சங்கு சுப்ரமணியம்

From Tamil Wiki
Revision as of 10:41, 18 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|சங்கு சுப்ரமணியம் சங்கு சுப்பிரமணியம் (18 நவம்பர் 1905 - 15 பெப்ருவரி 1969) தமிழ் இதழாளர், எழுத்தாளர். சங்கு இதழை நடத்தியவர். நடிகர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் என பல தளங்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சங்கு சுப்ரமணியம்

சங்கு சுப்பிரமணியம் (18 நவம்பர் 1905 - 15 பெப்ருவரி 1969) தமிழ் இதழாளர், எழுத்தாளர். சங்கு இதழை நடத்தியவர். நடிகர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் என பல தளங்களில் செயல்பட்டவர்.

பிறப்பு, கல்வி

சங்கு சுப்பிரமணியம். 18 நவம்பர் 1905ல் திருவாரூர் மாவட்டம், தேரழுந்தூரில், சுந்தரம் -மீனாட்சி தம்பதியருக்குப் பிறந்தார்.

தனிவாழ்க்கை

சங்கு சுப்ரமணியம் திருவாரூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியர் ஆனார். அனுமான், மணிக்கொடி போன்ற இலக்கிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். சுதேசமித்திரனில் பணியாற்றும்போது சி.சுப்ரமணிய பாரதியார் இவருடைய அலுவலகத் தோழர்.

தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் ஈடுபட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உணவளித்தமைக்காக சாதிவிலக்கம் செய்யப்பட்ட சரஸ்வதி அம்மையாரை மணந்து கொண்டார் சங்கு சுப்ரமணியம்.அவருக்கு 8 குழந்தைகள். 5 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள்.

அரசியல் வாழ்க்கை

சங்கு சுப்ரமணியம் தேசிய இயக்க ஆதரவாளர், விடுதலைப்போராட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினராக ஈடுபட்டார். காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர். தீண்டாமை ஒழிப்புக்காக களப்பணி ஆற்றினார்.காந்தியின் ஆரோக்கிய வழி, இல்லற மகாரகசியம், ஹரிஜன சேவை ஆகிய மூன்று நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காகவும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காவும் பல முறை சிறை சென்றுள்ளார்.கதர்த் துணிகளைத் தலையில் சுமந்தபடி, மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடியபடி ஊர்ஊராக நடந்து சென்று விடுதலைப்போரில் ஈடுபட்டார்.

இதழியல்

சங்கு சுப்ரமணியம் சங்கு கணேசனுடன் இணைந்து சங்கு என்னும் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார். பின்னர் அதை சுதந்திரச் சங்கு என்னும் இதழாக மாற்றினார். தமிழில் லட்சம் பிரதிகள் வரை விற்ற இவ்விதழ் 1934 ல் நின்றது

இலக்கிய வாழ்க்கை

சுதந்திரச் சங்கு இதழில் சங்கு சுப்ரமணியம் கட்டுரைகளுடன் கதைகளையும் எழுதினார்.மணிக்கொடி, கலைமகள் போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். மணிக்கொடி கதைப் பதிப்பின் முதல் இதழில் ’வேதாளம் சொன்ன கதை’ என்ற புராணக் கதையம்சம் கொண்ட சிறுகதையை எழுதினார். அவருடைய ’சிரஞ்சீவிக்கதை என்ற சிறுகதை அக்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திரைவாழ்க்கை

சங்கு சுப்ரமணியம் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து “ஸ்ரீராமானுஜர்” என்கிற திரைப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டு அப்படத்தில் ஸ்ரீராமானுஜராகவும் நடித்தார். அப்படத்திற்கு மணிக்கொடி ஆசிரியர் வ.ராமசாமி ஐயங்கார். வசனம் எழுத, எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி, இதழியலாளர் ந. ராமரத்தினம் போன்றோரும் நடித்திருந்தனர். பாடல்களை பாரதிதாசன் இயற்றியிருந்தார். இப்படம் 1938இல் வெளிவந்தது.

சங்கு சுப்ரமணியம் ஜெமினி கதை இலாகாவில் பணியாற்றினார். அவர்கள் தயாரித்த ‘சக்ரதாரி’ என்னும் படத்திற்கு திரைக்கதை வசனம், பாடல்கள் பொறுப்பை ஏற்றிருந்தார்.

ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம் பெற்று பி. பானுமதி மற்றும் குழுவினரால் பாடப்பட்ட

‘லட்டு, லட்டு மிட்டாய் வேணுமா?

ரவா, லாடு பூரியும் வேணுமா?’

இந்தப் பாடலை இயற்றியவர் சங்கு சுப்ரமணியம்.

