under review

சி.வடிவேல்

From Tamil Wiki
Revision as of 20:26, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
சி.வடிவேல்

சி. வடிவேல் (மார்ச் 22, 1929 - ஏப்ரல் 5, 1982) மலேசிய எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றியவர். கல்வியாளராகப் பங்காற்றினார்.

பிறப்பு, கல்வி

சி. வடிவேல் கெடாவில் அமைந்துள்ள அலோஸ்டார் நகரில் மார்ச் 22, 1929-ல் பிறந்தார். இவர் தந்தை சின்னையா, தாயார் தாயம்மா.

ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்து ஆசிரியர் போதனா முறைப்பயிற்சியை சிரம்பானில் பயின்று 1949-ல் தேர்வு பெற்றார். மூன்றாண்டுகள் திரு அரு. அருணாச்சலம் தலைமையில் நடந்த மலாயாத் தமிழ்ப் பண்ணையில் தமிழ் பண்டித வகுப்பில் பயின்றார். திரு. போ. பெரியசாமியிடம் மேலும் இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

சி.வடிவேலுவின் குடும்பம்

திராவிட சிந்தனையுடைய சி. வடிவேல், ராஜலட்சுமியைப் பிப்ரவரி 5, 1956-ல் சீர்திருத்த முறையில் திருமணம் புரிந்தார். இந்தத் தம்பதிகளுக்கு ஏழு குழந்தைகள்.

ஆசிரியர் பயிற்சிக்குப்பின், லாபு தோட்டத்தில் ஆசிரியாராகவும் பின் அதே பள்ளியில் தலைமையாசிரியராகவும் இருபத்து ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் எட்டு வருட காலம் கோம்பாக் தோட்டத் தமிழ்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி 1984-ல் ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சி.வடிவேல் 1950-ஆம் ஆண்டு தமிழ் நேசன் நடத்திய கதை வகுப்பில் கலந்துகொண்டு தன் எழுத்துப்பணியைத் தொடங்கினார். 1952-ல் தமிழ் நேசனில் ஞாயிறு மலர் பொறுப்பில் இருந்து எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் இலக்கிய வட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார். அவரது நட்பும் வழிகாட்டலும் இவருக்குக் கிடைத்தது. 1953-ல் புனைவெழுத்துகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். 1968-ல் சென்னையில் நடந்த இரண்டாம் உலக தமிழாராய்ச்சி மாநாட்டில், மலேசியா குழு உறுப்பினராக இருந்தார்.

சி. வடிவேல் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். 1974 முதல் 1980 வரை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். பின்னர் 1983 முதல் 1986 வரை நெகிரி செம்பிலான் தமிழ் எழுத்தாளர்களின் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். பொதுவாழ்க்கையில் ஆர்வம் கொண்டிருந்தவர் மணிமன்ற பேரவையில் நல்லுரையாளராக இருந்தார். மேலும் இவர் நெகிரி செம்பிலான் மாநில இந்து கலாச்சார மன்றத்தை உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

கல்விப் பணி

திரு ஆ. நாகப்பனின் துணையுடன் சி. வடிவேல் சிரம்பான் தமிழ் இலக்கிய வகுப்பைத் தொடங்கினார். இதில் எஸ்.டி.பி.எம். தேர்வுகளுக்குத் தமிழ் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. மேலும் இலக்கிய சோலை எனும் தேர்வு கருத்தரங்கு ஆண்டு தோறும் நடத்தி வந்தார். இதில் கல்விபெற்ற மாணவர்கள் பலரைச் சிறந்த ஆசிரியராகவும், பட்டதாரிகளாகவும் வளர்த்திருக்கிறார்.

1959-ஆம் ஆண்டு தமிழாசிரியர் சிலரின் உதவியுடன், சி.வடிவேல் நெகிரி செம்பிலான் தமிழாசிரியர் கூட்டுறவு சங்கத்தை நிறுவினார். தொடகத்திலிருந்தே பொருளாளர், செயலாளர், தலைவர் என பொறுப்பில் இருந்திருக்கிறார். ஆசிரியத்துவம் மீது பற்று கொண்ட இவர் மலாயாத் தமிழாசிரியர் தேசிய சங்கத்தில், பத்திரிகை ஆசிரியராக இருந்தார்.

பிற ஆர்வம்

இவருக்கு விளையாட்டில் தீவிர ஆர்வமுண்டு. லாபு வட்டாரக் குழுவிலும், மாநில தமிழாசிரியர் காற்பந்து குழுவிலும் காற்பந்து விளையாடியுள்ளார். 1948 முதல் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யும் வருடாந்திர திடல் விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் லாபு வட்டார பிரதிநிதியாகக் கலந்து கொண்டுள்ளார். முதலுதவி படைகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.

இலக்கிய இடம்

சமுதாயத்துக்கு நேரடியாக நன்மையைச் சொல்லும் படைப்புகளை மட்டுமே எழுதியவர் சி. வடிவேல். அவ்வாறான படைப்புகளை மட்டுமே ஆதரித்தவர். இலக்கியம் என்பது சமுதாயத்தை வளர்க்கும் ஒரு கருவியென கருதியதால் இவர் படைப்புகளில் பிரச்சாரத் தொனி இருந்தது. சமுதாய மேன்மைக்காகவே எழுத்து என இவர் வாதிட்டதை எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு தனது நினைவலைகளில் குறிப்பிடுகிறார். தன்னுடைய சிறுகதைகளை மலாய் மொழிகளில் வெளியிட்ட முன்னோடிகளில் ஒருவர்.

மறைவு

மூளை ரத்த நாளச் சேதம் நோயால், அவதிபட்ட சி.வடிவேல், தனது 63 ஆவது வயதில் ஏப்ரல் 5, 1982-ல் மரணமடைந்தார்.

விருதுகள், பரிசுகள்

1978-ல் பேரரசரிடமிருந்து விருது வாங்கும் போது.
விருதுகள்
  • பேரரசரிடமிருந்து பி.பி.என் விருது பெற்றார்,1978.
  • தமிழ்வேள் கோ. சாரங்கபாணி தங்கப்பதக்கம், மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கியது, 1988.
பரிசுகள்
  • முதல் பரிசு, தங்கப் பதக்கம் அகிலமலாயா சிறுகதைப் போட்டி, சிங்கப்பூர், முன்னேற்றம் பொங்கல் மலர், 1956.
  • முதல்பரிசு, தங்கப்பதக்கம், தமிழப்பண்ணை சிறுகதைப்போட்டி, 1957.
  • 250 ரொக்கப்பரிசு, சிங்கப்பூர் தேசியமொழி பண்பாட்டுக் கழகம், நான்கு மொழிச் சிறுகதைப் போட்டியில் தமிழ்பிரிவுப் பரிசு, 1964.
  • முதல் பரிசு, தங்கப்பதக்கம், தமிழ் நேசன் பவுன்பரிசுத் திட்டம் , 1974

நூல்கள்

சிறுகதை தொகுப்பு
  • வள்ளுவரின் காதலி (1964) பாரதி பதிப்பகம்
  • இருண்ட உலகம் (1970) தலைமை ஆசிரியர், தமிழ் பாடசாலை
  • புதிய பாதை (1981) சிரம்பான் பாரதி பதிப்பகம்

உசாத்துணை

  • சி. வடிவேல் அவர்களின் வாழ்வும் பணியும் - தொகுப்பாசியர் ஆறு.நாகப்பன் - 1993
  • The Malaysian Tamil Short Stories 1930 - 1980 - Bala Baskaran


✅Finalised Page