under review

கற்பு

From Tamil Wiki
Revision as of 14:49, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)

கற்பு: சமகாலப் பொருளில் ஒரு பெண் கொண்டிருக்கும் பாலியல் ஒழுக்கம். பழமைவாத ஒழுக்கப் பார்வையில் ஒரு பெண் ஒரே கணவனை மணந்து, அவனுடன் மட்டுமே வாழ்வது. நீண்ட மரபுப் பார்வையில் முன்னோர் சொன்னவற்றை கற்று அவற்றின்படி வாழ்வது. பழங்காலப்பொருளில் சிறந்த கல்வியை அடைந்து அக்கல்வியின் படி வாழ்வது கற்பு எனப்பட்டது. நூல் கல்வியும், மந்திரக்கல்வியும் கற்பு எனப்பட்டது.

வேர்ச்சொல்

கற்பு என்னும் சொல்லின் வேர் கல்வி என்னும் சொல். கற்றல், கற்றவை என்னும் சொல்லில் இருந்து உருவான சொல் கற்பு. நேர்ப்பொருளில் கற்பு எனும் சொல் கற்ற அறிவு, கற்றல் எனும் செயல் ஆகிய இரண்டையுமே குறிக்கும்.

சொற்பொருள்

எஸ். வையாபுரிப் பிள்ளையின் பேரகராதி பதிவிரதா தர்மம், களவு அறத்துக்கு மாற்றான இல்லறநெறி, முல்லைமலர், பெரும்கல்வி, தியானம், நுணுக்கமான வேலைப்பாடு ஆகிய அர்த்தங்களை அளிக்கிறது.

நடைமுறைப்பொருள்

தமிழின் நடைமுறைப்பொருளில் கற்பு என்னும் சொல் பெண்களின் ஒழுக்கத்தைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு பெண் கற்புடன் இருத்தல் என்பது கணவனுடன் மட்டுமே பாலியல் உறவு கொண்டிருத்தல் என்பதே முதன்மையாக குறிக்கப்படுகிறது. மேலதிகமாக இல்லறத்தில் வாழும் பெண்ணுக்குரிய பண்புகளாக மரபு குறிப்பிடும் அவை முன் அடக்கமாக இருத்தல், ஆண்களிடமும் மூத்தோரிடமும் பணிவு கொண்டிருத்தல், குடும்பத்தின் பொது நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டிருத்தல் ஆகியவற்றையும் கூறுகிறது.

பல நூல்களில் ஒரு ஆணுடன் இறுதிவரை வாழ்தல், இன்னொரு ஆணை ஏற்றுக்கொள்ளாதிருத்தல் தான் கற்பு என்று கூறப்படுகிறது. ’ஒருவனைப் பற்றி ஓரகத்திருத்தல்’ கற்பின் இலக்கணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்ச்சமூகத்தில் பெரும்பான்மையான குலங்கள் எளிதில் மணமுறிவும் மறுமணமும் செய்துகொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். போர்க்குடிகளில் பெண்கள் மறுமணம் புரிந்து கொள்வது நெறியாகவும் இருந்தது. ஆகவே அந்த வரையறை நிலவுடைமை சார்ந்த உயர்குடிகளின் ஒரு சிறு வட்டத்திற்குரியது என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.

தொல்படிமங்கள்

தமிழ் உளவியலில் கற்பு என்னும் சொல்லுக்கு சில பெண் கதைமாந்தர்கள் உதாரணமாகச் சுட்டப்பட்டுள்ளனர். முதன்மையாக கண்ணகி. கோபெருந்தேவியும் கற்பின் இன்னொரு உதாரணமாக சிலப்பதிகாரத்தால் சுட்டப்படுகிறார். ஆதிமந்தி, வெள்ளிவீதியார் ஆகிய சங்கக் கதைமாந்தரும் கற்பின் உதாரணங்களாகச் சுட்டப்படுகின்றனர். கம்பன் சீதையை இந்த கதைமாந்தரின் தொடர்ச்சியாக விரிவாக்கி எழுதி நிறுவியிருக்கிறார்.

கண்ணகி (புறநாநூறு)

வையாவிக் கோப்பெரும்பேகனின் மனைவி. இவள் கணவன் இவளை கைவிட்டான். கணவனையே எண்ணி இவள் நோன்பிருந்தாள். இவளுடைய பெருங்கற்பை புகழ்ந்து இவளை ஏற்றுக்கொள்ளும்படி கபிலர், பரணர் ஆகியோர் பாடியுள்ள கவிதைகள் புறநாநூற்றில் உள்ளன.

