under review

கி. ஆ. பெ. விசுவநாதம்

From Tamil Wiki
Revision as of 14:49, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
கி. ஆ. பெ. விசுவநாதம்
கி. ஆ. பெ. விசுவநாதம்
கி. ஆ. பெ. விசுவநாதம்
கி. ஆ. பெ. விசுவநாதம்
கி.ஆ.பெ.தலைவர்களுடன்

கி. ஆ. பெ. விசுவநாதம் (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பேச்சாளர், சிந்தனையாளர், ஏற்றுமதி வணிகர், அரசியல் களச்செயல்பாட்டாளர், தமிழறிஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்.

பிறப்பு, இளமை

கி. ஆ. பெ. விசுவநாதம் திருச்சிராப்பள்ளி நகரில் மணியக்காரத் தெருவில் நவம்பர் 10, 1899-ல் பெரியண்ணப்பிள்ளை – சுப்பம்மாள் தம்பதிக்கு 16-வது பிள்ளையாகப் பிறந்தார். சோழிய வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர். கி. ஆ. பெ. பள்ளிக்கூடம் சென்று படிக்கவில்லை. 1904-ல் மருதமுத்துக்கோனாரிடம் திண்ணைப் பள்ளியில் தமிழும் கணிதமும் படித்தார். பிறகு, வேங்கடசாமி நாட்டார், வேதாசலம், கலியாணசுந்தரனார், சோமசுந்தர பாரதியார் போன்ற புகழ்பெற்ற தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார். வாலையானந்த சுவாமிகளிடம் சைவத்தைக் கற்றறிந்தார்.

கி. ஆ. பெ. விசுவநாதம். அவர்களின் தந்தையார் பெரியண்ணன் அவர்கள் தமது மூத்த சகோதரர் கிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோரின் முதலெழுத்தைக் குறிக்கும் வகையில் 'கி.ஆ.பெ.’ (K.A.P) எனும் பெயரினைத் தொழிலுக்குப் பயன்படுத்தியதால் இந்தப் பெயரே காலப்போக்கில், விசுவநாதம் அவர்களுக்கும் தலைப்பெழுத்தாக நிலைத்து விட்டது.

தனி வாழ்க்கை

கி. ஆ. பெ. விசுவநாதம் 1907-ஆம் ஆண்டிலிருந்து தந்தைவழியில் வந்த புகையிலை தொழிலும் சுருட்டு வணிகமும் செய்தார். தொழிலுக்காக மலேசியா, சிங்கப்பூர் சென்று வந்தார்.

கி.ஆ.பெ.சிலை

செப்டம்பர் 15, 1920-ல் செல்லக்கண்ணு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மூன்றாண்டுகளில் மகப்பேற்றின் போது தாயும் சேயும் இறந்தனர். இரண்டாவதாக இராசம்மாள் என்பவரை மணந்தார். நான்கு ஆண்டுகளில் அவரும் காலமானார். மூன்றாவதாக தமக்கையின் மகள் சுப்புலட்சுமியை மணந்தார். இவர்களுக்கு 6 பெண் மற்றும் 4 ஆண் பிள்ளைகள்.

அரசியல்

நீதிக்கட்சி

கி. ஆ. பெ. விசுவநாதம் தன் 18 ஆவது வயதில் நீதிக் கட்சியில் இணைந்தார்.நீதிக் கட்சியில் பொதுச்செயலாளராக இருந்தபோது வகுப்புவாரி பிரதிநிதித்துவம், தீண்டாமை ஒழிப்புச் சட்டம், தமிழ் அறிந்தவர்களும் மருத்துவர்களாகலாம் என்ற அரசாணை போன்ற சட்டங்கள் உருவாக முன்முயற்சி எடுத்தார். 1923-ல் காங்கிரசில் இருந்து ஈ.வே.ராமசாமிப் பெரியாரை நீதிக் கட்சிக்கு அழைத்து வந்ததார்.

சுயமரியாதை இயக்கம்

ஈ.வெ.ராமசாமிப் பெரியாரோடு இணைந்து சுயமரியாதை இயக்கத்தை 1925-ல் தோற்றுவித்த கி. ஆ. பெ. விசுவநாதம் 1938, 1940 என இருமுறை நீதி கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்தார். குடியரசு பத்திரிக்கைக்கு துணை ஆசிரியராகவும் செயல்பட்டார்.

ஆலயநுழைவு போராட்டம்

1927-ல் திருவானைக்காவல் ,மாயவரம் போன்ற கோயில்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று ஆலய நுழைவு போரட்டம் மேற்கொண்டார்.

