under review

சி.வீ. குப்புசாமி

From Tamil Wiki
Revision as of 09:03, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
சீ.வி.குப்புசாமி

சீ. வி. குப்புசாமி (ஏப்ரல் 10, 1915) ஒரு கட்டுரையாளர். மலாயாவில் உதயமான பல நாளிதழ்களில் பணியாற்றியவர். முருகன், அறிவியல்வாதி, குலோதுங்கன், கவுதமன், மலாயன் எனப் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். 1958-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் தோற்றுவிக்கப்பட்ட எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் செயலற்றுபோன மலேசிய தமிழ் இலக்கியத்தை தான் எழுதிய 'ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள்' நூலின் மூலமாக 1946-க்குப் பின் உயிர்த்தெழ வைத்தவர் சீ. வி. குப்புசாமி.

பிறப்பு, இளமை

சீ. வி. குப்புசாமி ஏப்ரல் 10, 1915 அன்று கோலாலம்பூர் செந்தூல் வட்டாரத்தில் பிறந்தார். அவர் தந்தையின் பெயர் சி.வீரப்பன். தாயார் பெயர் மு.பாப்பம்மாள். சீ.வி.குப்புசாமி தன் ஆரம்பக் கல்வியை தம்புசாமிபிள்ளை தமிழ்ப்பள்ளியில் மூன்றாண்டுகள் பயின்றார். பின்னர், மாக்ஸ்வெல் ஆங்கிலப்பள்ளிக்கு மாறினார். ஆறேழு வருடம் அங்கு பயின்றபின் விக்டோரியா இன்ஸ்டிட்யூஷனில் இரண்டு ஆண்டு படித்தார். 1932-ல் சீனியர் கேம்பிரிட்ஜ் முதல் நிலையில் தேறினார். பின்னர் தேவை கருதி இந்தியும் மலாயும் கற்றுக்கொண்டார். இதற்கிடையில் பண்டிதர் M B சிவராமதாசர், ஸ்ரீ மனோன்மணி சுவாமியார் ஆகியோரிடம் நிகண்டு, இலக்கணம், இலக்கியம், யாப்பு முதலானவற்றைக் கற்றுக்கொண்டார். 1941-1942-ல் சிங்கப்பூரில் சா.ச. சின்னப்பனாரிடம் யாப்பிலக்கணம் பயின்றார்.

தனிவாழ்க்கை

சீ. வி. குப்புசாமி 1935 முதல் 1941 வரை மலாயன் ரயில்வேயில் எழுத்தராகப் பணியாற்றியுள்ளார். அப்போது ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்குச் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். 1941-க்குப் பின்னர் அவரது பணிகள் யாவும் இதழியல் சார்ந்தே இருந்தன.

ஜப்பானியர் காலத்தில் ஒரு போலிக்குற்றச்சாட்டினால் ஏழு நாட்கள் ஜப்பானிய சிறையில் இராணுவத்தினரால் கொடுமை செய்யப்பட்டவர் சி.வீ.குப்புசாமி. ஜப்பானியர் ஆட்சி முற்றுபெற்று பிரிட்டிஷார் திரும்பிவந்ததும் அவர்களாலும் கொடுமைக்கு உள்ளானார். பல பத்திரிகைகளை நடத்திப் பொதுச்சேவையிலும் சீர்திருத்தப் போக்கிலும் பிரிட்டிஷார் எதிர்ப்பிலும் முன்னணியில் இருந்த அவர் மீது அவருடைய எதிரிகள் விஷமத்தனமாகப் புகார் செய்யவே, ஜனநாயகம் தினசரியை நடத்திக்கொண்டிருந்த தருணத்தில், அவர் கைதானார். 1948 ஜுன் முதல் 1949 டிசம்பர் வரை ஒன்றரை வருஷம் தடுப்புக்காவலில் வாட்டி வதைக்கப்பட்டார்.

பங்களிப்பு

இலக்கியம்

சீ. வி. குப்புசாமி கட்டுரைகளுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். 1930 – 1931-களில் மாணவர் பருவத்திலேயே கோலாலம்பூரில் இருந்து வெளிவந்த 'மலாய் நாடு' இதழில் பல கட்டுரைகள் எழுதினார் சீ.வி.குப்புசாமி. அதன் பின்னர் 1934 வரை தனது மாணவர் பருவத்திலேயே சென்னையில் வெளிவந்த 'தமிழ்நாடு' நாளிதழில் கோலாலம்பூர் நிருபராக இருந்து வாரந்தோறும் மலாயாக் கடிதம் என்ற பகுதிக்குக் கட்டுரைகள் எழுதினார். தமிழ் மட்டுமல்லாமல் விக்டோரியா இன்ஸ்டிட்யூஷன் மாத சஞ்சிகையான THE VICTORIAN இதழில் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

அவரது எழுத்துலக ஆர்வம் பத்திரிகை தொழிலை நோக்கி இழுத்தது. 1942 – 1945-களில் சிங்கப்பூரில் சுபாஷ் சந்திர போஸ் அமைத்த சுதந்தர இந்தியத் தற்காலிக அரசாங்கத்தின் தமிழ் வெளியீடுகளாகிய சுதந்தர இந்தியா, யுவபாரதம், சுதந்திரோதயம் ஆகியவற்றுக்குப் பிரதம ஆசிரியராக இருந்தார். சுதந்தர இந்தியத் தற்காலிக அரசாங்கத்தின் செய்தி-பத்திரிகைத் துறை (Press and Publicity) துணை இயக்குநராகவும் பின்பு இடைக்கால இயக்குநராகவும் பொறுப்பு வகித்தார்.

