under review

கர்ணாமிர்த சாகரம்

From Tamil Wiki
Revision as of 22:31, 1 June 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Karnamirtha Sagaram. ‎

கர்ணாமிர்த சாகரம்2
கர்ணாமிர்த சாகரம்1

கர்ணாமிர்த சாகரம் (1917, 1946) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய இசைநூல். தமிழிசையின் பண்பாட்டு அடித்தளம், அதன் வரலாற்று பின்னணி, அதன் பண்களின் அமைப்பு, பண்கள் உருவாகும் கணிதமுறை ஆகியவற்றை விவாதிக்கும் கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட நூல். தமிழிசை இயக்கத்தின் மூலநூல்களில் ஒன்று

சுருக்கம்

எழுத்து, வெளியீடு

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1912 முதல் தமிழிசை ஆய்வில் ஈடுபட்டார். 1912 முதல் 1916 வரையிலான காலகட்டத்தில் ஏழு இசைமாநாடுகளைச் சொந்தச் செலவில் தஞ்சையில் நடத்தினார். அன்றைய புகழ்மிக்க இசையறிஞர்கள் அதில் கலந்துகொண்டனர். அவற்றில் நிகழ்ந்த விவாதங்களின் அடிப்படையில் தன் ஆய்வுமுடிவுகளை தொகுத்து அவர் எழுதிய நூல் இது. முதல்நூல் 1917-ல் வெளியாகியது. 1200 பக்கங்களில் நான்கு பகுதிகளாக அமைந்தது.

கர்ணாமிர்த சாகரத்தின் இரண்டாம்நூலின் மூன்று பகுதிகளின் 256 பக்கங்களை அச்சிட்டிருந்த நிலையில் ஆபிரகாம் பண்டிதர் மறைந்தார். ஆகவே அவர் மகள் மரகதவல்லி துரைபாண்டியன் அவர் எழுதியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் கர்ணாமிர்தசாகரம் நூலை எழுதி முடித்தார். அவர் மகள் ஞானச்செலவம் தவப்பாக்கியம் அவருக்கு இசைக்குறிப்புகளில் உதவிசெய்தார். ஆபிரகாம் பண்டிதரின் மகன் டாக்டர் ஆ.சுந்தரபாண்டியன் 1946-ல் இரண்டாம் பகுதியை வெளியிட்டார். பின்னர் அவை ஒரே நூலாக வெளியிடப்பட்டன.

நூல் அமைப்பு

கர்ணாமிர்த சாகரம் முதல்நூல் நான்கு பாகங்களைக் கொண்டது.

முதல்நூல் (1917)

முதற்பாகம்

மூன்று தமிழ்ச்சங்கங்கள், குமரிக் கண்டம், கடல்கோள் ஆகியன குறித்துப் பல்வேறு சான்றுகளுடன் மிகவும் விரிவாக விளக்குகின்றது. மேலும், அக்காலத்தில் வாழ்ந்த இசைப்புலவர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகம்

இசை இயற்பியல் குறித்த விவாதங்கள் கொண்டது. இதில் சுருதிகளைப் பற்றிய பண்டிதரின் கொள்கை கூறப்படுகிறது. 12 ராசி சக்கரத்தின் அடிப்படையில் சுருதிகளின் கணக்கு விளக்கப்படுகிறது பன்னிரண்டின் இருமடங்கு 24 . எனவே சுருதிகள் 24 என்றும் 22 சுருதிகள் என்னும் சாரங்கதேவரின் ஏற்றிக்கொள்ளப்பட்ட கூற்று கணிதமுறைபப்டி பிழை என்றும் சொல்கிறார்.

மூன்றாம் பாகம்

தமிழிசையியலில் பண்களின் இடம், பண்களின் அமைப்புகள் பற்றிய விவாதங்கள். பெரும்பண்கள், திறப்பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனை, முற்காலப் பிற்கால நூற்களில் கூறியுள்ள இராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னுமட் பொருந்திசைச் சுரங்களைக் கண்டு கொள்ளும் முறைகள் ஆகியன பற்றி சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வழி நின்று விளக்கப்படுகிறது.

நான்காம் பாகம்

இளங்கோவடிகள் குறிப்பிட்ட வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை குறித்து பேசப்படுகிறது. மானுட உடலுக்கும், யாழ்வடிவுக்கும் ஓப்பீடு, யாழ் வகைகள் குறித்து விளக்கப்படுகிறது.

இரண்டாம் நூல் (1946)

கர்ணாமிர்த சாகரம் இரண்டாம் நூல் ராகங்களைப் பற்றிய ஆய்வுகளும் ,இராகபுடம் விளக்கமும் கொண்டது. ஏழிசை, பன்னிரு கோவைகளாக அமையும் பொழுது கோவைகளுள் இணை, கிளை, பகை, நட்பு என்ற இசைபுணர் நிலைகள் தோன்றும் என்பதை சிலப்பதிகார உரை வழி நின்று ஆபிரகாம் பண்டிதர் விளக்கியுள்ளார்.

இந்நூலை 1994-ஆம் ஆண்டில் அன்றில் பதிப்பகம் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது.

