under review

கலைமகள்

From Tamil Wiki
Revision as of 09:02, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)

To read the article in English: Kalaimagal. ‎

கலைமகள் (செப்டெம்பர், 1934)
கலைமகள் ஜூன் 1941
கலைமகள் 1932 -மூன்றாவது இதழ்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.

வெளியீடு, வரலாறு

சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர்.

1937 முதல் கி. வா. ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

நோக்கம்

’முன்னரே தமிழில் வெளிவந்து கொண்டிருந்த இலக்கிய இதழ்களில் இல்லாத பல புதிய செய்திகளைக் கொண்டதாக கலைமகள் இதழ் அமைய வேண்டும்’ என்பதே ஆசிரியர் குழுவினரின் நோக்கமாக இருந்தது. 'திரிவேணி’ என்னும் ஆங்கில இதழைப் போல் இவ்விதழைக் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர் குழுவினர் விரும்பினர். ஏற்கனவே புதுச்சேரியிலிருந்து 'கலைமகள்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய இதழ் வந்து கொண்டிருந்த நிலையில் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கலை, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இவ்விதழ் அமைந்தது.

உள்ளடக்கம்

1932-ல் மூன்றாவது இதழின் பின்னட்டையில் இதில் எழுதவிருப்பவர்களின் பட்டியல் உள்ளது. அக்கால அறிவியக்கத்தின் ஒரு பொதுத்தோற்றத்தை அளிப்பது அது.

  • எம்.அனந்தநாராயண ஐயர்
  • பி.எஸ்.ஆச்சாரியா
  • டி.ஜி.ஆராவமுத ஐயங்கார்
  • எஸ்.ஆழ்வார் ஐயங்கார்
  • ரா.ராகவையங்கார்
  • எம்.ஏகாம்பரநாத ஐயர்
  • ஜி.கணபதி சாஸ்திரிகள்
  • ஏ.கந்தசாமிப்பிள்ளை
  • திரு.வி.கல்யாணசுந்தர முதலியார்
  • ரெவெரெண்ட் கின்ஸ்பெரி
  • ஆர்.வி.கிருஷ்ணையர்
  • ஆர்.கிருஷ்ணமூர்த்தி (கல்கி)
  • முராரி கிருஷ்ணமூர்த்தி ஐயர்
  • டி.எம்.கிருஷ்ண ஸ்வாமி
  • எஸ்.குமாரஸ்வாமி ரெட்டியார்
  • டி.ஜி.குருஸ்வாமி ரெட்டியார்
  • ஆர்.கோபால ஐயர்
  • எஸ்.வி.கோபாலகிருஷ்ண ஐயர்
  • வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
  • கே.ஜி.சங்கர ஐயர்
  • எம்.எஸ்.சபேச ஐயர்
  • பி.பி.என்.சாஸ்திரி
  • பி.ஆர்.சிதம்பர ஐயர்
  • கே.என். சிவராஜ பிள்ளை
  • எம்.எஸ்.சுந்தர சர்மா
  • கே.சுப்ரமணிய ஐயர்
  • என்.சுப்ரமணிய ஐயர்
  • வெ.ப.சுப்ரமணிய முதலியார்
  • எஸ்.எஸ்.சூரியநாராயண சாஸ்திரி
  • ஆர்.பி.சேதுப்பிள்ளை (ரா.பி.சேதுப்பிள்ளை)
  • கோ.சேஷாத்ரி ஐயர்
  • என்.சேஷாத்ரி ஐயர்
  • எஸ்.சோமசுந்தர தேசிகர்
  • ஜி.தாதாச்சாரியார்
  • எம்.பி.எஸ் துரைசாமி
  • வே.துரைசாமி ஐயர்
  • வி.ஆர்.துரைசாமி நாயுடு
  • எஸ்.தேசிகவினாயகம் பிள்ளை
  • ஒ.ப.தேசிகன்
  • அ.நாகஸ்வாமி ஐயர்
  • வே.நாராயண ஐயர்
  • மிஸ்.பவானி ஸ்வாமிநாதன்
  • பி.ஏ.பாஷ்யம் ஐயங்கார்
  • ஜே.எஸ்.பொன்னையா நாயுடு
  • ஏ.மகரபூஷணம் ஐயங்கார்
  • எம்.மீனாம்பாள்
  • பி.ஆர்.மீனாக்ஷிசுந்தர முதலியார்
  • பி.ஏ.முத்துத்தாண்டவர்
  • முத்தையா பாகவதர்
  • என்.ஆர்.ரகுநாதாச்சாரியார்
  • டி.எஸ்.எஸ்.ராகவாச்சாரியார்
  • ஆர்.ராம ஐயர்
  • ந.ராமசாமி ஐயர்
  • என்.ராமஸ்வாமி ஐயர்
  • எம்.ஆர்.ராமஸ்வாமி
  • சி.கே.லக்ஷ்மி அம்மாள்
  • சி.லக்ஷ்மிநாராயண ஐயர்
  • இ.எஸ்.வரதராஜ ஐயர்
  • சி.வீரபாகுப் பிள்ளை
  • வி.விசாலாக்ஷி அம்மாள்
  • கே.சி.வீரராகவ ஐயர்
  • சா. வேங்கடசாமி ஐயர்
  • டி.எல்.வேங்கடராம ஐயர்
  • மிஸ். ஜோசப்
  • பி.பி.ஸ்ரீனிவாசாச்சாரியார்
  • டி.சி.ஸ்ரீனிவாட ஐயங்கார்
  • பி.வி.ஸ்ரீராம ஐயர்
  • ஷாந்தி ரங்கராவ்
  • எஸ்.ஸத்யமூர்த்தி ஐயர்
  • வே.ஸநாதன ஐயங்கார்
  • கே.ஸாவித்ரி அம்மாள்
  • கே.என்.ஸீதாராம ஐயர்
கலைமகள் 90 ஆண்டு நிறைவிதழ்

