கா.ஸ்ரீ.ஸ்ரீ

From Tamil Wiki
Revision as of 17:52, 30 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசன்) ( 1913-) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசன்) ( 1913-) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர்.

பிறப்பு, கல்வி

உத்தரப்பிரதேசத்திலுள்ள பிருந்தாவனத்தில் 15 டிசம்பர் 1913 ல் ஸ்ரீரங்காச்சாரியாருக்கும் ருக்மிணி அம்மாளுக்கும் பிறந்தார். தந்தை வேத பண்டிதர். சம்ஸ்கிருத அறிஞர். இந்தி வங்கம் போன்ற மொழிகளில் விற்பன்னர். தந்தையிடமிருந்து சம்ஸ்கிருதம், இந்தி, வங்க மொழிகளை கா.ஸ்ரீ.ஸ்ரீ கற்றார். ஸ்ரீரங்காச்சாரியார் பிருந்தாவனத்தில் இருந்த ஒரு மதக்கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக இருந்தார். தந்தைக்கு ஏற்பட்ட உடல்நிலைக்குறைவால் காஞ்சீபுரம் திரும்பிய கா.ஸ்ரீ.ஸ்ரீ காஞ்சீபுரம் பச்சையப்பா பள்ளியில் சேர்ந்து படித்தார். மொழிப்பாடங்களில் தங்கப்பதக்கம் பெற்று பள்ளிக்கல்வியை முடித்தார்.

தனிவாழ்க்கை

கா.ஸ்ரீ.ஸ்ரீ 1930ல் லட்சுமி அம்மாளை மணந்தார்.கா.ஸ்ரீ.ஸ்ரீ சென்னைக்கு வந்து ஹிந்தி பிரச்சாரசபாவில் பிழைதிருத்துநராகப் பணிக்குச் சேர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கா.ஸ்ரீ.ஸ்ரீ தொடக்கம் முதலே மொழியாக்கங்கள் தான் செய்துவந்தார். 1940ல் அவர் காண்டேகரின் ’சகோரமும் சாதகமும்’ என்னும் கதையை மொழியாக்கம் செய்து தினமணிக்கு அளித்தார். அங்கே உதவியாசிரியராக இருந்த புதுமைப்பித்தன் பாராட்டுக்குறிப்புடன் அதை வெளியிட்டார். காந்தி அனைத்திந்திய எழுத்தாளர் மாநாட்டுக்கு சென்னை வந்தபோது உ.வே.சாமிநாதய்யரின் வரவேற்புரையை மொழியாக்கம் செய்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவ்விழாவை ஏற்பாடு செய்த கி.வா.ஜகன்னாதன் போன்றவர்களின் உறவு கிடைத்தது. கலைமகள் ஆசிரியர்குழுவில் சேர்ந்தார்.கலைமகளில் கதைகளும் எழுதலானார். ‘மழையிடையே மின்னல்’ என்னும் சிறுகதை கலைமகளில் வெளியாகி இலக்கியக் கவனம் பெற்றது. பின்னர் அது நீலமாளிகை என்னும் தொகுதியில் இடம்பெற்றது. அத்தொகுதிக்கு புதுமைப்பித்தன் முன்னுரை அளித்திருந்தார். அதில் ‘இவருடைய சொந்தக்கற்பனைகள் எல்லாம் முக்கால்வாசிப்பேர் திரைபோட்டு மூடி வைக்கவேண்டியவை என்றும் சொல்லும் விவகாரங்களைப் பற்றி அமைந்திருக்கின்றன. அவைகளைப்பற்றி இவர் தெம்பு குன்றாமல் கை தழுதழுக்காமல் எழுதக்கூடியவர் என்பதை இவருடைய கதைகளே சொல்லும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ காண்டேகருக்கு மிக அணுக்கமானவராக இருந்தார். அவர் மொழியாக்கம் செய்த காண்டேகரின் நாவல்கள் அக்காலத்தில் தமிழகத்தில் மிக விரும்பிப் படிக்கப்பட்டன. மராத்தியை விட தமிழில் காண்டேகர் புகழ்பெற்றிருந்தார் என்று வேடிக்கையாகச் சொல்லுமளவுக்கு அம்மொழியாக்கங்களின் செல்வாக்கு இருந்தது. பின்னாளில் கு.ராஜவேலு, மு.வரதராசனார், நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களில் காண்டேகரின் கதைகளின் செல்வாக்கு, குறிப்பாக கா.ஸ்ரீ.ஸ்ரீயின் மொழிநடையின் பாதிப்பு இருந்தது. கருகியமொட்டு, வெறும்கோயில், சுகம் எங்கே?, எரிநட்சத்திரம் போன்ற நாவல்கள் புகழ்பெற்றவை.

