under review

கலிப்பா

From Tamil Wiki

தமிழ் யாப்பிலக்கணம் கூறும் நால்வகைப் பாக்களுள் ஒன்று கலிப்பா. அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்டது. துள்ளல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடையது. கலிப்பா தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புக்களைக் கொண்டது. கலிப்பா ஒத்தாழிசைக் கலிப்பா, வெண் கலிப்பா, கொச்சகக் கலிப்பா என மூன்று வகைப்படும்.

கலிப்பாவின் இலக்கணம்

துள்ள இசையன கலியே மற்றவை
வெள்ளையும் அகவலு மாய்விளைந்து இறுமே.

- என இலக்கண விளக்கம் கூறுகிறது. “துள்ளல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடைய பாடல்கள் எல்லாம் கலிப்பாவாகும். அக்கலிப்பாக்கள் வெள்ளைச் சுரிதகம் மற்றும் ஆசிரியச்சுரிதகம் பெற்று முடியும்” என்பது இதன் பொருள்.

  • சீர்: மாச்சீரும், விளங்கனிச் சீரும் கலிப்பாவில் வராது. ஏனைய சீர்கள் வரும்.
  • தளை: கலித்தளை மிகுந்து வரும். பிறதளைகளும் கலந்துவரும்.
  • அடி: கலிப்பா அளவடிகளால் (நான்கடி) அமையும். அதிக அளவுக்கு எல்லை இல்லை. கலிப்பாவின் ஓர் உறுப்பாகிய ‘அம்போதரங்கம்’ குறளடியாலும்(இருசீரடி), சிந்தடியாலும் (முச்சீரடி) வரும். கலிப்பாவின் மற்றோர் உறுப்பாகிய ‘அராகம்’ நாற் சீர் அடிகளால் மட்டுமன்றி நெடிலடி (ஐஞ்சீரடி ), கழிநெடிலடி (ஆறும் அதற்கு மேற்பட்டும் சீர்கள் கொண்ட அடி) ஆகியவற்றாலும் வரும்.
  • உறுப்பு: கலிப்பா ஆறு உறுப்புகளை உடையது. தரவு, தாழிசை என்பன முதல் உறுப்புகள். அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் ஆகியன துணை உறுப்புகள்.
  • முடிப்பு: கலிப்பா, இறுதியில் ஆசிரியச் சுரிதகமோ அல்லது வெண்பாச் சுரிதகமோ கொண்டு முடியும். அதாவது கலிப்பாவின் இறுதியில் ஆசிரிய அடிகளோ வெண்பா அடிகளோ வந்து கலிப்பா முடியும்.
  • ஓசை: கலிப்பாவுக்குரிய ஓசை துள்ளல் ஓசை. கலிப்பாவின் உறுப்புகளாகிய தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம் ஆகியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஓசை அமைப்பை உடையவை. இவ்வுறுப்புகள் அடுத்தடுத்து வரும்போது ஓசை அமைப்பும் மாறிமாறி வரும். குதிரை துள்ளிச் செல்லும் அமைப்பை இது நினைவுபடுத்துவதால் துள்ளல் ஓசை எனும் பெயர் பெற்றது.

துள்ளலோசை வகைகள்

துள்ளலோசை மூன்று வகைப்படும். அவை,

  • ஏந்திசைத் துள்ளல் ஓசை
  • அகவல் துள்ளல் ஓசை
  • பிரிந்திசைத்துள்ளல் ஓசை
ஏந்திசைத் துள்ளல் ஓசை

பா முழுவதிலும் கலித்தளை மட்டுமே அமைந்து வருவது ஏந்திசைத் துள்ளலோசை.

உதாரணப் பாடல்:

முருகவிழ்தா மரைமலர்மேல் முடிஇமையோர் புடைவரவே
வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்
இருவினைபோய் விழமுனியா எதிரியகா தியைஅரியா
நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே

மேற்கண்ட பாடலில் அனைத்துச் சீர்களுக்கும் இடையில் காய் முன் நிரை எனும் அமைப்புடைய கலித்தளையே வந்திருக்கிறது. ஆகவே இது ஏந்திசைத் துள்ளல் ஓசை.

அகவல் துள்ளல் ஓசை

பாவில் கலித்தளையுடன் வெண்சீர் வெண்டளையும் கலந்து வருவது அகவல் துள்ளல் ஓசை.

உதாரணப் பாடல்:

செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினஆழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீள் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லல்ஓங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே

மேற்கண்ட பாடலில் சினஆழி - முல்லைத்தார்; முருக்கிப்போய் - எல்லைநீள்; மதியம்போல் - மல்லல்ஓங் எனவரும் சீர் சந்திப்புகளில் வெண்சீர் வெண்டளையும், ஏனைய இடங்களில் கலித்தளையும் வந்துள்ளன. ஆகவே இது அகவல் துள்ளல் ஓசை.

பிரிந்திசைத் துள்ளல் ஓசை

கலித்தளையுடன் பலதளைகளும் கலந்து வருவது பிரிந்திசைத் துள்ளல் ஓசை.

உதாரணப் பாடல்:

குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத்
தடநிலைப் பெருந்தொழுவில் தகையேறு மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப
என ஆங்கு
ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே

இப்பாடலில் எடுத்தார்ப்பத் - தடநிலை, பெருந்தொழுவில் -தகையேறு, தகையேறு- மரம்பாய்ந்து என்பன போன்ற இடங்களில் கலித்தளையும், தண்புறவிற் - கோவலர், மரம் பாய்ந்து - வீங்குமணி போன்ற இடங்களில் வெண்சீர் வெண்டளையும், குடநிலைத் - தண்புறவில் என்பதில் இயற்சீர் வெண்டளையும், கோவலர் - எடுத்தார்ப்ப என்பதில் நிரையொன்றாசிரியத் தளையும் எனப் பலதளைகளும் கலந்து வந்துள்ளமையால் இது, பிரிந்திசைத் துள்ளல் ஓசை.

கலிப்பாவின் வகைகள்

ஒத்தா ழிசைக்கலி வெண்கலிப் பாவே
கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும்.

என இலக்கண விளக்கம் கூறுகிறது. அதன்படி, கலிப்பா ஒத்தாழிசைக் கலிப்பா, வெண் கலிப்பா, கொச்சகக் கலிப்பா என மூன்று வகைப்படும்.

உசாத்துணை


✅Finalised Page