இலக்கிய இடம்

கலைமகள் தொடங்கப்பட்ட காலத்தில் பழைய இலக்கியமரபையும் புத்திலக்கியத்தையும் இணைக்க முயன்றது. உ.வே.சாமிநாதய்யர், தேசிக வினாயகம்பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார் போன்றவர்கள் இவ்விதழில் எழுதினர். மணிக்கொடி நின்று கலாமோகினி தொடங்கப்படுவதற்கு நடுவே உள்ள காலகட்டத்தில் புதுமைப்பித்தன் உள்ளிட்ட மணிக்கொடி எழுத்தாளர்கள் கலைமகள் இதழில் எழுதினர். 1935-ஆம் ஆண்டு கலைமகள் நடத்திய சிறுகதைப்போட்டியில் ந.பிச்சமூர்த்தி முதல்பரிசு பெற்றார். ஈழச் சிறுகதை முன்னோடியான இலங்கையர்கோன் போன்றவர்கள் கலைமகள் வழியாக அறிமுகமானார்கள்

பின்னர் கலைமகள் குடும்ப இதழாக மாற்றப்பட்டது. அதில் ஏராளமான பெண்கள் எழுதினர். அநுத்தமா, சி.ஆர்.ராஜம்மா, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் கமலா சடகோபன் என பெண் எழுத்தாளர்களின் ஒரு நிரையை கலைமகள் உருவாக்கியது. இவர்களை பொதுவாகவே கலைமகள் எழுத்தாளர்கள் என்று சொல்வதுண்டு. கலைமகள் நடத்திய நாராயணசாமி ஐயர் நினைவு நாவல்போட்டி, அமரர் ராமரத்தினம் நினைவு குறுநாவல் போட்டி வழியாக தமிழில் பல முக்கியமான எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். உதாரணமாக பின்னாளில் ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளரான அகிலன் 1944-ல் கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவுப்பரிசை தன் பெண் என்னும் நாவலுக்காக பெற்று அறிமுகமானார்.

இதழ்தொகுப்புகள்

கலைமகள் இதழ் தொகுதிகளை கலைஞன் பதிப்பகம் மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page