1946 – 1948-களில் கோலாலம்பூரில் இயங்கிய ஜனநாயகம் தினசரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் சிங்கப்பூரிலும் கோலாலம்பூரிலும் நடத்தப்பட்ட நவயுகம் இதழின் ஆசிரியராகவும் விளங்கினார். பின்னர், 1951 – 1954 வரை தமிழ் முரசு நாளிதழின் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார். இதே காலத்தில் சிங்கப்பூரில் கோ.சாரங்கபாணி நடத்திய  INDIAN DAILY MAIL என்ற ஆங்கில தினசரியிலும் பணியாற்றினார். அதுபோல 1952/1953-ல் மலேசியாவின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கோலாலம்பூரில் நடத்திய சங்கமணி வார ஏட்டுக்கு சிங்கப்பூர் நிருபராகப் பொறுப்பு வகித்தார்.

1957 – 1971-களில் சீ. வி. குப்புசாமி கோலாலம்பூர் அரசாங்கத் தகவல் இலாக்காவின் வெளியீடுகளாகிய ஜனோபகாரி, வளர்ச்சி, வெற்றி, ஜெயமலேசியா, மலேசியா குரல் (Warta Malaysia), பெம்பேனா (Pembena) ஆகியவற்றின் பிரதம ஆசிரியராக இடைவிடாமல் பணியாற்றினார். 1971 ஆரம்பத்தில் தன் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றினார்.

சி. வீ. குப்புசாமி 'வருங்கால நவயுகம்' (1937), 'பெரியார் ஈ. வெ. ராமசாமி' (1939) முதலான நூல்களைப் புனைந்தவர். 'காந்தாமணி அல்லது கலப்பு மணம்' போன்ற நாடக நூலையும் வெளியிட்டார். ஆனால் அவர் 'ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள்' (1946) என்ற நூலின் வழியே அதிகம் அறியப்பட்டார். ஒரு போலிக் குற்றச்சாட்டின் பேரில் ஒரு வாரம் ஜப்பான் இராணுவ காவலில் வைக்கப்பட்டுக் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட அனுபவங்களை தாங்கிய நூல் அது.

சமூகச் செயல்பாடுகள்

கட்டுரையாளராக இருந்ததோடு தொடர்ச்சியாகத் தன்னை சமூக செயல்பாடுகளிலும் இணைத்துக்கொண்டவர் சீ. வி. குப்புசாமி. செந்தூல் சுயமரியாதை சங்கம், செந்தூல் இந்திய வாலிபர் சங்கம், சிலாங்கூர் இந்தியர் சங்கம், கோல கிள்ளான் இந்தியர் ஒற்றுமை சங்கம், மலாயன் இந்தியர் காங்கிரஸ் ஆகியவற்றின் மூலம் பொதுப்பணிகள் ஆற்றியிருக்கிறார். பண்டித நேரு 1937-ல் மலாயாவுக்கு வந்தபோது அவருடைய சொற்பொழிவைத் தமிழில் மொழிபெயர்த்தார் சி.வீ.குப்புசாமி. நேதாஜியின் சொற்பொழிவையும் பல முறை மொழிபெயர்த்துள்ளார். 1946 ஏப்ரல் வரை சிங்கப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறார். அதோடு சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்த சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் திகழ்ந்தார். அதன் மூலம் தமிழர் பிரதிநிதித்துவ சபை, தமிழர் திருநாள் இயக்கம் ஆகியவற்றிலும் சீரிய பணிகள் புரிந்தார். தொடர்ந்து மலேசியத் தமிழ் இலக்கியத்தின் கிரியா ஊக்கியாகவும், எழுத்தாளர் இயக்கங்களின் நடத்துநராகவும் (மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைமைப் பதவி உட்பட) நெடுநாட்கள் இருந்து மறைந்தார்.

படைப்புகள்

  • வருங்கால நவயுகம் (மொழிப்பெயர்ப்பு) -1937
  • பெரியார் ஈ. வெ. ராமசாமி - 1939
  • காந்தாமணி அல்லது கலப்பு மணம் (நாடகம்)
  • ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள் (அனுபவம்) - 1946

உசாத்துணை

  • சிங்கப்பூர் - மலேசியா: தமிழ் இலக்கியத் தடம் சில திருப்பங்கள் - பாலபாஸ்கரன்
  • மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்


✅Finalised Page