under review

சிலப்பதிகாரம்

From Tamil Wiki
Revision as of 18:35, 13 March 2023 by Logamadevi (talk | contribs)
சிலப்பதிகாரம்-முதல் பதிப்பு-1872
சிலப்பதிகாரம் புகார்க் காண்டம்-தி.க. சுப்பராயச் செட்டியார் 1880
சிலப்பதிகாரம்- உ.வே.சா. ஆய்வுப்பதிப்பு

தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இதனை இயற்றியவர் இளங்கோவடிகள். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்க் காப்பியம் இது. மூவேந்தர்களையும் கதைத்தொடர்பால் ஒருங்கிணைத்து, புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனச் சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்களையே காண்டத் தலைப்பாகக் கொண்டது. ‘உரையிடைப்பட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்றும் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது. காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியம் ‘சிலப்பதிகாரம்.’

சிலப்பதிகாரம் பெயர் விளக்கம்

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம். கண்ணகியின் சிலம்பை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டதால் சிலப்பதிகாரம் என்ற பெயர் சூட்டப்பட்டது. ‘சிலம்பு’ என்ற சொல்லானது மலை, ஆறு, ஒலித்தல் ஓசை, மகளிரின் கால் அணிகலன் போன்றனவற்றைக் குறிக்கும். சிலம்பு என்பது காலில் அணியும் அணிகலனைக் குறிப்பதாகக் கொண்டு, இளங்கோவடிகள் தமிழின் முதல் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்குச் ‘சிலம்பு’ என்பதைத் தலைப்பாகக் கொண்டார். அதைத் தொடர்ந்து வந்த பிற்காலக் காப்பியங்களும் சிலம்பை முன் மாதிரியாகக் கொண்டு மகளிர் அணிகளால் பெயர் பெற்றன.

காலில் இருந்து மேலே வரும்போது இடையில் அணிவது மேகலையாக இருப்பதால் ’மணிமேகலை’யும், கையில் வளையல்களை அணிவதால் ‘வளையாபதி’யும், காதில் குண்டலங்களை அணியும் குண்டலங்களால், ‘குண்டலகேசி’யும், தலையில் ஒளிபொருந்திய மணியுடைய ஆபரணத்தை அணிவதால் ‘சிந்தாமணி’யும் தோன்றின என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தி. ஈ. ஸ்ரீநிவாஸராகவாசாரியார் முகவுரை-1872

பதிப்பு, வெளியீடு

1872-ஆம் ஆண்டில், மாநிலக் கல்லூரியில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றிய தி.ஈ. ஸ்ரீநிவாசராகவாசாரியார், ‘கானல்வரி’ வரையிலான பாடல்களை மட்டும் கொண்ட சிலப்பதிகாரத்தை அச்சிட்டு வெளியிட்டார். அதுவே, சிலப்பதிகாரம் குறித்த முதல் அச்சுப் பிரதியாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து, கானல்வரியுடன் புகார் காண்டமும் இணைந்த பதிப்பாக, ஸ்ரீநிவாசராகவாச்சாரியார், இரண்டு பக்க முன்னுரையும் சேர்த்து நூலை அச்சிட்டு வெளியிட்டார். அதில் புகார் காண்டத்தில் வேனிற் காதை வரையிலான பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

அப்பதிப்பில் சேரமான் பெருமான் நாயனாரால் இயற்றப்பட்டது என்கிற குறிப்பு இடம்பெற்றது. மேலும் அடியார்க்கு நல்லாரும், நச்சினார்க்கினியரும் ஒருவரே என்பதான கருத்தையும் நூலின் முகவுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

1880-ல், தி.க. சுப்பராயச் செட்டியார் புகார் காண்டத்தை அச்சிட்டு வெளியிட்டார்.

1892-ல், ஓலைச்சுவடிகள் பலவற்றை ஒப்புநோக்கி. சிலப்பதிகாரம் முழுவதும் அடங்கிய பதிப்பை, பல்வேறு ஆய்வுக்குறிப்புகளுடன் உ.வே.சாமிநாதையர் வெளியிட்டார். இதுவே சிலப்பதிகாரத்தின் முழுமையான, முதன்மையான பதிப்பாகக் கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்தன. 1942-ல், ந.மு.வேங்கடசாமி நாட்டார் சிலப்பதிகார முழுமைக்கும் உரையெழுதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மூலமாக வெளியிட்டார். தொடர்ந்து ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார், ம.பொ. சிவஞானம், புலியூர்க்கேசிகன் உள்ளிட்ட பலர் சிலப்பதிகாரம் குறித்த உரை விளக்க நூல்களை எழுதியுள்ளனர்.