கா.ஸ்ரீ.ஸ்ரீயின் முதல்நாவல் ’காந்தம்’ கலைமகள் வெளியீடாக வந்தது. தொடர்ந்து காற்றாடி என்னும் நாவலும் நீலமாளிகை, அன்னபூரணி போன்ற சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்தன. குமுதம் இதழ் தொடங்கப்பட்டபோது முதல் இதழிலேயே கா.ஸ்ரீ.ஸ்ரீயின் சிறுகதையும் அவர் மொழியாக்கம் செய்த காண்டேகரின் நாவல் ’வெண்முகில்’ வெளியாகும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது என்பது அன்று அவருக்கிருந்த வாசக ஏற்புக்கான சான்று. காண்டேகரின் 13 நாவல்களையும் 150 சிறுகதைகளையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழியாக்கம் செய்திருக்கிறார்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ தமிழிலிருந்து இந்திக்கும் மராட்டிக்கும் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். பாரதியாரின் தராசு கட்டுரைகளை இந்திக்கு மொழியாக்கம் செய்தார். இந்தியச் சிறுகதைகள் என்னும் தலைப்பில் மாதவையா, புதுமைப்பித்தன், கல்கி, ந.சிதம்பர சுப்ரமணியன் முதலிய 12 எழுத்தாளர்களின் கதைகளை இந்தியில் மொழியாக்கம் செய்தார்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ சுதர்சனம் என்னும் வைணவ இதழில் கம்பராமாயண ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார். கல்கியில் காவியராமாயணம் என்னும் பேரில் வான்மீகி- கம்பன் கவிநயத்தை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

இலக்கிய இடம்

கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழியாக்கம் செய்த காண்டேகரின் நாவல்கள் தமிழிலக்கியத்தில் ஒரு பெரிய படைப்பாளியின் மூலப்படைப்புகள் அளவுக்கே செல்வாக்கு செலுத்தியவை. சி.என்.அண்ணாத்துரை கா.ஸ்ரீ.ஸ்ரீயை ‘தமிழ்நாட்டு காண்டேகர்’ என்று புகழ்ந்துரைத்தார். மு.கருணாநிதி கா.ஸ்ரீ.ஸ்ரீயின் மொழியாக்கங்கள் வழியாகவே நவீன உரைநடையில் அறிமுகம் உருவானது என எழுதியிருக்கிறார். கா.ஸ்ரீ.ஸ்ரீ யின் கதைகள் சீண்டும்தன்மை அற்ற சீர்திருத்தநோக்கம் கொண்டவை, ஆண்பெண் உறவை மென்மையாகத் தொட்டுச் சொல்பவை. தமிழ் உரைநடையின் வளர்ச்சியில் கா.ஸ்ரீ.ஸ்ரீ குறிப்பிடத்தக்க பங்களிப்பு உடையவர்

மறைவு

கா.ஸ்ரீ.ஸ்ரீ 28 ஜூலை 1999ல் நாசிக்கில் மறைந்தார்.

நினைவுகூரல்

கா.ஸ்ரீ.ஸ்ரீயின் நினைவுக்காக Kaa.Sri.Sri.Charirable Trust என்னும் அமைப்பு உள்ளது.

உசாத்துணை

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=8846