தொடர்ந்து ஜெமினியின் கதை இலாகாவில் பணியாற்றி ‘சந்திரலேகா’, ‘ராஜி என் கண்மணி’ போன்ற படங்களில் பங்கெடுத்தார்

ஆன்மிகம்

ஜெயதேவரின் ‘கீத கோவிந்தம்’ நூலை தமிழில் மொழி பெயர்த்தார். இது வெகு காலமாக அச்சில் வராமலிருந்து, பல வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ண பிரேமியின் ‘பாகவத தருமம்’ ஏட்டில் பிரசுரம் கண்டது. கலைமகள் இதழில் பக்திக் கட்டுரைகள் எழுதினார்

இறுதிக் காலகட்டத்தில் சங்கு சுப்ரமணியத்திற்கு பஜனை சம்பிரதாயத்தில் ஆர்வம் ஏற்பட்டு பஜனைகள் செய்ய ஆரம்பித்தார். தனக்கென்று ஒரு தனிப்பாணியையும் உருவாக்கிக் கொண்டார். இவரது பஜனைகளில் ஆழ்வாரின் பாசுரங்கள், பாரதியாரின் பாடல்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன

மறைவு

சங்கு சுப்ரமணியம் தனது 64வது வயதில் 1969 ஆம் வருடம் இயற்கை எய்தினார்

.

சுதந்திர சங்கில் 3.6.1933இல் "அஞ்ஞாதவாசம்" எனும் தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியானது. "அஞ்ஞாதவாசம்" என்றால் தலைமறைவு வாழ்க்கை என்று பொருள். இத்துடன் இதழ் நிறுத்தப்பட்டது. மீண்டும் சிறிது காலத்துக்குப் பிறகு சுதந்திர சங்கு வார இதழாக வெளிவந்தது. 24 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழின் விலை ஓரணா. மணிக்கொடியின் தாக்கத்தால் இம்முறை இதழின் உள்ளடக்கத்தில் நிறைய மாறுதல்களைச் செய்திருந்தார் சங்கு சுப்பிரமணியன். சிறுகதை, கவிதை, இலக்கியக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனாலும் 28 இதழ்களுக்குப் பின்பு 1934இல் மீண்டும் நாட்டு விடுதலைக்குச் சுதந்திர சங்கு பாடுபடும் என்ற அறிவிப்போடு இதழ் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது காலகட்டத்தில் வெளிவந்த சுதந்திர சங்கு இதழில் 65 கதைகள், 150 கட்டுரைகள், 25 கவிதைகள் வெளியாகியுள்ளன. மணிக்கொடி இதழுக்கு இணையாக சுதந்திர சங்கும் சிறுகதை வளர்ச்சிக்கு உதவியது. மணிக்கொடியில் கதை எழுதுவதற்கு முன்பே கு.ப.ரா. சுதந்திர சங்கில் எழுதினார். இவரின் மிகச்சிறந்த கதைகளுள் ஒன்றான "நூர் உன்னிசு" சுதந்திர சங்கில்தான் வெளிவந்தது.

சங்கு சுப்பிரமணியம்தான் சி.சு.செல்லப்பாவை சிறுகதை ஆசிரியராக்கினார். " அன்றைய இளம் படைப்பாளியான நான் அனுப்பிய முதல் சிறுகதையைப் படித்துவிட்டு சங்கு சுப்பிரமணியம் எழுதிய தபால் கார்டு வரிகள் இதோ:-

இளம் தோழ,

தங்கள் கதை கிடைத்தது.

புதிய கை என்று தெரிகிறது. எழுதி எழுதிக் கிழித்து எறியுங்கள். தங்கள் கதையைத் திருத்தி வெளியிடுகிறேன் என்று எழுதியிருந்தார் சங்கு சுப்பிரமணியம்.

அடுத்த என் கதையை அவர் ஒரு எழுத்துகூடத் திருத்தாமல் வெளியிட்டார். நான் சிறுகதாசிரியன் ஆனேன். இப்படி இன்னும் வேறு யாராருக்கு அவர் செய்திருக்கிறாரோ, எனக்குத் தெரியாது. என் அஞ்சலி அவருக்கு என்றைக்கும் (இலக்கியச் சுவை) " என்று சங்கு சுப்பிரமணியம் குறித்த தன் மனப்பதிவை சி.சு.செல்லப்பா வெளிப்படுத்துகிறார்.

வ.ரா., பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, நாமக்கல் கவிஞர் முதலியோர் சுதந்திர சங்கில் தொடர்ந்து எழுதியிருக்கின்றனர். சங்கு சுப்பிரமணியம் பத்திரிகையாசிரியர் மட்டுமன்றி சிறந்த சிறுகதை ஆசிரியரும்கூட. சங்கு சுப்பிரமணியம் தன்னை சிறந்த பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்திக் கொண்டாரே தவிர, சிறுகதையாசிரியராக அல்ல.

.

உசாத்துணை