சிலப்பதிகாரத்தின் கதை

சோழ நாட்டின் தலைநகராகிய புகார் நகரில் மாநாய்கனுக்கு மகளாகப் பிறந்த கண்ணகிக்கும், மாசாத்துவானுக்கு மகனாகப் பிறந்த கோவலனுக்கும் திருமணம் நிகழ்கிறது. கண்ணகியும், கோவலனும் சில ஆண்டுகள் இல்லற வாழ்க்கை நடத்துகின்றனர்.

கணிகை மாதவி, அரசன் முன் அரங்கேறி நாட்டியம் ஆடுகிறாள். பரிசாக அரசனது மாலையையும், தலைக்கோல் பட்டத்தையும் பெறுகிறாள். அந்த மாலையைக் கோவலன் வாங்கி, மாதவியின் மனைக்குச் சென்று, மனைவி கண்ணகியை மறந்து மாதவியுடனேயே தங்கிவிடுகிறான்.

மாதவியும் கோவலும் இன்ப வாழ்க்கை வாழ்கின்றனர். கணவனைப் பிறந்த கண்ணகி, ஒப்பனையின்றி, திலகமின்றி, உறக்கமின்றி வாழ்கிறாள். கோவலனும், மாதவியும் பூம்புகார் கடலுக்குச் செல்லும்போது, ‘கானல் வரி’ பாடல்களால் அவர்களுக்குள் ஊடல் உண்டாகிறது. கோவலன் மாதவியைப் பிரிகிறான்.

கண்ணகியைத் தேடி வருகிறான். அவனை வரவேற்ற கண்ணகி, இழந்த செல்வத்தை மீட்டெடுக்கத் தன் சிலம்பினைக் கொடுக்கிறாள். கண்ணகியுடன் புகாரை விட்டு புறப்பட்ட கோவலன் கவுந்தியடிகளின் தவப்பள்ளியை அடைகிறான். விடியற்காலைப் பொழுதிலே பார்ப்பனச்சேரி சென்று கண்ணகியை மாதரியிடம் ஒப்படைக்கிறார் கவுந்தி.

கோவலன், மதுரைக்குச் சென்று ,கண்ணகி அளித்த ஒரு கால் சிலம்பினை விற்க முயலும்போது, உண்மைக் கள்வனான பொற்கொல்லன், ‘அரசியின் சிலம்பைத் திருடிய கள்வன் இவன்தான்’ என்று கோவலன்பற்றிய தவறான தகவலை அரசனுக்குத் தெரிவிக்கிறான். அதனை முழுமையாக ஆராயாத அரசனின் தீர்ப்பால் கோவலன் கொலை செய்யப்படுகிறான். நீராடச் சென்ற மாதரிக்குக் கோவலன் கொலையுண்ட செய்தி கிடைக்கிறது. அவள் கண்ணகிக்குத் தெரிவிக்க, கண்ணகி வஞ்சினம் பூண்டு மதுரைக்குப் புறப்படுகிறாள். வெட்டுண்டு கிடந்த கோவலனின் உடலைக் கண்டு மனம் வருந்தி அழுகிறாள். சீற்றத்துடன் தவறான தீர்ப்பை அளித்த பாண்டிய மன்னனைக் காணச் செல்கிறாள்.

பாண்டிய மன்னனின் அரசவையை அடைந்தவள், தனது மற்றொருகால் சிலம்பின் மூலமாகக் கோவலன் கள்வன் அல்ல என்பதை நிரூப்பிக்கிறாள். தாங்கள் செய்த பிழையை எண்ணி மன்னனும், கோப்பெருந்தேவியும் உயிர் துறக்கின்றனர். சீற்றத்தால் மதுரையை எரித்த கண்ணகி, மலைநாட்டில் உள்ள செங்குன்றுக்கு வருகிறாள். அங்கே தெய்வ வடிவில் வந்த கோவலனுடன் அவள் வானோர் நாட்டிற்குப் புறப்பட்டுச் செல்கிறாள். அதைக் கண்ட வேட்டுவர் கண்ணகியைக் குலதெய்வமாகக் கொண்டாடுகின்றனர்.

சேர மன்னன் செங்குட்டுவன் மலை வளம் காண அந்த மலையடிவாரத்திற்கு வந்து தங்குகிறான். சீத்தலைச் சாத்தனார், கண்ணகி பற்றிய முழுச் செய்தியையும் அவனுக்குத் தெரிவிக்கிறார். அவனும் தெய்வப் பெண்ணான கண்ணகிக்குச் சிலையெடுக்க இமயம் செல்கிறான். வழியில் தமிழ் மன்னரை இகழ்ந்த கனக, விசயர்களை வென்று, சிலைக்கான கல்லை அவர்கள் தலையில் சுமத்தி, கல்லை கங்கையில் நீராட்டி வஞ்சி மாநகரம் கொண்டு வருகிறான். பின்னர் கனக, விசயரை விடுவித்து விட்டு, கண்ணகியின் சிலையை நிர்மாணிக்கிறான்.