உள்ளடக்கம்

இசை ஆய்வாளர் நா.மம்மது ஆபிரகாம் பண்டிதரின் அடிப்படை ஆய்வை இவ்வாறு விளக்குகிறார்.[1]

வட்டப்பாலை
24 சுருதிகள்

வேங்கட மகியின் ‘சதுர்த்தண்டி பிரகாசிகை’ என்ற நுாலில் 72 மேளகர்த்தா ராகங்களைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. மேளகர்த்தா என்றால் தாய்ப்பண். அதாவது அடிப்படை ராகம் என்று பொருள். அதாவது பிற ராகங்களைப் படைக்கும் தன்மை உடைய அடிப்படை ராகம். ஜன்யராகம் என்றால் மேளகர்த்தா ராகத்திலிருந்து பிறந்தது. இந்த 72 இல் 16 சுத்த மத்திம ராகங்களும் 16 பிரதி மத்திம ராகங்களுமாக 32 ராகங்களுக்கு மட்டுமே உண்மையில் மேளகர்த்தா ராகங்களாக விளங்கக்கூடிய தகுதி உண்டு என்று பண்டிதர் கண்டார். பிற ராகங்கள் நடை முறையில் இல்லை. பாடினால் சுகமாகவும் இல்லை. புது ராகங்களை உருவாக்கும் விரிவுடனும் இல்லை. அது ஏன் என அறியும்பொருட்டு பண்டிதர் சுருதியைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.

சுருதியமைப்பு முறையினைப் பின்னப் பகுப்புமுறை (Just Intonation) என்கிறோம். ஏழு சுவரங்கள் 12 சுரத் தாளங்களுள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வீதம் 24 சுருதிகள். அல்லது கால் சுரங்கள். ஆனால் சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரம், பரதரின் நாட்டிய சாஸ்திரம் முதலியவை 22 சுருதிகள் என்கின்றன. சம பங்கு முறைப்படி 24 தான் வரவேண்டும். இதை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை மரபை விரிவாக ஆராய்ந்து விளக்குகிறார். நமக்கும் 24 சுருதிதான் இருந்தது. நடுவே 22 என்று குறிப்பிடப்பட்டது. ஒரு தவறான புரிதல் மட்டுமே என காட்டுகிறார்.

ராகபுடம்

இந்திய இசைமரபில் ராக சஞ்சாரம் குறித்து ஒரு மரபான திறமை மட்டுமே இருந்தது. சுவரங்கள் ஏன் எதற்கு ஒரு குறிப்பிட்ட முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று தெரியாது. இதை தன் நுாலான கர்ணாமிர்த சாகரத்தில் 4வது நுாலில் கண்டு சொன்னவர் பண்டிதரே. இப்பகுதி பண்டிதரின் குறிப்புகளின் படி அவர் மறைவுக்குப் பின் அவர் மகளால் எழுதப்பட்டது.இதுவே ராக புட முறை. இந்த முறையில்தான் பண் ஆளத்தி (ஆலாபனை) இன்று வரை செய்யப் பட்டு வருகிறது. சொல், பாடல், தாளம் ஏதுமின்றி ஒரு பண்ணை நாட்கணக்கில் பாடுகின்ற முறைக்கு மூலம் இதுவே. இணை, கிளை, நட்பு, என்ற இந்த ‘பொருந்து சுவரக் காட்டங்கள்தான் ‘ஐரோப்பிய இசையில் (Harmonical Notes or Chords) என்று கூறப்படுகின்றன..

பாலை

நான்கு நிலத்திற்கும் தனியாக நான்கு பண்கள் உள்ளன. நான்கு பெரும் பண்களும் நான்கு சிறு பண்களும் வகுத்துக் கூறப்பட்டுள்ளன. நான்கு நிலங்களும், பாலையாகத் திரிபு கொள்ளும் போது அதற்கும் பெரும்பண் சிறுபண் என உருவாகின்றன. பண்கள் தான் இராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன. பண் என்பது பாடலின் இசை வடிவம். நான்கு நிலத்திற்கும் உரிய பெரும் பண்களை பாலை என்கிறோம். அதை வடமொழியில் ஜாதி என்பார்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் ஏழ்பெரும் பாலை என்பது அடிக்கடி குறிப்பிடப் படுகிறது. சிலம்பு (உரையாசிரியர்கள்) கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ் பெரும் பாலைகளை அமைத்து கூறியவர் ஆபிரகாம் பண்டிதர்.ஏழ்பெரும் பாலைகளாவன: 1. செம்பாலை 2. அரும்பாலை 3. கோடிப்பாலை 4. மேற்செம்பாலை 5. படுமலைப்பாலை 6. செவ்வழி 7. விரிம்பாலை இந்த ஏழு பண்களையும் வட்டப் பாலை முறையில் அமைத்துக் காட்டி ராகங்கள் எப்படி அமைகின்றன என்று கண்டடைந்து சொன்னதே பண்டிதருடைய முக்கியமான சாதனை

இணைப்பு

உசாத்துணை

குறிப்புகள்


✅Finalised Page