்மானந்தர் சிறார்களுக்காக ஆன்மிகம், நீதி ஆகியன சார்ந்து எழுதிய கதைகள் இதுவரை 35 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

காட்சி ஊடகம்

கமலாத்மானந்தர் தயாரித்த 'கைலாஷ் - மானசரோவர் யாத்திரை’ என்ற மூன்று மணிநேர காணொளிப்பேழையை சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டது. இவை 5000-க்கும் சற்று மிகுதியாக விற்பனையாகின.'கைலாஸ் மானசரோவர் யாத்திரை’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு மணி நேரக் குறுந்தட்டும் வெளியிடப்பட்டது.

ஆய்வு நூல்

இலக்கிய இடம்

சுவாமி கமலாத்மானந்தர் சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார் ஆகியோரை ஆழ்ந்து கற்று, அவர்களின் பொதுவாழ்க்கையை ஆய்வு செய்து 'சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை’ என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக எழுதினார். இந்நூல் ஒரு முன்னோடி நூலாகக் கருதப்படுகிறது. இது நேரடியான தரவுகளுடன் ஒரு காலகட்டத்தின் பொதுவான உளநிலையை, வரலாற்று உள்ளடக்கத்தை வெவ்வேறு ஆளுமைகளின் சொற்கள் வழியாக கண்டடையும் முயற்சி.ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் சிந்தனைகளை தமிழ்ச்சூழலில் பரப்பியவர் என்னும் வகையில் சுவாமி கமலாத்மானந்தர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

பயண நூல்

நூல்கள்

  • விவேகானந்தரின் அறிவுரைகள், செப்டம்பர் 1980
  • அருள் நெறிக் கதைகள், மார்ச் 1981
  • புதிய இந்தியாவைப் படைப்போம், செப்டம்பர் 1981
  • பக்திக் கதைகள், ஏப்ரல் 1982
  • ஆன்மீகக் கதைகள், ஏப்ரல் 1982
  • ஸ்ரீராமரின் தர்ம முரசு, நவம்பர் 1985
  • வீர இளைஞர்களுக்கு - சுவாமி விவேகானந்தர், ஜனவரி 1988
  • தெய்வீகக் கதைகள், ஆகஸ்ட் 1989
  • ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கதை, மார்ச் 2003
  • கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, மார்ச் 2003
  • கைலாஷ்-மானசரோவர் யாத்திரை-சி.டி, மார்ச் 2003
  • அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் கதை, செப்டம்பர் 2003
  • அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் 125-அறிவுரைகள், டிசம்பர் 2003
  • ஆன்மிக வினா - விடை - பாகம் 1, செப்டம்பர் 2004
  • ஆன்மிக வினா - விடை - பாகம் 2, நவம்பர் 2004
  • ஆன்மிக வினா - விடை - பாகம் 3, பிப்ரவரி 2005
  • ஆன்மிக வினா - விடை - பாகம் 4, மே 2005
  • திருவிளக்கு பூஜை, செப்டம்பர் 2009
  • ஆன்மிக வினா - விடை - பாகம் 5, ஜூலை 2011
  • இளைஞர்களின் சிந்தனைக்கு..., ஜனவரி 2011
  • இளைஞர்களின் எழுச்சிக்கு விவேகானந்தரின் 150 அறிவுரைகள், மே 2013
  • சுவாமி விவேகானந்தர் 108 போற்றி, செப்டம்பர் 2013
  • சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 1, செப்டம்பர் 2014
  • தெய்வபக்திக் கதைகள் 24, ஜூலை 2016
  • நாமஜப மகிமை, ஜூலை 2016
  • சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 2, செப்டம்பர் 2016
  • ஒழுக்கநெறிக் கதைகள் 25, டிசம்பர் 2016
  • சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 3, செப்டம்பர் 2017
  • இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர், ஜனவரி 2017
  • நீதிக் கதைகள் 31, மார்ச் 2017
  • நமது சுவாமி விவேகானந்தர், ஜனவரி 2018
  • நீதிக் கதைகள் 32, ஜனவரி 2018
  • நீதிக் கதைகள் 33, ஜூலை 2018
  • பிருந்தாவன் யாத்திரை, ஜூலை 2018
  • நீதிக் கதைகள் 34, நவம்பர் 2018
  • நீதிக் கதைகள் 35, மார்ச் 2019
  • சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை - பாகம் 4, செப்டம்பர் 2019
  • மகான்களின் பொன்மொழிகள் 1000 - பாகம் 1, டிசம்பர் 2021

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:07 IST