நடந்த நிகழ்வுகளை அறிந்த கண்ணகியின் தோழி தேவந்தியும், செவிலித்தாயும், கண்ணகி கோயிலுக்கு வருகின்றனர். கண்ணகி தெய்வ வடிவத்தோடு வந்து மன்னன் செங்குட்டுவனுக்கு காட்சி கொடுத்து வாழ்த்தினாள். கண்ணகியை பூஜிக்கும் பணியைத் தேவந்திக்கு அளித்தான் செங்குட்டுவன். அந்த நிகழ்வுக்கு ஆரிய அரசர்களும், குடகக் கொங்கரும், வடநாட்டு அரசர்களான நூற்றுவர் கன்னரும், இலங்கை அரசனாகிய கயவாகுவும் வந்திருந்தனர். அவர்கள் கண்ணகியிடம், “யாங்கள் எங்களது நாட்டிற் செய்யும் வேள்வியினும் வந்து அருள் செய்க” என்று வேண்டிக் கொண்டனர். நீங்கள் விரும்பியவாறே வரம் தந்தேன்” என்றது கண்ணகித் தெய்வம். அது கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். கண்ணகியை வணங்கி வாழ்த்தினர்.

ஔவை துரைசாமிப் பிள்ளை ஆய்வுரை

நூலாசிரியர் வரலாறு

சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், சேரநாட்டில் அரசாட்சி செய்த இமயவரம்பன் சேரலாதன் எனும் அரசனின் மகன். சேரன் செங்குட்டுவனின் தம்பி.

ஒரு சமயம் அவைக்கு வந்த நிமித்திகன், ‘அரசருக்குண்டான இலக்கணம் இளங்கோவுக்கு மட்டுமே உண்டு’ என்று சொல்ல, தன் அண்ணன் செங்குட்டுவனுக்கு மன வருத்தம் தர விரும்பாத இளங்கோ, குணவாயில் கோட்டத்தில் துறவு பூண்டார்.

அவர் துறவு பூண்ட பின்னரே சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது. சீத்தலைச் சாத்தனார், தனது நண்பரான இளங்கோவடிகளிடம் கண்ணகியின் கதையைக் கூறி, சிலப்பதிகாரம் உருவாகக் காரணமாக அமைந்தார். காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் நிகழ்ந்தவற்றை அறிந்தவர்களிடம் கேட்டும், வஞ்சி நகரத்திலும் வடநாட்டிலும் நிகழ்ந்தவற்றை நேரிற் கண்டும், கேட்டும் சிலப்பதிகாரத்தை இயற்றினார் இளங்கோவடிகள். சாத்தனார் தலைமையில் இளங்கோ சிலப்பதிகாரத்தை அரங்கேற்றினார்.

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என அழைக்கப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தின் காலம்

சிலப்பதிகாரத்தின் காலம் பொதுயுகம் இரண்டாம் நூற்றாண்டு. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியம், ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியம் என வேறு சில கருத்துக்களும் உள்ளன என்றாலும், கயவாகு மன்னனின் வருகை, வடநாட்டு மன்னர்களான சதகரணிகள் எனப்படும் ‘நூற்றுவர் கன்னர்’ போன்றோர் பற்றிய குறிப்புக்களால் இந்நூல் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியமாகவே கருதப்படுகிறது.

சிலப்பதிகாரம்

நூல் அமைப்பு

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாகவும், அதன் உட்பிரிவாக மொத்தம் முப்பது காதைகளையும் கொண்டுள்ளது.

காண்டங்கள்,

  • புகார்க் காண்டம்
  • மதுரைக் காண்டம்
  • வஞ்சிக் காண்டம்

என்பனவாகும்.