கண்ணகி (சிலப்பதிகாரம்)

இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தின் கதைத்தலைவி. தமிழின் முதன்மைக் காப்பியம் சிலப்பதிகாரம். ஆகவே தமிழகத்தின் முதன்மைக் காவியத்தலைவி கண்ணகிதான். தமிழ் உளவியலில் கண்ணகியே கற்புக்குரிய குறியீடாக பதிந்துள்ளது. அன்றாடவழக்கிலும் பெண்களை போற்றவும் தூற்றவும் கண்ணகியே உதாரணமாகச் சொல்லப்படுகிறாள்.

கண்ணகி கோவலனை மணந்தாள். அவன் தன்னைத் துறந்து மாதவி என்னும் கணிகையை நாடிச்சென்றபோது பொறுத்திருந்தாள். அவன் திரும்பி வந்தபோது ஒரு சொல்லும் பழித்துரைக்கவில்லை. அவன் வறுமை அடைந்திருப்பதைச் சொன்னபோது சிலம்புகளை கழற்றிக் கொடுத்தாள். அவனுடன் மதுரை வரை கடும்பயணம் மேற்கொண்டாள். மதுரையில் அவன் அநீதியாகக் கொல்லப்பட்டபோது சீற்றம் கொண்டு தன் இடமுலையை திருகி எறிந்து மதுரையை எரித்தாள். பின்னர் செங்கோடு என்னும் மலையில் ஏறி நின்றாள். தேவர்கள் வந்து அவளை அழைத்துச்சென்றனர். (பார்க்க கண்ணகி)

கோப்பெருந்தேவி

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கணவன் கோவலனைக் கொல்ல ஆணையிட்ட பாண்டிய மன்னனின் மனைவி. கணவன் இறந்ததும் 'கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என்று சொல்லி அங்கேயே அப்போதே உயிர் துறந்தாள்.

ஆதிமந்தி

புறநாநூற்றுக் கதைகளின்படி ஆதிமந்தி கரிகால் சோழனின் மகள். அவள் ஆட்டன் அத்தி என்னும் சேர மன்னனை மணந்தாள். அவன் காவேரியில் நீந்துகையில் வெள்ளத்துடன் சென்றான். தன் கணவனை தேடி பித்துப் பிடித்தவளாக ஊர் ஊராக தேடிச்சென்றாள் ஆதிமந்தி. மருதி என்பவள் ஆட்டனத்தியை காப்பாற்றி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்டு தான் கடலுள் மாய்ந்தாள். (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 )

வெள்ளிவீதியார்

சங்ககாலக் கவிஞராகிய இவர் தன் கணவன் பொருளுக்காகப் பிரிந்து சென்றபோது தானும் உடன் சென்றார். அதை ஔவையார் பாராட்டுகிறார். (அகநாநூறு 147)

சீதை

கம்பராமாயணம் என்னும் காவியத்தில் கதை நாயகியாகிய சீதை வான்மீகியின் சீதையில் இருந்து வேறுபட்டு கண்ணகியின் சாயல் உள்ளவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதை சொல்வதாக 'எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன் அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன்’ என்று சொல்கிறார் (சுந்தர காண்டம் சூடாமணிப் படலம். 5362). இது கண்ணகியின் செயலை குறிப்புணர்த்துவது.

பொருள் வளர்ச்சி

கற்பு என்னும் சொல்லின் பொருள் வெவ்வேறு காலகட்டங்களில் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. சங்ககாலத்தில் அது இரண்டு தளங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கற்பு- வாழ்க்கை நெறி

சங்க இலக்கியம் அகத்துறையில் தலைவியும் தலைவனும் கொள்ளும் உறவை களவு, கற்பு என இருவகை அறங்களாக வகுக்கிறது. களவு என்பது தலைவனும் தலைவியும் தங்கள் உள்ளத்தால் இணைந்து, சுற்றம் பற்றியோ நெறிகள் பற்றியோ கவலை கொள்ளாமல் உறவுகொள்வது. கற்பு என்பது முன்னோர் வகுத்த நெறிப்படி, சுற்றத்தோரின் ஏற்புடன் திருமணம் செய்துகொண்டு வாழ்வது.

கற்பு எனப்படுவது கரணமொடு புணர

கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை

கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே

(தொல்காப்பியம், பொருளளதிகாரம், கற்பியல்)

பொருள். திருமண முறைமைகளைக் கடைப்பிடித்து, பெண்கொள்வதற்கு உரிய மரபைச் சேர்ந்த தலைவன் பெண் கொடுப்பதற்குரிய உரிய மரபைச் சேர்ந்தவர்கள் மணம் செய்து கொடுக்க தலைவியை கொள்வது கற்பு எனப்படும்.