தமிழர் மணம்

தமிழர் மரபுப்படி சாதிவேறுபாடற்ற திருமணங்களை நடத்திவைக்கும் இயக்கத்தை உருவாக்கிய கி. ஆ. பெ. விசுவநாதம் ஏறத்தாழ ஐயாயிரம் சீர்திருத்தத் தமிழ்த் திருமணங்களை நடத்தி இருக்கிறார்.

இந்தி எதிர்ப்பு

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம் 1937-ல் சென்னை மாநில தமிழர் மாநாடு என்ற பெயரில் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்.480 நாட்கள் பயணம் செய்து 617 கூட்டங்கள் தொடர்ந்து பேசினார்.

தமிழர் கழகம்

பதினாறாவது நீதி கட்சி மாநாட்டின் போது, நீதிக்கட்சியை 'திராவிடர் கழகம்’ என்று ஈ.வெ.ராமசாமிப் பெரியாரும், சி.என். அண்ணாத்துரையும் பெயர் மாற்றம் செய்ய விரும்பியபோது அதை எதிர்த்து 'தமிழர் கழகம்' எனும் பெயரில் தனி அமைப்பை கி.ஆ.பெ. விசுவநாதம் அண்ணல் தங்கோ, சௌந்திர பாண்டியனார் ஆகியோருடன் இணைந்து நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் தலைமையில் தோற்றுவித்தார்.

அதை பெரியார் கடுமையாக தாக்கி எழுதியபோது தமிழர் என்னும் அடையாளத்தை மறைக்கவே திராவிடர் என்னும் அடையாளம் ஈ.வெ.ராமசாமிப் பெரியார், சி.என்.அண்ணாத்துரை ஆகியோரால் முன்வைக்கப்படுகிறது என்று கி. ஆ. பெ. விசுவநாதம் கூறினார். தமிழர் கழகம் தமிழ்த்தேசிய சிந்தனைகளின் தொடக்ககால அமைப்பாக இன்று கருதப்படுகிறது.

திராவிட இயக்கங்கள் ஒருங்கிணைப்பு முயற்சி

கி.ஆ.பெ.விஸ்வநாதம் 1971 முதல் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி எடுத்துக்கொண்டார். இருகட்சித் தலைவர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அவை எவ்வகையிலும் பயனளிக்கவில்லை.

சமயம்

கி. ஆ. பெ. விசுவநாதம் தன் பதினைந்தாம் வயதில் திருச்சி வாலையானந்த சுவாமிகளிடம் சைவ தீட்சை பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சைவ தீட்சை வழங்க கூடாது என்று வாலையானந்த சுவாமிகள் சொன்னதனால் ருத்ராட்சத்தை கழற்றி வீசினார் என்று அவர் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. பின்னர் ஈ.வெ.ராமசாமிப் பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தில் செயல்பட்டாலும்கூட சைவப்பற்றுடன் இருந்தார். தமிழ்ச்சைவம் என்னும் கருத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இலக்கியவாழ்க்கை

கி. ஆ. பெ. விசுவநாதம் தன் முதல் மேடைப்பேச்சை பிப்ரவரி 5,1921-ல் ஒட்டப்பிடாரத்தில் 'அன்பு' என்ற தலைப்பில் பேசினார். இலக்கியம், இசை, நாடகம், அரசியல், சமூகம், சீர்திருத்தம், கல்வி, வாணிகம், தொழிலாளர், ஆராய்ச்சி, மேடை, வானொலி என்று 12 துறைகளில் கி. ஆ. பெ. விசுவநாதம் பேசியுள்ளதாக ந.சுப்புரெட்டியார் கூறுகிறார்."உணவே மருந்து--மருந்தே உணவு" என்பது அவரின் புகழ்மிக்க வாக்கியம். தமிழிலக்கியம், சித்தமருத்துவம். சைவசமயம் ஆகியவற்றை பற்றிய உரைகளை ஆற்றுவதும் அவற்றை நூலாக்குவதும் அவருடைய பணிகள்.

தனித்தமிழ் இயக்கம்

கி. ஆ. பெ. விசுவநாதம் மறைமலை அடிகளின் செல்வாக்கால் தனித்தமிழியக்க ஈடுபாடு கொண்டவரானார். அண்ணல் தங்கோ போன்ற தனித்தமிழியக்க போராளிகளுடன் இணைந்து செயல்பட்டாலும் தன் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.

இதழியல்

கி. ஆ. பெ. விசுவநாதம் தமிழர்நாடு எனும் இதழை ஆகஸ்ட் 17, 1947-ல் தொடங்கினார். தமிழின் சிறப்பு, தமிழ் இசை, திருக்குறள் ஆய்வு, தமிழ் மருத்துவம், கல்வி என்று தமிழர்நாடு பல துறைகளில் பங்களித்தது.