புகார்க் காண்டம்

இக்காண்டம் பத்து காதைகளைக் கொண்டது. அவை,

  1. மங்கல வாழ்த்துப் பாடல்
  2. மனையறம் படுத்த காதை
  3. அரங்கேற்று காதை
  4. அந்தி மாலைச் சிறப்பு செய் காதை
  5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
  6. கடல் ஆடு காதை
  7. கானல் வரி
  8. வேனிற்காதை
  9. கனாத் திறம் உரைத்த காதை
  10. நாடு காண் காதை
மதுரைக் காண்டம்

இக்காண்டம், பதிமூன்று காதைகளைக் கொண்டது. அவை,

  1. காடு காண் காதை
  2. வேட்டுவ வரி
  3. புறஞ்சேரி இறுத்த காதை
  4. ஊர் காண் காதை
  5. அடைக்கலக் காதை
  6. கொலைக்களக் காதை
  7. ஆய்ச்சியர் குரவை
  8. துன்ப மாலை
  9. ஊர் சூழ் வரி
  10. வழக்குரை காதை
  11. வஞ்சின மாலை
  12. அழற்படுகாதை
  13. கட்டுரை காதை
வஞ்சிக் காண்டம்

இக்காண்டம், ஏழு காண்டங்களைக் கொண்டது. அவை,

  1. குன்றக் குரவை
  2. காட்சிக் காதை
  3. கால்கோள் காதை
  4. நீர்ப்படைக் காதை
  5. நடுகற் காதை
  6. வாழ்த்துக் காதை
  7. வரம் தரு காதை

24 புலவர்கள், 22 கடவுளர்கள், 11 நதிகள், 19 மலைகள், 36 ஊர்கள், 23 நாடுகள், 41 அரசர்கள் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன.

சிலப்பதிகாரப் பாடல் சிறப்புகள்

சிலம்பில் உள்ள பாடல்கள் கலிப்பாவினாலும், ஆசிரியப்பாவினாலும் அமைந்தவை.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்

சூழ் வினைச் சிலம்பு காரணமாக

சிலப்பதிகாரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்

- என்று இளங்கோ, காப்பியம் இயற்றப்பட்டதன் நோக்கத்தைப் பற்றிக் கூறுகிறார்.

கண்ணகியைக் கோவலன் வர்ணிக்கும் போது,

“மாசறு பொன்னே வலம்புரி முத்தே

காசறு விரையே கரும்பே தேனே

அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே

பெருங்குடி வாணிகன் பெருமட மகளே

மலையிடைப் பிறவா மணியே என்கோ

அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ

யாழிடைப் பிறவா இசையே என்கோ

தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை”

என்றெல்லாம் சொல்லி வியப்பதாக இளங்கோவடிகள் காட்டுகிறார்.

சாலினி என்ற வேட்டுவப் பெண்ணின் மேல் வந்த கொற்றவை,

“இவளோ கொங்கச் செல்வி குடமலை யாட்டி

தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து

ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமா மணி”

என்று கண்ணகியைப் பலவாறு போற்றுவதாக இளங்கோ காட்சிப்படுத்துகிறார்.

அதே கண்ணகியின் கணவன் கோவலன் கொலையுண்டதும், சீற்றத்துடன் மதுரை வீதிகளில் வரும் கண்ணகியைப் பார்த்து, மதுரை மக்கள்,

அல்லல் உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டெங்கி

மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி

களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி

வளையாத செங்கோல் வளைந்தது இது என்கொல்

மன்னவர் மன்னன் மதிக் குடை வாள் வேந்தன்

தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்கொல்

மண் குளிரச் செய்யும் மற வேல் நெடுந்தகை

தண் குடை வெம்மை விளைத்தது இது என்கொல்

செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்பொருட்டால்

வம்பப் பெரும் தெய்வம் வந்தது இது என்கொல்

-என்று அரற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


இறுதியில் தெய்வமான கண்ணகியின் கூற்றாக,

தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்

நல்விருந்து ஆயினான் நான்அவன் தன் மகள்

வெல்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்

என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்

- என்று குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரம் காப்பியத்தின் சிறப்பு

  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டிடைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்
  • புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • ஒருமைப்பாட்டுக் ப்பியம்
  • தமிழ்த்தேசியக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்டக் காப்பியம்
  • புரட்சிக் காப்பியம்
  • சிறப்பதிகாரம் (உ.வே.சா)
  • பைந்தமிழ் காப்பியம்

- என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் சிலப்பதிகாரம் போற்றப்படுகிறது.

சிலப்பதிகார உரைகள்

  • அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்
  • அடியார்க்குநல்லார் உரை
  • ந.மு.வேங்கடசாமிநாட்டார் உரை
  • உ.வே.சா.வின் ஆய்வுரை
  • ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை உரை
  • ரா.பி. சேதுப்பிள்ளை உரை
  • பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரை
  • ம.பொ. சிவஞானம்
  • புலியூர்க்கேசிகன்
  • டாக்டர் ரா. சீனிவாசன்

- எனப் பலர் சிலம்பிற்கு உரை எழுதியுள்ளனர். தெ.பொ. மீனாட்சு சுந்தரம் பிள்ளை, டாக்டர் மா. இராசமாணிக்கனார், டாக்டர் ந. சஞ்சீவி உள்ளிட்ட பலரது சிலப்பதிகார விளக்க ஆராய்ச்சி உரைகளும், கட்டுரை நூல்களும் வெளியாகியுள்ளன.