இந்த கற்புநெறி என்பது பெண்களுக்கு மரபு வகுத்தளித்தமையால் தெய்வத்தன்மை கொண்டது என்று சங்ககால அறவியல் கருதியது. ஆண்களின் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு, இன்முகம் காட்டி, எந்நிலையிலும் இல்லறத்தை பேணிக்கொள்ளுதலே கற்பின் இயல்பு எனப்பட்டது. கடவுட்கற்பு என்று குறுந்தொகை குறிப்பிடுகிறது.

குன்றுகெழு நாடன்

வருவதோர் காலை யின்முகந் திரியாது

கடவுட் கற்பி னவனெதிர் பேணி

(குறுந்தொகை 252, கிடங்கிற் குலபதி நக்கண்ணனார்)

கற்பு- கல்வி

சங்ககாலம் முதலே கல்வித் திறனை கற்பு என்று சொல்லும் வரிகள் காணக்கிடைக்கின்றன.

படிவ உண்டிப் பார்ப்பன மகனே

எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்

மருந்தும் உண்டோ

(குறுந்தொகை 156, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்)

பொருள்: முனிவருக்குரிய உணவை உண்ணும் இளைய அந்தணனே எழுதப்படாமல் கற்கப்படும் உன் சொல்லிலும் பிரிந்தவரை இணைக்கும் ஆற்றல் கொண்ட மருந்து உண்டா? இப்பாடலில் அந்தணர் எழுதாமல் ஓதி வேதம் பயில்வது கற்பு எனப்படுகிறது.

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் திருமாலை அந்தணர் கற்கும் நூல் (வேதம்) எனும் பொருளில் கற்பு என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

ஆழி ஏந்திய கையனை, அந்தணர்

கற்பினை, கழுநீர் மலரும் வயல்

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே

(இரண்டாம் ஆயிரம். பெரிய திருமொழி. திருக்கண்ணமங்கை. நாலாயிர திவ்யபிரபந்தம் 1643)

பொருள்: சக்கரம் ஏந்திய கை கொண்டவனை, அந்தணர்களின் கற்பாக திகழ்பவனை, நீலமலர் மலரும் வயல்கள் கொண்ட கண்ணமங்கை ஊரில் கண்டுகொண்டேன்.

திருஞானசம்பந்தர் பதிகத்தில் மந்திரச் சொல்லின் ஆற்றல் கற்பு எனச் சொல்லப்படுகிறது.

திண்ணகத்திரு ஆலவாயருள்

பெண்ணகத் தொழிற் சாக்கியப் பேயமண்

தெண்ணர் கற்பழிக்கத் திருவுளமே

(திருஞானசம்பந்தர். மூன்றாம் திருமுறை. திருஆலவாய். காட்டுமாவதுரித்து. பாடல் 3 )

பொருள்: நீலி முதலிய இயக்கிகளைக் கொண்டு மந்திரத்தால் மாயத்தொழில் செய்யும் பேயுருக்கொண்டவர்களும், நிர்வாணமாக அலைபவர்களும், அறிவின்மையின் உறுதி கொண்டவர்களும் ஆகிய சமணர்களின் கற்பை அழிக்க உறுதி கொண்ட ஆலவாய் நகரில் உறையும் இறைவன் திருவுளம் கொள்ளவேண்டும்.

கற்பு -விழுமியம்

தமிழ்ச்சூழலில் கற்பை உயர் விழுமியமாக முன் வைத்தவர்கள் சமணர்களும் பௌத்தர்களும்தான். அவர்கள் உருவாக்கிய காப்பியங்களே பெண்களுக்குரிய ஒருவகை நோன்பாகவும் தவமாகவும் கற்பை வரையறை செய்தன. மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய நான்கு நூல்களும் கற்பை பெண்களின் மாண்பாகவும். அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பெருநெறியாகவும் முன் வைத்தன.

மணிமேகலை

மணிமேகலையில் ஒரு பெண் செய்யக் கூடாதவை என்ன என்றும், செய்ய வேண்டியவை என்ன என்றும் ஒரு பாடலில் வருகிறது.