இலக்கிய இடம்

கி. ஆ. பெ. விசுவநாதம் மொத்தம் 25 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் பல அவரது உரைகளின் வரிவடிவமே.அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், திருக்குறள் விளக்கங்கள், சங்க இலக்கிய உரைகள் பள்ளி மாணவர்களுக்காக எளிய நடையில் படைக்கப்பட்டவை. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் நூல்கள் தனிமனித ஒழுக்கம், நற்பண்புகளைப் பேணுதல், இல்லறத்தைச் செம்மையாக்குதல், தமிழ் மொழியுணர்வை ஊட்டுதல், சமூக ஒற்றுமையுணர்வின் மகத்துவம், தமிழைக் கற்க இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதல் போன்ற அம்சங்களை வலியுறுத்துவனவாக அமைந்தன. மரபான சைவத்தை நவீன ஜனநாயகத்தின் மானுடநேய விழுமியங்களின் அடிப்படையில் மறுஉருவாக்கம் செய்தவர்களில் கி.ஆ.பெ.விஸ்வநாதமும் ஒருவர்.

அமைப்புப்பணிகள்

கி.ஆ.பெ.சிலை தபால்தலை
  • தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வடிவமைத்ததில் கி. ஆ. பெ. விசுவநாதத்தின் பங்கு முக்கியமானது.
  • 'தமிழகப் புலவர் குழு' என்ற அமைப்பைத் தனது 60-ஆம் வயதில் உருவாக்கினார்.
  • 1936-ல் திருச்சி கலைகழக தலைவராக பொறுப்பேற்று தொடர்ந்து 20 ஆண்டுகள் தலைவராக செயலாற்றினார்

விருதுகள்

  • "முத்தமிழ்க் காவலர்" என்னும் பட்டம், அன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.எம். நாராயணசாமியால் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 17, 1956-ல் வழங்கப்பட்டது.
  • "சித்த மருத்துவ சிகாமணி" விருது 1965-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் வழங்கப்பட்டது.
  • "வள்ளுவ வேல்" என்னும் விருதை 1975-ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் வழங்கியது.
டாக்டர் பட்டம் பெற்ற கி.ஆ.பெ.வி பாராட்டு விழாவில் திருச்சி தமிழ்ச்சங்க நிர்வாகிகள்

நினைவுச்சின்னங்கள்

  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை 2000 ஆண்டு முதல் தமிழறிஞர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் இலக்கியவிருது வழங்கி வருகிறது.
  • திருச்சியில் கி. ஆ. பெ. விசுவநாதம் சிலை நிறுவப்பட்டுள்ளது
  • திருச்சியில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் பெயர் சூட்டப்பட்டுள்ளது
  • 2010-ல் கி.ஆ.பெ விஸ்வநாதத்திற்கு இந்திய அரசு தபால்தலை வெளியிட்டது.
  • திருச்சி தில்லைநகர் எனும் ஊரில் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது

வாழ்க்கை வரலாறு

  • ந.சுப்பு ரெட்டியார் - 'முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்’ 1999

மறைவு

கி.ஆ.பெ. விசுவநாதம் டிசம்பர் 19, 1994இல் தமது 96-ஆம் வயதில் காலமானார்.

படைப்புகள்

நாம்தமிழர் இயக்கவிழாவில் சி.பா. ஆதித்தனார் - கி.ஆ.பெ.வி

கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல்கள் மொத்தம் 36. அதில் 23 நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆகஸ்ட் 2007-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

  • வள்ளுவர் (1945)
  • வானொலியிலே (1947)
  • ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950)
  • அறிவுக்கு உணவு (1953)
  • தமிழ் மருந்துகள் (1953)
  • வள்ளுவரும் குறளும் (1953)
  • எண்ணக்குவியல் (1954)
  • தமிழ்ச்செல்வம் (1955)
  • திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956)
  • திருக்குறள் கட்டுரைகள் (1958)
  • நான்மணிகள் (1960)
  • வள்ளுவர் உள்ளம் (1964)
  • ஆறு செல்வங்கள் (1964)
  • தமிழின் சிறப்பு (1969)
  • நல்வாழ்வுக்கு வழி (1972)
  • நபிகள் நாயகம் (1974)
  • திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974)
  • மணமக்களுக்கு (1978)
  • வள்ளலாரும் அருட்பாவும் (1980)
  • எனது நண்பர்கள் (1984)
  • திருக்குறளில் செயல்திறன் (1984)
  • அறிவுக்கதைகள் (1984)
  • மாணவர்களுக்கு (1988)
  • எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994)

உசாத்துணை


✅Finalised Page