சிலப்பதிகாரத்தின் பிற சிறப்புகள்

  • சமண, பௌத்த, வைதீக சமயங்களைப் பத்தினி வழிபாட்டில் இணைத்துச் சமய ஒற்றுமை பேணியுள்ளது.
  • மன்னரைப் பாட்டுடைத் தலைவராகக் கொள்ளாது, வணிக மகளையும் கணிகை மகளையும் முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டுள்ளது.
  • சமண சமயம் சார்ந்த காப்பியமாக இருந்தாலும், அருகன், கொற்றவை, திருமால் சிவன் போன்ற தெய்வங்களைப் பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளது.
  • தமிழர்களின் கலை, இலக்கியம் போன்றவற்றை வெளிப்படுத்தியுள்ளது.
  • சேரர் குடி மன்னர்களைப் போலவே சோழ, பாண்டிய வேந்தர்களின் உயர்வையும், பண்பையும் பாராட்டியிருப்பது.
  • ஆடலாசிரியன், இசையாசிரியன், நாட்டியக் கவிஞன், தண்ணுமையாசிரியன், குழலாசிரியன், யாழாசிரியன் என இசைத்துறை சார்ந்தோரது இலக்கணத்தைக் கூறுவது.
  • கூத்துக்கள் பற்றி, தெய்வங்கள் பற்றி, தெய்வ வழிபாடு பற்றி, பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றி மிக விரிவாகச் சிலப்பாதிகாரம் காட்சிப்படுத்தியுள்ளது.
  • தமிழறிஞர்களால் அதிக அளவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல் என்ற சிறப்பு சிலப்பதிகாரத்திற்கு உண்டு.

சிலப்பதிகாரம் - மொழிபெயர்ப்புகள்

திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக சிலப்பதிகாரம் கருதப்படுகிறது. 1939-ல் இராமச்சந்திர தீக்ஷிதர் சிலம்பு முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கல்வெட்டுகள், நாட்டுப்புறக்கதைகள், மானிடவியல் செய்திகளின் அடிப்படையில் சில ஆய்வுக்குறிப்புகளையும் அவர் தந்திருந்தார். எழுத்தாளர் க.நா. சுப்ரமண்யம் ஒரு மொழிபெயர்ப்பினை வெளியிட்டார். Alain Danielou என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் ஒருவரும் சிலம்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவ்வாறு சிலப்பதிகாரம் மொழிபெயர்ப்புக்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரம்: வரலாற்று இடம்/மதிப்பீடு

தமிழில் தோன்றிய முதல் காப்பியம். முதல் நாடகக் காப்பியமும் சிலம்பு தான். இசைத்தமிழ் நூல் ஆகவும் சிலப்பதிகாரம் கருதப்படுகிறது. இயல், இசை, நாடகம் பற்றி விரிவாகக் கூறும் முத்தமிழ்க் காப்பியமும் சிலம்புதான். சிலப்பதிகாரம் பற்றி பாரதியார், “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்கிறார். கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை, ”தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம்” என்கிறார். “சிலப்பதிகாரம் என்பதைவிட சிறப்பு அதிகாரம் என்பதே சிறந்தது” என்பது உ.வே சாமிநாத ஐயரின் கருத்து.

“முதன்முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்” என்கிறார், டாக்டர் மு.வரதராசன்.

சிலப்பதிகாரம் பற்றி ஜெயமோகன், “அது (சிலப்பதிகாரம்) ஒரு முழுமையான காப்பியம். முழுமையான காப்பியம் என்பதன் அடையாளம் அது நான்கு வகையில் முழுமை கொண்டதாக இருக்கும் என்பதே. ஒன்று அது அது உருவான சமூகத்தின் வரலாறாகவும் இருக்கும். இரண்டு, அது ஒரு பண்பாட்டுக் களஞ்சியமாக இருக்கும் . மூன்று அது ஒரு உணர்ச்சிச்செறிவான மானுடக் கதையாக இருக்கும். நான்காவதாக ஏதோ ஒருவகையில் அது ஒரு மெய்ஞானநூலாகவும் இருக்கும். சிலப்பதிகாரத்துக்கு இந்தக்குணங்கள் அனைத்தும் உண்டு.” என்கிறார்.

உசாத்துணை


✅Finalised Page