கொண்டோற் பிழைத்த குற்றந்தானிலேன்

கண்டோனெஞ்சித் கரப்பெளிதாயினேன்

வான்றரு கற்பின் மனையறம் பட்டேன்

(மணிமேகலை சிறை செய்காதை)

இப்பாடலில் மனையறம் என்பது வானத்து தெய்வங்கள் அருளியது என்னும் பொருளில் கற்பு என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கணவன் 'கொண்டவன்’ என்றும் அவனுக்கு மாறாக எண்ணுவது அக்கற்புக்கு மாறானது என்று கூறப்படுகிறது.

இன்னொரு பாடலில் கணவன் அன்றி இன்னொருவர் ஒரு பெண்ணை நினைப்பது கூட அப்பெண்ணின் கற்புக்கு குறைவே என்று மணிமேகலை சொல்கிறது.

பெண்டிராயிற் பிறர் நெஞ்சு புகாஅர்

புக்கேன் பிறருளம்

(மணிமேகலை, சிறைசெய்காதை)

கற்புடைய பெண்கள் பிறர் நெஞ்சில் புகமாட்டார் என்று இவ்வரி குறிப்பிடுகிறது.

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் கண்ணகி என்னும் தொன்மம் வழியாக கற்பை ஓர் உச்ச விழுமியமாக மாற்றுகிறது. கண்ணகி கற்பின் உருவமாகவே காட்டப்படுகிறாள். சிலப்பதிகாரம் மூன்று விழுமியங்களை முன்வைக்கிறது. அறம், ஊழ், கற்பு

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றாலும்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூம்

(சிலப்பதிகாரம் பாயிரம்)

திருக்குறள்

திருக்குறள் கற்பு என்பதை பலவகையாக வரையறை செய்து தமிழ்ச்சமூகத்தின் கூட்டுக் கருத்தியலில் நிலைநிறுத்தியது.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்

திண்மையுண்டாகப் பெறின்

(திருக்குற்ள் 54 இல்லறவியல் )

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யென பெய்யும் மழை

(திருக்குறள் 55 இல்லறவியல்)

என்னும் இரு குறள்களும் அந்த உச்ச விழுமியத்தின் வரையறைகள். பென்ணின் மிக உயர்ந்த பெருமை கற்புடன் இருத்தல். கற்பு என்பது ஒரு திண்மை. அதாவது நோன்புறுதி. அந்த உறுதி என்பது தெய்வத்தைக் கூட தொழாமல் தன் கணவனையே தெய்வமாகத் தொழுதல்.

கம்பராமாயணம்

கம்பன் கம்பராமாயணத்தில் காப்பியங்களும் வள்ளுவரும் முன்வைத்த கற்புநிலையையே சீதைக்குரிய சிறப்பாக முன்வைத்தார். ராமனை 'அறத்தின் மூர்த்தியான்’ என்றும் சீதையை 'பெருங்கற்பு’ என்றும் கம்பராமாயணம் வரையறை செய்கிறது.

தன்னைப்பற்றி சொல்லும்போது சீதை 'இற்பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல் கற்பும்’ கொண்டவள் என்கிறாள். (கம்பராமாயணம் சூடாமணிப் படலம். 5361)

பிற்காலம்

பிற்காலப் புலவர்கள் திருக்குறள் முன்வைத்த வரையறைகளையே வலியுறுத்தினர். "கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’ என்னும் ஔவையாரின் வரி மூதாதையர் வகுத்த சொற்களை மீறாமல் வாழ்தலே கற்பு என வகுக்கிறது. கற்பு என்பது 'ஒருவனைப் பற்றி ஓரகத்திருத்தல்’ என்று வாய்மொழி மரபு வகுக்கிறது.

புராணத் தொடர்புகள்

காப்பியகாலம் முதல் சம்ஸ்கிருத புராண மரபின் அருந்ததி, அனசூயை முதலிய கற்புக்கு உதாரணமாக காட்டப்படும் பெண்கள் தமிழ் நூல்களிலும் மேற்கோள் காட்டப்படுகிறார்க்ள். குறிப்பாக அருந்ததி கற்பின் அடையாளமாக சிலப்பதிகாரம் முதல் சுட்டப்படுகிறாள். கண்ணகியின் சிறப்பைச் சொல்லும் செய்யுளில் இரு பண்புநலன்கள் அவளுக்கு இளங்கோவால் சுட்டப்படுகின்றன. முதல் சிறப்பு அவள் திருமகள் போன்றவள். எல்லா அணியிலக்கணமும் கொண்டவள். இரண்டாம் சிறப்பு அவள் அருந்ததி போல கற்பு கொண்டவள்.

போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்

தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்

மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென்பாள் மன்னோ:

(சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்து)

சீதையை அனுமன் அழைக்கும்போது 'அருந்ததி உரைத்தி…’ என்று கூறுகிறான்.

(சுந்தரகாண்டம், சூடாமணிப் படலம் 5350)

கற்பு நவீன காலகட்டம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன சிந்தனைகள் உருவான போதுதான் கற்பு பற்றிய சிந்தனைகள் மாறுபடத் தொடங்கின. சி.சுப்ரமணிய பாரதியார் கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே நெறியாக ஆக்கப்படவேண்டும் என்றார்.

கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

(பெண்கள் விடுதலைக் கும்மி)

அந்த எண்ணம் தமிழ்ச்சமூகத்திற்கு புதியது. வள்ளுவர் ஒழுக்கம் உடைமை பற்றியும், பிறன்மனை நோக்கா பேராண்மை பற்றியும் பேசினாலும் அது கற்புவழு என கருதவில்லை. இன்பத்துப்பாலில் சங்ககால மரபின்படியே பரத்தையருடன் கூடிவரும் தலைவனுடன் தலைவி ஊடி பின்னர் கூடும் காட்சிகள் உள்ளன.

இருபதாம் நூற்றாண்டில் தமிழில் சிலப்பதிகாரமும், திருக்குறளும் முதன்மை நூல்களாக முன்னிறுத்தப்பட்டன. அவை கற்பு குறித்து கூறிய வரிகளை வெவ்வேறு வகையில் விளக்கி பொருள் கொள்ளும் முயற்சிகள் தொடங்கின. நவீனத் தமிழ் உளவியலில் கண்ணகி ஓர் தொன்மமாக நிலைநாட்டப்பட்டாள். ஆனால் அவளுடைய கற்புநிலை சரியானதா என்னும் விவாதம் தொடர்ந்து நிகழ்கிறது.

தொடர்புடைய சொற்கள்

கற்புக்கு நிகராகவும் அச்சொல்லுடன் பொருளிணைந்தும் வேறு சொற்கள் வருகின்றன.

நிறை

நிறை என்னும் சொல் கற்புக்கு நிகரானதாக பல இடங்களில் வருகிறது.

சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

(திருக்குறள்: 57 இல்லறவியல்)

பொருள்: வீடு என்னும் காப்பு பெண்களுக்கு எவ்வகையில் உதவும்? அவர்களின் கற்பு என்னும் காவலே முதன்மையானது.

கற்பு என்பதன் முழுமை நிலையே நிறை என்னும் சொல் வழியாக சுட்டப்படுகிறது.

பத்தினி

பத்தினி என்னும் சொல் பத்னி என்னும் சம்ஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம். பதி என்பதன் பெண்பால் அது. பதியுடன் இணைந்தவள், பதி கொண்டவள் என்று பொருள். சிலப்பதிகாரம் அச்சொல்லை கற்புடைய பெண், கற்பின் தலைமகள் என்னும் பொருளில் பயன்படுத்துகிறது. (உரைசால் பத்தினியை உயந்தோர் ஏத்தலும்…)

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு பத்தினிக்கோட்டம் என்னும் ஆலயத்தை எழுப்பினான். அதன்பின் தமிழில் பத்தினி வழிபாடு வேரூன்றியது. பின்னர் வேறு வகைகளில் இந்து மத வழிபாட்டுக்குள் நீடிக்கிறது.

(பார்க்க பத்தினி வழிபாடு)

கற்பழிப்பு

தமிழில் இதழியல் உருவானபோது மொழியாக்கம் வழியாகவே செய்திக்குரிய உரைநடை உருவானது. Rape என்னும் சொல்லுக்குச் சமானமாக கற்பழிப்பு என்னும் சொல் உருவாக்கப்பட்டு நீண்டநாள் புழக்கத்தில் இருந்தது. பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் தன் கற்பை இழந்துவிடுகிறாள் என்பது பொருள். இச்சொல்லாட்சியானது அப்பெண் தனக்கு மிக அரிய ஒன்றை இழந்துவிடுகிறாள் என்னும் பொருளில், அக்குற்றத்தை முதன்மைப்படுத்தும் நோக்கில், செய்யப்பட்ட மொழியாக்கம். ஆனால் அது பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண் தன் தகுதியை இழந்துவிடுகிறாள் என்றும் பொருள்படுகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டபோது அச்சொல் இப்போது அரசியல் சரிநிலை அற்றதாக கருதப்படுகிறது. பாலியல் வல்லுறவு என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page